கே1: 1957ஆம் ஆண்டில் சட்ட எரிப்புப் போராட்டத்தின்போது பெரியார், குருசாமி இருவரும் சிறைசென்ற நிலையில் ‘விடுதலை’ ஆசிரியர் பொறுப்பை ஏற்றது யார்?
– மரகதமணி, வியாசர்பாடி
ப1: அந்தக் காலகட்டத்தில் ‘விடுதலை’யின் நிருவாகப் பொறுப்பில் _ அரசுத் துறையில் வணிகவரி அதிகாரியாக இருந்தவர், நீடாமங்கலம் எஸ்.சரவணன் பி.ஏ., அவர்கள் _ திராவிட மாணவர் கழகத்திலிருந்தே ஈடுபாடு கொண்டவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மதியழகன், இளம்வழுதி ஆகியோர் காலத்தில் படித்தவர். பிறகு அரசு அதிகாரியானவர்; சில மாதங்கள் விடுமுறை சம்பளமில்லாமல்கூட விடுப்பு எடுத்து இங்கே, (“இராவணன்’’ என்ற புனைப் பெயரில் எழுதுவார்) ‘விடுதலை’ நிருவாகப் பொறுப்பில் தலையங்கமும் எழுதினார்; சில மாதங்கள் சாமி.சிதம்பரனார் போன்றவர்களும் ஆசிரியர் குழுவில் தங்களது தொண்டறத்தைச் செய்தனர். சட்டக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவனாகப் படித்துக் கொண்டிருந்தபோது, ‘விடுதலை’ ஆபீசுக்கு அடிக்கடி சென்று அவர்களுக்கு உதவிடும் வகையில் எழுத்துப் பணியிலும் சிற்சில நேரங்களில் ஈடுபட்டுள்ளேன். சில கட்டுரைகளையும் எழுதியும் உள்ளேன். சில நேரங்களில் அய்யாவின் பழைய அறிக்கைகளையும் எழுத்துகளையும் எடுத்துப் போட்டுப் பயன்படுத்தி வந்தார்கள்.
கே2: இணையவழியில் உள்ள யூ.டியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வருவது சரியா?
– மகிழ், சென்னை
ப2: பேச்சுரிமை _ எழுத்துரிமை _ கருத்துரிமை கழுத்து முறிப்பு ஜனநாயக விரோதம். அந்தத் திசை நோக்கிய மத்திய பா.ஜ.க. ஆட்சியின் மற்றொரு புதிய முயற்சி இது. ஒரே அரசுக்கான முன்னோட்ட முயற்சிகளில் இதுவும் ஒன்று.
கே3: தங்கள் வாழ்வில் மீண்டும் மீண்டும் நினைத்து மகிழும் நினைவு எது?
– சீர்காழி கு.நா.இராமண்ணா
ப3: தந்தை பெரியார் என்னும் இமயத்திற்கு அருகில் இருந்து, அவரது இறுதிக் காலத்தில் நாம் ஒரு சிறு அளவுக்காவது பயன்பட்டோமே என்பதுதான் மீண்டும் மீண்டும் நினைத்து மகிழ்வது..
அதுபோலவே பெரியார் அறக்கட்டளை, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தை ஒழிக்க ஆரியம், வருமானவரித் துறை மூலம் _ அய்யா காலத்தில் தொடங்கி _ துரோகத்தின் துணையோடு _ அன்னையார் காலத்திலும் தொடர்ந்து, (அவசர) நெருக்கடி காலத்தில் உச்சிக்குப் போய், எனது பொறுப்பில் இறுதியாக வழக்காடி, அதில் வெற்றிபெற்று, அதனை அறக்கட்டளைதான் என்று ஏற்க வைக்கப்பட்ட பாடுகள் _ நீதிமன்ற சட்டப் போர்களின் வெற்றியும், 80 லட்ச ரூபாய் தள்ளுபடியும், நிறுவனத்திடமிருந்து துறை பறித்ததை வட்டியோடு திரும்ப வாங்கியதும்தான் மற்றொரு மறக்க முடியாத மகிழ்ச்சியாகும். (விவரம் தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை -_ மரண சாசனம் _ புதிய பதிப்பில் விளக்கம் _ காண்க.)
கே4: அயல்நாட்டு நிதி உதவி பெறும் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு எதிராகப் போராடக் கூடாது என்கின்ற மத்திய அரசின் சட்டம் சரியானதா?
– சார்லஸ், சேலம்
ப4: அறப் பணிகளுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் நன்கொடையை மனதிற்கொண்டே போடப்பட்ட சட்டம் இது. ஒரு காலகட்டத்தில் இச்சட்டத்தைக் கொண்டுவந்தவர்களுக்கு விரோதமாகவே திரும்பினாலும் வியப்பில்லை!
கே5: வேல் யாத்திரையில் தமிழக அரசின் நடவடிக்கை என்பது – நாடகம் தானே?
– சீனிவாசன், வேலூர்
ப5: இரட்டை வேடம் _ வழமைபோல்! ‘அடிக்கிறமாதிரி அடிப்பேன் _ நீ அழுகிற மாதிரி அழு’ என்பதான நாடகம்!
கே6: தி.மு.க.வின் தேர்தல் பரப்புரைப் பயணத்தை அரசு தடை செய்வதற்கு எதிராக தொடர்ந்து தடையின்றி பரப்புரை மேற்கொள்ள சட்டரீதியாக என்ன செய்ய வேண்டும்?
– அருண், ஈரோடு
ப6: நீதிமன்றங்களையே சார்ந்து செல்லும் நீதி சில நேரங்களில் கிடைக்காத நிலையும் உருவாகும். எனவே, மக்கள் மன்றம்தான் இறுதித் தீர்வு.
கே7: தாதாக்களையும், ரவுடிகளையும், கொலைகாரர்களையும், சமூக விரோதிகளையும் தெரிந்தே தங்கள் கட்சியில் பா.ஜ.க.வினர் சேர்ப்பதற்கான நோக்கம் என்ன?
– பெருமாள்சாமி, மதுரை
ப7: ரவுடித்தனம் செய்தாவது கட்சியை வளர்த்திடும் குறுக்குவழி! வேறு பலர் சேர முன்வரவில்லை. நீங்கள் குறிப்பிடும் ரகம் அதன் பாதுகாப்புக்காக அங்கே செல்கிறது!
கே8: தங்கள் 88ஆம் பிறந்த நாள் செய்தியாகத் தாங்கள் கூற விரும்புவது?
– பெரு.இளங்கோவன், சென்னை
ப8: அய்யா தலைமையில் – அய்யா மறைந்த பிறகு அன்னையார் தலைமையில் எடுத்த சூளுரையை செயல்படுத்த நாளும் உழைப்பதும் _ நாணயம், நம்பிக்கை, ஒழுக்கம் _ ஒத்தறிவுடன் கூடிய பகுத்தறிவு மூலம் ஒவ்வொரு தோழரும் அடையாளம் பதிக்க வேண்டும் _ எங்கும் ‘திராவிடம்’ என்றும் ‘திராவிடம்’ (அது சமத்துவம், சமநீதி, சுயமரியாதை அல்லாமல் வேறு எதுவும் இல்லை என்பதால்) என்பதே நமது முழக்க வேர், பண்பாட்டு வேர் _ தனித்துவ அடையாளம். பாதுகாக்க இளைஞர்களைத் திரட்ட வேண்டும்.
கே9: நின்று – வென்று வரமுடியாத பா.ஜ.க., வென்றவர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கும் நிலை தொடர்வதால், வென்ற கட்சியை விட்டு விலகினால் பதவி பறிபோகும் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தால் என்ன?
– குணசெல்வம், தருமபுரி
ப9: நடைமுறையில் அது உள்ளது _ சில ஓட்டைகளுடன். அந்த ஓட்டைகளை அடைத்தாலே நோக்கம் நிறைவேறக் கூடும்.