-நம்.சீனிவாசன்
உலகச் சரித்திரம் விரிவானது. மகத்தான சிந்தனையாளர்கள் தோன்றியிருக்கிறார்கள். புரட்சியாளர்கள் பிறந்திருக்கிறார்கள். தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், தியாக சீலர்கள், பண்பாளர்கள் இப்பூவுலகில் எல்லாக் காலங்களிலும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டார்களா என்பது கேள்விக்குறியே. தன்னிகரில்லாச் செம்மல்கள், வாழும்போது வறுமையில் வாடியிருக்கிறார்கள்; சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்; அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்; தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மறைந்த பின்தான் சமூகத்திற்கு அவர்களது மேன்மை புரிகிறது. வாழ்ந்த வீடு நினைவில்லமாக மாறுகிறது. உருவம், சிலையாக வடிவம் பெறுகிறது. பிறந்த நாள் விழா, களை கட்டுகிறது. வாழும்போதே கொண்டாடும் பக்குவம் மக்களுக்கு வரவேண்டும்.
தமிழகத்தில் வாழும் முதுபெரும் தலைவர்களில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களும் ஒருவர். அவருக்கு வயது 88. கொண்டாடப்பட வேண்டிய மனிதர் என்பேன், காரணம் சொல்லுவேன்.
நல் உள்ளம் கொண்டோர், தம் திரண்ட சொத்தினை ஊருணியாகப் பயன்பட அறக்கட்டளையாக்குவர். ஆனால், பிற்காலத்தில் அறக்கட்டளை சுயநலவாதிகளின் கைகளில் சிக்கி, கபளீகரம் செய்யப்படும். ஏராளமான அறக்கட்டளைகளின் கதி, அவலத்திற்கு ஆட்பட்டே அழிந்திருக்கின்றன என்பது வரலாறு நமக்குச் சொல்லும் பாடம். தந்தை பெரியார் அறக்கட்டளையை உருவாக்கினார். அவருக்குப் பின் மணியம்மையார் அறக்கட்டளையை உருவாக்கினார். தமிழர் தலைவர் வீரமணியின் பொறுப்புக்கு அறக்கட்டளைகள் வந்து சேருகின்றன. நாற்பதாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. தரம் வாய்ந்த ஆன்றோர்களை _ சுயநலம் நிழல்படாத சான்றோர்களை அறக்கட்டளை உறுப்பினர்களாக நியமித்து, பழுது படாமல் பாதுகாத்து வருகிறார். அறக்கட்டளைக்கு மேலும் சொத்தினைப் பெருக்கி இருக்கிறார். புதிய அறக்கட்டளைகளை உருவாக்கியிருக்கிறார். எதிரிகள்கூட சுட்டுவிரல் நீட்டி குற்றம் சுமத்த முடியா நாணயத்தின் சிகரமாய் ஒளி வீசுகிறார். அந்த நேர்மையாளரை _ தூய கரத்தாரை வாழும்போதே கொண்டாடுவோம்!
தொண்டிலே விஞ்சி நிற்கும் வீரமணிக்குத் தமிழ்ப் பெருங்குடி மக்கள் ஏராளமான பொருள்களை அன்பளிப்பாக நல்கியிருக்கின்றனர். சமூகநீதிக்குப் பாடுபடுகின்றமைக்காக, பகுத்தறிவுப் பிரச்சாரம் நிகழ்த்துவதற்காக, பெண்ணுரிமைக்காகப் போராடுவதற்காக, தமிழக உரிமைகளுக்கு வாதாடுவதற்காக, தமிழர்களின் நலனுக்காக இடைவிடாது உழைப்பதற்காகத் தமிழ்ச் சமூகம், அவரைத் தராசில் அமர வைத்து, எடைக்கு எடை தங்கம் வழங்கி மகிழ்ந்தது. குண்டுமணி அளவுகூடத் தங்கத்தை வீட்டிற்குக் கொண்டு போகவில்லை அவர். அப்படியே இயக்கத்திற்குக் கொடுத்துவிட்டார். தமிழக அரசு ‘பெரியார் சமூகநீதி விருது’ எனும் பெயரில் வழங்கிய அய்ந்து பவுனையும் கூடுதலாகச் சேர்த்து வழங்கிய வள்ளல் வீரமணியை வாழும்போதே கொண்டாடுவோம்!
சமூகநீதியைக் காக்கவே தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார். இடஒதுக்கீட்டிற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டம் முதல் திருத்தம் காண பெரியாரே காரணகர்த்தாவாக இருந்தார். பெரியாரின் அடியொற்றி சமூகநீதிக்காக வீரமணி உழைத்த உழைப்பு அளப்பரிது. எம்.ஜி.ஆர் கொண்டுவந்த ஒன்பதாயிரம் ரூபாய் வருமான வரம்பாணை ஒழிவதற்கு வீரமணியே காரணம். மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டிற்கு வழி செய்யும் மண்டல் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்திட 16 போராட்டங்களையும், 42 மாநாடுகளையும் நடத்தி வெற்றிக்கனி பறித்தவர் வீரமணி. தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்பட்டபோது, 31சி சட்டத்தைத் தமிழக சட்டமன்றத்தில் இயற்றச் செய்து, குடியரசுத் தலைவரின் கையொப்பம், 9ஆவது அட்டவணையில் சேர்ப்பு என்று இடைவிடாது கடுமையான களப்பணி ஆற்றி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76ஆவது திருத்தத்திற்குக் காரணமாக இருந்து 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்குச் சட்டப் பாதுகாப்புப் பெற்றுத் தந்த சாதனைச் செம்மல் வீரமணியை வாழும்போதே கொண்டாடுவோம்!
வீரமணி ஒரே நேரத்தில் முப்பெரும் பணிகளை ஆற்றி வருகின்றார். இயக்கத் தலைமை, இதழ்களின் ஆசிரியர், கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பு. நினைத்தாலே மலைப்பாக இருக்கும். இயக்கத்தை நடத்துவது எளிதல்ல. அரசியல் கட்சிகளில் ஆட்சிக்கு வருவோம் என்கிற நப்பாசையில் தொண்டர்கள் தொடருவார்கள். ஆனால், திராவிடர் கழகத்தில் அதற்கு வேலை இல்லை. பதவி கிடைக்காது. காண்ட்ராக்ட், கமிஷன், பர்சென்டேஜ், பரிந்துரை என எந்த வழியிலும் தோழர்கள் வருமானம் பார்க்க முடியாது. எல்லாவற்றையும் எதிர்ப்பதால் கெட்ட பெயர் தாராளமாய்க் கிடைக்கும். போராட்டம் அழைப்பு வரும்; சிறைவாசம் உண்டு. சொந்தக் காசை செலவு செய்து, அவரவர் வீட்டில் உண்டு இயக்கத்திற்குப் பணியாற்ற வேண்டும். ஆனாலும், குடும்பம் குடும்பமாய் நாடு முழுவதும் தோழர்கள் இருக்கிறார்கள் என்றால் வீரமணியின் ஆளுமை நிறைந்த _ குடும்பப் பாசம் நிறைந்த ஒப்பற்ற தலைமையே காரணம். ‘விடுதலை’ இயக்கத்தின் மூச்சுக்காற்று. வடிவத்தில் மாற்றம்; தகவல்கள் புதுமை; விற்பனையில் வேகம் தலைமையையும் தொண்டனையும் இணைக்கும் பாலமாய் ‘விடுதலை’ சிறப்பாகச் செயல்படும் நேர்த்திக்குக் காரணம் வீரமணி. தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி திகைப்பை ஏற்படுத்தும். முத்துறைகளிலும் முத்திரை பதித்துவரும் வீரமணியை வாழும்போதே கொண்டாடுவோம்!
உலகத் தலைவர்கள் முப்பது வயதிற்குப் பிறகே பொது வாழ்க்கையில் நுழைந்திருக்கிறார்கள். வீரமணி பத்து வயது முதற்கொண்டே பொதுவாழ்க்கையில் பயணம் செய்து வருகிறார். அவருக்கு வயது 88. அவருடைய பொதுவாழ்விற்கு வயது 78. தலைவர்கள் பலரும் தம் வாழ்வில் பலமுறை கருத்துகளை மாற்றிக் கொண்டிருக்கின்றனர். தலைவனை, தத்துவத்தை, கொடியை மாற்றியிருக்கின்றனர். ஆனால், வீரமணி தம் வாழ்நாள் முழுவதும் ஒரே தலைவன், ஒரே கொள்கை, ஒரேஇயக்கம், ஒரே கொடி என வாழ்ந்து வருகிறார். இந்தியப் பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், கவர்னர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், கட்சித் தலைவர்கள் என மிக மிக உயர் பதவி வகித்த அத்தனை பேருடனும் வீரமணிக்கு நெருங்கிய நட்பு உண்டு. தமிழக முதலமைச்சர்களில் எட்டுக்கும் அதிகமானோர் வீரமணியிடம் பேரன்பைப் பொழிந்திருக்கிறார்கள். ஒரு கொள்கையில் உறுதியாக நின்று கொண்டு, கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாமல், நாகரிகம் _ மனிதநேயத்துடன் அனைவருடனும் இனிமையாகப் பழகி, மாபெரும் நட்பெனும் நந்தவனத்தை உருவாக்கியிருக்கும் இனிய பண்பாளர் வீரமணியை வாழும்போதே கொண்டாடுவோம்!
பொதுவாக எல்லோருக்கும் குடும்பம் இருக்கும்; உறவினர்கள் இருப்பார்கள்; அலுவலக நண்பர்கள் அல்லது வியாபாரக் கூட்டாளிகள் அமைவார்கள்; சொத்து சேர்ப்பார்கள்; பொழுதுபோக்கு, அரட்டைக் கச்சேரி, இன்பச் சுற்றுலா என வாழ்வு அமையும். ஆனால், வீரமணிக்கு இயக்கமே வாழ்க்கை. இயக்க வரலாறே அவருடைய வரலாறு. எப்போதும் இயக்கச் சிந்தனை. பேசினாலும் எழுதினாலும் நாட்டு நடப்புகளே கருப்பொருள். எப்போதும் படித்துக் கொண்டே இருப்பார். மனதில் தோன்றும் கருத்துகளை எழுத்தில் வடித்துக்கொண்டே இருப்பார். நல்ல தலைவராகவும் இருக்கிறார். சிறந்த பேச்சாளராகவும் திகழ்கிறார். உயர்ந்த எழுத்தாளராகவும் வலம் வருகிறார். சிறு சாதனை படைத்தவர்களையும் உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கிறார். பெரியாரைப் பாராட்டி எழுதிவிட்டால் உச்சிமுகர்ந்து கொண்டாடுகிறார். கடும் பணிச் சுமைகளுக்கிடையிலும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லி விடுகிறார். துயரத்தில் இருப்பவர்களின் விழிநீரைத் துடைத்திட அவர் கைகள் நீள்கின்றன. மருத்துவமனையில் தோழர்கள் _ நண்பர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தால் ஆறுதல் சொல்ல, உதவிகள் செய்ய, மருத்துவமனைக்கு அவர் கால்கள் விரைகின்றன. இளைஞராய் செயல்படுகிறார். எல்லா தரப்பினரிடையேயும் இயல்பாய் பழகுகிறார். எல்லா வயதுக்காரர்களிடமும் பேச அவரிடம் விஷயங்கள் இருக்கின்றன. பெரிய தலைவர்தான். ஆனால், எல்லோரும் எளிமையாய்ச் சந்திக்கலாம். வீரமணியைச் சந்தித்து விட்டுத் திரும்பும்போது மனசுக்குள் மகிழ்ச்சி அலைபாயும். பண்பின் சிகரமாய்த் திகழும் வீரமணிக்கு 2020, டிசம்பர் 2
— 88ஆம் ஆண்டு பிறந்த நாள். வாழும்போதே கொண்டாடிக் குதூகலிப்போம்.