மஞ்சை வசந்தன்
இன்றைய இந்தியப் பரப்பில் மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் வடக்கு, கிழக்கு, தென்கிழக்குப் பகுதிகளில் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அவர்களின் மொழியான தமிழும், அவர்களின் நாகரிகமும் உலகின் பல நாடுகளில் பரவி நின்றன. கடல் பயணம், கட்டுமானம், வானியல், மருத்துவம், பண்பட்ட வாழ்க்கையென்று பலவற்றிலும் மேலோங்கி நின்றவர்கள் தமிழர்கள்.
இந்நிலையில் தமிழர் வாழ் பகுதிகளில் அயல்நாட்டவரான ஆரியர்கள் பிழைக்க நுழைந்தனர். முதலில தமிழர்களிடம் பிச்சைபெற்று வாழ்ந்தவர்கள், பிறகு சிறுசிறு குழுக்ககளாக ஒன்று சேர்ந்து வாழ்ந்தனர்.
அயல்நாட்டிலிருந்து வந்து வாழ்ந்தவர்கள் என்பதால் மிகச் சிறுபான்மையினராய் அவர்கள் இருந்ததால், தங்களை நிலைநிறுத்திக் கொள்ள சூழ்ச்சி வழிகளைப் பின்பற்றினர்
கடவுள், புராணம், சாஸ்திரம் என்று புனைந்து அவற்றைத் தமிழர்கள் மீது திணித்து தமிழர்களின் அறிவை, திறமையை, ஆளுமையைக் கெடுத்தனர்.
கல்வியிலும், அறிவிலும், பண்பாட்டிலும் உயர்ந்தோங்கியிருந்த தமிழர்கள் மூடநம்பிக்கையால் அனைத்தும் இழந்தனர்.
தமிழினின்று செயற்கையாய் உருவாக்கிய சமஸ்கிருதத்தத் தமிழோடு பெரிதும் கலந்து தமிழைக் கெடுத்தனர். அதன் விளைவாய் தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், மராட்டி, அஸ்ஸாமி போன்ற பல மொழிகள் உருவாயின.
தனித்தன்மையோடு பெரும் நிலப்பரப்பில் பரவி வாழ்ந்த தமிழினம் சமஸ்கிருதக் கலப்பால் தமிழ் திரிந்து பல மொழிகள் உருவாகவே, தமிழர்கள் மொழியால் பிரிந்தனர்.
ஆரியர்கள் எழுதிய சாஸ்திரங்கள், ஸ்மிருதிகள் மூலம் உருவாக்கப்பட்ட ஜாதிகளால் தமிழினம் மேலும் பிரிந்து சிதைந்தது. தமிழர் அடையாளம் மெள்ள மெள்ள அழிந்தது. இன்றைய தமிழ்நாட்டுப் பகுதி மட்டும் ஆரியப் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்படாமல் தனித்து நின்றது.
கல்வியிலும், அறிவிலும், தொழில்நுட்பத்திலும், மருத்துவத்திலும், வானவியலிலும், கட்டுமானத் திலும், கடற்பயணத்திலும், போர்த்திறத்தாலும் தன்னிகரற்று விளங்கிய தமிழகம், ஆரியர்கள் சூழ்ச்சியாக உருவாக்கிய சாஸ்திரங்களால், கல்வி உரிமை இழந்து, சூத்திரர்களாய், அடிமைகளாய், தீண்டத்தகாதவர்களாய், இழிமக்களாய் ஆக்கப்பட்டனர்.
இச்சூழலில் மொழியால் பிரிந்து நின்ற தமிழர்கள் இனத்தால் தங்களைத் திராவிடர்கள் என்னும் பொது அடையாளத்தின் மூலம் ஒருங்கிணைத்து உரிமைக்குரல் எழுப்ப முற்பட்டனர். இம்முயற்சி 100 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.
வைதிகக் குடும்பத்தில் பிறந்தாலும், இளம் வயது முதல் ஆரிய -_ பார்ப்பன எதிர்ப்பையும், புராண சாஸ்திர எதிர்ப்பையும், ஜாதி மத எதிர்ப்பையும் தீவிரமாய்ப் பரப்புரை செய்த தந்தை பெரியார், தம் எதிர்ப்பை வலிமையுடன் காட்டவும், திராவிட இனத்தின் உரிமைகளை மீட்கவும் திராவிட இயக்கத்தை உருவாக்கியதன் மூலம், திராவிட இனம் விழிப்புப் பெற்றது.
ஆரிய திராவிடப் போர்
அயல்நாட்டிலிருந்து வந்து தமிழர் பகுதியில் ஆரியர் நுழைந்த காலம் முதலே ஆரிய திராவிடப் போர் தொடங்கியது. ஆனால், அப்போர் உடல்பலம் காட்டி வெல்வதாய் இல்லாமல், சூழ்ச்சிகளின் வடிவில் வந்தது. இதற்கு சாஸ்திரங்களும், புராணங்களும், கடவுள் நம்பிக்கையும் உதவின. அதனால், கல்வி பறிக்கப்பட்ட திராவிட இனம் விழிப்பின்றி வீழ்ந்து கிடந்தது.
வீழ்ந்த இனத்தை விழிப்படையச் செய்து, மானமும் அறிவும் உள்ளதாக மாற்ற தந்தை பெரியார் முயன்றார். எனவே, பெரியார் காலத்தில் ஆரிய திராவிடப் போர் என்பது கடவுள் மறுப்பு, சாஸ்திர, புராண எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு, கல்வி உரிமை, அரசியல் உரிமை, வேலைவாய்ப்பு உரிமை பெறல் போன்ற போராட்டங்களாய் அமைந்தன. பெரியாருக்கு முன் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர்கள் அமைப்பு ரீதியான முயற்சிகளை மேற்கொள்ளாததால், அவர்கள் பெற முடியாத வெற்றிகளைப் பெரியார் பெற்றார்.
இனத்தின் காப்பரண்:
பெரியார் திராவிட இயக்கம் தொடங்கிய காலம் முதல் திராவிட இனத்தின் காப்பரணாக திராவிடர் கழகம் திகழ்கிறது. திராவிட இனத்தின் இழிவு நீக்கி, உரிமைகளை மீட்டு ஆட்சி அதிகாரம், வேலைவாய்ப்பு, கல்வி உரிமை, கடவுள் வழிபாட்டுரிமை என்று எல்லாவற்றையும் பெற்றது பெரியாரின் பெரும் போராட்டங்களாலும், அவர் உருவாக்கிய இயக்கத்தாலுமேயாகும்.
பெரியாரின் சரியான வாரிசு
வழக்கத்தில் வாரிசு என்பது பிறப்பின் வழி, இரத்த வழி வருகிறது. இதில் சிறப்பு ஏதும் இல்லை. அது இயற்கையாய் நிகழ்வது.
இப்படி பிறப்பால் வரும் வாரிசு உடலால், இரத்தத்தால், உயிர் அணுக்களால் ஒத்து வருவது மட்டுமே! ஒருவரைப் போலவே அவரது வாரிசு கொள்கையில் ஒத்து இருக்கும் என்று உறுதிகூற முடியாது. பெரும்பாலும் முரண்பட்டே போகின்றது. சில நேரங்களில் எதிராயும் இருப்பதுண்டு.
ஆக, பிறப்பு வழி வாரிசு என்பது சட்டப்படி கிடைக்கும் ஓர் உரிமையே ஆகும்.
ஆனால், கொள்கை வாரிசு என்பது அரிதினும் அரிதாய் அமையக் கூடியது. கொள்கை வழி வாரிசு என்பது நிறுவன ரீதியாய் வருவது. நிறுவன ரீதியாய் வருவதிலும் இரு வகையுண்டு. மடங்களின் வாரிசுகளாய் வருபவர்கள் மடாதிபதிகளின் சொந்த விருப்பத்தின் தேர்வாக வந்துவிடுகின்றனர். இதில் வாரிசுகள் நேர்எதிராய் அமைவது அதிகம்!
மறைந்த மூத்த சங்கராச்சாரியார் தன் வாரிசாகத் தேர்வு செய்த ஜெயேந்திரர் அவருக்கு நேர் எதிரான இயல்பு கொண்டவராய், பாலியல் புகார், கொலை வழக்கு, வன்முறைத் தாக்குதல் என்று பல்வேறு வகையில் குற்றம் சுமந்தவர்
அதேபோல் அரசியலில் வாரிசுகள் பலர் உறவாலும் நெருக்கத்தாலும் தலைவர்களின் சபலங்களாலும் வந்து விடுவதுண்டு.
மாறாக, இயக்கம் என்று வருகின்றபோது வாரிசுகள் புடம்போட்டு புடம்போட்டுத் தகுதிப்படுத்தப்பட வேண்டியவர்கள்.
அதிலும் குறிப்பாக, பதவி எதிர்பாராமல், அதிகாரம் இல்லாமல், வருவாய் இல்லாமல், வசதி வாய்ப்புகள் இல்லாமல், பெரும்பாலான மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரான புரட்சிச் செயல்களை, ஆதிக்கச் சக்திகளுடன் பகைத்துக் கொண்டு, தன் சொந்தக் காசைச் செலவிட்டு, இழிவு, ஏச்சு, கேவலம் இவற்றை ஏற்று, தொண்டறப் பணியாற்ற வேண்டிய இயக்கத்தில் ஒரு வாரிசு சரியாக அமைவது என்பது அதிசயத்திலும் அதிசயமாகும். அதிலும் கண்டிப்பு உறுதி, சிக்கனம், நாணயம், துணிவு, தியாகம் இவற்றின் ஒட்டுமொத்த வடிவமான தந்தை பெரியாரின் வாரிசாய் வருவதென்றால் அது உலக மகா அதிசயமாகும். அப்படியொரு அரிய, அதிசய வாரிசாய் வந்தவர்தான் கி.வீரமணி அவர்கள். அதை முதுபெரும் எழுத்தாளர் சோலை அவர்கள்,
“அண்ணா அய்யாவின் வாரிசா? இல்லை. மாணாக்கர்.
பேராசிரியர், நாவலர் உள்பட திராவிட இயக்கத்தின் சூறாவளியாகச் சுழன்ற முன்னோடிகள் அனைவருமே அய்யாவின் பாசறையில் பயின்ற லட்சிய வீரர்கள்தாம். அவர்கள் ஈரோட்டுப் பள்ளியின் மாணவர்கள்தாம்.
அய்யாவின் வாரிசுதான் யார்? அவர்தான் வீரமணி. கடலூரில் கண்டெடுத்த அந்த முத்தை அய்யா அவர்கள் தமிழகத்தின் வித்தாகக் கொடுத்துச் சென்றிருக்கிறார்.
அய்யாவின் வாரிசு வீரமணிதான் என்பதனை உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.’’
இதோ! கலைஞர் கூறுகிறார்:
“தம்பி வீரமணி பத்து வயதுச் சிறுவனாக இருந்தபோதே மேடையேறிப் பேசத் தொடங்கியவர். ஆயிரக்கணக்கானவர்கள் கூடிய மாநாடுகளில் மேசை மீது நிறுத்தப்பட்டுப் பேச வைக்கப்பட்டவர். அவரது பேச்சாற்றல் கண்டு அவரைத் ‘திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர்’ என்று புகழ்ந்தார் பேரறிஞர் அண்ணா. தந்தை பெரியார் அவர்களே உயர்கல்விக்கு ஊக்கமளித்து உதவினார்.
தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கருத்துகளை, அவரது சமுதாயச் சீர்திருத்தக் கோட்பாடுகளை, மகளிர் முன்னேற்றத்தை, அறிவியல் உணர்வுகளை, ஜாதி _ மத வேறுபாடுகள் அகற்றப்பட வேண்டும் எனும் சமதர்ம சமத்துவச் சிந்தனைகளைப் பரப்புவதில் பெரியார் அவர்களின் மிகச் சிறந்த வழித்தோன்றலாக நேரடி வாரிசாக விளங்குகிறார் வீரமணி’’ என்கிறார் கலைஞர்.
“திராவிடர் கழகத்தை வலிவோடும், பொலிவோடும் அழைத்துச் செல்வதில் வல்லவராக பெரியார் அவர்களுக்கு என்றும் பெருமை சேர்க்கும் தளகர்த்தராகத் திகழ்கிறார்.
தந்தை பெரியார் அவர்கள் திருச்சி மாநகரில் உருவாக்கிய கல்வி வளாகத்தைக் கட்டிக் காத்து வளர்த்து வருபவர். தஞ்சைக்கு அருகில் வல்லத்தில் மகளிர் பொறியியல் கல்லூரி உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் ஒரு புதிய கல்வி வளாகத்தை உருவாக்கி இன்று அதனை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமாக உயர்த்தியுள்ளவர். அவர் பெரியார் எண்ணிய எண்ணங்களையெல்லாம் நன்கு அறிந்தவர். பெரியார் எண்ணியதைச் செயல்படுத்துவதில் பேரார்வம் கொண்டவர்.
என்னுடைய வயதைவிட ஓரிரு வயது மூன்று, நான்கு வயது வீரமணி அவர்கள் இளையவராக இருக்கலாம். ஆனால், அவர் எங்களைவிட அதிகமாகப் பெரியாரிடத்திலே பக்கத்திலே இருந்து பழகியவர். நாங்கள் பெரியாரிடத்திலே கற்பதற்காகப் பெற்றிருந்த வாய்ப்பைவிட வீரமணி அதிக வாய்ப்புப் பெற்றவர்.
அவர் எந்த ஒரு பிரச்சினையையும் அது ஒரு கடுகு அளவாக இருந்தாலும், மலை அளவு பிரச்சினையாக இருந்தாலும், கடல் அளவு பிரச்சினையாக இருந்தாலும், உமி அளவு பிரச்சினையாக இருந்தாலும் அதைப் பற்றி அய்யாவின் அருகிலிருந்து விவாதிக்கின்ற அந்த அருமையான வாய்ப்பை, எங்களைவிட அதிக காலம் இன்னும் சொல்லப்போனால், அறிஞர் அண்ணாவைவிட அதிக காலம் அந்த வாய்ப்பைப் பெற்றவர். அதனால்தான் பெரியாருடைய எண்ணங்களையெல்லாம் நாட்டில், சமுதாயத்தில் செயல்படுத்த வேண்டுமே என்று எண்ணுகிறார்’’ என்ற கலைஞரின் கூற்று வாய்மை ததும்பி நிற்கும் துல்லியமான படப்பிடிப்பு. ஒவ்வொரு சொல்லையும் ஆய்ந்து ஆய்ந்து பட்டை தீட்டி வழங்கியிருக்கும் வரலாற்றுச் சாசனம். அய்யாவின் நேரடி வாரிசு வீரமணி என்பதற்கு இந்தப் பாராட்டைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
இதோ! கலைஞர் இன்னும் கூறுகிறார்:
ஆருயிர் இளவல் திரு.வீரமணி அவர்கள், தந்தை பெரியார் அவர்கள் எண்ணியபடி அமைந்த அவரது வாரிசு ஆவார். தந்தை பெரியார் அவர்கள் கல்லடியும், சொல்லடியும் தாங்கி, மான அவனமானங்களைப் பொருட்படுத்தாது தமது பகுத்தறிவுக் கோட்பாடு வெற்றி பெறுவதன் மூலமே. தமிழகத்தில் மனிதன் மனிதனாகத் தன்மானத்துடன் வாழ முடியும் என்று கருதி, அதற்காகவே அல்லும் பகலும், அலுப்பும் சலிப்புமின்றிப் பாடுபட்டார். அப்படிப்பட்ட பெரியார் அவர்களிடம் வாரிசு குறித்துக் கேள்வி எழுந்தபோது, அதற்குப் பதிலாகச் சிவகங்கையில் 10.4.1965 அன்று நடைபெற்ற கூட்டத்தில்,
“எனக்குப் பின், எனது புத்தகங்களே வழிகாட்டும். இந்தத் தொண்டும், பிரச்சாரமும், அறிவை மட்டும் சேர்ந்ததல்ல; உணர்ச்சியையும் சேர்ந்தது. அந்தப் பக்குவம் உள்ள ஒருவன் இருந்தால், அவன் அடுத்துத் தலைமை ஏற்க வருவான். அதுவரை யார் என்றால், இந்தப் புத்தகங்கள்தான். வேறு யாரும் வரக்கூடாது என்பதல்ல என் கருத்து. அந்தப் பக்குவம் உள்ளவனிருந்தால் அவன் வருவான். முகமது நபியைப் பார்த்து, உங்களுக்குப் பின் யார்? என்று கேட்டதற்கு, அவர் எனக்குப் பின் வேறு யாருமில்லை என்று கூறிவிட்டார். நான் அப்படிக் கூற விரும்பவில்லை.
அறிவும், உணர்ச்சியும், துணிவும் உள்ள யார் வேண்டுமானாலும் வரலாம்’’ என்று கூறினார். தந்தை பெரியார் அன்று கூறியபடியே அவர் எண்ணிய அந்த அறிவையும், உணர்ச்சியையும், துணிவையும் கொண்டவராகத் திகழும் அன்பு இளவல் திரு.வீரமணி அவர்கள் இன்று அவரது வாரிசாக விளங்குகிறார்.
ஆளுமைகளின் நிலைக்கலன்!
தந்தை பெரியார் தேர்ந்து செதுக்கிய ஆளுமை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ஆளுமை என்பது ஒரு மனிதனைச் சாதிக்கச் செய்யும், உயர்த்தும். உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ஆளுமை பெற்று விளங்குவர். ஆனால், ஆளுமைகள் அனைத்தும் ஒருவரிடமே உள்ளடங்கிய சிறப்பும் வியப்பும் இவரிடம் மட்டுமே!
தன்னைப் பிஞ்சுப் பருவம் முதல் வழக்கமான உணர்வு நாட்டங்கள் வழிச் செலுத்தாமல் தந்தை பெரியாரின் பணிக்கென கட்டுப்படுத்தி, நெறிப்படுத்திக் கொண்டது இவரின் மிகப் பெரும் ஆளுமை. பிஞ்சுப் பருவம், விடலைப் பருவம், வாலிபப் பருவங்களுக்கே உரிய துள்ளல்கள், துருதுருப்புகள், திரிதல்கள், நுகர்தல்கள்; தோழமை, குழுச் சேர்தல், எதிர் பாலின ஈர்ப்பு, அது சார்ந்த உல்லாசம், சல்லாபம் என்று எதிலும் தன்னைச் செலுத்தாது, இத்தனையையும் அப்பருவங்-களிலே அடக்கி ஆளல் என்பது ஆளுமையின் அரிய செயல் ஆகும். அதுவே ஆளுமையின் உச்ச நிலையாகும்!
சட்டம் பயின்று நல்ல வருவாய் ஈட்டி, வளமோடு வாழ வாய்ப்பிருந்தபோதும், தந்தை பெரியார் அழைத்தார் என்றதும் அத்தனை வசதி, உயர்வு, வாய்ப்புகளையும், உதறித் தள்ளிவிட்டு மதிப்பூதியம் கூட வேண்டாம் என்று சொல்லி பொருளாசையைப் புறந்தள்ளும் ஆளுமை எல்லோர்க்கும் இயலுவதன்று. ஆனால், அந்த ஆளுமையும் இவருள் இருந்தது.
அரசியல் ஈர்ப்பு, பதவி நாட்டம், புகழ் வெளிச்சம் ஒருவரை நிலைகுலையச் செய்து தம் வயப்படுத்தும். ஆனால், அந்த ஆசைகளை யெல்லாம் அடக்கி, ஒடுக்கி தொண்டனுக்குத் தொண்டனாய் நின்று தொண்டு செய்யும் உளத் தூய்மை என்கிற ஆளுமை உலகில் எவர்க்கும் எளிதில் வந்துவிடாது. ஆனால், அந்த ஆளுமையும் இவருள் அடக்கம்.
இயக்கத் தலைமை, தொண்டர்கள் முழக்கம், பாராட்டு, புகழ்ச்சி என்று ஒவ்வொன்றாய்ச் சேரச் சேர அப்போதைகளில் தள்ளாடும் தலைவர்கள் மத்தியில் தன்னை எச்ச-பலத்திற்கும் ஆட்படுத்தாமல், நிலைகுலையாது ஆளுமை மலையாய் நிலைத்து நிற்கின்ற வல்லமையும் இவரின் தனித் தகுதியும் சிறப்பும் ஆகும்!
கணக்கில்லாது கற்றல், கற்றதை மற்றவர்க்கு எடுத்துரைத்தல், எதிரிகளின் சூழ்ச்சிகளை அறிதல், அவற்றை வியூகம் அமைத்து, வினையாற்றி முறியடித்தல்; நாளெல்லாம் எழுதுதல், பேசுதல், பயணம் செய்தல், அதனால் ஏற்படும் உடல் பாதிப்புகளை உள்ள உறுதியுடன் எதிர்கொள்ளல்; தன் தலைவன் இலக்கை, சிறப்பைப் பேசுவதே தன் பணியென்று தன்முனைப்பைத் தகர்த்தல் என்று இவையெல்லாம் தனித்தனியே அவருள் அடங்கியிருக்கும் தன்னிகரற்ற ஆளுமைகள்!
திராவிட இனத்தின் திசைகாட்டி!
தினந்தோறும் இவர் ‘விடுதலை’யிலும், செய்தி யாளர்களிடமும் வெளியிடும் கருத்துகள்தான் திராவிட இனம் செல்லத்தக்க வழியைக் காட்டுகின்றன.
இனத்திற்கு எதிரான எந்தவொரு சிக்கல், சோதனை, ஆபத்து வரும்போதெல்லாம், அதற்கு உடனடியாகத் தீர்வை, செல்ல வேண்டிய வழியை உடனே காட்டுகின்ற திசைகாட்டியாய் அவர் இருந்து வருகிறார். இன உணர்வுள்ளவர்கள் எந்த அமைப்பில் இருந்தாலும் இதை ஏற்றுச் செயல்படுகின்றனர். இன்றைய ஊடகங்களுக்கு ஒவ்வொரு நாளும் விவாதப் பொருளை இவரே வழங்கி வருகிறார் என்பதே உண்மை!
மேனாள் பிரதமர் வி.பி.சிங்:
“இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழகத்தின் தலைவராக இருந்தாலும், இவரது அறிவுநுட்பம், ஆற்றல், வியூகம், எதிரிகளை வீழ்த்தும் திறமை, சட்ட அறிவு, போர்க்குணம் பெரியாரிடம் பெற்ற பயிற்சி இவற்றின் காரணமாக இந்தியாவிலுள்ள தலைவர்கள் பலரும் இவரைத் தங்கள் வழிகாட்டியாகக் கொண்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில் சகோதரர் வீரமணியவர்கள், சமூகநீதி உரிமையின் இரண்டாம் கட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் குறித்துச் சொன்னார். அதற்கான அமைப்பையும், இயக்கத்தையும், தலைமையேற்று நடத்த முன்வர அவரைக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தியிருப்பதன் மூலம் மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ப இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்கிற கொள்கையை நீங்கள் அமல்படுத்தி இந்தியாவுக்கே வழிகாட்டியிருக்கிறீர்கள் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவருடைய வழிகாட்டலில், நாடு தழுவிய வகையில் நடத்தப்பெறும் சமூகநீதிக்கான இரண்டாம் கட்டப் போராட்டம் உறுதியாக வெற்றிபெறும் என்பதில் அய்யம் இல்லை.’’
(1.10.1994 சென்னை – திராவிடர் கழக சமூகநீதி மாநாட்டில், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆற்றிய உரையின் பகுதி – “விடுதலை’’ 3.10.1994)
சமூகநீதிக்கு ஆதரவான அனைவரும் இதை உணர்ந்து செயல்பட வேண்டும். குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் அனைத்து சமூகநீதி ஆதரவாளர்களும் ஒன்று சேர்ந்து இந்த மதவெறிச் சக்திகளின் சவாலைச் சந்திக்க வேண்டும். மதவெறிச் சக்திகளின் முக்கிய கேந்திரமாக விளங்கும் உத்தரப்பிரதேசத்தில் அவர்களின் முதுகெலும்பை நாம் முறித்தாக வேண்டும். மரியாதைக்குரிய சந்திரஜித் அவர்கள், நான் முன்னின்று நடத்த வேண்டும் எனக் கூறினார்கள். ஆனால், இது தனிமனிதனால் செய்யக்கூடிய காரியமல்ல. நண்பர் வீரமணி அவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி அழைத்துச் செல்லும் கொறடா ஆவார். அந்தத் தகுதி அவருக்குத்தான் உண்டு. எனவே, இனியும் காலம் தாழ்த்தாது நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்.’’
– – முன்னாள் பிரதமர் வி.பி.சிங்,
(டில்லி பெரியார் விழா – 19.9.1995)
மண்டல்:
இது பெரியாரின் மண்! இந்த மண்ணில் நான் ஏராளமாகத் தெரிந்து கொள்ள வந்திருக்கிறேன். வடநாட்டிலே பிற்படுத்தப்பட்டோருக்கு டாக்டர் லோகியா உழைத்தார். பிற்படுத்தப்பட்டவர்களை, சூத்திரர்கள் என்றுதான் அவர் அழைப்பார். சூத்திரர்களின் உரிமைக்குக் குரல் கொடுத்தார். தலைமுறை தலைமுறையாக இந்தச் சமுதாயம் சுரண்டப்பட்டு, அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் பெரியார் உழைத்தார். அண்ணா பாடுபட்டார். ஆனாலும், பிற்படுத்தப்பட்ட சமுதாயம் இன்னும் முன்னேறாமல் இருந்து வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் ஆளும் மேற்கு வங்கத்திலும் சரி, இந்திய கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலத்திலும் சரி, இராஜஸ்தான் போன்ற ஜனசங்கத்தினர் ஆளும் மாநிலத்திலும் சரி, பிற்படுத்தப்பட்டோர் பற்றி சிந்திப்பதே இல்லை. அப்படி ஒரு பிரச்சினை இருப்பதாகவே அவர்கள் கருதுவதில்லை.
காகாகலேல்கர் கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்தாமல் கிடப்பிலேயே போட்டு விட்டார்கள். அதேபோல் நாங்கள் கொடுக்க இருக்கும் அறிக்கையையும் செயல்படுத்துவர் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. உயர் ஜாதி அதிகார வர்க்கம் இதற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கும்.
எனவே, இதற்கு ஆதரவாக மக்கள் சக்தியை நீங்கள் உருவாக்க வேண்டும். இந்த அறிக்கையைச் செயல்படச் செய்ய வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது’’ என்று உரையாற்றினார்.
– – பீகார் மேனாள் முதல்வரும்,
நாடாளுமன்ற உறுப்பினருமான பி.பி.மண்டல்
– (மண்டல் குழு தலைவர்)
எல்லாவற்றையும் கூர்ந்தறியும்
இணையிலா ஆற்றலாளர் ஆசிரியர்!
அதிகாலையில் எழுந்துவிடும் பழக்கமுடைய இவர், அப்போதே படிக்கத் தொடங்கிவிடுவார். ஏடுகள், நூல்கள் என்று எல்லாவற்றையும் கூர்ந்து நோக்குவார்.
சமூக நலத்திற்குக் கேடுதருவது ஏதாவது உள்ளதா? ஒடுக்கப்பட்டோர், பெண்கள், சிறுபான்மையினர் நலத்திற்கு எதிராய் ஏதாவது உள்ளதா? என்று கூர்ந்து நோக்கி அறிவார். இருப்பின், அன்றே அதற்கான எதிர் செயல்களில் இறங்கிவிடுவார். விடுதலையில் அறிக்கையாக, பேட்டியாக, சொற்பொழிவாக எதிர்ப்பைக் காட்டி, எல்லோரிடமும் எழுச்சியை ஊட்டி, அத்தகைய கேடு அகற்றப்படும் வரை அயராது பாடுபடுவார்.
அவரின் எதிர்வினை காலம்தாழ்த்தாது உடனுக்குடன் ஒவ்வொரு நாளும் இருக்கும். காலையில் நடைப்பயிற்சி செல்லும்போதே பல வற்றை நோக்குவார். அதிலிருந்து சமுதாயத்திற்குத் தேவையான பலவற்றைச் சொல்வார்.
காலையில் இயக்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு வரும்போதே, யார் யாருக்கு என்னென்ன பணிகளைப் பிரித்துத் தரவேண்டும் என்று சிந்தித்துக் கொண்டே வருவார். அலுவலகம் வந்தவுடன் தொடர்புடையவர்களை அழைத்து அனைவருக்கும் கூறுவார். பணிகளை முடுக்கி விடுவார். கடிதங்களைப் படிப்பார் _ பதில் அளிப்பார். வாகனங்கள் சரியாக நிறுத்தப்பட்டுள்ளதா? திடல் தூய்மை பராமரிக்கப்படுகிறதா? போன்றவற்றை உன்னிப்பாய்க் கவனிப்பார். குறை காணின் உடனே உரியவர்கள் மூலம் சரிசெய்வார். தனது இருக்கையில் அமர்ந்ததும், “விடுதலை’’ நாளேட்டில் வரவிருக்கும் செய்திகளைச் சரிபார்ப்பார். அச்சிடப்படவிருக்கும் நூல்களின் மெய்ப்புகள் பார்ப்பார். “உண்மை’’, “மாடர்ன் ரேஷனலிஸ்ட்’’ இதழ்களில் என்ன வரவேண்டும்? எப்படி வரவேண்டும்? என்று கூறுவார். அச்சிடப்பட உள்ளவற்றை ஒருமுறை பார்ப்பார். சற்றேறக்குறைய 15 பேர்களுக்கு மேல் பார்த்து முடித்தவற்றை இவர் பார்க்கும்போது, பட்டென்று எங்கெங்கு தவறு இருக்கிறது, பிழை இருக்கிறதென்று துல்லியமாய்ச் சொல்லிவிடுவார்!
தலைப்பை இப்படிப் போடலாம், செய்தியை இப்படித் தரவேண்டும் என்று சடுதியில் சரிசெய்வார்.
பல நூல்களிலிருந்து பயனுள்ளவற்றை எடுத்துத் தருவார். செய்தித் தாள்கள், வார, மாத இதழ்களில் வரும் அரிய தகவல்களைத் திரட்டித் தருவார். இதற்கிடையே பார்வையாளர்கள் ஒவ்வொருவராகச் சந்திக்க, அவரவர் தேவையை மனம் மகிழ நிறைவு செய்வார். நடுநடுவே பேட்டி காண்போருக்குப் பேட்டி அளிப்பார். துறைசார் ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொண்டு அறிவுரை வழங்குவார்.
‘விடுதலை’, ‘உண்மை’ வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார். அறிக்கை, தலையங்கம் எழுதுவார். இதற்கே பகல் 2:00 மணி ஆகிவிடும். மருத்துவரின் ஆலோசனை -_ குடும்பத்தாரின் வற்புறுத்தல் இவற்றைப் புறந்தள்ளி பல நாள்களில் பிற்பகல் 3:00 மணிக்குக்கூட மதிய உணவு உண்பார். அதன்பின் மாலை பொதுக்கூட்டம், கருத்தரங்கு என்று பலப்பல.
இப்படி எத்தனையோ பணிகளை இடைவிடாது மேற்கொண்டாலும் ஒவ்வொன் றையும் கூர்ந்து நோக்கிச் சரிசெய்வார்.
ஒருமுறை ‘நக்கீரன்’ இதழைப் படித்தவர். அதில் வந்துள்ள ஒரு செய்தியில் தவறாக இருந்ததைக் கண்டறிந்து உடனே ‘நக்கீரன்’ அலுவலகத்திற்கே கடிதம் எழுதினார்.
“‘நக்கீரன்’ இதழில், மாவலி பதில்கள் பகுதியில் தில்லை வில்லாளன் அவர்களின் இயற்பெயர் அர்ச்சுனன் என இடம் பெற்றிருந்தது. அவர் பெயர் கோதண்டபாணி. கோதண்டம் என்பது வில். அதனால்தான் வில்லாளன் ஆனார்’’ என்று விளக்கம் அளித்தார். இது அடுத்த “நக்கீரன்’’ இதழில் வெளியிடப்பட்டது.
இந்தியாவே எதிர்நோக்கும் இணையிலா வழிகாட்டி!
ஆம். இவ்வளவு தகுதியும், திறமையும், தன்னடக்கமும், தன்னலமின்மையும், தன்மான மிடுக்கும், இனமான வேட்கையும், ஆதிக்க எதிர்ப்பும், ஆரிய பார்ப்பன சனாதன பாசிசத்தை வீழ்த்தும் வல்லமையும் வியூகமும் கொண்டவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அதை அறிந்துதான் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், “தமிழர் தலைவர் ஆணையை ஏற்று நடப்போம்’’ என்றார். இதை இந்தியாவின் மற்ற மாநிலத்தின் சனாதன எதிர்ப்பாளர்களும்; சமூகநீதி காப்பாளர்கள் ஒவ்வொருவரின் உள்ளமும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது.
எனவே, ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அரிய வழிகாட்டலில் இந்தியா எங்கும் காவிகளுக்கு எதிரான ஜனநாயக மீட்பு அணி உருவாகும். அது ஆரிய பார்ப்பன சனாதன ஆதிக்கத்தை வீழ்த்தும்; வெற்றி பெறும்.
மதிநுட்பத்தோடு சதியை முறியடிப்பவர்
ஆரிய பார்ப்பனர்களின் சூழ்ச்சியாக சதித் திட்டங்களைத் தீட்டி திராவிட மக்களுக்கு எதிராய் செயல்படும்போதெல்லாம் அவற்றை மதிநுட்பத்தோடு வியூகம் அமைத்து முறியடிப்பதில் வல்லவர்.
பா.ஜ.க. திராவிடக் கட்சிகளின் தோளில் மாறி மாறி ஏறி தன்னை வளர்த்துக் கொள்ள முனைந்தபோது அதற்கு எதிரான வியூகம் அமைத்து பா.ஜ.க.வையும் அதற்கு துணை நிற்போரையும் தோற்கடித்துக் காட்டினார்.
எம்.ஜி.ஆர் மூலம் 9 ஆயிரம் வருமான வரம்பு கொண்டுவந்து பார்ப்பனர்கள் மகிழ்ந்தபோது, அதை முறியடித்து எம்.ஜி.ஆரை உணரத் செய்ததாடு, இடஒதுக்கீட்டையும் உயர்த்தச் செய்தார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பின் அ.தி.மு.க.வைக் கைப்பற்றி, அந்த இடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பா.ஜ.க.வும் ஆரியப் பார்ப்பனர்களும் சூழ்ச்சியாக முயன்றபோது, அ.தி.மு.க. அழிந்தால் அந்த இடத்தில் பி.ஜே.பி. வளரும் என்பதை நுட்பமாகக் கணக்கிட்டு அ.தி.மு.க. சிதறாமல் காத்தார். அப்போது தி.மு.க. கூட இவரை தவறாக எண்ணும்நிலை ஏற்பட்டது. ஆனாலும், இனப் பாதுகாப்பை முதன்மையாகக் கருதிய இவரின் நல்ல நோக்கத்தை தி.மு.க. உடனடியாகப் புரிந்துகொண்டது, தங்களின் கசப்பை விலக்கியது.
‘சோ’க்களையும் மணியன்களையும்
சோடை போகச் செய்தவர்
நவீனகால மனுக்களாக மணியன், சோ, குருமூர்த்தி போன்றவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அ.தி.மு.க.வைப் பயன்படுத்தி திராவிட இயக்கக் கொள்கைகளை, நோக்கங் களை அழிக்க முற்பட்ட போதெல்லாம், அவர்களின் சூழ்ச்சிகளை மிக நுட்பத்தோடு முறியடித்து இனத்தின் கவசமாக நிற்பவர் இவர்.
எம்.ஜி.ஆர் காலத்தில் மணியன், ஜெயலலிதா காலத்தில் சோ, எடப்பாடி காலத்தில் குருமூர்த்தி ஆகியோர், திரைமறைவில் நின்று சமூக நீதிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் இடஒதுக்கீட்டிற்கும் எதிராய் திட்டங்களைக் கொண்டுவந்தபோதெல்லாம் அதை வெட்ட வெளிச்சமாக அம்பலப்படுத்தி முறியடித்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளைக் காத்து வருகிறார்.
நுழைவுத் தேர்வு, நீட் தேர்வு என்று அவர்கள் புதுப்புது ஆயுதங்கள் மூலம் சமூகநீதியைத் தகர்க்க முற்படும்போதெல்லாம், மக்களுக்கு விழிப்பூட்டி அச்சதிகளை முறியடிப்பவர் இவர். நீட் தேர்வையும் முறியடித்து எதிர்காலத்தில் மாணவர் நலம் காப்பார் என்பதும் உறுதி.
பக்தியின் பேரால் இனப்பற்று நீங்காமல் உணர்வூட்டுபவர்
‘பக்தி’ என்பது தனிச் சொத்து; ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து’ என்பதே பெரியாரின் கொள்கை. பக்தியோடு கடவுளை நம்புவது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், பக்தியைப் பயன்படுத்தி மக்களைச் சுரண்டுவது, ஆதிக்கம் செலுத்துவது, அடிமை கொள்வது தப்பு, கூடாது. அது அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்பதும் அவரின் கொள்கை.
ஆனால், ஆரியப் பார்ப்பனர்கள் பக்தியைப் பயன்படுத்தியே தங்கள் ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகின்றனர். ஆனால், அம்முயற்சியை தமிழகத்தில் பெரியாரும் அவருக்குப் பின் ஆசிரியர் வீரமணி அவர்களும் முறியடித்து மக்களுக்கு விழிப்பூட்டி வருகின்றனர். அரசியலோடு பக்தி கலக்காமல் இருக்க இவரது முயற்சி ஒவ்வொரு தேர்தலிலும் முதன்மையாக இருக்கும்.
இராமனைக் காட்டி, வினாயகரைக் காட்டி இன எதிரிகள் முயன்று தோற்றனர். தற்போது வேல் யாத்திரை மூலம் மக்களை ஏமாற்ற முயல்கின்றனர். ஆனால், பெரியார் மண்ணில் அது எடுபடாது. மக்கள் அரசியலில் தெளிவாக இருக்க இவரின் பங்கு முதன்மையானது. பக்தியின் பேரால் இனப்பற்று பாழாகாமல் இருக்கும்படி இவர் மக்களுக்கு விழிப்பூட்டி வருகிறார்.
இப்படி இனத்தின் பாதுகாவலராகவும் வழிகாட்டியாகவும் இருந்து இந்த இனத்தின் இழிவை நீக்கி, உரிமை மீட்டு, ஒற்றுமையுடன் வளர்ந்து வர ஒவ்வொரு நாளும் பாடுபடும் ஆசிரியர் அவர்கள் நூறு ஆண்டுகளையும் கடந்து வாழ நாம் அவருக்குத் துணை நிற்போம்! அவரது ஆணைகளைச் செயல்படுத்துவோம்! இதுவே நாம் இந்த இனத்திற்குச் செய்ய வேண்டிய பெரும் தொண்டாகும்.
வாழ்க தமிழர் தலைவர் அவர்கள்!