நேயன்
சுயமரியாதை இயக்கத்தின் கோயில் நுழைவுப் போராட்டங்கள்
• 1927ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஜே.என்.இராமநாதன் தாழ்த்தப்பட்டோரை அழைத்துக்கொண்டு திருச்சி தாயுமானவர் மலைக்கு படியேறிச் சென்றபோது அவர்கள் குண்டர்களால் தடியால் அடித்து பாறைப்படிகளில் உருட்டிவிடப்பட்டார்கள்.
• அன்றைய சுயமரியாதை இயக்க செயற்பாட்டாளர் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் 1927இல் சுமார் 1000 பேர் அனைத்து ஜாதியினருடன் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவிலில் நுழையச் சென்றனர். நுழைவாயிலையும் கருவறையையும் கோவில் நிருவாகிகள் பூட்டிவிட்ட போதிலும் பக்கவாட்டுக் கதவுகள் வழியாகச் சென்று ‘மணிக்கதவம் தாழ் திறவாய்’ என்ற திருநாவுக்கரசர் பாடலைப் பாடினார்.
• 25.06.1928இல் திருச்சி மலைக்கோயிலிலும், 12.08.1928இல் திருவானைக்கோவிலிலும் அத்தகைய முயற்சிகள் நடத்தப்பட்டன.
• தந்தை பெரியார் 1922ஆம் ஆண்டு திருப்பூர் காங்கிரசு மாநாட்டில் கோவில் நுழைவு -பொது உரிமைகள் வேண்டுமெனத் தீர்மானம் கொண்டுவந்தவர்.
• 1929 மார்ச் 12ஆம் தேதி “ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் ஆதிதிராவிடர் தோழர்களையும் அனுமதிக்க வேண்டும்’’ என்று தேவஸ்தான கமிட்டி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர தேவஸ்தான கமிட்டித் தலைவரான தந்தை பெரியார் முன்னின்றார். அதற்கு அடுத்த நாளே பெரியார் கோவை சென்று விடுகிறார். தேவஸ்தானக் கமிட்டியின் தீர்மானத்தை குத்தூசி குருசாமி நடைமுறைப்படுத்தத் துணிந்தார்.
பெரியாரின் துணைவியார் நாகம்மையாரின் துணையோடு குத்தூசி குருசாமி, பொன்னம்பலனார் மற்றும் ஈரோடு கச்சேரி வீதி ஈஸ்வரன், மஞ்சமேட்டான் மகன் பசுபதி, கிருஷ்ணம்பாளையம் கருப்பன் ஆகிய 3 தாழ்த்தப்பட்ட தோழர்களை நெற்றியில் திருநீறு பூசச் செய்து முக்கிய தெருக்களின் வழியாக அழைத்துச் சென்று தேங்காய், பழம், பூ ஆகியவை அடங்கிய தட்டுடன் கோவிலுக்குள் நுழைந்தார்கள். குத்தூசி குருசாமியும் தோழர்களும் கோவிலுக்குள் இருக்கும்போதே வெளிக்கதவை இழுத்து மூடிவிட்டனர்.
இரண்டு நாள்கள் பூட்டிய கதவைத் திறக்க மறுத்து விட்டனர். இரண்டு நாள்களுக்குப் பின் பெரியார் வந்த பிறகே கோவில் கதவு திறக்கப்பட்டது. குத்தூசி குருசாமி மற்றும் தோழர்கள் மீது வழக்கு போடப்பட்டது.
இது தொடர்பான வழக்குகள் குறித்த செய்திகளை ‘குடிஅரசு’ (21.4.1929) பதிவு செய்துள்ளது. 9 மாதங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு ஈசுவரன், பசுபதி, கருப்பன் ஆகியோருக்கு ரூ.60 அபராதம் விதிக்கப்பட்டது. ஈசுவரன் மட்டும் அபராதம் கட்ட மறுத்து சிறை ஏகினார். ‘குடிஅரசு’ இதைப் பாராட்டி, ஆலயப் பிரவேச சரித்திரத்தில் தோழர் ஈசுவரன் பெயர் முதல் பெயராக இடம் பெறும் என்று பாராட்டி எழுதியது.
ஈரோடு கோவில் நுழைவு வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதே காலகட்டத்தில் சுசீந்திரத்தில் கோவிலைச் சுற்றியிருந்த தெருக்களில் நடந்து சென்றதற்காக திருவாங்கூர் நீதிமன்றத்தால் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த 12 பேர் தண்டிக்கப்பட்டிருந்தனர். அந்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு வழக்குகளிலும் தண்டனையைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈரோடு மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றும் வகையில் பல்வேறு இடங்களில் கோயில் நுழைவுப் போராட்டங்களை சுயமரியாதை இயக்கத் தோழர்கள் மேற்கொண்டனர். ஈரோட்டில் கண்ணப்பரும், காரைக்குடியில் சொ.முருகப்பாவும், தலைச்சேரியில் டபிள்யூ.பி.ஏ.சவுந்தரபாண்டியனும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலை கபாலீசுவரர் கோவில்களில் ‘திராவிடன்’ ஆசிரியர் சுப்ரமணியன், பண்டிதர் திருஞானசம்பந்தன் தலைமையிலும், ஆதி திராவிடர்கள் ‘ஆலயப் பிரவேசம்’ செய்து கைதானார்கள்.
ஏடுகள் தரும் செய்திகள்!
சிதம்பரத்தில் ஆதிதிராவிடர்கள் கோயிலுக்குள் நுழைந்து விடுவார்களென்று தீட்சிதர்கள் நடுக்கம் கொண்டிருக்கிறார்கள். அதற்காக போலிஸ் படையையும் வைத்திருக்கிறார்களாம். சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் அப்பன் வீட்டு சொத்து அல்ல. தீட்சிதர்களுக்கு நுழைய எவ்வளவு உரிமை உண்டோ அவ்வளவு உரிமையும் ஆதிதிராவிடருக்கும் உண்டு என்று திராவிடன் ஏடு எழுதியது. (“திராவிடன்” 16.12.1929 பாகம் 4, பக்கம் 1)
ஜாதி எனும் சண்டாளப் பேயை கொல்லுவதற்காக நடைபெறப் போகும் சிதம்பரம் நடராஜர் ஆலயப் பிரவேச இயக்கத்தில் கலந்துகொள்ள துறையூரிலிருந்து சுமார் 500 ஆதிதிராவிடர் வரை கலந்துகொள்ள முடிவு செய்துள்ளார்கள் என்று “திராவிடன்” ஏடு செய்தியை வெளியிட்டது. (“திராவிடன்” 25.12.1929 பாகம் 3, பக்கம் 2)
ஈரோட்டில் சர்க்கிள் தேவஸ்தானம் கமிட்டியின் தீர்மானத்திற்கு 4ஆம் தேதி காலையில் கருப்பர், தேசியன், சாளி, வெங்கடாசலப் பண்டிதர், கலியப் பண்டிதர் ஆகியோர், ஈஸ்வரன், மாயவரம் நடராசன், ராவணன், பொன்னம்பலனார், நித்தியானந்தம், குருசாமி ஆகியோர் தலைமையில் இதுவரை பஞ்சமர் அனுமதிக்கப்படாத இடம்வரை சென்று முதல் வாசற்படியருகில் பாட்டுகள் பாடிக்கொண்டு சென்றபோது அர்ச்சகர் முதலாவது வாயிற்படியை மூடிவிட்டான் மறுநாளும் கோயில் கதவுகளெல்லாம் மூடப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கானோர் ஏமாறித் திரும்பினர் இவ்வாறு “திராவிடன்” ஏட்டில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. (“திராவிடன்” 1929)
(தொடரும்……)