பெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா

ஜனவரி 01-15, 2021

இன்று நாட்டில் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பெரிய அளவில் வளர்ச்சி பெற்று, ஒவ்வொரு துறையிலும் தங்களது முத்திரையைப் பதித்து வருகின்ற நிலையில் ஆளுமைத் திறமைமிக்க அய்.பி.எஸ். பணியில் அதிகளவில் பெண்கள் வெற்றிபெற்று சிறப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து குடிமைப் பணித் தேர்வின் மூலம், குமரியின் முதல் அய்.பி.எஸ். என்னும் பெருமை அடைந்து சிறப்பித்துள்ளார் பி.பிரபினா.

சிறுவயது முதலே பிரபினாவுக்கு குடிமைப் பணி தேர்வு எழுதி அய்.ஏ.எஸ். ஆக வேண்டுமென்பது கனவாக இருந்தது, பிளஸ்2வில் நல்ல மதிப்பெண் பெற்று, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றார். அந்தத் துறை சார்ந்த வேலையிலேயே தன்னை அடக்கிக்கொள்ளாமல், தனக்குள் இருந்த கனவை எட்டிப் பிடிக்கும் வகையில் குடிமைப் பணி (சிவில் சர்வீஸ்) பயிற்சி கல்வியகத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். தொடர்ந்து மூன்று முறை தேர்வு எழுதியும் வெற்றி வசமாகவில்லை.

அதே கல்வியகத்தில் பயிற்றுநராகவும் தன்னை வளர்த்துக் கொண்டு, நான்காவது முறையாகத் தேர்வு எழுதினார். அவருக்கு அய்.ஆர்.டி.எஸ் எனப்படும் இந்திய ரயில்வே போக்குவரத்துப் பணி கிடைத்தது. கிடைத்த பணியை விடாமல் அதிலிருந்துகொண்டே, அய்ந்தாவது முறையாகத் தேர்வு எழுதினார். அப்போது அவர் அகில இந்திய அளவில், 445ஆவது இடத்தைப் பிடித்து அய்.பி.எஸ். அதிகாரி பணியிடத்தை எட்டிப் பிடித்தார். இந்த வெற்றியின் மூலம் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் பெண் அய்.பி.எஸ். என்கிற பெருமையைத் தனதாக்கிக் கொண்டார். இந்த வெற்றியை அடைய தன்னை தயார்படுத்திக் கொண்ட முறையைக் கூறுகையில்,

“சிறு வயதிலிருந்தே என்னை எனது பெற்றோர் தைரியத்தோடு வாழக் கற்றுக் கொடுத்தனர். பெண் பிள்ளை, ஆண் பிள்ளை என்கிற பாகுபாட்டை என்னிடம் காட்டியதில்லை.

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு சரியாகத் திட்டமிட்டுப் படிப்பதுடன் விடா முயற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். பணம் இருப்பவர்கள் மட்டும்தான் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற முடியும். கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற முடியாது என்பதெல்லாம் இப்போது கிடையாது. பயிற்சி மய்யங்களில சேர்ந்து படிக்க முடியாதவர்களுக்குக் கூட பல்வேறு வாய்ப்புகள் இப்போது கிடைக்கின்றன. பாடப் புத்தகங்களை இணைய வழியில் இலவசமாகப் பெற்றுவிட முடியும்.

மாநில அரசுகளின் பயிற்சி மய்யங்களில் சேர்ந்து படிக்கலாம். இது தவிர தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் போன்றவை குடிமைப் பணி தேர்வுகள் எழுதுவோருக்கு உதவுகின்றன. புத்தகங்களை மட்டும் படித்துக் கொண்டிருந்தாலும் வெற்றி பெற முடியாது. நம்மிடையே தேடல்கள் இருக்க வேண்டும். தன்னம்பிக்கை இருக்க வேண்டும். தோல்வி அடைந்தால் மன அழுத்தம் ஏற்படும். அப்போது சோர்ந்து போய்விடக் கூடாது. வெற்றி பெற்று விடுவேன் என்கிற திடமான நம்பிக்கையை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்னும் நிறைய பெண்கள் தங்கள் கனவுகளை அடைய மன உறுதியோடு போராடி வெற்றி பெற வேண்டும். அதற்காக என்னுடைய பங்களிப்பையும் செய்வேன்’’ என நம்பிக்கையோடு கூறுகிறார்.

(தகவல் : சந்தோஷ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *