எளிமை, கருணை, கனிவு, துணிவு, நேர்மை, தொண்டறம், கட்டுப்பாடு இவற்றின் கலனாக விளங்குபவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.
பெருக்கத்து வேண்டும் பணிதல் என்ற கருத்தின் காட்சியும், மாட்சியும் அவரே! எளிய தொண்டரிடமும் இன்முகங் காட்டி, செவிகொடுத்துப் பழகும் பண்பு அவரது தனிச்சிறப்பு.
உழைப்பவர் யார், பிழைப்பவர் யார் என்பதை எடைபோட்டுப் பழகக்கூடிய ஆற்றலும், அறிவு நுட்பமும் உடையவர் என்பதால், தன் முனைப்பாளர்கள் அவரிடம் தலைதூக்க முடியாது. அதேநேரத்தில், இயக்கத்திற்குப் பல்லாற்றானும் பயன்படுபவர் யாராயினும் அவர்களுக்குச் சேவகம் செய்யவும், சிறப்புச் செய்யவும் அவர் தவறியதே இல்லை.
பெண்ணுக்கு வேண்டாம் பெண்மை! என்ற எனது நூல், இரண்டு நாள் கழித்து ஈரோடு மாநாட்டில் வெளியிடப்படவிருந்த நிலையில், அணிந்துரை வேண்டி அவரை அணுகியபோது, கோர்க்கப்படாத அச்சுப்படிவங்களை அவரிடம் கொடுத்து, நாளையே வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
அலுக்காமல், வெறுக்காமல் ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டவர், நாளை காலை 11.00 மணிக்கு வாருங்கள் என்றார். 11.45 மணிக்குத் தாமதமாக என்னால் செல்ல முடிந்த நிலையிலும், மலர்ந்த முகத்தோடு, பெருமைபொங்க வரவேற்றார்.
அணிந்துரை தயாராகவுள்ளது. உங்களிடம் நேரில் கொடுக்க வேண்டும் என்பதற்காகக் காத்திருந்தேன் என்றார்கள்.
அய்யா யாரிடமாவது கொடுத்துவிட்டுச் சென்றிருக்கலாமே என்று நான் ஆதங்கத்துடன் கேட்க,இல்லை. உங்களை நேரில் பாராட்ட வேண்டும் என்று எண்ணியே காத்திருந்தேன். இரவு 3.00 மணிக்கு எழுந்து படிக்கத் தொடங்கினேன்.
பக்கங்கள் கூட வரிசையாக அடுக்கப்படவில்லை, மாறிமாறியிருந்தன. 10 நிமிடங்கள் பக்கவாரியாக அடுக்கினேன். அதன்பின் படிக்கத் தொடங்கினேன்.
விடியவிடிய முடித்துவிட்டேன். மிகச் சிறப்பாகவுள்ளது. பெண்ணுரிமைப் போராளிகளுக்குப் பெரிதும் பயன்படும். பல புதிய சிந்தனைகள் உள்ளன. அரசுக்கு நிறையப் பரிந்துரைகள் எழுதியிருக்கிறீர்கள். எனவே, கலைஞரைச் சந்தித்து ஒரு நூல் கொடுங்கள்! என்றார்.
இப்படியொரு தலைவரை இவ்வுலகில் பார்க்க முடியுமா? வியந்துபோனேன்.
டாக்டர் கோராவினுடைய மகனார் இலவணன் அவர்கள் தமிழர் தலைவருடன் பேசிக்கொண்டிருந்தபோது சந்திக்கச் சென்றேன். எமரால்டு கோபாலகிருஷ்ணன் அவர்களும் அருகில் இருந்தார்கள். நான் எழுதிய அர்த்தமற்ற இந்துமதம் நூல்பற்றி இலவணன் அவர்களிடம் எடுத்துக் கூறி, என்னைச் சுட்டிக்காட்டி, இவர் மஞ்சை. வசந்தன்; ஆற்றலுள்ள எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர்; திராவிட இயக்கத்தின் சொத்து! என்றார்கள். இந்த மனமும் மாண்பும் எவருக்கு வரும்.
திராவிடர் கழகத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத எனக்கு, பொதுக்குழுக் கூட்டங்களுக்குச் சிறப்பு அழைப்பு அனுப்புவார்கள். கூட்டங்களுக்கு வாருங்கள். எல்லோரிடமும் அறிமுகம் ஏற்படும். உங்கள் கருத்து பயனுள்ளதாக இருக்கிறது. கருத்துகளையும் கூறுங்கள் என்றார்கள். எந்தத் தலைவருக்கு இந்த உள்ளம் வரும்!
நன்றாக உழைக்கும்போது உச்சி மீது வைத்துப் பாராட்டும் இவர், பணியைச் சரியாகச் செய்யவில்லையென்றால், பார்த்தும் பாராமல் சென்றுவிடுவார். அவர் அளிக்கும் தண்டனை அதுவே. என் அனுபவத்திலும் நான் இதைக் கண்டுள்ளேன்.
இயக்கத்தின் மூச்சாக இருக்கும் அவர், இயக்கத்தின் இதயத்துடிப்பான தொண்டர்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற அவரது எதிர்பார்ப்பே அதற்குக் காரணம்!
– மஞ்சை. வசந்தன்