கட்டுரை : ‘ஆசிரியர்’ தினம் – டிசம்பர் 2

டிசம்பர் 01-15, 2020

 

ர(த்)த யாத்திரை தொடங்கியிருந்த காலம் அது. இன்றைய வேல் யாத்திரைக்காரர்களைப்  போலவே வேண்டாத வேலைகளைத் திட்டமிட்டு ஆரம்பித்து, மதவெறி நெருப்பைப் பற்ற வைத்து அரசியல் குளிர்காயும் அதே கூட்டத்தின் முந்தைய ‘வெர்ஷன்’தான் ரத யாத்திரை. இந்திய ஒன்றியத்தின் பிரதமராக சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் இருக்கிறார். அவரது பதவிக்கு வேட்டு வைத்து, சமூக நீதியை சிதறடித்து மனு நீதியைத் தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும் என்பதுதான் யாத்திரைக் கூட்டத்தின் இலக்கு.

சமூக நீதியைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களாக தமிழ்நாட்டில் தி.மு.க தலைவர் கலைஞரும் திராவிடர் கழக (அன்றைய) பொதுச்செயலாளர் ஆசிரியர் கி.வீரமணியும் இருக்கிறார்கள். கலைஞர், 13 ஆண்டுகள் கழித்து முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த காலம். சென்னை கலைவாணர் அரங்கில் மாலை நேர விழா ஒன்றில் மதவெறி சக்திகளுக்கு எதிராகவும்- சமூகநீதிக்கு ஆதரவாகவும் கலைஞர் பேசுகிறார். மேடையில் ஆசிரியரும் இருக்கிறார்.

“இன்றைக்கு முதலமைச்சராக இருக்கிற காரணத்தால் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ போன்ற ஏடுகளைப் படிக்க வேண்டியதிருந்தாலும், என்றைக்கும் நான் படிப்பது ‘விடுதலை’ ஏட்டைத்தான். ‘முரசொலி’ ஏட்டை அச்சகத்திலிருந்து கொண்டு வந்து ஊழியர்கள் கொடுக்கும்போது, மேசையில் ‘விடுதலை’ ஏடு இருக்கிறதா என்று பார்ப்பேன். இன்றைக்குக்கூட இந்த விழாவுக்குப் புறப்படுவதற்கு முன்பு, ‘விடுதலை’ வந்துவிட்டதா என்று கேட்டேன். ‘விடுதலை’ நமக்கு தாமதமாகத்தான் வருகிறது’’ என்று தனக்கேயுரிய சுவையுடன் சொன்னார் கலைஞர்.

தன்னுடைய இளவலான கி.வீரமணி அவர்களை, அவரது சிறுவயது முதல் கலைஞர் அறிவார். ‘திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர்’ என அறிஞர் அண்ணா புகழ்ந்துரைத்த அந்த இளம் பேச்சாளர் வீரமணியையும் கலைஞருக்குத் தெரியும். தந்தை பெரியாரின் அருகில் இருந்து இயக்கப் பணிகளை மேற்கொண்ட அன்னை மணியம்மையார் தலைமை தாங்கிய இயக்கத்தின் பணிகளைத் தன் தோளில் சுமந்த கி.வீரமணியையும் கலைஞர் அறிவார். ‘மிசா’ சட்டத்தில் தன் மகனைப் போல, மருமகனைப் போல, தன் ஆருயிர் இளவல் வீரமணியும் சிறைக் கொடுமைகளை அனுபவித்து அதனைப் பொதுவாழ்வுக்கான தியாகப் பரிசாக ஏற்ற மனதிடத்தையும் கலைஞர் பார்த்திருக்கிறார்.

கோவி.லெனின்

சட்டத்தை ஆய்வு நோக்கில் அணுகி அதனை சமூக நீதிக்கான ஆயுதமாகப் பயன்படுத்தும் வழக்கறிஞர் வீரமணியையும் தெரியும். ஈழத்தமிழர் நலன், -இந்தி ஆதிக்க எதிர்ப்பு உள்ளிட்ட களங்களில் தளபதியாக வீரமணி அவர்களைக் குறிப்பிட்டே கலைஞரின் அறிக்கைகள் வரும். இத்தனையையும் கடந்து, தனது ஈரோட்டுக் குருகுலத்தின் படைக்கலனான ‘விடுதலை’ ஏட்டின் ஆசிரியர் என்பதைத்தான் கி.வீரமணி அவர்களுக்கான முதன்மையான அடையாளமாக கலைஞர் கருதினார்.

கலைஞருக்கு மட்டுமல்ல, கருஞ்சட்டை அணிந்த கொள்கைப் பட்டாளத்தின் மூத்தவர்களுக்கும்-கருஞ்சட்டை அணியாவிட்டாலும் பெரியார் பணியின் பலன்களை உணர்ந்த பெரும் எண்ணிக்கையிலான உணர்வாளர்களுக்கும் _ ‘ஆசிரியர்’ என்பதே கி.வீரமணி அவர்களின் முதன்மையான அடையாளம்.

ஆசிரியர் அவர்கள்  1962ஆம் ஆண்டு முதல் ‘விடுதலை’க்குப் பொறுப்பு வகிக்கிறார். தந்தை பெரியார் தந்த அந்தப் பொறுப்பே அவரின் அடையாளமாக _- பெயராக _ -பெருமையாக நிலைத்திருக்கிறது. 30 வயதுக்குள்ளாக ஆசிரியர் பொறுப்பினை ஏற்று, 90 வயதை நெருங்கும் நிலையிலும் அந்தப் பொறுப்பினை செம்மையாக அவர் நிறைவேற்றி வருகிறார்.

“‘விடுதலை’, இலட்சங்களில் விற்கும் ஏடு அல்ல; இலட்சியங்களுக்காகப் பாடுபடும் ஏடு’’ என ஆசிரியர் பல முறை குறிப்பிட்டிருக்கிறார். ஓர் இயக்கத்தின் குரலாக- இலட்சியப் பாதையில் தொடர்ந்து ஒலிக்கும் ஓர் ஏடு என்பது காலத்தின் தன்மைக்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். ‘விடுதலை’ ஏடு அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. உள்ளடக்கத்திலும் அச்சமைப்பிலும் காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் இலட்சியச் சுடரை அணையாமல் ஏந்திச் செல்லும் அதன் பயணத்தையும் அதற்காக ஆசிரியர் அவர்கள் அயராது மேற்கொண்ட முயற்சிகளையும் நீண்டகால வாசகர்கள் நன்கு அறிவார்கள்.   

பகுத்தறிவு _ சுயமரியாதை _ -சமூகநீதிக்  கருத்துகளை ஒரு நாத்திக இயக்கம் பொதுமக்களிடம் பரப்புவது என்பதும், அதற்காகவே ஒரு நாளிதழை நடத்துவது என்பதும் உலக அதிசயங்களில் ஒன்று. அந்த அதிசயத்தை அசராமல் நடத்தியே வருகிறார் ஆசிரியர் வீரமணி அவர்கள். இந்தப் பயணத்தில் ரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்டிருக்காது. கல்லும் முள்ளும், சதிகாரர்கள் வெட்டிவைத்த படுகுழிகளுமே நிறைந்திருக்கும். அதில் தவறி வீழ்ந்தால், மேலே இருக்கும் மண்ணை மொத்தமாகச் சரித்து விடுவதையே காலம் காலமாகச் செய்து கொண்டிருக்கிறது. நந்தன் கதையும், வள்ளலார் வரலாறும் அதைத்தான் சொல்கின்றன.

அணைக்க முடியாத நெருப்பாக, அடக்க முடியாத வெள்ளமாக மனவலிமை கொண்டிருந்தால் மட்டுமே இந்தப் பயணத்தைத் தொடர முடியும். பெரியாரின் அருகிலேயே வளர்ந்த ஆசிரியர் அதே நெஞ்சுரத்தைப் பெற்ற காரணத்தால்தான், இயக்கப் பணிகளைத் தொய்வின்றித் தொடர்ந்து, பெரியாரை உலகமயமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதற்காக அவருக்கு கிடைத்த பெருமைகளைவிட, வசவும் அவமதித்தலும் அவதூறுகளுமே அதிகம்.

தந்தை பெரியார் காலத்தில் அவர் மீது கல் வீசப்பட்டது, பாம்பு வீசி எறியப்பட்டது. மனித மலத்தை வீசினார்கள். ஆசிரியர் காலத்தில் அதன் வடிவங்கள் மாறியிருக்கின்றன. அவரது உயிருக்கு குறிவைத்து நடைபெற்ற வன்முறைத் தாக்குதல்கள் பல உண்டு. அதே அளவுக்கும்-அதைவிட அதிகமாகவும் உளவியல் தாக்குதல்களை கொள்கை எதிரிகள் தங்களின் ஊடகங்கள் வாயிலாகவும் சமூக வலைத்தளங்கள் வழியாகவும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர் சொல்வதைத் திரித்துக் கூறுதல், ஒரு மதத்தை மட்டுமே விமர்சிக்கிறார் என இட்டுக்கட்டுதல், ஆசிரியரையும் அவரது குடும்பத்தாரையும் அவமதிக்கும் வகையில் பொய்ச் செய்திகளைப் பரப்புதல், வதந்திகளைக் கட்டவிழ்த்து விடுதல், திராவிடக் கொள்கை வேர் விட்டிருக்கும் தமிழ்நாட்டில் அதன் அரசியல் அமைப்புகளை பலவீனப்படுத்துதல் என இன எதிரிகள் கையாளும் மோசமான வழிமுறைகள் ஏராளம்.

இவை ஒரு புறமென்றால், பெரியாரை திடலுக்குள்ளேயே அடைத்து வைத்துவிட்டார் வீரமணி, பெரியார் காலத்தைப் போல வீரியத்துடன் கொள்கையை எடுத்துச் செல்லவில்லை, கல்வி நிலையங்களை நடத்துவதில் செலுத்துகிற கவனத்தை கொள்கைப் பரப்புரையில் மேற்கொள்ளவில்லை, அரசியல் கட்சிகளைப் போல வாரிசுரிமைக்கு இடம் தருகிறார் என்பன உள்ளிட்ட விமர்சனங்களை ‘தோழமை சக்தி’களாகக் காட்டிக் கொள்வோர்கூட தொடர்ந்து முன் வைக்கிறார்கள்.

எதிரிகளுக்கும் ‘தோழமை’களுக்கும் தன் செயல்பாடுகளால் பதில் அளித்துக் கொண்டே இருக்கிறார் ஆசிரியர். பெரியார் மீது அக்கறை இருப்பதுபோலக் காட்டிக் கொண்டே அவரைத் தெலுங்கர் _ -கன்னடர் என ஜாதிக் குடுவைக்குள் அடைத்து தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரியாகச் சித்தரிக்க முயல்வோரின் முயற்சிகளை முடித்திடும் வகையில், ‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’ என்னும் அரிய தொகுப்பினை ஆவண ஆதாரங்களுடன் நூலாகத் தொகுத்து வழங்கிய ஆசிரியரின் பணி மகத்தானது.

ஒடுக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உரிமைக்குரலாய் முழங்கிய பெரியாரை, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு மட்டுமே பாடுபட்டவர் எனவும், -தலித் மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை என்பது போலவும் சித்தரிப்பதுடன், தந்தை பெரியாரையும் அண்ணல் அம்பேத்கரையும் எதிரெதிர் துருவங்களாக நிறுத்த முயற்சிக்கும் சிந்தனைச் சீரழிவாளர்களுக்குப் பதில் தந்திடும் வகையில், ‘பெரியார்-_அம்பேத்கர் நட்புறவு _ -ஒரு வரலாறு’ என்னும் நூலினையும் தொகுத்து தந்திருக்கிறார் ஆசிரியர். பெரியாரின் ‘குடிஅரசு’, ‘விடுதலை’ ஏடுகளில் அம்பேத்கர் குறித்து வெளியான அனைத்துத் தரவுகளும் அடங்கிய ஆவணங்களின் தொகுப்பாக இந்த நூல் அமைந்திருக்கிறது.

‘நூலோரையும்’, அவர்களின் நூல்களைத் திரிப்பதற்கான கைகளாக உதவிக் கொண்டிருப்போரையும் அறிவாற்றலுடன் எதிர்கொள்ளும் சவாலான பணியை சளைக்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார் ஆசிரியர் வீரமணி. அவருக்கு கொள்கை எதிரிகள் உண்டே தவிர, தனிப்பட்ட எதிரிகளாக எவரையும் கருதுவதில்லை. நேரெதிர் கொள்கை கொண்ட சனாதன அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள்- _ பத்திரிகையாளர்கள் உடல்நலன் குன்றியிருந்தால் உடனடியாக நலம் விசாரிப்பது அவரது பெரும்பண்பு. அவர்கள் யாரேனும் மறைவெய்தினால், மனமாச்சரியம் ஏதுமின்றி இரங்கல் அறிக்கை வெளியிடும் அவரது செயல்பாடு, இன்றைய தலைமுறையினருக்கு அதிர்ச்சி தரும் ஆச்சரியமாகக்கூட இருக்கிறது.

பெரியாரின் கொள்கை, மானுடப் பற்று ஒன்றே. எவ்வித அதிகாரத்தன்மையும் அற்ற, எவரையும் அடிமைப்படுத்தாத பண்பும்தான் மானுடப் பற்றுக்கான இலக்கணம். அதைத்தான் ‘சுயமரியாதை’ என்றார் பெரியார். தனிப்பட்ட காழ்ப்புணர்வு ஏதுமின்றி, கொள்கை உறுதிப்பாட்டுடன் பயணம் செய்பவர்களே மானுடப் பற்றாளர்கள். அவர்களால்தான் மானுடத்தின் உண்மையான விடுதலை எனும் இலட்சியத்தை அடைய முடியும்.

பிரிப்பவை எவை என்பதை உணர்ந்து, இணைப்பவை எவை என்பதை அறிந்து அதன் வழியாக ஒருமைப்பாட்டை உருவாக்குவதே சுயமரியாதை இயக்க காலத்திலிருந்து திராவிடர் கழகம் மேற்கொண்டு வரும் வழிமுறையாகும். அந்த வகையில் அரசியல் _ -சமுதாயத் தளங்களில் ஒருங்கிணைந்து நிற்க வேண்டிய சக்திகளின் கைகள் நெகிழ்ந்துவிடாதவாறு, இறுக்கமாகப் பற்றிக் கொள்ளும் பணியைத் தொண்டறமாகத் தொடர்ந்து வருகிறார் ஆசிரியர்.

போராட்டக் களங்களுக்கு அஞ்சவில்லை, புதிய புதிய இயக்கங்களைக் கட்டமைக்கத் தயங்கவில்லை, உலக வளர்ச்சிக்கும் போக்குக்கும் ஏற்ற வழிமுறைகளைக் கையாளத் தவறவில்லை. எந்த நிலையிலும், எந்த இடத்திலும் ஆசிரியருக்கேயுரிய பொறுப்புணர்வுடன் கொள்கையைப் பரப்புரை செய்து மக்களிடம் அதனைக் கொண்டு சேர்க்கும் பணியை அவர் கைவிட்டதேயில்லை. அறிவியலின் அடுத்தடுத்த தளங்களிலும் ‘விடுதலை’ ஆசிரியரின் பரப்புரைப் பாய்ச்சல் தடைப்படவேயில்லை.

இன்றைய கணினி இணையத்  தொழில்நுட்பத்தில் பெரியாரை உலகமயமாக்கும் பெரும்பணியை அனைத்து தரப்பினரும் உணரும் வகையில், இந்தக் கொரோனா நோய்த்தொற்று பேரிடர் காலத்திலும் ஆசிரியர் மேற்கொண்டு வருகிறார். நாள்தோறும் காணொலிக் கூட்டங்கள். எல்லைக் கோடுகளற்ற உலகம் ஒன்றை உருவாக்கும் உயர்ந்த நோக்கத்துடன், பெரியாரின் பன்முகத்தன்மையையும், -திராவிட இயக்கத்தின் சாதனைகளையும், -உலகளாவிய புதிய சவால்களையும் எடுத்துரைக்கும் ஆசிரியரின் கருத்துகள் இதுவரை சென்றடையாத பகுதிகளிலும் சேர்ந்து கொண்டிருக்கிறது.

88 வயதில் 18 வயது இளைஞரைப் போல செயல்படும் மூத்த பத்திரிகையாளரின் பிறந்த நாளான ‘டிசம்பர் 2’ எங்களைப் போன்றவர்களுக்கு ‘ஆசிரியர்’ தினம். தந்தை பெரியாரின் வாழ்நாளை மிஞ்சிடவும், நூறாண்டுகள் கடந்தும் நலமுடன் இருந்து, கொள்கைப் பரப்புரையை மேற்கொண்டு, மேலும் பல சமுதாய மாற்றங்களுக்கு வித்திடவும் ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *