சேது
“என்ன, ராமசாமி! நான் சொன்னதைக் கேட்டிருந்தா இப்ப கையில ஒரு லட்ச ரூபாய் வந்திருக்குமில்ல? அந்தக் கம்பெனி கேட்ட மாதிரி உன் நிலத்தில போட்டிருக்கிற நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2000ன்னு 10 ஏக்கருக்கு 10 லட்ச ரூபாய் வருமில்ல. அதுல 1 லட்ச ரூபாய் முன் பணம் வாங்கி இருக்கலாமில்ல. இப்ப இப்படி ரூபாய் இல்லாம கஷ்டப்படுறயே.’’
“பாரு முனுசாமி, அவரு தோப்புல வர தேங்காய்க்கும், வீராசாமி அவர் போட்டிருக்கிற மிளகாய்க்கும் ஒப்பந்தம் போட்டு முன் பணம் வாங்கிட்டாங்க. நான்கூட என்னோட 5 ஏக்கர் நெல்லுக்கும் 500 தென்னை மரத்துக்கும் ஒப்பந்தம் போட்டு முன்பணமா 1 லட்சம் வாங்கிட்டேனே. நீதான் நான் சொன்னதைக் கேட்கலே’’.
“குப்புசாமி, நீ அவசரப்பட்டுட்டே; மத்த ரெண்டு பேரும் நீ சொன்னதக் கேட்டு ஒப்பந்தம் போட்டுட்டாங்க. 3 மாதம் போனா அறுவடை முடிஞ்சதும் என்ன விலை வருதோ அதுக்கு வித்துட்டுப்போக வேண்டியதுதானே? அதுக்குள்ள முன் பணம் வாங்கி என்ன லாபம் வரப்போகுது? இதெல்லாம் சரிப்பட்டு வராது. நான் சொன்னா நீங்க கேக்கலே. அனுபவிச்சாத்தான் தெரியும்.’’
“அட போப்பா! நம்ம ஊரு ஏவாரிகிட்டே காசு கூட வருதுன்னு வித்துட்டு அவன் கிட்டேயிருந்து பணம் வாங்குறது பெரிய தொல்லையாச்சே. அதனாலதான் கம்பெனிக்காரங்கிட்டே ஒப்பந்தம் போட்டுட்டேன். அறுவடை முடிஞ்சவுடனே மீதிப் பணத்தை பாங்கிலே போட்டுருவாங்க எந்தத் தொல்லையும் இல்லே’’ என்றார் குப்புசாமி. நல்லது சொன்னா கேக்கவா போறே. சரி வா போலாம்.
“என்ன, முனுசாமி அண்ணே! 5000 தேங்கா வந்துச்சு போல… கம்பெனிகாரன் எடுத்துட்டுப் போயிட்டானா? காசு உடனே பாங்கிலே போட்டுட்டானா?’’
“அட ஏம்பா வயித்தெறிச்சல கிளப்புறே? கம்பனியிலே இருந்து வந்தவன் தேங்கா சின்னதா இருக்கு, பருப்பு குறைவா இருக்குன்னு சொல்லி காய்க்கு 15 ரூபா தர்றதா சொல்லி ஒப்பந்தம் போட்டதுக்கு… தேங்காய் இன்னும் பெருசா இருக்கணும், ஒப்பந்தத்துல இருக்கிறதுக்கு முக்கா பங்குதான் இருக்கு, அதனால காய்க்கு 10 ரூபாய்தான் தருவேன்னாரு. நம்ம ஊரு ஏவாரி 13 ரூபாய் தர்ரேன்னான்.’’
நான் கம்பெனிக்காரன்கிட்டே “நீ கொடுத்த அட்வான்சை திருப்பி வாங்கிக்க, நான் உள்ளூரிலேயே வித்துக்கிறேன்னு’’ சொன்னதுக்கு…
“அப்படியெல்லாம் விக்க முடியாது. ஒப்பந்தத்துலே கையெழுத்துப் போட்டிருக்கேல்ல. அது மாதிரி இல்லாட்டி அந்த ஒப்பந்தப்படி பணம் முடியாதுன்னான். அப்பறம், நான் உள்ளூரு ஏவாரிக்கி வித்துட்டேன். இப்ப எனக்கு வக்கீல் நோட்டீசு வந்திருக்கு.’’
“கம்பெனிக்கு நஷ்டமாயிருச்சாம். அதனால 10 நாளுக்குள்ள, 50 ஆயிரம் ரூவா நஷ்ட ஈடா தரணும்னும், இல்லாட்டி என்னமோ, ஆர்பிட்ரேசனுக்கு வரணும்னும் எழுதி இருக்கு. குப்புசாமி, பாருப்பா நீ சொல்லித்தான் நான், கம்பனிகூட ஒப்பந்தம் போட்டேன். இப்படி ஆயிருச்சே இப்ப என்ன பண்றது?’’
“உனக்கும் நோட்டீசு வந்திருச்சா எனக்கும், வீராசாமிக்கும் அதேபோல நோட்டீசு வந்திருக்கு. என்னமோ என் நெல்லு தரமா இல்லையாம். அவன் மிளகாயும் தரம் இல்லையாம். ஒப்பந்தம் போட்டதவிட கொறச்சுக் கேட்டான். அதனால நாங்களும் உள்ளூரிலேயே வித்துட்டோம். இப்ப மூணு பேருக்கும் நோட்டீசு வந்திருக்கு. என்ன செய்யறது தெரியலயே?’’
“நம்ம ஊர் வக்கீல் மதுரையில இருக்காருல்ல, அவரப் போய்ப் பார்ப்போம். வேற என்ன பண்ணுரது. இந்தா, அங்கவர ராமசாமியைப் பாரு. அவரு சொன்னாரு இப்படி ஒப்பந்தம் எல்லாம் போடாதேன்னு. நாமதான் கேட்கலே. ராமசாமி நீ சொன்னது சரியாப் போச்சுப்பா. நாங்க பாரு இப்ப வக்கீலைப் பாக்கப் போயிட்டிருக்கோம்.’’
“என்னங்க வக்கீல் தம்பி, ஊருல அப்பாவைப் பாத்துட்டுத்தான் வர்றோம். இங்க பாருங்க, எங்க 3 பேருக்கும் வக்கீல் நோட்டீசு வந்திருக்கு. ஆளுக்கு 50,000, 1 லட்சம்னு நஷ்ட ஈடு தரணும்னு கேட்டிருக்கு.’’
“என்ன ஒப்பந்தம் போட்டீங்க. காப்பி இருக்கா? தாங்க.’’
“இதுதான் தம்பி அந்த ஒப்பந்தம், பாருங்க.’’
என்னங்க, இவ்வளவு அனுபவம் இருந்தும் இந்த மாதிரி ஒப்பந்தம் போட்டிருக்கீங்களே?
“இதுல பாருங்க. இந்த ‘தரம்’, ‘கிரேடு’, இருந்தாத்தான் இந்த விலை குடுப்போம்னும் இல்லைனா குறைச்ச விலைதான் தருவோம்னும் இருக்கு. நீங்க வேற யாருக்கும் வித்துட்டா நஷ்ட ஈடு தரணும்னும் இருக்கு. ஆர்பிட்ரேசன் மூலம்தான் நஷ்ட ஈடு தீர்மானிக்கணும் அப்படின்னும் எழுதி இருக்கே. நீங்கள் கையெழுத்துப் போட்டிருக்கீங்களே. இப்ப வேற ஒண்ணும் செய்ய முடியாது. ஆர்பிட்ரேசனுக்குப் போய்த்தான் தீரணும். அதை நான் பாத்துக்கிறேன்.
ஆனா, இது மாதிரி கேசுக்கு நான் 50,000 பீஸ் வாங்குவேன். நீங்க நம்ம ஊர்க்காரங்களாயிட்டீங்க. அதனால 25,000 குடுங்க’’ என்று சொன்னதைக் கேட்டதும் அந்த மூணு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள். “சரி நீங்க பாத்துக்கங்க தம்பி நாங்க 2 நாள்ல பணம் கொண்டு வந்து தர்றோம்.’’
“என்னய்யா இது? வக்கீல் பீசே 25,000! நஷ்ட ஈடுன்னு ஏதும் போட்டா விளஞ்சு வந்த பணம் பூராவும் போயிருமே’’ அதுவும்கூட பத்துமோ இல்லையோ. சரி பஸ்ஸுக்கு நேரமாச்சு போகலாம்.
முனுசாமி, வீராசாமி இன்னைக்கு ஆர்பிட்ரேடர் உத்தரவு எனக்கு வந்துருச்சி. உங்களுக்கும் வந்திருக்குமே.
“இல்லிங்க எனக்கு இன்னும் வரல.
ஒருவேளை நாளைக்கு வரலாம். உனக்கு என்ன உத்தரவு வந்துச்சு”.
“அத ஏம்பா கேட்குற? 50,000 நஷ்ட ஈடும் செலவு தொகையும் எல்லாம் சேத்து வட்டியோட தரணும்னு வந்திருக்கு. மகசூலே மொத்தம் ஒன்றரை லட்சம்தான். பூராவுமே இதுக்குத்தான் சரியா இருக்கும் போல இருக்கே”.
“ராமசாமி அண்ணே, எனக்கும், வீராசாமிக்கும் 50,000 நஷ்ட ஈட்ட வட்டியோட தரணும்னு உத்தரவு போட்டிருக்கு. நீங்க சொன்னதைக் கேக்காம கம்பனியோட ஒப்பந்தம் போட்டது. இன்னைக்கு வெள்ளாமை பூராவும் இதுக்கே கட்ட வேண்டியாயிடும்போல இருக்கு’’ என்று சொல்லிக் கொண்டே வந்த முனுசாமியிடம்…
“நான்தான் சொன்னேனே இதெல்லாம் வேணாம். உள்ளூர் ஏவாரி கொஞ்சம் லேட்டா கொடுத்தாலும் பூரா பணமும் கொஞ்ச நாள்ல வந்துரும். இப்ப பாருங்க, அட்வான்சுக்கு ஆசைப்பட்டு மொத்த வெள்ளாமையுமே போயிருச்ச. இனிமேலாவது சூதானமா இருங்க இந்த மாதிரி ஒப்பந்தம் போட்டா விவசாயிக்கு கம்பனிக்காரங்கள எதுத்து கேஸ் நடத்தி ஜெயிக்க முடியாது”.
“கேஸ் நடத்தரது பணம் இருக்கறவங்களுக்குப் பொழுதுபோக்கு மாதிரி. நீயும் நானும் அப்படி இல்லல்ல. பாத்து பொழச்சுக்கங்க. யார் யாரோ சொன்னாங்கன்னு இதுபோல ஒப்பந்தம் போட்டு கஷ்டப்படாதீங்க.’’
கவர்மெண்ட் சட்டம் போட்டிருக்கே. அது விவசாயிகளின் நன்மைக்காகத்தான்னு சொன்னாங்களே? அத நம்பித்தானே நாங்க ஒப்பந்தம் போட்டோம். சட்டம் போட்டா, உங்களுக்கு அது சரிப்பட்டு வருமானு நீங்கதான பாக்கணும்.
வக்கீல் சொல்றாரு. அப்பீல் போடலாம். ஹைகோர்ட்ல ஜெயிக்க வாய்ப்பிருக்குன்னு. இதோ பாருங்க, அப்பீலு கோர்ட்டுன்னு அலையாம ஆகறத பாருங்கன்னு ராமசாமி சொன்னாலும் மேல்கோர்ட்டுக்குப் போய்ப் பாத்துரலாம்பான்னு வீராசாமி சொல்றாரு. போயிதான் பாப்பமேன்னு முனுசாமியும் சொல்ல மூணு பேரும் அப்பீல் போடுங்கன்னு வக்கீலுக்குப் போன் போட்டுச் சொல்லிட்டாங்க.
ஆறு மாசமாச்சே. வக்கீல்கிட்ட இருந்து எந்தத் தகவலும் வரலயேண்ணே என்று வீராசாமி கேட்டபோது, “எனக்கும் இதுவரைக்கும் எதுவும் தெரியலே’’ன்னு குப்புசாமி சொன்னார். என்னாண்ணே, என்னாச்சுன்னு கேக்கிரேன்னு முந்தா நாள் சொன்னீங்களே, அப்பீல் தள்ளுபடி ஆயிடுச்சுன்னு வக்கீல் சொல்றாருப்பா. செலவானதுதான் மிச்சம். இதுவரைக்கும் வாங்குன அட்வான்ஸ் 1 லட்சத்துக்கும் மேலே 25,000 செலவு ஆயிருச்சுன்னு வருத்தப்படுறத தவிர வேறென்ன செய்ய முடியும்? ஒப்பந்தம் போட வந்த ஏஜெண்டப் பாத்துக் கேட்டப்போ, “இது கம்பனி ரூல்ஸுங்க. நான் இதுல எதுவும் செய்ய முடியாது’’ன்னு சொல்லிட்டாரு. எல்லாம் தலையெழுத்து.
“என்ன, வீராசாமி, வருத்தமா போற? பாத்தும் பாக்காத மாதிரி போறியே’’ என்று கேட்ட ராமசாமிக்கு…
“உங்களப் பார்க்கவே கூச்சமாயிருக்குண்ணே. இப்ப ஆர்பிட்ரேசன் உத்தரவுப்படி 50,000த்தோட வட்டி செலவுத் தொகைன்னு 90 ஆயிரம் ஆயிருச்சு. இத அடைக்க 1 ஏக்கர் நிலத்தை வித்துட்டேன். அதை எடுத்துட்டுத்தான் கம்பெனிக்குக் கட்டப் போயிக்கிட்டு இருக்கேன். முனுசாமியும் குப்புசாமி அண்ணனும், அவங்க வீட்டுல இருந்த நகையெல்லாம் வித்து, பணம் ரெடி பண்ணி இருக்காங்க. மூணு பேரும்தான் போயி பணத்தை இன்னிக்கு கட்டிட்டு வரணும்.’’
“அய்யோ பாவம். அப்பவே நான் சொன்னேன்ல, இந்த மாதிரி ஒப்பந்தம் எல்லாம் வேணாம்னு.’’
“சரி, இனிமேலாச்சும் கம்பனிக்காரன் தர்ற அட்வான்ஸ் தொகைக்கு ஆசப்பட்டு இந்த மாதிரியான ஒப்பந்தங்கள் எதுவும் போடாதீங்க. சட்டம் எல்லாம் கம்பனிக்குச் சாதகமாகத்தான் இருக்கும். விவசாயிகளுக்கு இதெல்லாம் தெரியாததாலே போய் மாட்டிக்கிறாங்களே’’ என்று கவலைப்பட்டுக் கொண்டே நடையைக் கட்டினார்.