மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (21)

ஜனவரி 01-15, 2021

இரைப்பை, உணவுக்குழாய் பின்னோட்ட நோய் (GASTRO ESOCHAGAL REFLUX DISEASE – GERD)

மரு.இரா.கவுதமன்

குழந்தைகளுக்கு ஏற்படும் அறிகுறிகள்:

மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள், 4 மாத வயதில் இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனர். 10 சதவிகித, ஒரு வயதான குழந்தைகளும் இந்நோயால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. இயல்பாக குழந்தைகள், அரிதாக உணவை துப்புவதும், கக்குவதும் உண்டு. ஆனால், இதுவே அடிக்கடி நிகழ்ந்தால், அக்குழந்தைகள் மருத்துவரிடம் காட்டி, அறிவுரை பெற வேண்டியது முக்கியம்.

மற்ற அறிகுறிகள்:

¨           உணவை உண்ண மறுத்தல்

¨           உணவை விழுங்குவதில் இடர்பாடு

¨           குமட்டல், எதுக்களிச்சல் (Gagging)

¨           விக்கல்

¨           உணவு எடுத்த பின்னோ அல்லது எடுக்கும் பொழுதோ குழந்தை எரிச்சல் பட்டு, அழுதல்

¨           இருமல், நுரையீரல் அழற்சி

¨           தூக்கமின்மை

¨           அடிக்கடி அழுதுகொண்டே இருக்கின்ற  குழந்தைகள்

¨           சரியாக உணவின்மையால் வளர்ச்சியில்  குறைபாடு.

¨           எடைக் குறைவு

¨           உணவை உட்கொள்ளும் பொழுது முதுகை வளைத்துக் கொண்டு, குழந்தை சங்கடப்பட்டு சிணுங்குதல்.

நோயறிதல்:

இயல்பாக உணவுக் குழாய், இரைப்பை, மற்ற உணவு மண்டல உறுப்புகள் இவை தசைகளால் ஆனவை. அதனால் ‘ஊடு கதிர் நிழற் படங்களால் (X-Ray) குறைபாடுகளை அறிய முடியாது. அதற்காக, ‘பேரியம்’ (Barium) என்னும் மாவுப் போன்ற பொருளை விழுங்க வைத்து நிழற் படங்களை எடுப்பர்.

¨           உள்நோக்கி (Endoscope) கருவி மூலம், நோயறிய முடியும் ஒரு விளக்கோடு கூடிய, மெல்லிய குழாயைத் தொண்டை வழியே செலுத்தி உணவுக் குழாயைச் சோதிப்பர்.

¨           உணவுக் குழாய் அழுத்த அளவி (Esophageal Manometry) எனும் மெல்லிய குழாயான இக்கருவியைத் தொண்டை வழியே செலுத்தி, உணவுக் குழாய் அழுத்தத்தையும், அதன் பலத்தையும் ஆய்வு செய்வர்.

¨           உணவுக் குழாய் அமிலத் தன்மை ஆய்வுக்கு (Esophageal PH Monitoring) இக்கருவியை உணவுக் குழாயில் செலுத்தி இரைப்பையிலிருந்து உணவுக் குழாய்க்கு வரும் அமிலத்தின் அளவை கணித்தல்.

இவை போன்ற ஆய்வுகளால் நோயை எளிதில் அறியலாம்.

மருத்துவம்: இந்நோயை ஆரம்ப நிலையில் அறிந்தால், உணவுப் பழக்கங்களை மாற்றுவதன் மூலம், நோயிலிருந்து தப்பிக்கலாம்.

¨           புகைப் பிடிக்கும் பழக்கத்தை முழுமையாகத் தவிர்க்கவும்.

¨           ஒரே நேரத்தில் அதிக அளவு உணவு உண்ணுதலைத் தவிர்க்கவும்.

¨           பச்சை மிளகாய் போன்ற அதிகக்காரமான உணவுகளையும், அதிக வறுத்த உணவுகளையும் தவிர்க்கவும்.

¨           சோடா, காபி, மது போன்றவையும் நோயைக் கடுமையாக்கும். அதனால் அவற்றை  முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

¨           வலி நிவாரணிகளும் நோயைக் கடுமையாக்கும்.

மருந்துகள்: அமில முறிவு மருந்துகள் (Antacids), புரோட்டான் ஏற்பித் தடுப்பிகள் (Proton Pump Inhibitors), வயிற்று ஹிஸ்டாமின் ஏற்பித் தடுப்பிகள் (Gastric H2 receptors), ரேனிடிடின் (Ranitidin), இரையக இயக்கி (Gastrokinetic) இம்மருந்துகள் சுருக்குத் தசைகளைப் பலமாக்கும். இரைப்பை வேகமாக உணவைக் காலியாக்கும். ஆரம்ப நிலையிலும், சற்றே அதிகமான நிலையிலும் பெரும்பாலும் மருந்துகளே இந்நோயைக் கட்டுப்படுத்தும். கட்டுப்படாத நிலை நோயை, அறுவை மருத்துவம் செய்து சீராக்கலாம். அறுவை மருத்துவம், உணவுக்குழாய், இரைப்பை அடைப்பிதழ்களை புதிதாகப் பொறுத்துதல் (Lower esophageal Sphin) வகையைச் சார்ந்தது. இரைப்பை அருகே மார்புக்குக் கீழ் திறந்தும், உள்நோக்கி கருவிமூலம், உணவுக்குழாய் உட்காண் அறுவை மருத்துவத்தின் (Endoscopic Surgery) மூலமும் இந்நோயை முழுமையாகச் சீராக்க முடியும்.

(தொடரும்)

இரைப்பை, உணவுக்குழாய் பின்னோட்ட நோய் அதிகமாகக் காரணங்கள்:

¨           பருத்த உடல் (Obesity)

¨           கருவுற்ற தாய்கள் (Pregnancy)

¨           இணைப்புத் திசு நோய்கள் (Connective tissue Disorders)

¨           புகைப் பிடித்தல் (Smoking)

¨           அதிகமாக (மூக்குப் பிடிக்க!?) உண்ணுதல்  (Large Meal)

¨           உணவு உண்டவுடன் படுத்துக் கொள்ளல்  (Retiring Immediately)

¨           காரமான உணவுகள் (Spicy food)

¨           அதிகளவு எண்ணெய்யில் பொறித்த                                                 உணவுகள் (Deep fried)

¨           மதுப் பழக்கம் (Drinking alcohol)

¨           காஃபி அதிகமாகக் குடித்தல் (Coffee)

¨           வலி மருந்துகள் உண்ணுதல் (NSAID)

மேற்சொன்ன காரணங்களே இந்நோய் ஏற்பட அடிப்படை. இதை நன்கு உணர்ந்து, காரணங்களைத் தவிர்த்தால் இந்நோய் ஏற்படாது. நீண்ட நாள் நோயானது உணவுக்குழாய் புற்று நோயாகவும் மாறக்கூடும். மருந்துகளுக்குக் கட்டுப்படாத நீண்ட நாள் இருமல் மற்றும் மூச்சுத் தொல்லைகள் (Breathing Problems), மூச்சிரைப்பு நோய் (Asthma), பற்களின் மேல் உறையான எனாமல் தேய்வடைந்து, தாங்க முடியாத அளவு பற்கூச்சம், புளித்த ஏப்பம், சில நேரங்களில் வாந்தி, நெஞ்செரிச்சல் போன்றவை நோயாளிக்கு அதிகத் தொல்லையைத் தரும். மிகவும் எளிதான வழிகளிலும், மருந்துகளாலும் இந்நோயை எளிதில் கட்டுப்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *