சுவடுகள் : இந்து மதம் ஒழிவதே நல்லது!

டிசம்பர் 01-15, 2020

-டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

இந்தியர்களுக்கு தாங்கள் ஒரே நாட்டைச் சார்ந்தவர்கள் என்கிற எண்ணம் வருவதே மிகக் கடினமான ஒன்றாகும். இங்கே அமர்ந்துள்ள அரசியல் உணர்வுமிக்க தலைவர்கள், இந்தியாவின் மக்கள் என்று அழைப்பதையே கடுமையாக எதிர்த்த நிகழ்வு என் நினைவிற்கு வருகிறது! இந்திய தேசம் என்று அழைக்கப்படுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள். இந்தியர்கள் ஒரே தேசத்தவர் என்று நம்புவதன் மூலம் மிகத் தவறான கருத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறீர்கள்.

பல ஆயிரம் ஜாதியினராகப் பிளவுபட்டுள்ள மக்கள் எப்படி ஒரே தேசத்தினராக மாற முடியும்? சமூகத்தளத்தில் இந்தியர்கள் இன்னும் பிளவுண்டு கிடக்கிறார்கள் என்பதை எவ்வளவுக் கெவ்வளவு விரைவில் உணர்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. அப்போதுதான் இந்தியர்களுக்குள் ஆழ வேரூன்றியுள்ள சமூகப் பிளவுகளை அகற்ற வேண்டிய அவசியத்தை நாம் உணர்வோம். அந்த இலக்கினை அடைவது நமக்கு மிகக் கடினமாக இருக்கப் போகிறது. அதுவும் அமெரிக்க அய்க்கிய நாட்டில் இருந்ததைவிட நமக்குக் கடினமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில், அமெரிக்க அய்க்கிய நாட்டில் ஜாதிகள் இல்லை. இந்தியாவில் ஜாதிகள் இருக்கின்றன. ஜாதிகள் அனைத்துமே தேச விரோத சக்திகள்தான். இந்தியா ஒரு தேசமாக மாற வேண்டுமானால், ஜாதிகளை முடிவுக்குக் கொண்டு வந்தாக வேண்டும்.

(-1949 நவம்பர் 11ஆம் நாளன்று இந்திய நாடாளுமன்றத்தில் அரசியல் நிர்ணய சபையின் இறுதிக் கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய உரையிலிருந்து…)

இந்துக்களைப் போல, சீக்கியர்களைப்போல, பார்சிகளைப்போல தீண்டத்தகாத மக்களும் தனித்த வகுப்பினர்; அவர்கள் இந்துக்கள் அல்லர். அம்மக்களை இந்துக்களாகக் கருதுவது பெரும் பிழையாகும். இந்திய வரலாற்று நோக்கில் தனித்த பண்பாடோடும், மத நம்பிக்கைகளோடும் வாழ்ந்த அம்மக்கள் தனித்த வகுப்பினராகக் கருதப்பட வேண்டும்.

(1929இல் சைமன் ஆணையத்திடம் அண்ணல் அம்பேத்கர் அளித்த அறிக்கையில்…)

இந்து மதத்தில் உள்ள சமத்துவமின்மைதான் நான் இந்து மதத்திலிருந்து வெளியேற எண்ணுவதற்கான அடிப்படைக் காரணமாகும். “நான் ஓர் இந்துவாகப் பிறந்துவிட்டேன், அது என் தவறன்று; ஆனால், நான் ஓர் இந்துவாக இறக்க மாட்டேன்.’’ -1935இல் பம்பாய் இயோலா மாநாட்டில்,

இந்து மதத்தை இந்திய மண்ணிலிருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்தெறிவதற்கு கிறித்துவமோ இசுலாமோ பயன்படாது. அந்த மதங்களின் கடவுள் கோட்பாடுகளும், ஜாதிப் பழக்க வழக்கங்களும் அதற்குத் தடையாக இருக்கின்றன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் பவுத்தத்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும். இந்து சமூகக் கட்டமைப்பில்தான் இந்தியாவின் பலவீனம் தங்கியிருக்கிறது. எனவே, இந்து மதம் எவ்வளவு விரைவில் ஒழிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு நல்லது. நமது சமூக நெறிகளும், இந்து மத மரபுகளும் நமது ஒற்றுமையைச் சீர்குலைப்பவையாக உள்ளன. எதிர்கால இந்தியாவில் இந்து மதத்தின் பங்கு எந்த அளவில் இருக்கப்போகிறது என்பதைப் பொருத்தே இந்தியாவின் எதிர்காலம் அமையும்.

– டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

நினைவு நாள்: 6 டிசம்பர், 1956.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *