கா.சு. பிள்ளை என்று அழைக்கப்படும்
கா. சுப்பிரமணியபிள்ளையின் பிறந்த நாள் 5.11.1888).
சைவத்தில் தோய்ந்தவர் என்றாலும், தந்தை பெரியார் அவர்களின் பார்ப்பனர் எதிர்ப்பு என்னும் கொள்கையில் தம்மை முற்றாக ஒப்படைத்துக் கொண்டவர்.
சுயமரியாதை இயக்கத்தோடு பின்னிப் பிணைந்து கிடப்பதால் நாயக்கரால் சைவம் அழிந்துவிடும்போல் தெரிகிறதே என்று சைவ மெய்யன்பர்கள் சிலர்
கா.சு.பிள்ளை அவர்களிடம் முறையிட்டபோது, “சைவம் அழிந்தாலும் பரவாயில்லை; புதுப்பித்துக் கொள்ளலாம்; ஆனால் பாழும் பார்ப்பனியத்தை அழிக்க இராமசாமி நாயக்கரை விட்டால் வேறு நாதி கிடையாது. அவருடன் மோத வேண்டாம்“ என்று பளிச்சென்று கருத்துக் கூறியவர்.
தாகூர் சட்ட விரிவுரையாளர் என்ற பட்டமும், அதற்காக பதினாயிரம் ரூபாய் பரிசும் பெற்றவர். தென்கிழக்கு ஆசிய நாட்டிலே குற்றவியல் சட்டப் புத்தகத்தை எழுதி, முதல் பரிசும் பெற்றவர்.
தமிழில் 120 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் என்றால், அவரின் பெருமையைச் சாற்றவும் வேண்டுமோ!
இவ்வளவு பெருமைக்கும், ஆற்றலுக்கும் சொந்தக்காரரான கா.சு. பிள்ளை அவர்கள் கடைசிக் காலத்தில் ஆதரிப்பாரின்றி வறுமையின் கொடிய பிடியில் சிக்குண்டார்.
சைவக் குழாமைச் சேர்ந்த மறை. திருநாவுக்கரசுமூலம் இதனை அறிந்த தந்தை பெரியார் அவர்கள், மாதந்தோறும் கா.சு. பிள்ளைக்கு 50 ரூபாய் அனுப்பி உதவினார். (50 ரூபாய் என்பது அந்தக் காலத்தில் பெரிய தொகையாகும்).
இதுபற்றி மறை. திருநாவுக்கரசு (மறைமலை அடிகளாரின் மகன்) கூறுகிறார்: எவ்வளவோ சைவ மடாதிபதிகள் எவ்வளவு சைவச் செல்வர்களாக இருக்கிறார்களே! அவர்களுக்கெல்லாம் இந்த அன்பில்லையே. இவர் (பெரியார்) இறை மறுப்புக் கொள்கையுடையவராயிருந்தும், தமிழர் என்ற ஓர் உணர்ச்சிக்காக இப்படி பெருங்கொடை வழங்குகின்றாரே என்றும் எண்ணினேன் என்கிறார். (ஆதாரம்: இளந்தமிழன், மே 2009).