நினைவுநாள் : 13.11.1947
உடையார்பாளையம் வேலாயுதம் அவர்கள் செயங்கொண்ட சோழபுரத்தையடுத்த கரடிகுளத்தில் 1910ஆம்ஆண்டு ஜூலைத்திங்களில் பிறந்தார்.
எட்டாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை முடித்துவிட நேரிட்ட அவர் ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தேர்ந்து தொடக்கப்பள்ளி ஆசிரியரானார். உடையார்பாளையத்தில் சுயமரியாதைக் கொள்கைகள் காட்டுத்தீயெனப் பரவிக்கொண்டிருந்த காலத்தில் ஆசிரியத்தொண்டுக்கு வந்த இவர் இயக்கத்தில் ஆழமான பற்றுக்கொண்டு அக்கொள்கைகளை மக்களிடத்திலும், வாய்ப்பேற்படும் போது மாணவர்களிடத்திலும் பரப்புவதைத் தம் கடமையாகக்கருதினார்.
“பெரியமனிதர்களின் கண்ணும் கருத்தும் இயற்கையாய் இவர்மீது விழுந்தன. பிறகு சொல்லவா வேண்டும்? சுயமரியாதையாம், சுயமரியாதை! அவன் மரியாதை(?)யாக அடங்கிக் கிடக்கப் போகிறானா இல்லையா? என்று கேட்டனர் சிலர். எதற்கய்யா இந்தவம்பும் பொல்லாப்பும்? என்று நல்லெண்ணத்தோடு கருத்துச் சொன்னவர்கட்கு விளக்கங்கள் அளித்தவர். மிரட்டியவர்களுக்கும் எச்சரிக்கைக் கடிதங்களுக்கும் பணிவதாக இல்லை அவர்.
கல்லுடைத்து, நிலத்திருத்தி, வியர்வையைச் சிந்தி, மாடமாளிகைகளை ஆக்கிய தொழிலாளி எண்சாண் உடம்பைக் குறுக்கிப்படுத்து, வற்றிய முகமும் குழியான கண்களுமாய் மீண்டும் வெளிக்கிளம்பி நீர்மூழ்கி முத்தெடுக்கும் இயந்திரமாகிறான் பாட்டாளி. புரியாத மொழியிலே தெரியாத சொற்களைப்பேசி எந்த உழைப்புமில்லாமல் ஏய்த்துப் பொருள் பெற்று இன்பமாய்க் காலங்கழிக்கிறான் பார்ப்பான்! இந்தச் சுரண்டல் தவறல்வா?” என்று முழங்குவதை அவர் நிறுத்திக் கொள்ளவேயில்லை. இரண்டாம் இந்தி எதிர்ப்பு போராட்டக் காலத்தில் இயக்க நிலையினை எடுத்து விளக்குவதில் மிக்க ஈடுபாடு காட்டினார்.
இவரது மகள் சிறுமி மங்கையர்க் கரசியையும் கூட இயக்கத் தொண்டு செய்யுமாறு பயிற்றுவித்தார். இந்தத் தொண்டிற்கு விலையாக விலை மதிப்பற்ற தம் உயிரைத் தரலானார்.
1947 நவம்பர் 13ஆம் நாள் காலையில் வெளியே சென்ற குளித்து வருவதாகக் கூறிச் சென்றவர் சோளக் கொல்லையின் நடுவே பலா மரத்தின் கிளையினில் உயிரற்ற உடலாக தொங்கிக் கொண்டிருந்தார். பலிகொள்ளத் திட்டமிட்டவர்கள் அவர் கழுத்தை நெரித்துக் கொன்று தொங்க விட்டு விட்டனர்.
இரண்டு பெண் குழந்தைகட்குத் தாயான வேலாயுதனாரின் துணைவி செகதாம்பாள் அம்மையார் கண்களில் நீர்வீழ்ச்சியைப் பெருக்குவதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ஓர் உண்மையான சுயமரியாதைப் பெண்ணாக வீறுகொண்டு வஞ்சினமுரைத்து, தம் துணைவர் என்னும் தக்காரின் நல்ல எச்சமாக இயக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
வாழ்க வீரர் வேலாயுதம்!