வாழ்வியல்: ஆண் குழந்தை வளர்ப்பு

நவம்பர் 01-15, 2020

உளவியல் ஆலோசகர் வே.எழில்

அதென்ன, குழந்தை வளர்ப்பு என்பது பொதுவானதுதானே? இதிலென்ன ஆண் குழந்தை வளர்ப்பு எனும் பாகுபாடு என யோசிக்கலாம். இப்போது பெண்களுக்கு அதிகமாகிக் கொண்டே வரும் பாலியல் தொந்தரவுகள், பாலியல் சீண்டல்கள்,  பாலியல் வன்கொடுமைகள் இவற்றிற்கு ஆண் குழந்தையின் வளர்ப்பும் காரணமாகிறது.  ஒரு குழந்தை வளர்ந்தவுடன் எல்லாவற்றையும் கற்றுக் கொள்வதில்லை. ஒருவரின் நடத்தை என்பது கருவிலிருந்தே உருவாகிறது. எனவே ஆண் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துவது என்பது  முக்கியமாகிறது.

ஆண் குழந்தையை அடித்து வளர்க்கணும். பெண் குழந்தையைப் போற்றி வளர்க்கணும் என்பது போல  காலங்காலமாக பல கருத்துகள் சமூகத்தில் ஊடுருவி இருப்பதால் அதையொற்றி வளரும் – வளர்க்கப்படும் பிள்ளைகளும் அதே கருத்தொற்றி நடப்பதுமே பல்வேறு பிரச்சனைகளுக்குக் காரணம். ஓர் ஆண் எப்படியெல்லாம் குணக்கேடுடையவனாக மாறலாம்?

ஆலன் என். ஷோர் எனும் உளவியல் மருத்துவர் அவரின் ஆய்வில் சொல்வது

ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகளை விட உடல் ரீதியாக,  சமூக ரீதியாக  , மொழி ரீதியாக மெதுவாக வளர்கிறார்கள்.

உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் மூளைப்பகுதி மெதுவாக வளர்கிறது .குழந்தை வயிற்றிலிருக்கும் போது அம்மாவிற்கு ஏற்படும் மன அழுத்தம், மனச் சோர்வு , பிறந்த பின்னும் அவளுக்கு இருக்கும் மன அழுத்தம் போன்றவை குழந்தைக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் , பெண் குழந்தைக்கு இந்த எதிர்மறை விளைவுகளை  எதிர்கொள்ளும் உள்கட்டுமானம் இருக்கிறது.

அம்மாவின் அரவணைப்பின்மை, அவரின் பிரிவு, அம்மாவின் மன அழுத்தம் போன்றவை எளிதாக ஆண் குழந்தையின் வலப்பக்க மூளைப் பகுதியின் வளர்ச்சியைத் தாக்குகிறது.  இந்த வலப்பக்க மூளைப் பகுதிதான் மனிதனின் சுய கட்டுப்பாடு மற்றும் சமூகப் பார்வை போன்றவற்றை ஒழுங்கு படுத்தும் பகுதி. எனவே, ஆண் குழந்தைக்கு அரவணைப்பு என்பது அதிகமாகவே தேவைப்படுகிறது. கரு உருவானதில் இருந்து  ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் சரியான அரவணைப்புமின்றி வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளில்  நடத்தைக் குறைபாடும் ஒன்று. (     &  .     ,2003)

நடத்தைக் குறைபாடுடைய ஆண்கள், பெண்களைக் கீழ்த்தரமாக நடத்துவதையும் குணமாகக் கொண்டிருக்கலாம்.

எனவே சமூகப்பார்வையும் , உணர்ச்சிக் கட்டுப்பாடும் கொண்ட மனிதன் உருவாக கரு உருவானதில் இருந்து ஒரு தாய் நல்ல , ஆரோக்யமான , மகிழ்வான மன, உடல் நிலையில் இருப்பது முக்கியம். அப்போ சிறு வயதில் சரியாகப் பிறந்தவர்கள் மட்டுமே பிரச்சனைகளுக்குக் காரணமா என யோசிக்கலாம்.  குழந்தைகள் வளரும் போது சமூகம் அவர்களுக்குள் ஏற்படுத்தும் தாக்கமும் அவர்களின் நடத்தைக்குக் காரணமாகிறது. பெரும்பாலான குணங்கள் பார்த்தே கற்றுக்கொள்ளப் படுகிறது. வளர்ந்த பின் கிடைக்கும் கல்வியும், அனுபவ அறிவும் சில மாற்றங்களை ஏற்படுத்தினாலும் சிறு வயதில் படிந்து போன கருத்தாக்கங்களை மாற்றிக் கொள்வது கடினம்.  எனவே, குழந்தை வளர்ப்பு என்பது வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்.

ஆண்கள் பெண்ணை எளிதாகக் கையாளக் காரணம்- பெண் குறித்து அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கருத்துகளே. இந்தக் கருத்துகள் எல்லாம் பெண்ணைக் கீழானவளாகவும் , போகப் பொருளாகவும் , அடிமைகளாகவும், ஏவல் செய்பவர்களாகவும் , ஆண்களுக்கானவளெனவும் சித்திரிக்கும் தொலைக்காட்சிகள், திரைப்படங்கள் ,பாடல்கள் மூலமும் அப்படி நடந்து கொள்ளும் சக சமூக ஆண்களான  அப்பா, ஆசிரியர், சக தோழமை, சமூகத்தில் இருக்கும் ஆண்கள், அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள், திரைப்பட கதாநாயகர்கள் போன்றோரை முன்மாதிரியாகக் கொள்வதன் மூலமும், அவர்களை தொடந்து பார்த்து கற்பதன் மூலமும்  ஆழமாகப் பதிகிறது. பெண் குறித்த ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்கிறான். அவளை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் எனும் மன நிலைக்கு உள்ளாகிறான்.  இதை எப்படி மாற்றுவது?     பிரச்சனையின் ஆணி வேரை மாற்றாமல் எந்த மாற்றமும் நிகழ வாய்ப்பில்லை.

பெண்ணை , சக மனிதியாய் மதிக்கும் கற்றல் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.  தன் அம்மாவை, மனைவியை ,தங்கையை , சக பெண்களை ஓர் அப்பா எப்படி மதிக்கிறார் என்பதிலிருந்து கற்றல் தொடங்குகிறது.  அவர்களை மரியாதையோடும், மதிப்புடனும் பார்க்க வேண்டும்.  அதென்ன எருமையாட்டம் வளர்ந்து நிற்கிறாள், குதிரையாட்டம் உசந்து நிற்கிறாள் போன்ற உருவக் கேலி, ஒரு பெண்ணை அவளின் உடலுறுப்பைச் சொல்லித் திட்டுவது, பெண் என்றால் இப்படித்தான் என்பதைப் பொதுமைப்படுத்துவது போன்றவற்றை  என்ன தான் கற்றறிந்தவர் என்றாலும் அவரையறியாமல் வெளிப்படுத்துகின்றனர். இதையெல்லாம் கவனமாகக் களைய வேண்டும் . அது போன்ற நிகழ்வுகள், வீட்டிலோ பொது வெளியிலோ நடக்கும் போது எதிர்க்குரல் கொடுக்க வேண்டும் . இதைப் பார்த்து வளரும் மகன் பெண்ணுக்கான மரியாதையை உணர்வான்.

அம்மாக்களும் தனக்கு நடக்கும் கீழ்மைகளுக்கு அவ்வப்போதே எதிர்க்குரல் கொடுக்க வேண்டும். தொலைக்காட்சி நிகழ்வுகளிலோ, படங்களிலோ ,  நகைச்சுவைகளிலோ பெண் இழிவுபடுத்தப்படுகிறாள் என்றால் அது குறித்த கண்டன குரலைப் பெற்றோர் பதிவு செய்ய வேண்டும்.  அப்போது தான் அந்த வீட்டில் வளரும் ஆண் மகன் பெண்ணைப் பற்றி இப்படி யார் சொல்வதும் , இழிவுபடுத்துவதும் தவறு எனும் புரிதலைப் பெறுவான்.

பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் எனும் ஸ்டீரியோடைப் வசனங்களையும், கருத்தாக்கங்களையும் உடைத்தெறிய வேண்டும்

பெண் என்பவள் இரக்க குணமுடையவள், குடும்பப் பாங்கானவள், கீழ்ப்படிந்து நடப்பவள், சார்ந்து வாழ்பவள் , பலவீனமானவள் என்றும் ஆண் என்பவன் மேலாண்மை கொண்டவன், போட்டி போடுபவன்,  முரட்டுத்தனமானவன் என்றும் இப்படி குணங்களைப் பால்பேதத்திற்கு உட்படுத்தாமல் பொதுமைப் படுத்த வேண்டும்.

திறமை , குணம், ஆளுமை, அறிவு , பலம் , பட்சாதாபம், கருணை போன்றவை இருவருக்கும் பொதுவானதாகச் சொல்லி வளர்க்க வேண்டும்.

பெண் குழந்தைதான் தன் உடன்பிறப்பை அன்பாகக் கவனித்துக்கொள்ள முடியும் .’ஜான் பிள்ளையனாலும் ஆண் பிள்ளை’ என்று சொல்லி அவர்களுக்கு சரியில்லாக் குணங்களைக் கற்பித்துத் தொலைக்கிறோம். “என்னடா பொம்பளைப் புள்ளை மாதிரி அழுவறே – அவன் அம்மா பிள்ளை” போன்ற கேலி வார்த்தைகள் இதெல்லாம், தான் மேலானவன் என உணர்த்தப்படும் ஒன்றாக எண்ணி மாற முயற்சிப்பான் ஆண். பெண்ணிற்கான குறியீடாகவும் நம்பத் துவங்குகிறான். எனவே இது  போன்ற பாலின பேத வார்த்தைகளை தவிருங்கள்.

“ஆண் பிள்ளை என்னடா பாட்டு கத்துக்கறேன்னு சொல்றே” பொம்பளைப்புள்ளைக்கு எதுக்கு கராத்தேவும், கபடியும் எனப் பிரிவினைப்படுத்தாமல் ஆணோ, பெண்ணோ அவர்களின் ஆர்வங்களையும், செயல்களையும் பொதுமைப்படுத்தி ஊக்கப்படுத்துங்கள் வீட்டில் சமைத்தல்  , பாத்திரம் கழுவுதல், வீடு பெருக்குதல், கடைக்குச் செல்லுதல் என அத்தனை வேலைகளையும் இது ஆண் வேலை, இது பெண் வேலை எனப் பாகுபடுத்தாமல் பொதுமைப்படுத்துங்கள்.

பெண்ணை அவளின் ஆளுமையை வைத்து மதிப்பிடக் கற்றுக் கொடுங்கள். இவையெல்லாம் பெற்றோர் முன் மாதிரியாகச் செயலாக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்

வளர் இளம் பருவ மகன்களிடம் பெண்ணின் உடலியல் வளர்ச்சிப் பிரச்சனைகளான  மாதவிடாய்,

குழந்தை  பிறப்பின் பிரச்சனைகள்,  மாதவிடாய்  நிறுத்தம் போன்றவற்றை பெற்றோர் வெளிப்படையாகப் பேச வேண்டும் .அந்த சமயத்தில் தேவைப்படும் உதவிகளையும் செய்யச் சொல்லலாம். அப்போது தான் பெண் உடல் குறித்த புரிதல் கிடைக்கும்.

பள்ளியிலும் இதற்கான சில கருத்தாக்கங்கள் உருவாக வேண்டும். “பொம்பளைப் பிள்ளைங்க அமைதியா இருக்காங்க.. இந்தப் பசங்க தான் ஒழுங்கீனம்“ எனும் ஆசிரியரின் வார்த்தைகள் வீட்டில் வளர்க்கப்பட்டிருக்கும் பாலின பேதக் கருத்தாக்கத்திற்கு வலு சேர்ப்பதாய் அமையும். பாலின பேதம் பிரிக்காமல் மாணவர்களே என்றோ , குழந்தைகளே என்றோ அழைப்பதும் நல்லது. இந்திந்தப் போட்டிகள் பெண் குழந்தைகளுக்கானது , இவை ஆண்களுக்கானது எனும் பிரிவினைகளும் அச் செயல்களை மாற்றிச் செய்யும் குழந்தைகளைக் கேலிக்கு உள்ளாக்குவதிலும் பாலியல் சீண்டல்கள் ஆரம்பிக்கிறது. பெண்ணோ,

ஆணோ அவரவர்க்கான எல்லைகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும். ஒருவரிடம் எந்த எல்லை வரை பேச வேண்டும் , தொட வேண்டும் என்பது குறித்த புரிதலைக் கொடுக்க வேண்டும் .  யாராயிருந்தாலும் வேண்டாம் , நிறுத்து போன்ற வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்க கற்றுத் தர வேண்டும் .

இப்படியான மாற்றங்களோடு பெற்றோரும்,

சமூகமும் இயங்கத் தொடங்கினால் பெண்ணை சக  உயிராய் எண்ணி  அதற்கேற்படும் வலி ,வேதனை உணர்ந்த ஒரு ஆண் சமூகம் உருவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *