அய்யாவின் அடிச்சுவட்டில் ….: இயக்க வரலாறான தன் வரலாறு (259)

ஜனவரி 01-15, 2021

மத்திய அமைச்சர் சீதாராம் கேசரி முழக்கம்!

 

 கி.வீரமணி

14.4.1995 அன்று பெண்ணாடம் அடுத்த செம்பேரி கிராமத்தில் கா.ராசேந்திரன் இல்ல மணவிழாவில் கலந்துகொண்டு செம்பேரி காசி _ கனகாம்பாள் ஆகியோரின் மகன் அண்ணாதுரைக்கும், புதுப்பாளையம் அரங்கசாமி _ மலர்க்கொடி ஆகியோரின் மகள் ராதாவுக்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறச் செய்து, மண விழாவை தலைமையேற்று நடத்திவைத்தேன்.

 

சிறிய தாயார்  பட்டம்மாள்

15.4.1995 அன்று குளித்தலை மாநாடு முடிந்து திருச்சி பெரியார் மாளிகை வந்திருந்தபோது என் அன்னையார் திருமதி பட்டம்மாள் அவர்கள் நள்ளிரவு மறைவுற்றார் என்னும் செய்தி கேட்டு துயரம் அடைந்தேன்.  மறுநாள் காலை கடலூர் வந்தடைந்தேன். அன்னையாரின் இறுதி ஊர்வலத்திற்கு கழகத் தோழர்களும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள். கடலூரில் அடக்கம் செய்யப்பட்டார். இரங்கல் செய்தியை முதலமைச்சர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா, டாக்டர் கலைஞர், பேராசிரியர் க.அன்பழகன் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தந்தியாக அனுப்பி ஆறுதல் கூறினார்கள்.

19.4.1995 அன்று சென்னை பெரியார் திடலில் மகா சன்னிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் மறைவுக்கு இரங்கல் கூட்டம் கழகத்தின் சார்பாக நடைபெற்றது. தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுகவுரையாற்றினார். குன்றக்குடி அடிகளார்க்கு நெருங்கிய அணுக்கத் தொண்டர் வழக்கறிஞர் கந்தசாமி, பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எஸ்.முத்துக்குமரன், கா.ஜெகவீர       பாண்டியன், சிலம்பொலி சு.செல்லப்பனார் பி.மாணிக்கம், ஏ.கே.அப்துல் சமது ஆகியோர் கலந்துகொண்டு அடிகளாருக்குப் புகழஞ்சலி செலுத்தினார்கள். இறுதியாக தலைமை உரையாற்றுகையில்,

“கடந்த 15ஆம் தேதி இரவு இரண்டு இடிபோன்ற செய்திகள் கிடைத்தன. ஒன்று, என் தாயின் மறைவு; இன்னொன்று, தாயினும் சாலச்சிறந்த தவத்திரு அடிகளாரின் மறைவு!.

மணமக்கள் அண்ணாதுரை – மலர்க்கொடி ஆகியோரின் வாழ்க்கை ஒப்பந்த விழாவில் வாழ்த்தும் ஆசிரியர்

தாய் தந்தையாரிடத்தில் ஒரு பிள்ளை எப்படி உரிமை எடுத்துக் கொள்வாரோ அதைப்போல நாங்கள் அடிகளாரிடம் உரிமை எடுத்துக் கொண்டோம். அமெரிக்காவில் இருக்கக்கூடிய தமிழ்நாடு அறக்கட்டளைப் பொறுப்பாளர்களும், மருத்துவர்களும், நண்பர்களும் அடிகளாருடைய உடல் நிலையை நாம் பாதுகாக்க வேண்டும். நீங்கள் எப்படியாவது அவரை அழைத்து வாருங்கள் என்றெல்லாம் வலியுறுத்தினார்கள். அவர்களிடம் அதைத் திரும்பத் திரும்பச் சொன்னேன். நீங்கள் பழைய மாதிரி அலையக்கூடாது, ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக் கொண்டேன். அவரும் ஓய்வு எடுத்துக் கொண்டு பணி புரிய வேண்டும் என்றெல்லாம் கூறினார். திடீரென உடல் நலக்குறைவால் அவருடைய மறைவு என்னை மட்டுமே பொறுத்தது அல்ல; உலகமெங்கும் வாழக்கூடிய தமிழர்களின் உரிமையைப் பொறுத்த மறைவு. துறவறத்தைவிட தொண்டறத்தைப் பேணியவர், அவருடைய கால்கள் எங்கெல்லாம் ஜாதிக் கலவரங்கள் நடந்தனவோ அங்கே எல்லாம் துணிந்து நடந்து, அவற்றைத் தடுத்த கால்கள் அவை. குன்றக்குடியை வறுமையை ஒழிக்கும் ஒரு முன்மாதிரி கிராமமாக ஆகச் செய்தார். தந்தை பெரியார் மேல் அளவுகடந்த மதிப்புக் காரணமாக பெரியார் பெயரால் முந்திரித் தொழிற்சாலையை அமைத்து, இளைஞர்களை நல்வழிப்படுத்தினார். சகுனத்தில் நம்பிக்கை இல்லாதவர். ஒரு புரட்சிச் சிந்தனையாளர். வெளிநாடு சுற்றுப் பயணத்தில் உங்களுக்கு சகுனத்தில் நம்பிக்கை உண்டா? என்று கேட்டதற்கு, “சகுனத்தை நம்பாதீர்கள், அதை நம்பி வீணாகிப் போகாதீர்கள்’’ என்று மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் தனது செயல்பாடுகளை அமைத்துக் கொண்ட புரட்சியாளர் அவர்! அவரது புகழைப் பரப்பும் வகையில், திருச்சி கல்வி வளாகப் புதிய கட்டடத்திற்கு அடிகளார் பெயர் சூட்டப்படும் என்றேன்(சூட்டப்பட்டது).

மதக் கருத்தை மறுப்பவர்கள், கடவுள் நம்பிக்கையாளர்கள், கடவுளை ஏற்காதவர்கள் இப்படி எல்லோரையும் ஒன்றாக இணைத்த _ ஒரு மாபெரும் சக்தியாக மாற்றிய மானிடப் பற்றாளர் அவர்’’ என பல கருத்துகளை புகழஞ்சலியாக எடுத்துக் கூறினேன்.

20.4.1995 குன்றக்குடியில் அமைக்கப்பட்டிருந்த மகாசன்னிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவிடத்திற்குச் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன். அப்போது அடக்க முடியாத துக்கத்தால் கண்ணீர் மல்க அழுதேன். மடத்தில் பணிபுரியும் ஊழியர்களும், பொறுப்பாளர்களும் என்னை ஆறுதல்படுத்தினார்கள். புதிய மடாதிபதியாகப் பொறுப்பேற்க இருக்கும் பொன்னம்பல தேசிகர் அவர்களுக்குச் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தேன். இந்நிகழ்ச்சியில் கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

21.4.1995 அன்று தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பொறியியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் கழகத்தின் அழைப்பினை ஏற்று மத்திய அமைச்சர் சீதாராம் கேசரி, பல்துறைப் பேராசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அங்கு மத்திய அமைச்சர் சீதாராம் கேசரி உரையாற்றுகையில்,

“உலகிலேயே தனித்தன்மை பெற்று விளங்கும் இப்பொறியியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆண் ஆதிக்கத்தின் பிடியிலேயே பொறியியற் பட்டப்படிப்பு உள்ளது. இந்நிலையில் பெண்களுக்கென தனியாக இதுபோல வேறு கல்லூரி இருப்பதாகத் தெரியவில்லை. நண்பர் கி.வீரமணி ஒரு பெருமைமிக்க கல்வி நிலையத்தை உருவாக்கி உள்ளார்.

இக்கல்லூரி ஒடுக்கப்பட்டோருக்காக உரிமைக்குரல் எழுப்பிய ஒரு பெரிய சமூகப் புரட்சியாளரின் கருத்துகளைப் பரப்புகிறது என்பதை அகமகிழ்ச்சியோடு பாராட்டுகிறேன். நான் பெரியார் அவர்களிடமிருந்து பலவற்றை அறிந்துகொண்டேன். அவற்றில் என்னை ஈர்த்தது சமுதாயச் சீர்திருத்தத்திற்கு அவர் கையாண்ட நவீன முறையேயாகும். அவரைப் பொருத்தவரை அரசியல் என்பது தனிப்பட்டவரின் செல்வாக்கிற்கு அல்ல; அது சமுதாய விடுதலைக்கானது. கல்வி என்பது தனிப்பட்டவரின் பெருமைக்காக அல்ல; ஒருவருடைய விழிப்புணர்ச்சியைத் தூண்டிச் சமூகப் பொறுப்புகளைத் தெளிவுபடுத்துவதாக அமைய வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது ‘சூத்திரர்’ என்னும் பட்டம் சூட்டப்பட்டதை உடைத்தெறிய, தந்தை பெரியார் அவர்கள் போராட்டம் நடத்தினார். உயர்ஜாதி மக்களால், பிற்படுத்தப்பட்டோர் ‘சூத்திரர்’ என இகழப்பட்டதை எதிர்த்ததைப் போலவே பெண்களை இழிவுபடுத்தியதையும் அவர் வெறுத்தார். பார்ப்பனியப் பழமையை எதிர்த்துப் போராடியவர் தந்தை பெரியார். சுயமரியாதைத் தத்துவம் இன்றைக்கும் தேவையான ஒன்று. மூடப் பழக்கங்கள், பழமையான மதக் கோட்பாடுகளுக்கு எதிராக தந்தை பெரியார் தொடங்கிய போராட்டத்தை நீங்கள் தொடர வேண்டும்’’ எனப் பல கருத்துகளை மாணவிகளிடம் எடுத்துக் கூறினார்.

22.4.1995 அன்று நீடாமங்கலத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவும், மாபெரும் பொதுக்கூட்டமும் வரலாற்றில் பதியும் வண்ணம் மிகுந்த சிறப்போடு நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட இவ்விழாவில மத்திய சமூகநலத்துறை அமைச்சர் சீதாராம் கேசரி கலந்துகொண்டு சிறப்பு செய்தார். கழகத்தின் பொறுப்பாளர்கள் மிகச் சிறப்பாக விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர். நகரின் மய்யப் பகுதியில் எடுப்பாக அய்யாவின் சிலையை அமைச்சர் திறந்து வைத்தார். இதுவரை வெண்கலம், சிமெண்ட், கருங்கல் இவற்றால் எல்லாம் அய்யாவின் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த சிலையோ பைபரில் ஒரு புத்தம் புதிய தொழில்நுட்பத்தோடு வடிக்கப்பட்ட ஒன்றாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க  தந்தை பெரியார் சிலையை மத்திய சமூகநலத்துறை அமைச்சர் சீதாராம் கேசரி அவர்கள் தோழர்களின் பலத்த வாழ்த்தொலிக்கிடையே மின்சார பொத்தானை அழுத்தி திறந்து வைத்தார். நிகழ்வில் தலைமை உரையாற்றுகையில், இரண்டு கோரிக்கைகளை அமைச்சரிடம் வைத்தேன். “தந்தை பெரியாரின் பிறந்த நாளை மய்ய அரசின் சார்பில் அதிகாரபூர்வமாகக் கொண்டாட வேண்டும். தந்தை பெரியாரின் சிலையை டில்லியில் நிறுவிட வேண்டும். இதனை நமது சமூக நலத்துறை அமைச்சர் நிறைவேற்றிக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டோம்.  “கேசரி என்றால் சிங்கம் என்று இந்தியில் பொருள். ஒரு சிங்கத்தின் சிலையை இன்னொரு சிங்கம் திறப்பது பொருத்தம்தானே’’ எனக் கூறி அறிவு ஆசானின் சிந்தனைகளை எடுத்துரைத்தேன்.

நிகழ்வில் அமைச்சர் சிறப்புரையாற்றுகையில், “தந்தை பெரியாரின் கருத்து இன்னும் வடநாட்டில் போதிய அளவில் பரவவில்லையே என்று ஆதங்கப்படுகிறேன். எனது 65 ஆண்டு பொது வாழ்க்கையில் எனக்குப் பெரிய உந்துதல் கிடைத்திருக்கிறது. பெரியார் சிலையைத் திறந்ததன் மூலம் பழமையை அறவே ஒழித்துப் புதுமையைக் கொண்டு வந்தாக வேண்டும் என உத்வேகமடைகிறேன். பெரியார் சிலையை டில்லியில் நிறுவ வேண்டும் என்று நண்பர் கி.வீரமணி கேட்டுள்ளார். அந்தப் பொறுப்பை நான் ஏற்றுச் செய்து முடிப்பேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். தந்தை பெரியார் சொன்ன அதே கொள்கைகளைத்தான் அண்ணல் அம்பேத்கரும், காந்தியடிகளும் சொன்னார்கள். தந்தை பெரியார் இந்து மதத்தைக் கடுமையாக எதிர்த்தது சரியே! அதுதான் பிறவியிலேயே நம்மைப் பிரித்து ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்கிக் கொண்டு இருக்கிறது. வால்டேர், ரூசோ போன்றவர்கள் 200 அல்லது 300 ஆண்டுகளில் செய்த அறிவுப் புரட்சியை பெரியார் 20 ஆண்டுகளில் சாதித்துள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களே, புலிகளாக வாழுங்கள்! கசாப்புக்கடை ஆடுகளாக ஆகிவிடாதீர்கள்!

இந்தச் சிலை திறப்பு விழாவில் என்னை கலந்துகொள்ளச் செய்த நண்பர் கி.வீரமணிக்கும் உங்களுக்கும் மிக்க கடமைப்பட்டுள்ளேன். அனைவருக்கும் மிக்க நன்றி! எனப் பல கருத்துகளை உணர்ச்சி மேலிட அந்தக் கூட்டத்தில் பேசினார். அமைச்சரின் உரையை பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் சிறப்பாக மொழிபெயர்த்தார்.

27.4.1995 அன்று சென்னை ராணி மெய்யம்மை அரங்கில் அகில இந்திய பார்கவுன்சில் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சட்டப் பிரிவுத் தலைவருமான ஆர்.முத்துகிருட்டினன் மகள் கவிதாவுக்கும் _ சேலம் தாதம்பட்டி குப்புசாமி (நாயுடு) மகன் செல்வராசுக்கும் நடைபெற்ற திருமண வரவேற்பில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.

29.4.1995 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழாவில், விழா மேடையில் கோவை கீசகன்_பத்மா ஆகியோரின் செல்வி திராவிடச் செல்விக்கும், சென்னை மேடவாக்கம் பி.முனுசாமி _ குப்பம்மாள் ஆகியோரின் மகன் ரவிக்குமாருக்கும் மேடையில் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியைக் கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன்.

30.4.1995 அன்று பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழகத்தின் வெள்ளிவிழா கழகத்தின் சார்பாக சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கினேன். விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நிதியமைச்சர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர். மா.வேழவேந்தன் தன் துணைவியார் பேபி அவர்களின் கழுத்திலிருந்த தாலியை கத்திரிக்கோலால் அறுத்து அகற்றினார். மண்டபமே அதிரும் அளவுக்குக் கரவொலி எழும்பியது! அவ்விழாவில் சிறப்புரையாற்றிய நிதியமைச்சர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள்,

“உலக அறிஞர்கள் எல்லோரையும் விட அதிக அளவில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். எதிர்கால உலகம் கடவுளுக்கோ, மதத்துக்கோ சொந்தமல்ல; மனிதனுக்கும் அறிவியலுக்குமே சொந்தமானது.

பகுத்தறிவாளர் கழகத் துவக்க முதல் இன்றுவரை தொடர்ந்து 25 ஆண்டுகள் பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலராக இருந்து அரும்பணி ஆற்றிடும் மானமிகு கி.வீரமணி அவர்களின் செயல் பாராட்டத்தக்கது. இருட்டுப் பழக்க வழக்கங்களைக் காரண காரிய விளக்கங்களோடு அறிவியல் முறையில் நின்று, தொழில்நுட்ப முறையில் நின்று, கருத்துகளை எடுத்து வைத்து, வாதங்கள் வைத்து சான்று பகிர்ந்து, சிறப்பான பணி செய்து வரும் இந்தப் பகுத்தறிவாளர் கழகத்தின் பணி நாடெங்கும் பரவி நின்று, இன்னும் ஜாதி மத பேதங்களை, மூடப்பழக்க வழக்கங்களைக் களைய வேண்டும்’’ எனப் பல வரலாற்றுச் செய்திகளைக் கூறி மகிழ்ந்தார். விழாவில் சோ.ஞானசுந்தரம், கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

2.5.1995 அன்று மலேசியப் பொதுத் தேர்தலில் _ மலேசியத் தமிழர் தலைவரும், மலேசிய இந்தியன் காங்கிரசின் தேசியத் தலைவரும், மலேசியாவின் தகவல் தொடர்புத்துறை அமைச்சருமான ‘டத்தோ ஸ்ரீ’ சாமிவேலு அவர்களும், அவரது கட்சியைச் சார்ந்த ‘டத்தோ’ சுப்ரமணியம், ‘டத்தோ’ மகாலிங்கம் மற்றும் பல்வேறு தமிழர்களும், மலேசிய ஆளுங்கட்சிக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு, பெருவாரியாக வெற்றி பெற்றமை அறிந்து, தமிழ்நாட்டுத் தமிழர்கள் சார்பாகவும், வெளிநாடுகளில் வாழும் பன்னாட்டுத் தமிழர்கள் சார்பாகவும் பெருமகிழ்சசியுடன் வாழ்த்துகிறோம்.

இந்திய துணைக் கண்டத்தில் உள்ள தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக பெரும் அளவில் தமிழர்கள் வாழும் நாடு மலேசியா ஆகும்! தமிழ் மொழி உணர்வு, இன உணர்வு, இலக்கிய பண்பாட்டு உணர்வும் அதிகம் கொண்டவர்கள் அவர்கள்!

அவர்களுடைய உரிமை, வளர்ச்சி முன்னேற்றம் இவற்றுக்காகப் பாடுபடுவது அரசியல் துறையில் மலேசிய இந்தியக் காங்கிரஸ் கட்சியாகும். எதிர்க்கட்சிகளில் தமிழர்கள் பலர் உண்டு என்றாலும், பெருவாரியான தமிழர்கள் ஆதரவினைப் பெற்றுள்ள அமைப்பு இதுவே.

இந்நிலையில், இவர்கள் பெற்றுள்ள வெற்றி _ மலேசியத் தமிழர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க உதவ வேண்டும்; உதவும் என்கிற நன்நம்பிக்கையுடன் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த பாராட்டுதலைத் தெரிவிப்பதுடன், ‘அம்னோ’ என்னும் ஆளுங்கட்சியின் தலைவராக உள்ள டாக்டர் மகாதீர்மகமது அவர்களது சீரிய தலைமையில் எல்லா இனங்களும் நல்ல வண்ணம் முன்னேறும் சீரிய வாய்ப்பு உள்ளது அனைவருக்கும் பெருமை அளிப்பதோடு, மிகவும் முதிர்ச்சி பெற்ற பிரதமரான டாக்டர் மகாதீர்மகமது அவர்களுக்கும் _ தமிழர்கள் தங்களது பாராட்டை உரித்தாக்குவதும் இன்றியமையாத கடமையாகும்.

4.5.1995 அன்று ‘இந்து’ நாளேட்டில், இடஒதுக்கீடு 50 சதவிகிதத்துக்கு மேல் போகக் கூடாது என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையையே செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உண்மைக்கு மாறாக செய்தி வெளியிட்டது. அதன் சாரம்:

“கல்வி நிறுவனங்களில் 69 சதவிகித இடஒதுக்கீடு திட்டத்தில் -_ உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையை ஏற்பது என தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது; 50 சதவிகிதத்திற்கு மேல் இடஒதுக்கீடு செய்யப்படாத கல்வி நிறுவனங்களில் _ இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணையை மறு பரீசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் கருத்து தெரிவித்தார். அப்படிச் செய்வது, உச்ச நீதிமன்ற ஆணையை மீறுவதாகிவிடும் என்றும், அது ஆபத்தான விளைவாகிவிடும் என அமைச்சர்கள் கருத்துக் கூறியதாகத் தெரிகிறது. முதலமைச்சர் இந்தக் கருத்தை ஏற்று உச்சநீதிமன்ற ஆணையையே நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என நம்பகத் தன்மை இல்லாத செய்தியை வெளியிட்டது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ‘விடுதலை’யில் அறிக்கை வெளியிட்டோம். அதில், “தங்களது இனத்தின் நலனைப் பாதுகாப்பது ஒருபுறம், மறுபுறம் 31சி சட்டத்தின் கீழ் ‘சமூகநீதி காத்த வீராங்கனையால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் ஒன்றுமில்லை எனக் கூற முயல்வது, தமிழ்நாடு அரசும், முதலமைச்சர் அவர்களும் 9ஆவது அட்டவணைப் பாதுகாப்புடன் உள்ள 31சி சட்டம் 69 சதவிகிதப்படி இடஒதுக்கீடு செய்ய வாய்ப்பளிக்கும் சட்டம் ஆனதால், உச்சநீதிமன்றம் சட்ட விரோதமான ஓர் ஆணையைப் பிறப்பித்தால் இந்திய அரசியல் சட்டத்திற்கே அது முரணானது என்பதால், அதற்குக் கீழ்ப்படிய வேண்டிய தேவையில்லை. துணிவுடன் அதனை எதிர்கொள்ள வேண்டும். இப்பிரச்சினையில எள் மூக்கு முனையளவுகூட தமிழ்நாடு அரசு விட்டுக்கொடுக்கக் கூடாது. அப்படிச் செய்தால் சமூகநீதிச் சாதனையை அது  ஓர் நொடிப்பொழுதில இழந்ததாகிவிடும்’’ என்பதை தமிழக முதல்வருக்கு அறிக்கையில் சுட்டிக்காட்டினோம்.

5.5.1995 அன்று உதகையில் மிக்க எழுச்சியுடன் ஜாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. கழகப் பொறுப்பாளர்களின் பிரம்மாண்டமான வரவேற்பு மகிழ்ச்சியைத் தந்தது. மாநாட்டினையொட்டி சாலையெங்கும வண்ண விளக்குகளால் தந்தை பெரியார் உருவம் மின்னியது. அனைத்துப் பகுதியிலிருந்தும் மாநாட்டிற்கு மக்கள் வந்தனர். ஜாதியை ஒழிக்க வேண்டிய அவசியம் குறித்து பேசுகையில, “ஜாதிப் பெயர்களை தெருப்பெயர்களாகக் கொண்டுள்ளன. அதில் உள்ள ஜாதிப் பெயரை நீக்க செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு இம்மாநாடு மூலம் கோருகிறோம். சமூகத்தில மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலிலுள்ள நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும் அரசுக்கு மாநாட்டு வாயிலாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது.’’ மாநாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும் நடைபெற்றது. மறுநாள் குன்னூரிலும் ஜாதி ஒழிப்பு மாநாடு சிறப்பாக கழகத் தோழர்களால் நடத்தப்பட்டது.

6.5.1995 அன்று கோவையில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அருகருகே மூன்று இடங்களில் தந்தை பெரியார் சிலைத் திறப்பு விழாவும், படிப்பகம், பாசறை ஆரம்ப விழாவும் சிறப்புடன் நடத்தப்பட்டது. மாலை 6:00 மணிக்கு கோவை ஆத்துப்பாலத்தில் _ கோவை மாவட்டத்திலேயே முதல்முறையாக அறிவுலக ஆசான் தந்தை பெரியாருடைய முழு உருவச் சிலையை கழகத் தோழர்களின் கரவொலியுடன் திறந்துவைத்தேன். மேலும், கழகத்திற்கு புதிய கட்டடத்தையும், இரவுப் பாடசாலையையும் திறந்துவைத்தேன். விழாவில் பெருவாரியான இளைஞர்கள் கருப்புச் சட்டையோடு அணிவகுத்து வந்திருந்தனர்.

கோவை அண்ணாநகரில் ரூபாய் அறுபது ஆயிரம் செலவில் கட்டப்பட்ட கோவை மாவட்ட இளைஞரணி தலைமை அலுவலகத்தைத் திறந்து வைத்தேன். அங்கு அமைக்கப்பட்ட அறிவு ஆசான் தந்தை பெரியார் முழு உருவச் சிலையையும் திறந்து வைத்தேன். அங்கிருந்து கோவை சுந்தராபுரத்தில் உள்ள முருகன் நகரில் மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட சுயமரியாதை  பகலவன் தந்தை பெரியாரின் சிலையைத் திறந்து வைத்தேன். மாவட்ட இளைஞரணியினர் அனைவரும் வியக்கும் வண்ணம் மிகவும் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். பெரியார் பெருந்தொண்டர் கணபதி இராமசாமியின் இயக்கப் பணியைப் பாராட்டி பட்டுச் சால்வையும், கேடயத்தையும் வழங்கிச் சிறப்பித்தேன். தந்தை பெரியார் பாசறை, சதாசிவம் _ அம்மணியம்மாள் படிப்பகம், இரா.ஆ.சண்முகசுந்தரம் நினைவு மன்றம் எனப் பெயர் சூட்டப் பெற்று முருகன் நகரில் திறக்கப்பட்டது. கோவை சுந்தராபுரத்தில் பெரியார் _ அண்ணா படிப்பகத்தைத் திறந்து வைத்தேன். சுப்ரமணியர் குடும்பத்தினரின் இல்லத்தை ஒட்டி இந்தப் புதிய படிப்பகக் கட்டடம் அமைக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் சிகாகோ நகரில் உள்ள தமிழ் உணர்வாளர் விசுவநாதன் அவர்கள் இங்கே தமது சொந்த ஊரில் தமது இல்லத்தை ஒட்டி இப்படி ஒரு படிப்பகத்தை அமைத்திருப்பதும், அவரது துணைவியார் திருமதி கண்ணகி விசுவநாதன் இந்தப் படிப்பகத் திறப்பில் கலந்து கொண்டதும் சிறப்பானதாகும். மூன்று விழாக்களையும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த தி.க. செல்வத்தை கழகத்தின் சார்பில் வாழ்த்தி, சால்வை அணிவித்து பாராட்டுதலைத் தெரிவித்தேன்.

6.5.1995 பட்டுக்கோட்டை நமது சுயமரியாதை இயக்கக் கோட்டை! அங்கு அய்யாவின் அரும்பெரும் தொண்டர்களாக இருந்து உழைத்தவர்கள் ஏராளம்!

தளபதி அழகிரி அவர்கள் தந்தை பெரியார்தம் கொள்கைப் பிரச்சார பீரங்கியாகவே இருந்து இறுதி மூச்சடங்கும்வரை உழைத்த இரணியகசிபு ஆவார்.

இளவயதிலேயே அவரது பேச்சால் ஈர்க்கப்பட்டு, இயக்கத்திற்கு தன்னை ஒப்படைத்துக்கொண்ட இளைஞராக பொதுத் தொண்டுக்கு வந்து சுமார் 50, 60 ஆண்டுகாலம் உழைத்த நம் கருப்பு மெழுகுவத்தியாம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை இரெ.இளவரி அவர்கள் தமது 72ஆம் வயதில் பட்டுக்கோட்டையில் காலமானார் என்கிற செய்தி நமக்குப் பேரிடி போன்ற ஒரு செய்தியாகும்.

பல நேரங்களில் அவர் உடல் நலம் குன்றிய போதெல்லாம்கூட, மறைந்த பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி நாகை என்.பி.காளியப்பன் அவர்களைப் போலவே சென்னை பெரியார் திடலுக்கு வந்து தங்குவார். மருத்துவ சிகிச்சையும் ஊக்கமும் உற்சாகமும் பெற்று ஊர் திரும்புவார்.

சுயமரியாதைச் சுடரொளியான அவரது வெண்கல நாதக் குரலும், எதிரிகளை வெருண்டோடச் செய்யும் ஆணித்தரக் கொள்கை முழக்கங்களும் ஒரு தனியான பாணியாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் காத்த கட்டுப்பாடு அவரை ஒரு லட்சியத் தொண்டராக, தோழராக இயக்க வரலாற்றில் பெருமைக்குரியவராக ஆக்கியுள்ளது.

இயக்கத்திற்குச் சோதனை வந்தபோதெல்லாம் அவர் சபலங்களுக்கு ஆளாகாமல், ராணுவ வீரனைப் போல் தன் கடமையைச் செய்த கருஞ்சிறுத்தையாகவே திகழ்ந்தார்.

அந்த மாவீரனின் மறைவால் ஏற்பட்ட பள்ளம் பள்ளமே! கள்ளமில்லாத உள்ளம் அவரது உள்ளம்! குற்றமில்லாத உழைப்பு அவரது உழைப்பு!! பலன் எதிர்பாராத வாழ்வு அவரது சுயமரியாதை வாழ்வு!

வரலாறாகிவிட்ட அந்த வைரத்திற்கு நமது வீரவணக்கம்!

அவரது குடும்பத்திற்கும் கழகத்தவர்க்கும் நமது ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக! என இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டோம்.

8.5.1995 அன்று தாம்பரம் தந்தை பெரியார் நகர் ஜீவா வணிக வளாகத்தில் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களது சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு திறந்துவைத்தேன்.  முனுஆதி அவர்கள் தலைமையேற்ற இவ்விழாவில் அனைத்து கட்சிப் பிரமுகர்களையும் ஒரே மேடையில் அமரச் செய்து சிறப்பு செய்தனர். விழாவில் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றுகையில், “மறைந்த ஜீவா குடும்பத்தின் மீது அளவில்லா அக்கறை காட்டியவர் தந்தை பெரியார்! ஜீவா அவர்களின் பிள்ளைகளை தம் செல்வங்களாகக் கருதினார். அவரின் மறைவுக்குப் பிறகு அவர்களின் மூத்த மகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தவரே அய்யா அவர்கள்தான். ஜீவா அவர்கள் தந்தை பெரியாரை விட்டுச் சென்றிருந்தாலும், கடைசி வரை நாத்திகராகவே வாழ்ந்து காட்டியவர். ‘கடவுள் இல்லை’, ‘இல்லவே இல்லை’ என்று கூறியவர். அந்த வகையில் ஒரு நாத்திகரின் சிலையை நாத்திகனாகிய நான் திறப்பதில் பெருமைப்படுகிறேன். கடவுளையும், மதத்தையும் நம்பி எந்தப் பயனும் கிடையாது. இந்தக் கொள்கையில் கடைசிவரை ஜீவா உறுதியாக இருந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிலையைத் திறந்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

பொதுவுடைமை, பொதுவுரிமை உள்ள சமுதாயத்தைப் படைப்போம் வாரீர்! பேதமில்லா சமுதாயத்தைப் படைக்க உறுதி கொள்வோம்! மூடநம்பிக்கையற்ற உலகைப் படைப்போம்! அதுதான் ஜீவா அவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான வீர வணக்கமும் பாராட்டுமாகும்.

வாழ்க ஜீவா! வருக அவர் காண விரும்பிய சமுதாயம்! எனப் பல கருத்துகளை எடுத்துக் கூறினேன். விழாவில் தோழர் ஆர்.நல்லகண்ணும், பொதுவுடைமைத் தோழர்களும், கழகத் தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

10.5.1995 அன்று வேலூர்_காட்பாடி காந்தி நகர் பகுதியில் வாழ்ந்த பெருமதிப்பிற்கும், பேரன்பிற்குமுரிய பெரியார் பெருந்தொண்டர் பாசமிகு அய்யா முருகு.சுப்ரமணியம் அவர்கள் இயற்கை எய்தினார் என்கிற செய்தி பேரிடியான செய்தியாகும்.

இருதய நோய் தொந்தரவுடன் அவர்கள் நீண்டகாலம் அவதிப்பட்டாலும்கூட, கொள்கையில் கொஞ்சமும் மாறாத மிகப் பெரிய சுயமரியாதை வீரராகத் திகழ்ந்தவர்.

மானமிகு முருகு. சுப்ரமணியம் அவர்கள் காலஞ்சென்ற சேலம் கல்லூரி பிரின்ஸ்பால் இராமசாமி (கவுண்டரின்) மைத்துனர் ஆவார். தந்தை பெரியார் அவர்களிடமும் அவர்தம் கொள்கை இயக்கத்திலும் மாறாத பற்றாளராக தமது உத்தியோக காலத்திலும் வாழ்ந்தவர். மிகுந்த துணிச்சலுடன் புதுக்கோட்டை, நாகர்கோயில் போன்ற பல ஊர்களில் நகராட்சி ஆணையராகப் பதவியில் இருந்த அந்தக் காலத்திலும், அய்யா அவர்களை அவர்கள் பிரச்சாரத்திற்கு வரும்போதெல்லாம் தவறாது வந்து கண்டு, தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று விரும்தோம்பத் தவறாதவர். அதனால், தொல்லை எதுவரினும் தாங்குவதற்கு அஞ்சாத நெஞ்சினர்.

அவர் எழுத்துச்சுடர் சுயமரியாதை முத்துக்கள் என்பதற்கு மற்றொரு அடையாளம் ‘சங்கராச்சாரி யார்?’ என்னும் நமது தமிழ் நூலை ‘ஷிணீவீஸீt ஷீக்ஷீ ஷிமீநீtணீக்ஷீவீணீஸீ’ என்னும் தலைப்பில் ஆங்கில மொழியாக்கம் செய்த பெருமகனார் அவர்!

நமது ஆங்கில மாத ஏடான ‘மாடர்ன் ரேஷனலிஸ்ட்’டின் ஒரு தோன்றாத் துணைவர்! கொள்கையில் மிகவும் விட்டுக் கொடுக்காத ஆர்வலர். அவ்வளவு மூத்த அவர், நமக்குக் கடிதம் எழுதும்போது, ‘விடுதலை’ மேலாளர் முதுபெருந் தொண்டர் சி.ஆளவந்தார் அவர்களுக்கு எழுதும்போது, கொள்கை உணர்வுகள் அதிலே கொப்பளித்து நிற்கும்!

அவரது மறைவு சுயமரியாதை இயக்கத்தின் சொக்கத் தங்கத் தோழர் ஒருவரின் ஈடு செய்ய முடியாத இழப்பினை ஏற்படுத்திய ஒன்றாகும்!

இயற்கையை எண்ணி ஆறுதல் பெறுவதைத் தவிர வேறுவழி என்ன? அவருடைய துணைவியார், மகள்கள், மருமகன் குடும்பத்தினர் அனைவருக்கும் நமது இயக்கச் சார்பில் ஆறுதல் இரங்கல்!

அந்தக் கைம்மாறு கருதா கடமை வீரருக்கு நமது வீர வணக்கங்கள்! என்று இரங்கல் அறிக்கை வெளியிட்டோம்.

(நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *