ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (2)

ஜனவரி 01-15, 2021

எம்.எப்.ஜ.ஜோசப் குமார்

ஆசிரியரே, தமது நூலுக்கு செறிவானதோர் ஒரு குறிப்புரையை எழுதியிருப்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது. பெரியார் தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகள் அனைத்தும் இன்று திராவிட இயக்க வரலாறு பயில விழையும் மாணாக்கருக்கு மிகவும் உதவியாய் இருக்கும் என்பதில் அய்யமில்லை. மேலும் பெரியாரின் கொள்கைகளோடு உடன்படாதவர்கள், பின்னாளில், தனது செய்யுட் கருத்துகளைத் திரித்து எழுதிவிடுவரோ என்கிற அச்சத்தாலும், அவரே குறிப்புரையும் எழுதிவிட்டார் என்று எண்ணத் தோன்றுகிறது. இன்று பெரியார் சிலைக்குக் காவி வண்ணம் பூச முனையும் மடமையாளரை நோக்கும்போது, புலவர் மாவண்ணா தேவராசன் அவர்களே குறிப்புரை எழுதியுள்ளது மிகச் சரியே.

முதல் ஈரைந்து பருவங்கள் ஒவ்வொன்றும் தன்னகத்தே பத்து செய்யுள்களை அடக்கியுள்ள இப்பத்தும், வரலாறு, பெரியாரின் பொன்மொழி. பெரியாரைக் குறித்து பிற அறிஞர் பெருமக்கள் உரைத்த புகழ்மொழி, இயற்கை எழில், பருவத்தியல் ஆகிய அய்ந்து தலைப்புகளில் தீட்டப்பட்டிருப்பதையும், இவ்வைந்து தலைப்புகள் ஒவ்வொன்றும் இரு செய்யுட்களைக் கொண்டுள்ளன என்பதையும் நாம் பார்க்கிறோம். பிள்ளைத்தமிழின் இறுதி மூன்று பருவங்களில், இத்தகைய உள்தலைப்பு வரையறையும், வடிவமும் கிடையா.

பெரியார் பிள்ளைத்தமிழ் நூலின் ஆசிரியர் புலவர் மாவண்ணா தேவராசன், தனது நூலில், கடவுள் வாழ்த்தைத் தவிர்த்துவிட்டார். நாத்திகர்களாலும் பிள்ளைத்தமிழ் இலக்கியம் படைக்கமுடியும் என்பதை உலகறியச் செய்யும் விதத்தில், பெற்றவர் வாழ்த்து, தமிழ்மொழி வாழ்த்து, தமிழ்நாட்டு வாழ்த்து, பெரியார் வாழ்த்து, ஆசிரியர் வாழ்த்து, சுதந்திரதேவி வாழ்த்து, தமிழர் இயக்கங்கள் வாழ்த்து, நூல் இயற்றுதற்குரிய காரணம், அவையடக்கம், நூற்பயன் ஆகிய தலைப்புகளில் பத்து சீர்மிகு செய்யுட்கள் செய்து, அதனையே நூலின் வாழ்த்துப் பகுதியாக அமைத்தார். ஆசிரியரின் மிகச் சிறந்த எண்ண ஓட்டங்கள் இவற்றில் பிரதிபலிக்கின்றன. ஆசிரியரின் தாயார் பெயரும், தந்தையார் பெயரும் முறையே தனத்தம்மாள், அண்ணாமலை என்கிற செய்தி இங்கு தரப்படுகிறது. ஆசிரியர் வாழ்த்துப் பகுதியில், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்திடும் திட்டம் ஏதுமில்லா அன்றைய நாள் “புது நெறிக் கல்வியை” இழித்துரைக்கின்றார். அவையடக்கத்திற்கான செய்யுள் குறிப்புரையில் அவர் கூறுகிறார், “பெரியார்க்குப் பெரிய தமிழ் சொல்லாமல், பிள்ளைத்தமிழ் சொல்லும் முறையே என் குற்றத்தைக் காட்டும்”. உண்மையில், இக்கூற்று அவரது உயர்ந்த குணத்தை குன்றின் மேலிட்ட விளக்காய் காண்பிக்கிறது.

“தமிழ்நாட்டு வாழ்த்து” செய்யுளில் அவர் கையாளும் “மிகக் கற்ற வறிஞர்’’ என்னும் சொற்றொடர் இரு பொருளைத் தரும் தன்மையது. “மிகக் கற்ற அறிஞர்” என்றும் “மிகக் கற்ற வறிஞர் (வறியவர்)” என்றும் விளக்கம் பெறுகிறது. கல்வியும் செல்வமும் ஒருசேர ஒருவரிடத்துக் காணப்படுவது எப்போதாவது தான் காணப்படும். பெரும்பாலும், கல்வித் தொழிலை மேற்கொண்டோர் வறுமையில் உழல்பவராக இருந்திருக்கின்றனர். இந்தக் கசப்பான உண்மையை, தன் வாழ்விலிருந்தே உணரப்பெற்று இச்சொற்றொடரைச் செய்தார் என்று நாம் எண்ணலாம். புலவர் இச்சொற்றொடரை பெரியாரின், “சிறுபறைப் பருவத்தில்”, “இயற்கை எழில்” பகுதியில் இரண்டாவது முறையாகப் பயன்படுத்தியுள்ளார். இங்கு, அவர் தந்தை பெரியாரை  “பெரிய வறிஞர்” என்று குறிப்பிடுகின்றார். இது பெரிய அறிஞர் என்று பொருள் தருகிறது. அதேவேளையில், பெரியார் பொருள் நிரம்பியவராயிருந்தும், ஓர் வறிஞர் போலவே எதிலும் சிக்கனத்தைத் கடைப்பிடித்தவர் என்ற பொருளையும் தருகிறது. இத்தகைய இருபொருள் கையாளுதலில், ஆசிரியரின் இலக்கிய வீச்சும், புலமையும் நமக்குப் புலப்படுகின்றன. “செங்கீரைப் பருவத்தில்” அவரது பெற்றோர் குறித்த வரலாற்றுச் செய்திகளை ஆசிரியர் தருகின்றார். பெரியாரின் பெற்றோர் துவக்கத்தில் கூலிபெறும் தொழிலைத்தான் மேற்கொண்டனர். ”சிற்றாள் வேலையும், கல்லுடைக்கும் வேலையும்’’ செய்து, கூலியில் மிச்சப்படுத்திய பொருளை முதலாகக் கொண்டு, வண்டி வாங்கி ஓட்டியும், பின் மண்டிக்கடை வைத்தும் முன்னேறியதை இச்செய்யுள் சொல்லுகிறது. இத்தகைய பின்புலத்தைப் பெரியார் கொண்டிருப்பதனால் தான் அவர் வாழ்நாள் முழுவதும் ஒரு கண்டிப்பான சிக்கனவாதியாகத் திகழ்ந்தார்; மற்றவர்க்கு எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்தார்.

வாழ்த்துப் பகுதியில், “செந்தமிழர் நாடு உய்யவந்த தென்னாட்டு லெனின்” என்று பெரியாரைப் போற்றுகின்றார். இதனைத் தொடர்ந்து, வருகைப் பருவத்தில், “நீதிக்கட்சியின் மன்னனாக நன்றிலங்கும் தென்னாட்டுச் சீர்மிகு லெனின்” என்றும், அம்புலிப் பருவத்தில், “நல்ல மேன்மையார் வாய்மை வீரர் வியன்லெனின்” என்றும், வினாவுறு பருவத்தில்,

“தொழிலாளிகள் முதலாளியின்

                சுகவாழ்வு தனக்குப்

பொழுதும் கடிதுழைத்தே துயர்

                பொறுக்கும் செயல் ஏன் என்று

அழிவேகிளர் பழிஏதும்இல்

                ஒரு கேள்வியால் லெனின்முன்

இழிவே ஒழித்தது போல், பெரி

                யோய், மெய்வினா இயம்பே!”

என்றும், ஆசிரியர் குறிப்பிடுவதிலிருந்து, “இரஷ்யப் புரட்சிக்கு லெனின் தலைமை தாங்கி நடத்திச் சென்று, ஜார் மன்னனின் அரசொழித்து வென்று உலகப்புகழ் பெற்றதையும், அவர் முதலில் அழிவு வேலை செய்த பிறகே ஆக்க வேலையில் புகுந்தார்’’ என்கிற வரலாற்றுப் பார்வையையும் புரிந்துகொள்ள முடிகிறது. லெனின் சமதர்மக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்ட பெரியார், தானும் அவரைப் போலவே ஓர் அழிவு வேலைக்காரராக மாறினார். பெரியார் உலகப் பயணம்  மேற்கொண்ட வரலாற்றை, அம்புலிப் பருவத்தின், வரலாற்றுப் பகுதி மூலம், கீழ்க்கண்ட செய்யுள் வாயிலாகத்  தெரிவிக்கின்றது:

“சிங்கப்பூர், பினாங்கு ஈப்போவும்

தென்ஆப்ரிக் காமலேயாத்

தேசங்கள் தோறும் தன்மெய்ச்

செந்தமிழ்த் துணைவரோடும்

சென்று . . . .  . . . . .”

இதேபோல, சிற்றில் பருவத்தின் வரலாற்றுப் பகுதியும் பின்வரும் செய்யுளைப் பாடுகிறது:

“பாரார் புகழும் மேநாட்டைப்

                பார்க்கச் சென்று தொல்எகிப்தும்

பாரிஸ், துருக்கி, ஜெர்மனியும்

                ஸ்பெயின் தேசங்கள்  பார்த்து வந்து”

இப்பயணங்களின் ஊடாகப் பெரியார், அந்நாட்டுத் தலைவர்களெல்லாம் உழைப்புக்கே முதலிடம், நாட்டின் வளங்கள் அனைத்தும் அனைவருக்கும் உரியவை, மனிதரிடை எத்தகு ஏற்றத்தாழ்வும் கிடையா, ஆண்களைப் போலவே பெண்களுக்கும் அனைத்திலும் சம உரிமை, மதத்தின் பெயராலும் கலாச்சாரத்தின் பெயராலும் கட்டமைக்கப்பட்டுள்ள மூடநம்பிக்கைகள் அழித்தொதுக்கப்பட வேண்டியவையே என்னும் கோட்பாடுகளை உறுதியுடன் செயல்படுத்தி, மக்களுக்கு ஒரு மேன்மையான வாழ்வை அளித்திருப்பதைக் கண்டு வியந்ததோடு நில்லாமல், அச்செய்திகள் அத்தனையையும் தனது “குடியரசு” ஏட்டில் பிரசுரித்தார். இன்றைய பெரும்பாலான அச்சு ஊடகங்கள், சினிமா, ஆண்-பெண் பாலுறவு பற்றிய செய்திகளுக்கு விலைபோய்விட்ட நிலையில், பெரியார் எத்தகு சீரிய சிந்தனையுடனும், மக்களுக்கு விழிப்புணர்வைத் தோற்றுவிக்க வேண்டும் என்கிற வேட்கையுடனும் செயல்பட்டார் என்பதைப் புரிந்து கொள்வது இன்றைய தலைமுறையினருக்கு நல்லதொரு பாடமாக இருக்கும்.

புலவர் தேவராசன் “பெரியார் பிள்ளைத்தமிழ்” நூலின் செங்கீரைப் பருவத்தில், லெனின், பிராட்லா ஆகியோரைப் பற்றியும், வருகைப் பருவத்தில் பிரெஞ்சுப் புரட்சியாளர் ரூஸோவைப் பற்றியும், சிற்றில் பருவத்தில் பெர்னார்ட்ஷா பற்றியும் குறிப்பிட்டிருப்பது, பெரியாருக்கிருந்த அறிவின் அடிப்படையில்தான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். மேலும், வினாவுறு பருவத்தில், கிரேக்கச் சிந்தனையாளர் அரிஸ்டாட்டில், இரஷ்யத் தலைவர் ஸ்டாலின், அம்மை நோய்க்கான மருந்தைக் கண்டுபிடித்த டாக்டர் ஜென்னர், நாய்க்கடிக்கான மருந்தைக் கண்டுபிடித்த மருத்துவர் லூயி பாஸ்டர், நோயாளிக்கு அறுவைச் சிகிச்சைக்குமுன் வலி தெரியாமல் இருக்க அளிக்கப்படும் குளோரோபார்ம் மருந்தைக் கண்டுபிடித்த மருத்துவர் லீஸ்டர், மலேரியா காய்ச்சலுக்கு மருந்து கண்ட மருத்துவர் ரோஸ், போன்ற மேதைகளைப் பற்றியும் அவரது சாதனைகள் மனித குலத்தை உய்விக்கக் கருவிகளாய் இருப்பதையும் உணர்ந்து, பெரியார் அச்செய்திகளையெல்லாம் தனது ஏட்டில் பிரசுரித்தார். புலவர் தனது நூலின் காப்புப் பருவத்தில் பத்தாவது கவிதையாக எழுதுகிறார், “விண்ணுக் கடங்காப் புகழ்ச்சி பெறும்

விஞ்ஞா னம்சேர் மருத்துவர்கள்

வெற்றிக் கலைகள் காப்பாமே”.

இது, நோயிலிருந்து விடுதலை என்பது, அறிவியலின் அடிப்படையில் மருத்துவர் தரவேண்டுவதொன்றே தவிர, கடவுளிடம் இறைஞ்சுவதால் பெறப்படுவதல்ல என்னும் கருத்தைத் தெளிவாகச் சொல்லுகிறது. ஆகவேதான் தாலப்பருவத்தில் 21ஆம் கவிதையில், “சமய விரோதி, சமதர்ம வாதியே தாலோ, தாலேலோ” என்று ஆசிரியர் பாடுகின்றார். மேலும், தனது குறிப்புரையில், மக்கள் பெரியாரைச் “சமய விரோதி” என்று சிறப்பித்தனர் என்று எழுதியிருப்பது நாத்திகக் கோட்பாட்டின் உயர்ந்த நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. மடமையிலும், பொருளற்ற சடங்குகளிலும், சரியான வழிகாட்டுதல் இன்மையினாலும் தமிழ்ச் சமூகம் திசைமாறிப் போய்க்கொண்டிருப்பதை எண்ணி, அதை திசை திருப்பும் பெரியார் கொண்ட பெருமுயற்சிகளின் வெளிப்பாடே, அவர், தனது ஏட்டில் இச்செய்திகளைத் தவறாது பிரசுரித்தமைக்குக் காரணம் எனலாம். பெரியாரின் இந்த ஒப்புயர்வற்ற சிந்தனையைப் புலவர் மாவண்ணா தேவராசன் தனது “பெரியார் பிள்ளைத்தமிழ்” நூலில் தன் புலமையுடன் திறம்பட எடுத்துச் சொல்லி, செய்யுட்களைச் சமைத்துள்ளார்.

ஆசிரியர், சிறுதேர்ப் பருவத்தின் 92ஆம் கவிதையாக எழுதுகிறார்,

“சீரியநல் தமிழ்மொழிதான் கட்டாயம் இன்றியே

                தெழிக்கப் படுகின்றமை

தேர்ந்திலர்; ஒடிந்த ஓர் ஊசிக்கும் பயனிலாத்

                திசைமொழி இந்திக்கு எத்தனை

சீராட்டும், தேசியப் பாராட்டும் . . . .

                சிறிது காலத்தில் இந்தி

திக்கற்ற தமிழர்தம் மிக்கபுகழ் வாழ்வுக்குச்

                சேர்ந்த ஓர் எமனாகிடும்  . . . . ”

ஆசிரியர் இக்கவிதையை 1942_-43இல், தமிழ்நாட்டின் உயர்நிலைப் பள்ளிகளில், தமிழ் கட்டாய மொழிப்பாடமாக இல்லாத சூழலில் எழுதியுள்ளார் என்பதை அவர் தரும் குறிப்புரையிலிருந்து அறிய முடிகிறது. இவ்வாறு, மொழிப் போராட்டத்திற்கு புலமைமிக்க கவிதை வடிவத்தையும் தமிழ் உணர்வாளர்கள் பயன்படுத்தியதனால் தான், தமிழ்மொழியின் பெருமை மீட்கப்பட்டது. ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள், இவ்வரலாற்று உண்மைகளை மறந்து, தமிழ்க் குடியின் தன்மானத்தை வடதிசையின் ஆதிக்க வெறிக்குப் பலிகொடுக்கவும் தயாராக இருக்கும் அவலத்தை என்னவென்று சொல்லுவது?

தந்தை பெரியாரது போராட்டங்கள் நிறைந்ததோர் அடர்த்தியான வாழ்வை நூறு செய்யுட்களில் சொல்லுவது என்பது கடினமான செயலாகும். புலவர் தேவண்ணா, தனது நூலில், 1942_-43 வரை நிகழ்ந்தவற்றைத் தான் வரலாறு, பொன்மொழி, புகழ்மொழி வாயிலாக நமக்குப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

  (தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *