கட்டுரை: கீதையின் மறுபக்கம் ஒரு சிந்தாந்த பங்களிப்பு

டிசம்பர் 01-15, 2020

-”மார்க்சிய அறிஞர்” அருணன்

1998இல் வெளிவந்த வீரமணியினுடைய கீதையின் மறுபக்கம் கீதை பற்றிய மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறிந்தது என்றும் சொல்லலாம், பெரியாரிய நோக்கில் சித்தாந்தத் துறைக்கு அவர் அளித்த பங்களிப்பு என்றும் சொல்லலாம். இது அவர் எழுதிய ஓர் முக்கியமான ஆய்வு நூல்; அதிகம் பேசப்பட்டது. 1999 மார்ச்சில் சென்னையில் இது பற்றி நடந்த ஆய்வரங்கில் அ.தி.மு.க. அவைத் தலைவர் நாவலர் நெடுஞ்செழியனும் கலந்து கொண்டார்.

கீதையின் சொல்லாட்சியில் மயங்காதவர்கள் அபூர்வம். மகாத்மா காந்தியும் மயங்கினார்; பாரதியும் மயங்கினார். ஆனால், திலகரும், கோட்சேயும் அதன் உள்ளடக்கத்தை உணர்ந்து ஆராதித்தவர்கள். அப்போதே – சமூக சீர்திருத்தவாதிகள் சுதாரிக்க வேண்டியிருந்தது. நல்ல பாம்புகூட அழகுதான், ஆனால் அதன் உள்ளேயிருப்பது விஷமல்லவா? இலக்கியத்திலுள்ள ஆபத்து என்ன வென்றால் அதன் வடிவழகில் மயங்கி அதன் மோசமான உள்ளுறையைக் கவனிக்காமல் விடுவது. அழகில் ஆபத்து உண்டு என்பது இதுதான். கீதை விஷயத்தில் நடந்ததும் இதுதான். பிராமணியவாதிகள் அதனால்தான் கீதையைத் தூக்கிப் பிடித்தார்கள். பைபிள், குரானுக்குச் சமதையாகத் தங்களுக்கு இது இருப்பதாகத் தண்டோரா போட்டார்கள். கீதையின் உள்பக்கம் பிராமணியமே என்று பளிச்சென்று சொல்ல மக்கள் தலைவர்கள் தேவைப்பட்டார்கள். வடக்கே அம்பேத்கர் அதைச் செய்தார். அத்தகைய ஆய்வுரையோடு தமிழகத்தில் செய்தவர் வீரமணி.

இந்த நூலின் சகல கூறுகளையும் சொல்ல இந்த அத்தியாயத்தில் இடம் போதாது. நூலின் அய்ந்தாம் அத்தியாயமாகிய வர்ணப் படைப்பு என்பதைப் பற்றிச் சொன்னாலே அதன் தன்மையைப் புரிந்து கொள்ளலாம். வீரமணி எழுதினார் – பழமைவாதத்தினை, வர்ணாசிரமக் கோட்பாட்டினை அப்படியே அப்பட்டமாகப் பாதுகாக்கும் அரணாகக் கீதை அமைந்துள்ளது என்பதால் அதற்கு இவ்வளவு மவுசு, மரியாதை, அதற்கெனத் தனிப்பட்ட பிரச்சாரம்!

“சாதுர்வர் ண்யம் மயா ஸ்ருஷ்டம்”-

“நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப் பட்டவை; அவரவர்களுக் குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும், அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ண தர்ம  உற்பத்தியாளனாகிய என்னால் கூட முடியாது”. (அத்.4_சுலோகம் 13)… இதன்படி ஜாதி என்பது மனிதனால் உண்டாக்கப்பட்டது அல்ல, கடவுளால் உண்டாக்கப் பட்டதாகும்… ஆண்டவனே அந்த நான்கு ஜாதியையும், அதன் தர்மத்தையும் உருவாக்கினாலும்கூட, அதனை மாற்றிடும், திருத்தி அமைத்திடும் உரிமை அவருக்கே கூடக் கிடையாது என்று சர்வசக்தி வாய்ந்த, எல்லோரும் அவனாக உள்ள அவனே கூறுகிறான்! எவ்வளவு விசித்திரமான குயுக்தி பாருங்கள்!

வருணாசிரம அமைப்பு மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல;  அது ஆண்டவனால் படைக்கப்பட்டது, அவனால்கூட மாற்றப்பட முடியாதது- இப்படிச் சொல்லுகிற கீதையைப் புகழுகிறவர்கள் தெரிந்தோ தெரியாமலோ பிராமணியத்தை ஆதரிக்கிறவர்களாகிப் போகிறார்கள். இந்த சுலோகத்தில் குண-கர்ம விபாகச என்றும் வருகிறது. அதாவது குணத்தின் அடிப்படையில்தான் நான்கு வருணங்களை பகவான் உருவாக்கினான் என்றும் வருகிறது. இதை வைத்துக் கொண்டு பிறப்பின் அடிப்படையில் வருணங்களைப் பகுக்கவில்லை கீதையில் பகவான் என்று சிலர் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். விஷயம் என்னவென்றால், குணம் என்பது பிறப்பிலிருந்து வருகிறது என்ற அர்த்தத்தில்தான் அந்தச் சொற்கள் அங்கே நின்றன.இல்லையெனில், குணம் என்னவென்று பிள்ளை வளர்ந்த பிறகு தெரிந்து பின்னர் என்ன வருணம் என்று நிச்சயித்தாக வேண்டும். அதுவெல்லாம் காரியசாத்தியம் இல்லை. இதை இப்படியாக விளக்கியது யார் தெரியுமா? சாட்சாத் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரர்! அதைக் கச்சிதமாக மேற்கோள் காட்டியிருக்கிறார் வீரமணி. ஸ்வதர்மம் என்கிற போது அவரவர் ஜாதி தர்மத்தைத்தான் சொன்னார் என்றுதான் அர்த்தமாகும் என்று அவர் சொல்லியிருப்பதையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, எந்தெந்த வருணத்திற்கு என்னென்ன வேலைகள் என்பதையும் பகவான் விலாவாரியாக விளக்கியிருக்கிறார். அது தர்மசாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டது போலவே உள்ளது. பணிவான தொண்டூழியம் செய்வது தான் சூத்திரர்களின் இயல்பான கர்மமாகும் (அத்.18. சுலோகம் 44) என்று பகவான் தெளிவாக வரையறுத்திருக்கிறார்.

போதாக்குறைக்கு பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் (அத்.9, சுலோகம்.32) என்று பிரகடனப் படுத்தியிருக்கிறார். பிறப்பிலேயே பேதம் பார்க்கிறவர்தான் கீதையின் பகவான்! இவற்றையெல்லாம் வரிசையாக எடுத்துக் காட்டியிருக்கிறார் வீரமணி. இந்தப் பாவயோனி விவகாரத்தை சின்மயானந்தா போன்றவர்களாலேயே தாங்க முடியவில்லை என்பதையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

இத்தகைய கீதைக்கு பிராமணியவாதிகள் எப்படித்தான் பூச்சுப் பூசினாலும், வெள்ளையடித்தாலும் அது ஆங்காங்கே அசிங்கமாகப் பல்லைக் காட்டுவதை சுட்டிக்காட்டிக் கொண்டே போகிறார் வீரமணி. இந்த ஆய்வு நூலைப் படித்து முடிக்கிற எவருக்கும் கீதையை எப்படி புனித நூலாகக் கருதி நீதிமன்றங்களில் சத்தியப் பிரமாணம் செய்யப் பயன்படுத்துகிறார்கள் எனும் சந்தேகம் நிச்சயம் வரும். நீதிமன்றங்களில் கீதையை இப்படி பயன்படுத்தக் கூடாது என்று நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் போட்டால் நல்லது என்று தோன்றும். வாசகன் நெஞ்சில் இத்தகைய எண்ணங்களை உருவாக்கியதில் நூலின் வெற்றி துல்லியமாகப் புலப்படுகிறது.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *