ஆசிரியர் பதில்கள் : பாசாங்கு செய்யும் பா.ஜ.க அரசு

நவம்பர் 01-15, 2020

கே:       ‘நீட்’ தேர்வுக் குளறுபடி திட்டமிட்ட சதியா?

               – முகமது, மாதவரம்

ப:           ‘நீட்’ தேர்வு ஊழலை ஒழிக்கப் புறப்பட்டு மார்தட்டி, மீளமுடியாத ஊழல், ஆள்மாறாட்டம், கேள்விக் குழப்பங்கள், விடைத்தாள் மாற்றங்கள், புள்ளி விவரம் தகிடுதத்தம் எல்லாம் இருந்தும் இன்றைய பா.ஜ.க. ஆட்சி எதுவும் நடக்காதது போல பாசாங்குடன் வறட்டுப் பிடிவாதம் காட்டி வருகிறது. பல மாணவர்களின் தற்கொலைக்குக் காரணமாக ‘நீட்’ அமைந்துள்ளது பற்றி சிறிதும் கவலையே படாத நிலை – சதியா? அல்லது அவாள் ஏற்படுத்தியுள்ள விதியா (சட்டமா) என்பது போகப்போகத் தெளிவாகிறது!

கே:       மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்குப் பின் பீகாரில் பா.ஜ.க. கூட்டணியின் நிலை என்ன?

               – மகிழ், சைதை

ப:           அனுபவம் மிக்க மீகாமன் இல்லாத நிலையில் எப்படியோ தனித்து ஓடுகிறது! பொறுத்திருந்து பார்ப்போம்!

கே:       அண்ணா பல்கலைக்கழகச் சிறப்புத் தகுதி  வேண்டாம் என்ற, தமிழக அரசின் நிலைப்பாடு பற்றி தங்கள் கருத்து என்ன?

               – சுந்தரம், மதுரை

ப:           காலந்தாழ்ந்தேனும் எடுத்த தமிழக அரசின் சரியான முடிவு!

கே:       ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் மீண்டும் மாநில அரசுகள் தேவைப்பட்டால் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிக் கொள்ளலாம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது, மாநிலங்களை ஏமாற்றும் செயல் அல்லவா?

               – குமார், வேலூர்

ப:           மாநில வருவாய் -_ மத்திய அரசு கஜானாவில் மாநிலப் பங்கு பற்றாக்குறை _ கடன் வாங்கிக் கொள்ள அனுமதிக்கும் தாராளம்! என்னே விசித்திரம்! விந்தை! மாநில உரிமைகள் நாளும் பறிபோகும் நிலை!

கே:       மக்கள் பிரதிநிதிகள் இயற்றும் சட்டத்தை ஏற்காமல் கிடப்பில் போடும் அதிகாரம் ஆளுநருக்கோ, குடியரசுத் தலைவருக்கோ எப்படி இருக்க முடியும்? இருந்தால் அது அகற்றப்பட வேண்டாமா?

               – கோபால், திருத்தணி

ப:           அப்படி இருக்கிறதே! காரணம், வலுவில்லா _ முதுகெலும்பு கொண்ட மாநில அரசு வற்புறுத்தாமல், பல்லைக் காட்டிக் கெஞ்சும் நிலை இருப்பதால்தான் இந்நிலை! காரணம் வெளிப்படையானதே!

கே:       வலைவீசி விலைபேசி பா.ஜ.க.விற்கு ஆள்களைப் பிடித்து ஊர்தோறும் கொடியேற்றிவிட்டால் கட்சி வளர்ந்துவிடுமா?

               – அன்பழகன், மதுரை

ப:           உங்கள் கேள்வியை தியாகராயர்நகர் பா.ஜ.க. அலுவலகத்திற்கு அனுப்புக! இடந்தவறி இங்கே வந்துவிட்டது!!

கே:       இடஒதுக்கீடு அபகரிக்கப்படுவது, நீட் தேர்வில் முறைகேடு செய்வது இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு, விஜய் சேதுபதி நடிப்பதை பெரிதுபடுத்தும் ஊடகங்களின் சமூக அக்கறை கேவலம் அல்லவா?

               – செல்வபெருமாள், சோத்துப்பாக்கம்

ப:           இரண்டும் முக்கியமே! இனஉணர்வு கண்ணோட்டத்தில் _ உங்கள் பார்வை ஏற்கத்தக்கதல்ல. எத்தனையோ பிரச்சினைகள் வந்தாலும், முக்கியமானதை மறைக்க முடியாது!  

கே:       முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது ஏற்புடையதா?

               – பரந்தாமன், உத்திரமேரூர்

ப:           இதுபற்றி விடுதலையில் வந்துள்ள அறிக்கையைக் காண்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *