முனைவர் வா.நேரு அவர்களின் நாத்திகர்களைப் பற்றி
ஆத்திகர்களின் மனவோட்டம்…
‘உண்மை’ அக். 16-31 கட்டுரைக்கு
சில எதிர்வினைகள்…
கட்டுரை வாசித்தேன் மிகச் சிறப்பு… “கடவுள் இல்லையென்று சொல்வது வெறுப்பினால் அல்ல. உண்மையைத் தேடுவதால் வருவது..”, என்ற வரிகள் தங்கள் கட்டுரையின் முழு பரிமாணத்தையும் தாங்கி இருக்கிறது. அரபு நாடுகளில் கடவுளை மறுப்பவர்களின் யதார்த்த நிலையையும் சுட்டிக்காட்டி இருப்பதும் சிறப்பு. ஆனால், இந்தச் சூழலைப் புரிந்து கொள்ளாதவர்கள்தான் “அது முழுக்க கடவுளின் நாடு” என்ற கற்பிதத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். சிறப்பு தோழர்… இதுபோல் வலிமையான உள்ளடக்கங்களை எப்போதும் எளிமையான எழுத்துகளில் தொடர்ந்து அளித்து வருகிறீர்கள்..! வாழ்த்துகள்..! வாழ்த்துகள்..!! இனியும் தொடருங்கள்…
– கவிஞர் பொள்ளாச்சி அபி,
பொள்ளாச்சி.
அருமையான கருத்து. பக்திக்கும், மதவெறிக்கும் சரியான உதாரணம். மத நம்பிக்கைக்கும், தன்னம்பிக்கைக்கும் மிக சரியான வேறுபாடு. அரபு நாடுகளில் நாத்திகம் பேசக் கூடாது என்பது எவ்வளவு உண்மையோ அது போல ஜாதிப் பாகுபாடும் இருக்காது. ஆனால் இங்கு ஜாதி, மதத்தின் பெயரால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொடுமைப்படுத்தப் படுகிறார்கள். “பக்தி என்பது தனி சொத்து”, ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து என்று அய்யா சொன்னது போல், பக்தி இல்லை என்றால் பாதிப்பு இல்லை. ஆனால் ஒழுக்கம் இல்லையென்றால் தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் கேடு. அண்ணா! அருமையான செய்திகள் தொடரட்டும்.
– இளமதி முருகேசன்,
(தி.க. மண்டலச் செயலரின் இணையர்), மதுரை.
அக்டோபர் 16-31 ‘உண்மை’ இதழில் வெளிவந்த ‘மத்திய பா.ஜ.க. அரசின் திட்டமிட்ட தமிழ் – பண்பாடு புறக்கணிப்பு’ எனும் முகப்புக் கட்டுரை அருமை. அந்தக் கட்டுரையில் பட்டியலிடப்பட்ட வரலாற்று ஆய்வாளர்களின் பெயர்களையும், அவர்களின் பின்னணியும் பார்த்தாலே இந்தக் குழு எந்த மாதிரியான வரலாற்று ஆய்வுகள் செய்வார்கள் என்பது வெளிப்படை. தமிழை மேடைதோறும் பேசும் பா.ஜ.க. தலைவர்கள் செம்மொழியான தமிழுக்கு ஆய்வுகளின் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்; சிறந்த நூல் பகுதியில் வெளிவந்த ‘ஆதி இந்தியர்கள்’ புத்தகத்தை முழுமையாக வாசிக்க ஆவலைத் தூண்டியுள்ளது. அருமையான புத்தகம். நிச்சயம் அனைவரும் வாசிக்க வேண்டும். ‘கிரிக்கெட்’ பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரை ஏன்? நாட்டில் கிரிக்கெட் மட்டும் முன்னிலைப் படுத்தப்படுகிறது என்பது அது ‘அவாள்’ விளையாட்டு என்பதால்தான்.
ஆசிரியரின் ‘பதில்கள்’ துரைமுருகனுக்கு கூறியுள்ள அண்ணாவின் பொன்மொழியான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அனைவரும் பின்பற்ற வேண்டிய ‘நச்’ பதில்! அய்யாவின் அடிச்சுவட்டில்… கான்ஷிராம் முழக்கம்! வடமாநிலங்களுக்கு வழிகாட்டும் தமிழகம்! நிச்சயம் தமிழகம் இன்றும் பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமான மாநிலம் என்பது வடமாநிலங்களுக்குத் தெரியும்.
சிறுகதை – பக்தி, கவிதை – ‘இந்தி எதற்கு’ இரண்டும் இன்று கொண்டாடப்பட வேண்டிய படைப்புகள். மருத்துவம், ஆய்வுக்கட்டுரை என உண்மை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு புதிய சிந்தனையைத் தூண்டிவிடும். வாழ்த்துகள் அய்யா!
– மகிழ்