மரு.இரா.கவுதமன்
நோயின் அறிகுறிகள்:
¨ இருமல், தொடர்ச்சியான இருமல், வறட்டு இருமலாகவும் (Dry Cough), சளியோடு கூடிய இருமலாகவும் இருக்கக் கூடும்.
¨ சளி அதிகமாக தொண்டையிலும், நுரையீரலிலும் சேரும். சளி, தொண்டையிலும், மூச்சுக் குழலிலும் சேரும்பொழுது, உயிர் மூச்சுக் காற்று நுரையீரலுக்குள் செல்வதற்கு, இடைஞ்சல் உண்டாகும்.
¨ உயிர் மூச்சுக் காற்று (ஆக்சிஜன்) முழு அளவு உள்ளே செல்லாததால் மூச்சிரைப்பு ஏற்படும். இதை “காற்றுப் பசி’’ (Air Hunger) எனக் குறிப்பிடுவர்.
¨ மூச்சிரைப்பு அடுத்த நிலையில் ‘மூச்சுத் திணறலாக’ உருவெடுக்கும்.
¨ உயிர்மூச்சுக் காற்றின் தேவை அதிகரிப்பதால், ”குறுகிய வேகமான மூச்சு’’ (Rapid Breathing) உண்டாகிறது.
¨ காற்று பற்றாக்குறையை சரி செய்ய முடியாத நிலையில நோயாளி ஆழ் மயக்க நிலைக்குச் (Coma) சென்று விடுவார்.
¨ ஆஸ்த்மா என்ற மூச்சிரைப்பு நோயிலும், இதே அறிகுறிகள் இருக்கும். நோயறிகுறிகளை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், நுரையீரல் அடைப்பு நோயில் அவ்வாறு கட்டுப்படுத்த முடியாது.
¨ நாள்பட்ட மூச்சிரைப்பு நோயில், நுரையீரல் திசுக்கள் அழிந்து விடுவதால், அவை மீண்டும் சீரடைவதில்லை என்ற நிலை ஏற்படுவதால், அவற்றின் அறிகுறிகள் எளிதில் சீராக்க முடியாத நிலை ஏற்பட்டு, மேலும், மேலும் நோய் முற்றி, முடிவில் நோயாளி மரணமடைந்து விடுவார்.
¨ ஏற்கெனவே இந்நோயால் பாதிக்கப்படுபவர்கள், புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைக் கொண்டிருந்தால் அது மேலும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
¨ தூசு, காற்றின் மாசு, வேதியியல் வாயு போன்றவையும், இதேபோன்று ஏற்கெனவே பாதித்து, அழிந்த நுரையீரல் திசுக்களை மேலும் அழிவு நிலைக்கே கொண்டு செல்லும்.
¨ ஓரளவு கட்டுக்குள் இருக்கும் நுரையீரல் அடைப்பு நோய், சில நேரங்களில், திடீரென அதிக அளவு மூச்சுத் திணறலை உண்டாக்கும். இதை “தீவிர நோய் தாக்குதல்’’ (Acute exacerebation) என்று குறிப்பிடுவர். இது பெரும்பாலும், நோய்த்தொற்று, காற்று மாசடைந்த இடத்திற்கு திடீரெனச் செல்வதால் ஏற்படுகிறது.
நோய் அறிதல்: (ஆய்வுகள்)
¨ ஊடு கதிர் நிழற்படம் (X-Ray): நுரையீரல் அடைப்பு நோய், நுரையீரலில் உண்டாக்கிய பாதிப்பை இதன் மூலம் அறிய முடியும்.
¨ நுரையீரல் செயல்பாட்டுச் சோதனைகள் (Lung Function Tests): நுரையீரலின் செயல்பாடுகள் இச்சோதனைகளால் அறிய முடியும்.
¨ நுரையீரலின் காற்றுக் கொள்ளளவு, நுரையீரலில் நிகழும் வாயு பறிமாற்றம் முதலியவற்றை இச்சோதனைகள் தெளிவாகக் காட்டும்.
¨ இச்சோதனைகள் சாதாரண நுரையீரல் அடைப்பா அல்லது அடைப்புடன் கூடிய இடைத் திசு காற்றுப் பரவல் (Emphysema) நோயா என்பதையும் இச்சோதனைகள் தெளிவுபடுத்தும்.
¨ கணினி அச்சு வரைவு: (CT-Computerised Tomography) மூலம் நுரையீரல் திசு அழிவினை துல்லியமாக அறிய முடியும்.
¨ காந்த அதிர்வு அலை வரவு: (Magnetic Resonance Imaging – MRI) இச்சோதனை மூலமும் நுரையீரல் திசுக்கள் எவ்வளவு அழிந்துள்ளன என்பதைத் துல்லியமாக அறிய முடியும்.
மருத்துவம்:
முதலில் நோய்க் காரணிகளை அறிய வேண்டும். சோதனைகள் மூலம், நோய்க் காரணம், நோய் பாதிப்பின் அளவு ஆகியவை மருத்துவர்கள் முதலில் முடிவு செய்வர். குறைந்தது மூன்று மாதங்களுக்குச் சளியுடன் கூடிய இருமல் ஏற்பட்டுப் பின்னர், அடுத்த வருடமே, மீண்டும் அவ்வாறு ஏற்பட்டால், அவருக்கு நாள்பட்ட மூச்சுக் குழலழற்சி இருப்பதாக மருத்துவர்களால் எண்ணப்படுகிறது. அதனால் இதற்கான காரணங்களை முதலில் நீக்க வேண்டும். புகைப்பிடித்தலை அறவே நீக்க வேண்டும். வேறு ஒவ்வாமைக் காரணிகளையும் தவிர்க்க வேண்டும். தூசு, சுற்று சூழல் காற்று மாசு ஆகிய பகுதிகளில் இயங்கும்பொழுது முகக்கவசம் போன்ற பாதுகாப்புச் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும். நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். நோய்த் தொற்றின் அறிகுறிகள் தெரியும் ஆரம்ப நிலையிலேயே அதை மருத்துவரிடம் காண்பித்து, தகுந்த ஆய்வுகள் மேற்கொண்டு மருத்துவம் செய்துகொள்ள வேண்டும். இது நுரையீரல் திசுக்கள் அழிவைப் பெருமளவு தவிர்க்கும். சில வகை வைரஸ், நுண் கிருமிகள் நோய்த் தொற்றைத் தவிர்க்க தடுப்பூசிகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்துவதால் நோய் வருமுன் காத்துக் கொள்ளலாம். மனநல மருத்துவ அறிவுறுத்தல்கள், யோகா, மூச்சுக் குழல் தளர்த்திகள் (Bronchodialators), அறிகுறிகளை அகற்றும் மருந்துகள் (Symptomatic Drugs), நோயின் தீவிரத் தன்மைகளைக் குறைக்கும். இந்நோயை முழுமையாகக் குணமாக்க முடியாவிடினும், நோயாளியை ஓரளவு, தொல்லைகள் இன்றி வசதியாக வைத்துக் கொள்ளலாம். நீண்ட கால உயிர் மூச்சு மருத்துவம் (Oxygen Therapy), செயற்கை மூச்சுக் கருவிகள் (Ventilators) பயன்பாடு இவை நோயாளியின் வாழ்வை நீட்டிக்கும். எக்மோ (Extra Corporal Membrane Oxygenation – ECMO) கருவியின் மூலமும் மூச்சு நிற்காமல் தடுக்க முயல்வர். அதே சமயம் நுரையீரலைச் சீராக்கவும் முயல்வர். சிலருக்கு மாற்று நுரையீரலையும் பொறுத்தும் மருத்துவமும் செய்யப்பட்டு நலமடையும் நிலையும் ஏற்படும். நுரையீரல் இயங்காவிடில் மரணம் உறுதி என்கிற நிலையை மாற்றி, நுரையீரல் நின்றாலும் மனிதனை வாழவைக்கும் நிலையை மருத்துவம் செய்கின்றது. விதி முடிந்தவனையும், வேளைவந்தால் போக வேண்டும் என்பவனையும் மருத்துவம் காப்பாற்றுகிறது என்றால் மிகையல்ல!
(தொடரும்)