இலக்கியம் : வளம்பெற வழிகாட்டும் “வாழ்வியல் சிந்தனைகள்” ( ஒரு பார்வை )

டிசம்பர் 01-15, 2020

– ழகரன்

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவரால் ‘விடுதலை’ நாளேட்டில் எழுதப்படும் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நூலாகத் தொகுக்கப்பட்டு தொடர்ந்து வெளிவருகிறது. 2002ஆம் ஆண்டு எழுதத் தொடங்கி 2020ஆம்  ஆண்டின் இறுதியில் 15ஆம் தொகுதியை நமக்கு அளித்துள்ளார்.

நம் அன்றாட வாழ்வின் செயல்பாடுகள், உடல்நலம், உணவு முறை, உளவியல், மருத்துவம், இலக்கியம், அரசியல், சமூகவியல், பெண்ணியம், பொருளாதாரம், நிருவாகம், நேர மேலாண்மை, அறிவியல், வரலாறு, கலைத்துறை, சுற்றுச்சூழல், சட்டம், குழந்தைகள் மனவளம், பகுத்தறிவு, உடல் அமைப்பு, மனித நேயம், பல்வேறு நாடுகள், அங்குள்ள மக்கள், பண்பாடு, வரலாறு உள்ளிட்ட ஏராளமான துறைகளில் இந்தக் கட்டுரைகள் கருத்துச் செறிவுடன் அமைந்துள்ளன.

எதுகை, மோனைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் கருத்துக் கொலை எழுத்தாளர்களினின்றும் வேறுபட்டு கருத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, எதுகை மோனையுடன் எளிய நடையில் எழுதி வருகிறார். சான்றுகளுடன் கருத்துகளை அடுக்கும்போது வாசகர்களின் மூளையில் அழியாத கல்வெட்டாக ‘வாழ்வியல் சிந்தனைகள்’ பதிந்து விடுகின்றன.

உலகத்து எழுத்தாளர்கள், அறிஞர்களின் அரிய சிந்தனைகளை நல்ல தமிழில் தேவையான இடத்தில் பொருத்தமாக அமைத்து எளிய நடையில் எழுதியுள்ளமை, கட்டுரை இலக்கியத்தில் வளம் சேர்க்கும் ஒன்றாகும்.

முதல் பாகம், ஈகையால் வரும் புகழையும், பகிர்ந்துண்ணுவதால் பெறும் பயன்களையும், கோபத்தால் விளையும் பேராபத்தையும், அன்றாடச் சிக்கல்களைத் தீர்க்கும் வழிவகைகளையும், மருந்துகளால் விளையும் நலங்களையும் தீங்குகளையும், அறிவியல் சிந்தனைகளால் நிகழும் அதிசயங்களையும் கூறிடும் அரிய களஞ்சியமாகும்.

இரண்டாம் பாகம், முதிர்ச்சியின் இலக்கணத்தையும், புகைப்பழக்கத்தால் வரும் கேடுகளையும், குழந்தை வளர்ப்பு முறைகளையும், கூடி வாழும் கோட்பாடுகளையும், சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்திகளையும், மருந்துக்கு மாற்றான மாமருந்தையும், நயத்தக்க நாகரிகத்தையும், பொல்லாத நோய்பற்றிச் சொல்லாத உண்மைகளையும் கொண்ட அரிய களஞ்சியமாகும்.

மூன்றாம் பாகம், அறிவியல் கொடையையும், மரங்களால் மலர்ந்த மனிதத்தையும், சீனத்துப் பெரியாரின் சீலங்களையும், அன்பெனும் பிடியுள் அகப்படும் மாமலையையும், பிண மேடையாகும் மணமேடையைத் தவிர்க்கச் சில யோசனைகளையும், மனத்தின் செயல்தான் எல்லாமென்பதையும் உணர்த்திடும் உயரிய நூல்.

நான்காம் பாகத்தில், அறியாமையைப் போக்கும் முறைகளும், மன அழுத்தத்திற்கான மாற்றுப் பாதையும், சிரிப்பால் வரும் பயன்களும், மருத்துவப் பரிசோதனையின் அவசியமும், முதுமை உணர்த்தும் எச்சரிக்கைகளும், பண்பால் மலரும் பாசங்களும், அறிவார்ந்தவர்களின் அடக்கங்களும், உள்ளத்தை உருக்கும் நோயை மாய்க்கும் முறைகளும் கூறப்பட்டுள்ளன.

அய்ந்தாம் பாகம், உயர்ந்த மனிதராக உன்னத வழிகளையும், சோதிடத்தை வெல்லும் மனோதிடத்தையும், தற்கொலைச் சிந்தனையைத் தவிர்க்கும் முறைகளையும், சில நேரங்களில் சில மனிதர்களையும் பற்றி எடுத்துரைக்கிறது.

ஆறாம் பாகம், தொலைக்காட்சியின் தொல்லைகளைத் தவிர்க்கச் சில யோசனைகளையும், ஆசிரியர் _- மாணவர்களின் உறவுப் பாலத்தையும், வளர் இளம் பருவத்தில் எழும் சிக்கல்களுக்குத் தீர்வுகளையும், இதயம் காக்கும் முறைகளையும், நாளும் சிந்திக்க நல்ல வழிகளையும், நல்வாழ்வுக்கு உரியவற்றையும்  கூறுகிறது.

ஏழாம் பாகத்தில், நடைப்பயிற்சியின் லாபங்களைப் பற்றியும், காலை உணவே நமது காவலனாக உள்ளதை விளக்கியும், தூக்கம் என்பது எவ்வாறு மருந்தாக விளங்குகிறது என்பதைப் பற்றியும், பேரறிஞர் அண்ணா அவர்களைப்பற்றி அரிய தகவல்களைக் கொண்டுள்ள சில நூல்களைப் பற்றியும், கிரேக்கத் தத்துவ ஞானியான சாக்ரட்டீஸ் அவர்களைப் பற்றிய தகவல்களும் குறிப்பிடப் பட்டுள்ளன.

எட்டாம் பாகத்தில், மாரடைப்பு வருமுன் காக்க எளிய வழியைப்பற்றியும், உண்டபின் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் பலன் பற்றியும், ஓய்வறியா உழைப்பாளியாய் நம் உடலில் இயங்கும் இதயத்தைக் காக்கும் வழிகளைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. மற்றும், சிங்கப்பூர் புத்தக விழா உள்ளிட்ட தகவல்களும், கன்பூசியஸ், அலெக்சாண்டர், அரிஸ்டாட்டில், எழுத்தாளர் சின்னக் குத்தூசி ஆகியோர் பற்றிய அரிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

ஒன்பதாம் பாகத்தில், புதுமையான பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. தேநீர் மற்றும் ‘கிரீன் டீ’ போன்ற பானங்களின் நன்மைகள் குறித்தும், சுறுசுறுப்புடன் இருக்க உதவும் உணவு வகைகள் குறித்தும் ஏராளமான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மற்றும் சிக்கனம், தொண்டறம், தாயன்பின் தனித்தன்மை, காலத்தின் முக்கியத்துவம் போன்ற வெற்றிக்கு வழிகாட்டும் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. மேலும் புரட்சிக் கவிஞர், பெருஞ்சித்திரனார், கலைவாணர் என்.எஸ்.கே., மருத்துவப் புரட்சிக்கு வித்திட்ட கருப்பினத் தாய் ஹன்ரிட்டாலாக்ஸ், கடமை வீரர் மனோகரன் உள்ளிட்ட பலர் பற்றிய அரிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

பத்தாம் தொகுதி ஏராளமான கருத்துப் பதிவுகளைக் கொண்டதாக வெளிவந்துள்ளது. இதில், கடமை தவறாது நமக்குப் பாடமாக விளங்கும் மறைந்த ஓட்டுநர்கள் சக்திவேல், சிவக்குமார் பற்றி குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. காலத்தின் அருமையை உணர்த்தும் கட்டுரைகளும், நீரிழிவு பற்றிய புதிய செய்திகளும் விவரிக்கப்பட்டுள்ளன. நம் உடலைப் பாதுகாக்கும் உணவு முறைகள் பற்றிய செய்திகள் ஏராளம் இடம் பெற்றுள்ளன.

பதினொன்றாம் தொகுதியில், நட்பு, மகிழ்ச்சி, எளிமை, தொண்டறம், முதுமையின் முதிர்ச்சி போன்றவை பற்றிய அறிவார்ந்த கருத்துகளும்; சர்க்கரை(நீரிழிவு) நோய், மறதிநோய், மனநலம் மற்றும் இதயம், மூளை நோய்கள் பற்றிய மருத்துவத் தகவல்களும், இங்கர்சால், நெல்சன் மண்டேலா, அறிஞர் அண்ணா, அன்னை மணியம்மையார், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி, வி.ஸ.காண்டேகர் போன்ற தலைவர்கள்  _-சிந்தனையாளர்களின் வாழ்க்கைப் பாடங்கள் பற்றிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

பன்னிரண்டாம் தொகுதியில், மூளையைப் பாதுகாக்கும் பொருட்டு தவிர்க்கப்பட வேண்டிய தவறுகள், வள்ளுவர் கூறும் நல வாழ்வியல், ஊட்டச்சத்து, நடைப்பயிற்சி குறித்த விழிப்புணர்வுக் கட்டுரைகளும்; துக்கம், கவலை போன்றவற்றிலிருந்து வெளிவருவது எப்படி?

நீண்ட காலம் வாழ்ந்த மக்களிடமிருந்து கிடைத்த 12 ரகசியங்கள் எனப் பல்துறைத் தகவல்கள் அடங்கியுள்ளன.

பதிமூன்றாம் தொகுதியில், பழைய வாலிபர்கள் தம் கடைசி காலத்தில் யாருக்கும் பாரமாக இல்லாமல் சுதந்திர வாழ்வு வாழும் வழிமுறைகளைப் பற்றியும், வாழ்க்கையில் துயருற்ற காலத்தில் நமக்குக் கை கொடுப்பதும், மனந்திறந்து கொட்டி மனதை இலகுவாக ஆக்கி ஆறுதல் தருவதுமான நட்பைப் பற்றியும், நம் உடலில் நோய்களினால் நாம் தாக்கப்படும் போதுதான் உடலின் எல்லா உறுப்புகளுமே உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாதவை என்பதை உணருகிறோம். அவ்வாறு பாதிப்புக்குள்ளாகும் பகுதி சிறுநீரகமும் இதயமும் ஆதலால், இதயப் பாதுகாப்பு பற்றியும் சிறுநீரகப் பாதுகாப்பு பற்றியும் அவை பாதிப்படையாமல் இருக்கச் செய்ய வேண்டியவை பற்றியும் தடுக்க வேண்டியவை பற்றியும் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

பதினான்காம் தொகுதியில், தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோருடன் ஆசிரியருக்கு ஏற்பட்ட சுவையான அனுபவப் பகிர்வுகள், கணினி உலகம் பற்றிய தகவல்கள், புத்தரின் பகுத்தறிவு வாழ்க்கை நெறிகள், தூக்கம் பற்றிய அரிய தகவல்கள், ஆசிரியர், அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் வாங்கிய அரிய நூல்கள், நெல்சன் மண்டேலாவின் சிறைக் கடிதங்கள் குறித்து ஏராளமான செய்திகள் இடம் பெற்றுள்ளன.

இந்த பதினைந்தாம் தொகுதியில், உலகை அச்சுறுத்தும் ‘கொரோனா’ பெருந்தொற்று காலத்தில் எழுதப்பட்ட முக்கியமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மனித குலத்தின் சிந்தனையையும், வாழ்வையும் மேம்படுத்தும் வாழ்வியல் தகவல்களை தொட்டனைத் தூறும் மணற்கேணி போல் தம் சிந்தனை ஊற்றிலிருந்து வாரி வாரி வழங்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் ஆதரவளிக்கும் வாசகர் பெருமக்களுக்கும் நன்றி! நன்றி!!

இத்தொகுப்புகளின் சில கட்டுரைகள் பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதே வாழ்வியல் சிந்தனைக்கான ஓர் அங்கீகாரமாகும்.       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *