உலகில் ஒப்பற்றது சுயமரியாதை இயக்கம்!
கி.வீரமணி
4.2.1995 சேலம் மாவட்டம் மேச்சேரியில் ஜாதி ஒழிப்பு மாநாடு எழுச்சியோடு நடைபெற்றது. கழக இளைஞரணித் தோழர்கள் பங்கேற்ற வீதிநாடகம், சத்தியமங்கலம் முத்துவின் ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சியைத் தொடர்ந்து மேடையிலேயே சேலம் அர்த்தனாரி _ ஆராயம்மாள் ஆகியோரின் மகன் இராமுவுக்கும் சங்ககிரி வட்டம் சமுத்திரம் ஆரோக்கியசாமி _ பாக்கியம் ஆகியோரின் மகள் பிரகாசமேரிக்கும், ஜாதி மறுப்புத் திருமணத்தை நடத்த வைத்து வாழ்த்தினேன். 1957இல் சட்ட எரிப்புப் போரில் ஈடுபட்டு சிறையேகிய அம்மாப்பேட்டை எஸ்.தனபால், பெ.முத்து, பி.குழந்தைசாமி, மல்லூர் பழனிச்சாமி, அப்பாய் கோவிந்தராஜ், எஸ்.எஸ்.இளஞ்செழியன், ஏ.கே.திருமலை, கே.சி.கந்தசாமி, டி.என்.சின்னு, சி.ஆ.பெருமாள், மேகநாதன் உள்ளிட்ட பலருக்கும் பாராட்டுச் சான்றிதழும், சால்வையும் போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தோம். தருமராசன்_சாந்தி ஜாதி மறுப்புத் தம்பதியினரின் இரண்டாவது பெண் குழந்தைக்கு ‘அன்புச் செல்வி’ எனப் பெயர் சூட்டினேன். மாநாட்டு ஏற்பாடுகளை இளைஞரணியினர் சிறப்பாகச் செய்திருந்தனர். மாநாட்டுப் பேரணி அணிவகுப்பில் தொடர்ந்து நான்காவது முறையாக சேலம் மாவட்ட இளைஞரணியினர் முதல் பரிசு பெற்றனர். அவர்களுக்கு பரிசளித்து, பாராட்டையும் தெரிவித்தேன்.
ஜாதி ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றும் ஆசிரியர்,
மேடையில் கழகப் பொறுப்பாளர்கள்
5.2.1995 தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அடுத்த கடமடையில் மத்திய நிருவாகக் குழு உறுப்பினர் அ.தீர்த்தகிரியின் சகோதரி நீலாம்மாள்_ராமன் ஆகியோரின் மகன் கே.ஆர்.குமார் (ஒன்றிய ப.க. செயலாளர்), கிருட்டினகிரி கொட்லேட்டியைச் சேர்ந்த நாகப்பன் _அழகேசுவரி ஆகியோரின் மகள் மணிமேகலை இவர்களின் வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழாவினை உறுதிமொழி கூறச் செய்து நடத்திவைத்தேன். தீர்த்தகிரி புதிதாகக் கட்டியுள்ள “தமிழின எழுச்சி இல்லத்தையும்’ திறந்து வைத்தேன். மாநாடு கூடுவது போல் அமைக்கப்பட்ட பந்தலில் ஆற்றிய உரையை பொதுமக்களும், தாய்மார்களும் இறுதிவரை அமைதியாக இருந்து கேட்டுச் சென்றனர்.
மாநாட்டில் நடைபெற்ற ஜாதி மறுப்பு மத மறுப்புத் திருமண
இணையரை வாழ்த்தும் ஆசிரியர்
9.2.1995 அன்று பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் மணி விழா சென்னை இசைப் பேரரங்கில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு, மணிவிழா காணும் தம்பதியர்கள் வா.மு.சேதுராமன் _ சேதுமதி அம்மையார் இருவரையும் மாலைகளை மாற்றிக்கொள்ளச் செய்து, சால்வைகளை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தேன். மணிவிழா நாயகர்களாக இன்னும் பல ஆண்டுகாலம் நலமுடன் வாழ்ந்து, மேலும் தமிழ்த் தொண்டும், மனிதநேயப் பணிகளையும் உலகம் முழுவதும் செய்யவேண்டும் என வாழ்த்தி, ‘தந்தை பெரியார் களஞ்சியம்’ புத்தகத் தொகுப்பை அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தேன்.
அ.தீர்த்தகிரியின் இல்லத் திருமணத்தை நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தும் ஆசிரியருடன் கழகப் பொறுப்பாளர்கள்
9.2.1995 கழகம் நடத்திய ஜாதி ஒழிப்பு, சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆறு மாதம் சிறை சென்றவரும், கழகத்தில் பல பொறுப்புகளில் இருந்து திறம்பட தொண்டாற்றிய வருமான சோழங்கநல்லூர் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.அந்தோணிசாமி மறைவுற்றார் என்னும் செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். கழகத்தின் கட்டுப்பாடுபடி போராட்டங்களில் கலந்துகொள்ளும் மாவீரன் அவர்! 1965இல் திருவாரூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும்போது தந்தை பெரியார் காலத்திலேயே தமது ஊராட்சி எல்லைக்குட்பட்ட ஊர், தெருக்களில் ஜாதிப் பெயர்களாய் இருந்தவற்றை மாற்றி பெரியார் மற்றும் இயக்க முன்னோடிகளின் பெயர்கள் கொண்ட தெருக்களாக்கி பதிவு செய்து, பெயர்ப் பலகைகள் பொருத்தி ஜாதிப் பெயர்களை ஒழித்த சிறந்த கழக வீரர். அவர் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் என்னுடைய பாராட்டுதலுக்கு என்றும் உரியவர். அவருடைய இறுதி ஊர்வலத்தில் ஏராளமான கட்சிப் பிரமுகர்களும், கழகத் தோழர்களும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர். குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து இரங்கல் செய்தியையும் அனுப்பினோம்.
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் மணிவிழாவில் கலந்துகொண்டு இணையர்களை வாழ்த்தும் ஆசிரியர்
13.2.1995 அன்று மாநில அளவில் டே_க்வான்_டு (கராத்தே) சங்கத்தினர் சார்பில் நடத்தப்பட்ட கராத்தே போட்டியில் பெரியார் _மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரி மாணவியர்கள் திருச்சி மாவட்டம் சார்பாகப் பங்கேற்று, இரண்டு தங்கப் பதக்கங்களும், அய்ந்து வெள்ளிப் பதக்கங்களும், அய்ந்து வெண்கலப் பதக்கங்களும் வென்று சாதனை படைத்தனர். மேலும், மாநில அளவிலான சுழற் கோப்பையையும் பெற்றனர். அம்மாணவியரைப் பாராட்டும் வகையில் திருச்சி தந்தை பெரியார் கல்வி வளாகத்தில் தேநீர் விருந்தளிக்கப்பட்டது. சேலம் டாக்டர் மரகதம் மாரியப்பன் அவர்களும், சேலம் மாவட்டக் கழகத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் ஆகியோரும் மாணவிகளைப் பாராட்டிச் சிறப்பித்தனர்.
பெரியார் பெருந்தொண்டர் எஸ்.அந்தோணிசாமி
17.2.1995 அன்று சென்னை _ அண்ணா சாலையில் உள்ள பாரத் ஓவர்சீஸ் வங்கி வளாகத்துக்குள் பார்ப்பனர்களை வைத்து இரண்டு யாகங்களை வங்கிக் கணக்கிலிருந்து ரூ.35 ஆயிரம் செலவு செய்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த 13 புரோகிதப் பார்ப்பனர்களைக் கொண்டு வங்கி மேலாளர் சீனுவாசன் என்கிற பார்ப்பனர் செய்தார். இதனைக் கண்டித்து ‘விடுதலை’யில் அறிக்கை வாயிலாக வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தோம். அதனை ஏற்று காலை முதலே பெரியார் திடலில் போராட்ட வீரர்கள் கூடினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தோழர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, கைத்தறி ஆடைகள் போர்த்தி வழியனுப்பினோம். “அரசாங்க அலுவலகமா _ இந்துமத கூடாரமா?’’ என்பன போன்ற முழக்கங்களை முழங்கியபடி அவர்கள் வங்கி முன் ஆர்ப்பாட்டம் செய்து கைது ஆனார்கள். மதச்சார்பற்ற ஓர் அரசுக்குச் சொந்தமான அலுவலகத்தில் இந்துமதத் தொடர்புடைய யாகத்தை அதுவும் அரசு செலவில் நடத்தியது சட்டப்படி பெருங்குற்றம் என்று சுட்டிக் காட்டினோம்.
மாநில அளவில் நடைபெற்ற காரத்தே போட்டியில் வெற்றி பெற்ற பெரியார் மணியம்மை மகளிர் கல்லூரி மாணவிகளை வாழ்த்தும் ஆசிரியர்
18.2.1995 திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு தீர்மான விளக்கம் மற்றும் மாவட்ட ஜாதி ஒழிப்பு மாநாடு விழுப்புரம் கன்னியாகுளம் சாலையில் சுயமரியாதைச் சுடரொளி சிவகங்கை சண்முகநாதன் அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விழுப்புரம் பேருந்து நிலையத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த கழகக் கொடிக் கம்பத்தில் கழகக் கொடியை ஏற்றி மாநாட்டை துவக்கி வைத்தேன். வழிநெடுக கழக வாசகங்கள் அடங்கிய தட்டிகளும், பெரிய பதாகைகளும் பார்ப்போரைப் பிரமிக்க வைத்தன. ஜாதி ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்களும், கழகத் தோழர்களும் வந்த வண்ணமிருந்தனர். மாநாட்டைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த கழகத் தோழர்களின் அயராத உழைப்பைப் பாராட்டி மாவட்டத் தலைவர் தங்கவேலனைப் புகழ்ந்துரைத்தேன்.
மாநாட்டில் சிறப்புரையாற்றும் ஆசிரியர்
19.2.1995 அன்று திருச்சியில் மாணவர் எழுச்சி மாநாடு புத்தூர், பெரியார் மாளிகை, சிவகங்கை சண்முகநாதனார் நினைவுப் பந்தலில் இசை நிகழ்ச்சியுடன் துவங்கியது. மாநில திராவிடர் கழக மாணவரணி செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார் வரவேற்புரையாற்றினார். கருத்தரங்கம், மந்திரமா? தந்திரமா? பேரணி, வழக்காடு மன்றம், வீர விளையாட்டுகள், தீர்மான அரங்கு என மாநாட்டிற்கு சிறப்பாக மாணவரணியினர் ஏற்பாடு செய்திருந்தனர். மேடையில் 1946ஆம் ஆண்டு குடந்தையில் திராவிடர் மாணவர் கழகத்தைத் தோற்றுவித்து திறம்பட நடத்திய முன்னோடிகளான சிவகாசி எஸ்.தவமணிராசன், நீதிபதி சத்தியேந்திரன், பூண்டி கோபால்சாமி, சேலம் மாவட்ட தலைவர் பொத்தனூர் க.சண்முகம், திருச்சி து.மா.பெரியசாமி, லால்குடி முத்துச்செழியன் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி, சால்வை போர்த்திப் பாராட்டினேன். அவர்களின் செயல்பாட்டை நினைவுகூர்ந்தேன். தொடர்ந்து உரையாற்றுகையில், திராவிடர் மாணவர் கழகத் தோற்றம், நோக்கம், செயல்பாடுகளை விளக்கி, இந்த மாநாடு மாணவர் கழக வரலாற்றில் ஒரு முக்கிய வரலாற்றுத் திருப்பம் என பெருமைப்பட வேண்டிய வாழ்க்கை நெறிகளை நான் கூற, பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்த மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களும் திரும்பக் கூறி மெய்சிலிர்க்க வைத்தனர்.
பாராட்டும் கேடயமும் பெற்ற பெரியார் பெருந்தொண்டர்களுடன் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
19.2.1995 அன்று திருவெறும்பூர் அடுத்த வேங்கூரில் பெரியார் பெருந்தொண்டர் ஞா.ஆரோக்கியராசு இல்ல மணவிழா. தஞ்சாவூர் இ.ஞானப்பிரகாசம்_இருதயமேரி ஆகியோரின் மகன் சகாயராசுக்கும் உரத்தநாடு சமரசப்பாண்டியன்_ நாகலட்சுமி ஆகியோரின் மகன் அஞ்சுகமணிக்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழி கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன். மணவீட்டார் சார்பாகவும், பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் சால்வைகளை அணிவித்து சிறப்பித்தனர்.
ஜாதி ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட பெரியார் பெருந்தொண்டர் ஆர்.பி.சாரங்கன் 75ஆம் பிறந்தநாளையொட்டி அவருக்கு கேடயம் வழங்கி மகிழும் ஆசிரியர்
20.2.1995 அன்று மன்னையில் ஜாதி ஒழிப்பு மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. ஜாதி ஒழிப்பிற்காக சட்டத்தை எரித்துச் சிறைசென்ற மாவீரர்களுக்கும், வீர மரணமடைந்தோருக்கும் புகழாரம் சூட்டினேன். கழக இளைஞரணித் தலைவர் இராயபுரம் இரா.கோபால் தலைமையில் மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் கலை நிகழ்ச்சியோடு நடத்தப்பட்டது. தஞ்சை பெரியார் பெருந்தொண்டர் ஆர்.பி.சாரங்கன் அவர்களின் 75ஆம் பிறந்த நாளையொட்டி அவருக்குச் சால்வை அணிவித்து, வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அவருடைய இயக்கப் பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினேன். அவ்வுரையில், “தந்தை பெரியாருடைய இயக்கம் போல இந்திய வரலாற்றிலேயே, ஏன், உலக வரலாற்றிலேயே இன்னொரு இணையான இயக்கத்தை எளிதில் காணமுடியாது. இதை நான் சொல்லவில்லை. லண்டன் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், அங்கே இருக்கக்கூடிய நம்முடைய தமிழர்கள் சில சந்தேகங்கள் என்னிடம் கேட்டார்கள். அப்பொழுது உணர்ச்சி வயப்பட்டு ஒருவர் சொன்னார், “உலகம் முழுவதும் இருக்கின்ற இதுபோன்ற பகுத்தறிவு இயக்கங்களுக்குத் தலைமையிடம் லண்டன். ஆனால், தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கியது போன்ற ஓர் இயக்கத்தை நாங்கள் வாழ்நாளிலேயே கண்டதில்லை’’ என்று தெளிவாகச் சொன்னார் எனப் பல கருத்துகளை மாநாட்டு உரையில் கூறினேன்.
வங்கிகள் முன் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள்
24.2.1995 அன்று தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் தலைமைப் பொறுப்புகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரை நியமிக்கக் கோரி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் முன் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்தின்போது தோழர்கள் “மத்திய அரசே, வங்கிகளின் தலைமைப் பொறுப்பில் தாழ்த்தப்பட்டோரை நியமனம் செய்’’, “பிற்படுத்தப்பட்டோரை நியமனம் செய்’’, “பாரத ஸ்டேட் வங்கியா? பார்ப்பன வங்கியா?, “பொதுமக்கள் வங்கியா? பூணூல்களின் வங்கியா?’’, “தந்தை பெரியார் வாழ்க’’, “அம்பேத்கர் வாழ்க’’ போன்ற முழக்கங்கள் விண்ணதிர முழங்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி ஊழியர்களின் ஆதரவும் பெரும் அளவுக்கு கிடைத்தது.
ராமேசுவரம் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் கழகக் கொடியை ஏற்றிவைக்கும் ஆசிரியர் உடன் பொறுப்பாளர்கள்.
25.2.1995 அன்று ராமாநாதபுரம் மாவட்ட கழகத்தின் சார்பில் ராமேசுவரத்தில் ஜாதி ஒழிப்பு மாநாடு பெரிய கடை வீதி காந்தி சிலை அருகில் சுயமரியாதைச் சுடரொளி இரா.சண்முகநாதன் நினைவுக் கொடி கம்பத்தில் கழகக் கொடியை ஏற்றிவைத்து துவங்கி வைத்தேன். கழகத் தோழர்களும், பொறுப்பாளர்களும் மோட்டார் சைக்கிள், ஆட்டோ ரிக்ஷாக்கள், ஜீப், வேன்கள் புடைசூழ அழைத்துச் சென்றனர். சாலையின் இருபுறமும் பொதுமக்கள் வணக்கம் செலுத்தி வரவேற்றனர். பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு, வீதி நாடகம், மந்திரமா? தந்திரமா?, சொற்பொழிவு என மாநாட்டினை மாவட்ட பொறுப்பாளர்கள் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். இரண்டு மணி நேரம் ஆற்றிய உரையை மக்கள் இறுதிவரை இருந்து கேட்டுச் சென்றனர்.
25.2.1995 அன்று தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு ‘பாஷா பரிஷத்’ விருது அறிவிக்கப்பட்டதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். அவருக்கு வாழ்த்தும் தெரிவித்தேன். தமிழ் வாசகர்களிடையே தனது எழுத்தின் தனித் தன்மையால் தனி இடம் பெற்றிருப்பவர் பிரபஞ்சன். ‘உண்மை’ இதழில் ‘உடைந்த அம்பும் _ உடையும் வில்லும்’ என்னும் தலைப்பில் அவர் எழுதிய தொடர் கட்டுரைகள் _ பார்ப்பன பிற்போக்குச் சக்திகளின் முகத்திரையைக் கிழித்துக் காட்டியது; தன்னை ஒரு பெரியாரியல்வாதியாக முழுமையாக அடையாளம் காட்டியவர். அதனால், பார்ப்பன ஏடுகளின் ஆதரவை இழப்பது பற்றிக்கூட கவலைப்படாத உறுதியான கொள்கையாளர் என வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
26.2.1995 அன்று பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் திருப்பத்தூரில் திராவிடர் கழகத்தின் சார்பாக ஜாதி ஒழிப்பு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருப்பத்தூர் பெரியகடை வீதியில் சுயமரியாதைச் சுடரொளி சிவகங்கை இரா.சண்முகநாதனார் நினைவுத் திடலில் நடைபெற்ற மாநாட்டிற்கு மாவட்ட கழகத் தலைவர் ச.இன்பலாதன் தலைமை வகித்தார். முன்னதாக சுயமரியாதைச் சுடரொளி திருப்பத்தூர் நா.பள்ளிகொண்டான் அவர்களின் நினைவுக் கொடிக் கம்பத்தில் தோழர்களின் வாழ்த்து முழக்கங்களுடன் கழகக் கொடியை ஏற்றி வைத்தேன். தொடர்ந்து ஜாதி ஒழிப்பு வீரர்களுக்குப் பாராட்டும், பெரியார் பெருந்தொண்டர்களுக்குச் சிறப்பும் செய்யப்பட்டது. பட்டிமன்றம், மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், வீதிநாடகம், தீர்மான அரங்கம் என மாநாடு கழகத் தோழர்களால் சிறப்பாக வழிநடத்தப்பட்டது. மாநாட்டை ஒட்டி திருப்பத்தூர் நகரமே கழகக் கொடி தோரணங்களால் விழாக்கோலம் பூண்டிருந்தது.
3.3.1995 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் சட்ட உதவி மய்ய தலைவர் தில்லை வில்லாளன் மற்றும் கழக வழக்கறிஞர்களின் பங்களிப்புடன் பெரியார் படத்திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு அறிவு ஆசான் தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்தேன். வழக்கறிஞர் தில்லை வில்லாளன் பேசுகையில், “இப்பொழுது சமூகநீதிக் காவலர் என்று யார் யாரையோ சொல்கிறார்கள். இவற்றிற்கு அடிப்படைக் காரணமாகவுள்ள _ சமூகநீதிப் போராளியான ஆசிரியரை _ ‘Saviour of Social Justice’ என்பதைவிட ‘Warrior of Social Justice’ எனக் கூறி, 69% இடஒதுக்கீடு சட்டத்தின் பிறப்பு, வளர்ப்பு முதிர்ச்சியை வைத்து கழகத்தின் செயல்பாடுகளைப் பாராட்டினார்.’’ உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆர்.ஜி.ராஜன், “வழக்கறிஞர்களின் சமூகநீதிப் பணி எப்படி அமைய வேண்டும் என்பது பற்றிப் பல்வேறு உதாரணங்களுடன்’’ எடுத்துக் கூறினேன். விழாவில் கலி.பூங்குன்றன், சட்டத்துறை செயலாளர் துரைசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
4.3.1975 அன்று சிங்கை பெரியார் பெருந்தொண்டர் முருகு.சீனிவாசன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ளுவதற்கும், கழகப் பிரச்சாரப் பயணமாகவும் சிங்கப்பூர் சென்றேன். சிங்கப்பூர் விமான நிலையத்தில் கழகத் தோழர்கள் சு.தெ.மூர்த்தி, கே.ராமசாமி, தி.நாகரெத்தினம், மாறன், தமிழ்மறையான், முருகு.சீனிவாசன், குமாரி கோகிலவாணி, திருமதி நவனீதம் நாகரெத்தினம், திருமதி. செல்வி ராஜராஜன், சிங்கப்பூர் தொழிலதிபர் சந்திரன், ஆரூர் சபாபதி, ராஜராஜன், அன்பழகன், ராஜாராம், ராஜன் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் வந்திருந்து மாலை அணிவித்து வரவேற்றனர்.
தொழிலதிபர் சந்திரன் இல்லத்தில் சிங்கைப் பிரமுகர்களும், வர்த்தகர்களும் சந்தித்தனர். மலேசியாவிலிருந்து முன்னாள் தி.க. தலைவர் கே.ஆர்.ராமசாமி மற்றும் மலேசிய தி.க. தேசியத் தலைவர் ரெ.சு.முத்தையா, மலேசிய தி.க. செயலாளர், பொருளாளர் மற்றும் செயலவைக் குழுவினர்களின் தேநீர் விருந்துக்குப் பின், கழகம் சம்பந்தமாக உரையாடிவிட்டு சென்றனர்.
பகல் 12:00 மணிக்கு சிங்கப்பூர் வானொலி கழகத்திற்கு திராவிடர் கழகம் செய்து வரும் சமூகநீதிப் பயணத்தைப் பற்றி சிறப்பான பேட்டி ஒன்றைக் கொடுத்தேன்.
5.3.1995 அன்ற சிங்கப்பூர் தேங் ரோடு திருமண மண்டபத்தில் சிங்கப்பூர் பெரியார் பெருந்தொண்டர் முருகு.சீனிவாசன் இல்லத் திருமண விழாவினை தலைமையேற்று நடத்தி வைத்தேன். மணமக்கள் கலைச்செல்வம்-_மலையரசி, மலைமாறன் _ சாந்தி ஆகியோரின் திருமணத்தை வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியினை ஆங்கிலத்திலும், தமிழிலும் கூறச்செய்து நடத்தி வைத்தேன். மண்டபம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பலதரப்பட்ட அறிஞர்கள், புலவர்கள், கவிஞர்கள், வர்த்தகர்கள், சீனர்கள், மலாய்க்காரர்கள், ஆங்கிலேயர்கள் உள்பட சர்வ சமூகமும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். அங்கு உரையாற்றுகையில்,
‘அருமை நண்பர்களே! சங்க காலத்தில் புரோகிதன் இல்லை, பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பால் இடையில் வீழ்ந்தோம்! இதனை மாற்றுவதுதான் தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம்! அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய சுயமரியாதை இயக்கம் என்பது மனித குலம் முழுவதற்கும் உரிமையுள்ள ஒன்றாகும்’’ எனப் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தேன்.
சிங்கப்பூர் பெரியார் பெருந்தொண்டர் முருகு.சீனிவாசன் இல்லத் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தும் ஆசிரியருடன் மணமக்கள் குடும்பத்தார்
6.3.1995 அன்று தமிழக மேலவை உறுப்பினராக இருந்தவரும், ஆசிரியர்களின் உரிமைகளுக்காகத் தொடர்¢ந்து குரல் கொடுத்தவருமான திரு.க.அறிவழகன் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். சிங்கப்பூரில் இருந்த நிலையில் ‘விடுதலை’யில் இரங்கல் செய்தியை வெளியிட்டோம். அதில், திரு.க.அறிவழகன் சிறந்த பகுத்தறிவுவாதி _ பாரம்பரியமான இயக்கக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அய்.நா.கல்வி பண்பாடு அமைப்பு மன்றத்தின் தமிழ்நாட்டுத் தலைவராக அவர் இருந்தபோதுதான் (27.6.1970) அம்மாமன்றத்தின் (யுனெஸ்கோ) சார்பில் தந்தை பெரியார் அவர்களுக்கு “புத்துலகத் தீர்க்கதரிசி _ தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்’’ என்பதை உள்ளடக்கிய சிறப்பு விருது வழங்கப்பட்டது. அவரது அரும்பணிகளை நினைவுகூர்ந்து, அவரின் பிரிவால் வருந்தும் பேராசிரியர் அவர்களுக்கும், அவரது சகோதரர்களுக்கும், குடும்பத்தினர்க்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் இரங்கல் செய்தியில் தெரிவித்திருந்தோம்.
(நினைவுகள் நீளும்)