எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை(67) : வைத்தியநாத அய்யரின் வேடம் கலைந்தது!

டிசம்பர் 01-15, 2020

நேயன்

எஸ்.வி.இராசதுரை ஆய்வில்…

முதலில் எஸ்.வி.இராசதுரை அவர்கள், “பெரியார் மரபும் திரிபும்’’ என்னும் நூலில் “சுயமரியாதை இயக்கத்தின் கோயில் நுழைவு, கருவறை நுழைவுப் போராட்டங்கள்’’ என்னும் தலைப்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த போராட்டம் பற்றிக் கூறியிருப்பதைப் பார்ப்போம்.

“அப்போது நடக்கவிருந்த மதுரை, இராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தல்களில் வெற்றி பெறுவதைக் கருத்தில் கொண்டு, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் யாருக்கும் தெரியாமல் இரவு நேர கடைசி பூசைக்குப் பிறகு சில தாழ்த்தப்பட்டவர்களுடன் நுழைந்து தேசிய பத்திரிகைகளில் பெரும் ஆரவாரமிக்க அங்கீகாரம், ராஜாஜியிலிருந்து காந்திவரை தேசியத் தலைவர்களின் புகழ்ச்சி ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டார் – பெரியாரால் ‘குள்ளநரி’ என்று அழைக்கப்பட்டவர், மதுரை ஏ.வைத்திய நாதய்யர். தாழ்த்தப்பட்டோருக்கு கோயில் நுழைவு உரிமை என்பதை 1922இல் கடுமையாக எதிர்த்தவர் இதே நபர்தான் என்பதை ‘திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்பு’களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இனாம் குடிகளின் உரிமையையும், இனாம்தாரி, ஜமீன்தாரி ஒழிப்பையும் எதிர்த்தவரும் இவர்தான். மேற்சொன்ன மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வைத்தியநாதய்யர் நடத்தி வைத்த ‘நுழைவும்’ கூட அப்போது அக்கோயில் நிருவாக அதிகாரியாக இருந்த ஆர்.எஸ்.நாயுடு என்ற நீதிக்கட்சிக்காரரின் அனுமதியாலும் இசைவின் பேரிலுமே சாத்தியமாயிற்று. தாழ்த்தப்பட்டவர்களை அனுமதித்ததன் காரணமாக, கருவறையைப் பூட்டிவிட்டு மறுநாள் கோயிலுக்கு வராமலிருந்த பட்டர்களை இடைநீக்கம் செய்தவர் ஆர்.எஸ்.நாயுடுதான். (‘குடிஅரசு’ 16.07.1939, ‘நகரதூதன்’ 16.07.1939)

வைத்தியநாத அய்யரின் ‘கோயில் நுழைவுப் போராட்டத்தை’ அடுத்து, 1937_1939ஆம் ஆண்டில் அன்றைய சென்னை மாகாணத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த சி.இராசகோபாலாச்சாரியின் (இராஜாஜி) அரசாங்கம், ஆலய நுழைவுச் சட்டத்தை இயற்றியதாகவும் ஒரு பொய்ப் பிரசாரம் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து நீடிக்கிறது.

ஆனால், உண்மை என்ன? அன்றிருந்த சட்டப்படி, தாழ்த்தப்பட்டோர் கோயில்களுக்குள் நுழைவதும் அவர்களை நுழையச் செய்வதும் குற்றமாகும். மதுரை மீனாட்சியம்மன் கோயில் போன்ற ஆலயங்களில ‘நாடார்கள்’ போன்ற ‘சூத்திர’ ஜாதியினரும் நுழைவதற்குத் தடை இருந்தது. நாம் மேலே சுட்டிக்காட்டிய காரணங்களுக்காக வைத்தியநாத அய்யர் நடத்திய கோயில் நுழைவுப் போராட்டத்திற்குப் பிறகு, தஞ்சைக் கோயில் உள்ளிட்ட வேறுசில முக்கியக் கோயில்களிலும் வழிபாட்டிற்காகத் தாழ்த்தப்பட்டோர் நுழைய அனுமதி தரப்பட்டது. எனவே, ஆலயங்களில் நுழைந்தோரையும், நுழைய விட்டோரையும் சட்டத்திலிருந்து பாதுகாக்க, அன்றைய பிரிட்டிஷ் கவர்னர் எர்ஸ்கின் பிரபுவை ஓர் அவசரச் சட்டம் பிறப்பிக்கச் செய்தார் இராஜாஜி. மேலே சொன்ன குற்றத்தைச் செய்தவர்கள் மீது வழக்குத் தொடர்வதைத் தடை செய்யும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவதுதான் அச்சட்டம். பிரிட்டிஷ் ஆளுநர்களுக்கும் வைசிராய்க்கும் அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கும் அதிகாரம் இருக்கக் கூடாது என்று முழங்கிய பின்னர் 1937இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட காங்கிரசு அரசாங்கம் பல்வேறு நோக்கங்களுக்கு அவசரச் சட்டங்களை இயற்றச் செய்தது. (‘தினமணி’ 12.04.1939: எஸ்.வி.ஆர்., 315_316). இங்கு குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு முக்கியச் செய்தி – வைத்தியநாத அய்யர் ‘ஆலயப் பிரவேசப் போராட்டம்’ நடத்துவதற்கு ஓராண்டுக்கு முன்பு (1938-இல்), சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்டோர் தலைவர் எம்.சி.ராஜா கொண்டுவந்த ஆலய நுழைவு மசோதா நிறைவேறாதபடி செய்த பெருமையும் ஆச்சாரியாருக்கு உண்டு.’’

தொ.பரமசிவன் ஆய்வில்…

அடுத்து, முனைவர் தொ.பரமசிவன் அவர்கள், “தெய்வங்களும் சமூக மரபுகளும்’’ என்னும் நூலில் “1939 _ மதுரைக் கோயில் அரிசன ஆலயப் பிரவேசம்’’ என்னும் தலைப்பில் அன்றைய அரசியல் சூழலில் காங்கிரசு தனிமைப்பட்டுப் போயிருந்ததை விளக்கி மேற்கண்ட போராட்டத்திற்கான அவசியத்தைத் தெளிவாகத் கூறியுள்ளார். அதில், 1939 அய் ஒட்டிய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் கோயில் நுழைவில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆர்வம் காட்டவுமில்லை, திரண்டெழுந்து போராடவுமில்லை. அந்த நிலையில் மதுரை வைத்தியநாத அய்யர் இந்தப் பிரச்சனையை ஏன் முன்னெடுத்துச் சென்றார் என்றும் ஒரு கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கான விடை காங்கிரசு இயக்கத்தின் வரலாற்றில் பொதிந்து கிடக்கிறது.

காந்தியடிகள் எரவாடா சிறையில் காலவரம்பற்ற உண்ணா நோன்பைத் தொடங்கியதன் விளைவாக டாக்டர் அம்பேத்கர் காங்கிரசு இயக்கத்தோடு ‘பூனா ஒப்பந்தத்தை’ 1932 செப்டம்பர் 15இல் செய்துகொண்டார். ஆயினும் அவருக்கு நிறைவு ஏற்படவில்லை. 1933 பிப்ரவரி 4ஆம் நாள் நிகழ்ந்த காந்தியடிகள் _ அம்பேத்கர் சந்திப்பின்போது மத்தியச் சட்டசபையில் ஸ்ரீரங்க அய்யரும் தமிழகச் சட்டசபையில் அப்போதைய முதலமைச்சர் டாக்டர் சுப்பராயனும் கொண்டுவரவிருந்த ‘தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேச மசோதா’வுக்கு ஆதரவு தருமாறு காந்தியடிகள் அம்பேத்கரைக் கேட்டுக் கொண்டார். அம்பேத்கர் அதற்கு மறுத்துவிட்டார்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *