நெறிகள் ஒன்றென்று
நிகழ்த்தும் சமயங்கள்
குறிகள் வெவ்வேறாய்க்
கோடிட்டுக் காட்டிவிடும்!
நெற்றியில் வெளிப்பூசல்;
நித்தமும் உட்பூசல்!
உற்ற மதக்குறிகள்
ஒவ்வொன்றும் தினப்பூசல்!
சமயக் குறிகளுக்குச்
சமக்குறியே தெரியாதா?
சமயத் துறைகளுக்குள்
சச்சரவே தீராதா?
காசைத் தந்தால் கடவுளுடன்
கலந்துரை யாடல் நடக்கிறது!
ஆசைப் பட்ட பொருள்யாவும்
ஆண்டவன் பெயரில் கிடைக்கிறது!
பகல் வேடங்கள் உள்ளவரை
பக்தி விளம்பரப் பொருளாகும்;
நகல்கள் அப்பால் நகர்ந்தால்தான்
நம்பிக் கைகள் உருவாகும்!
விதைமொழியே தமிழ்தானே!
கோடுயர்ந்த மலைகளிலே
கொடிமரங்கள் நட்டவனின்
வீடுகளே தமழ்மொழியை
விலக்கி வைக்கும் பெருங்கொடுமை!
வீட்டில் பழகும்மொழி
வேற்றுமொழி யானபின்பு
நாட்டு மொழியைப் பற்றி
நாம்பேசத் தகுதியுண்டா?
தாய்ப் பாலில் அந்நியமும்
தாலாட்டில் அயல்மொழியும்
நோய்போலப் பரவினால்
நலிந்துவிடும் தமிழ்ச்சாதி!
உலகமொழி அத்தனைக்கும்
ஊற்றுமொழி தமிழ்தானே!
வேற்றுமொழி அனைத்துக்கும்
விதைமொழியே தமிழ்தானே!
தமிழகம் உனது அன்னைநிலம்,
தமிழினம் உனது தண்டுவடம்;
தமிழ்உன் மூச்சின் மூலதனம் – நீ
தடைகள் தகர்க்கும் காளையினம்!
– கவிஞாயிறு தாராபாரதி