ஆய்வுக் கட்டுரை : உலகப் பகுத்தறிவு மாமேதைகள் பெரியாரும் இங்கர்சாலும் – ஓர் ஓப்பீடு! (2)

நவம்பர் 01-15, 2020

முனைவர் த.ஜெயக்குமார்

(சென்ற இதழ் தொடர்ச்சி)

 

அடிமைத்தனத்தை நிலைநிறுத்திய மதத்தை உடைத்தெறிந்தனர்

மதம் குறித்த இங்கர்சாலின் சிந்தனைகளை நோக்குங்கால்: “மதம் என்பது ஒருவித பயமேயாகும்! மதம் சுயமரியாதையையும், சுதந்திரத்தையும், மனிதத் தன்மையையும், வீரத்தையும், பாதுகாப்பையும் போதிப்பதில்லை. மாறாக, கடவுளைத் தலைவனாக்கி மனிதனை ஏவலாளாக ஆக்கி அடிமைத்தனத்தை நிலைநிறுத்துகிறது. போலிக் கொள்கையிலேயே மதங்களெல்லாம் தொங்குகின்றன. கிறித்துவர்கள் பிற மதங்களெல்லாம் பொய் எனக் கூறிக் கொள்கிறார்கள். மதமின்றி மக்கள் முன்னேற்றமடைய முடியாதா? மதத்தால் எவ்வித உபயோகமுமில்லை. மதம் ஒருபோதும் மக்களை சிந்திக்கவிடவில்லை. மக்கள் உயிரோடு எரிக்கப்பட்டதும், கழுவேற்றப்பட்டதும் மதத்தால்தானே? ஆகவே, மதம் மனித அறிவுக்கு விரோதியாக இருந்து வருகிறது. மனிதனை ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றவில்லை.

இதற்கு ஒரே வழி மதக் கட்டுப்பாட்டை நீக்கி முழு சுதந்திரம் கொடுக்கவேண்டும். மதம் ஒருகாலும் மக்களைச் சீர்திருத்தாது. மாறாக, பயத்தால் அடிமைதான் படுத்தும். எனவே, அறிவை வளர்த்து, நியாயத்தைப் பாதுகாப்பதே உண்மையான நெறியாகும். அதனால் மதம் எனும் விலங்கை உடைத்தெறிந்து சுதந்திர மனிதர்களாக மாறுவோம்’’ என்றார் இங்கர்சால்.

சிந்தனைகளால் ஒன்றுபட்ட பெரியார் அவர்களோ, இந்திய நாட்டில் ஒருவர் பிறப்புரிமையாகிய சுயமரியாதைக்கு முக்கியமான செயற்கைத் தடையாய் இருப்பது மதம் என்றார். இந்து மதம் என்பதாக ஒரு கற்பனையை ஒவ்வொருவர் மீதும் சுமத்தியிருக்கிறார்கள் என்றார். மதம் என்பது நாட்டிற்கோ, ஒரு சமூகத்திற்கோ, ஒரு தனி மனிதனுக்கோ எதற்காக இருக்க வேண்டும்? மனிதனுக்காக மதமா? மதத்துக்காக மனிதனா? ஆக மடமையை வளர்க்கும் மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்றார் பெரியார்.

இந்திய நாட்டில் பிறக்கும் மனிதன் ஒவ்வொருவருக்கும் பிறவியின் காரணமாக ஜாதியும், மதமும் கற்பிக்கப்பட்டு, அதனை அவனும் ஒப்புக்கொண்டு இழிவுகளைச் சுமந்து வந்தனர். சமத்துவமும் பொதுஉடைமையும் ஏற்பட வேண்டுமானால் முதலில் மதம் ஒழிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. மனித சமூகத்தின் வளர்ச்சிக்கும் _ சுதந்திரத்திற்கும் _ முற்போக்கிற்கும் _ சுயமரியாதைக்கும் விரோதமான மதம் ஒழிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார் பெரியார். மதம் மனிதனுக்கு முட்டாள்தனத்தைக் கற்பிக்கிறது. அதனால் பெரிதும் மூடநம்பிக்கைகளை வளர்க்கிறது என்றார்.

தீண்டாமை ஒழிப்புக்கும், ஜாதி ஒழிப்புக்கும் முன்பாக மதத்தை ஒழித்தாக வேண்டும் என்றவர் பெரியார். முதலில் மனிதன் மனிதனாக்கப்பட வேண்டும்; பின் அவனுக்கு அறிவு வளர வேண்டும். எதையும் கண்மூடித்தனமாக நம்புவதைக் கைவிட வேண்டும் என்றவர் பெரியார். மனிதனை மனிதன் தொடக் கூடாது, தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம் என்றவர்களைப் பார்த்து பெரியார் கேட்டார் “அவர்கள் யார் என்று?’’ அதுதான் இந்து மதம் கற்பிக்கும் வர்ணாசிரம தர்மம் என்றனர். அப்படியாயின் அம் மதத்தையும் அதற்கு மூலக் காரணமானவற்றையும் ஒழிப்பதுதான் சுயமரியாதை இயக்கத்தின் வேலை என பெரியார் எடுத்துரைத்துத் தொண்டாற்றி, வெற்றியும் கண்டார்.

கடவுள் ஒரு பொய் நம்பிக்கை – கற்பனை என்றனர்

கடவுள் நம்பிக்கையைத் தகர்த்திட இங்கர்சால் எடுத்துரைத்த பகுத்தறிவு வாதங்கள் யாதெனில்: மனிதனால் கற்பனை செய்யப்பட்ட புனையப்பட்ட ஒரு பொருளே கடவுள், அதோடு புரோகிதர்கள் எனப்பட்டோரால் கடவுளைப் புகழ்வதும், விளம்பரம் செய்வதும்தான் தொழிலாகக் கொண்டிருந்தனர். உலகைப் படைத்ததாகக் கூறும் கடவுள்களுக்கு புவியின் வடிவம் எப்படி இருக்கிறது என்பதுகூடத் தெரியாமல், அது தட்டையாக இருப்பதாகக் கூறின. இக்கடவுள்கள் முன்பு கொலை புரிந்தோருக்கும், கற்பழித்தோருக்கும்கூட கடைத்தேற வழியுண்டு, மன்னிப்பு பெற மார்க்கமுண்டு.

கடவுளை ஒருவர் நம்பினால் அந்த நிமிடமே அவர்தம் அறிவைப் பறிகொடுத்து அடிமையாகிவிடுவார். நமது அறிவைப் பயன்படுத்த நமக்கு சுதந்திரம் வேண்டும். அதனைத் தண்டிக்க எந்தக் கடவுளுக்கும் பாத்தியம் இல்லை. அறியாமையும், பைத்தியமும் கலந்து ஏற்பட்ட நம்பிக்கையே கடவுள் எனும் பொய் நம்பிக்கை கற்பனையாகும் என்றார் இங்கர்சால். மக்களின் அறிவுச் சுதந்திரத்தினால் அடையும் விடுதலை அளவிடற்கரிய மதிப்புடையாகும்.“உன் கண்களைக் கட்டியிருக்கும் பக்தியை ஒழி, உன் இதயத்திலிருந்து பயத்தை விரட்டியடி, உன்னுடைய மூளையில் இடப்பட்டிருக்கும் மூடநம்பிக்கை விலங்கைத் தகர்த்தெறி’’ என்றார் மாமேதை இங்கர்சால் அவர்கள்.

நமது முன்னோர்கள் தெய்வங்களை தொழிற்சாலைப் பொருள்கள் போல  உற்பத்தி செய்ததோடு, நோய்களைக்கூட தெய்வங்கள்தான் அனுப்பின என நம்பினர். எனவே, மனிதன்தான் தன்னைப்போலவே கடவுளையும் உருவகித்துள்ளான் என்பது தெளிவாகிறது. மனிதன் தன் அறியாமையினால் கடவுளை நம்புகிறான். பயத்தினாலே அதனை வணங்கவும் செய்கிறான். பக்தி கொள்வதுதான் மதத்தின் முக்கிய நோக்கமாகும். கடவுள் வழிபாடும், ஆராதனையும் நாகரிகமடையாத மக்களிடம் சர்வசாதாரணமாகக் காணலாம். நாகரிகம் அடைய அடைய, ஒருவன் தனது நம்பிக்கையை விலக்குகிறான். ஆக ஒன்றுமற்ற வெற்றிடமே கடவுளது இருக்கையாகும்.

பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்களும், அவர்தம் தத்துவச் சிந்தனைகளும் கடவுள் எனும்  கற்பனை ஒழிக்கப்பட்டால்தான் மனித சமுதாயம் சமநிலை பெற்று மறுமலர்ச்சி காண முடியும் என தம் அறிவு வழிப்பட்ட பிரச்சாரத்தினால் எடுத்துரைத்துள்ளார். அதனூடே மக்களுக்கு அறிவும், ஆராய்ச்சியும் வளர வளர கடவுள் உணர்ச்சி குறையும் என்றும், மேலும் அறிவும், ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் நம்பிக்கை வளரும் என நுட்பமாய்க் கண்டறிந்து தெளிவுபடுத்தியவர் பெரியார். குருட்டு நம்பிக்கையும், மூடப்பழக்கமும் அழிந்தால்தான் உலகில் ஒழுக்கமும் சமத்துவமும் நிலைபெறும் என்றார் பெரியார்.

கடவுள் எனும் கற்பனை கண்டுபிடிக்கப்பட்டதுமல்ல, தானாகத் தோன்றியதுமல்ல; மாறாக அது முட்டாள்களால் உண்டாக்கப்பட்டது என்று அறுதியிட்டுக் கூறினார். மேலும் “கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றால் கோபப்படுபவனை “இரட்டை முட்டாள்’’ என்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்’’ என்பார் பெரியார். மனித சமூகத்தை சமமானதாகப் பாவித்திட தடையாக உள்ள ஜாதிக்கும், மதத்திற்கும் மூலக் காரணம் கடவுள் எனும் கற்பனைத் தன்மையேயாகும். எனவே, கடவுள் ஒழிப்பு என்பது அவசியமாகிறது என்கிற அடிப்படையில்தான் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் கடவுள் மறுப்பை முன்னிறுத்தியது.

கடவுள் எனும் கற்பனை அறிவை மாத்திரமல்ல, ஒழுக்கம், நேர்மை, அன்பு, அருள், ஒற்றுமை, சமநிலை முதலியவற்றைப் பாழ்படுத்தி, வளர்ச்சியைக் கெடுத்து, விஞ்ஞானத்தை மறைத்து,  அஞ்ஞானத்தை வளர்த்து வருகிறது. எனவேதான் கடவுள் நம்பிக்கை ஒழிக்கப்பட்டே ஆகவேண்டும் என்பது பெரியாரின் தீர்க்கமான எண்ணமாகும். உலகில் இப்போது ரஷ்யா, சீனா, ஜப்பான், சயாம், பர்மா, சிலோன், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட மேலைநாடுகளில் பெரும்பாலோருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. காரணம் அங்கெல்லாம் காணும் விஞ்ஞான வளர்ச்சியே!

மனித சமுதாயத்தில் கடவுள் கற்பனை புகுத்தப்படாமலிருந்தால் இன்று பேதமற்ற – கவலையற்ற – துக்கமற்ற வாழ்வு நிலையை எய்தியிருப்பான். மனிதனிடம் கடவுள் பக்தி இருப்பதற்கு ஆசைதான் காரணமாகும். ஆக எண்ணங்களும் – ஆசைகளும் – பேராசைகளுமே நம்பிக்கைக்கும், வழிபாட்டிற்கும், தொண்டிற்கும் காரணமாக இருக்கின்றன என பெரியார் அவர்கள் கடவுள் எனும் கற்பனை மாயையை மக்கள் மனதிலிருந்து அகற்றிட பிரச்சாரம் செய்து விழிப்புணர்வூட்டினார்.

அவர்களது படைப்புகள் – எதிரிகளைத் தாக்கி அழிக்கும் ஆயுதங்கள்!

1899இல் இங்கர்சால் மரணமடைந்தபோது அவருக்கு மரணச் சடங்குகள் எதுவும் நடத்தப்படாமல், அவருடைய புத்தகங்களிலிருந்து சில பாகங்களை அவரது நண்பர்கள் வாசித்து புதுமையாகவும், புரட்சியாகவும், அதே சமயம் அவர் எந்த அளவிற்கு புத்தகத்தை நேசித்தார் என்பதற்கான சான்றாகவும் அவரது இறுதி நிகழ்வு அமைந்தது.

இங்கர்சாலைப் போன்றே பெரியார் அவர்களும் புத்தகக் காதல் கொண்டவர். அதேபோன்று பெரியார் அவர்கள் தம் படைப்புப் புத்தகங்களை எதிரிகளைத் தாக்கி அழிக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தியவர் என்பதனையும் அறிய முடிகிறது. 1973இல் பெரியார் அவர்கள் உடலால் மறைந்தாலும் இன்றும் தத்துவமாக வாழ்கிறார். அவர் தனது வாரிசு குறித்து 10.04.1965 (சிவகங்கையில்) அன்று குறிப்பிடுகையில், “எனக்குப் பின் என் புத்தகங்களே வாரிசாக வழிகாட்டும்’’ என்றார்.

பெரியார் அவர்கள் தமக்குப் பின் தனது கொள்கை வாரிசு குறித்து மேலும் குறிப்பிடுகையில்: “எனது தொண்டும் – பிரச்சாரமும் அறிவை மட்டுமே சேர்ந்ததல்ல! அதனூடே உணர்ச்சியையும் சேர்ந்தது. ஆக, அறிவும்-உணர்ச்சியும்-துணிவும் உள்ள ஒருவர் எனக்குப் பின் வாரிசாக வருவார் என்றார். அந்த வகையில் பெரியாரின் தத்துவங்களையும் அவர் கண்ட சுயமரியாதை இயக்கத்தையும் வழிநடத்தும் ஆற்றல்மிகு தலைவராக உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி அவர்களை அடையாளம் காட்டிச் சென்றவர் பெரியார் ஒருவரே!

பகுத்தறிவுக் கொள்கையை உலகமயமாக்க வேண்டும்

உலகின் இருபெரும் பகுத்தறிவு மாமேதைகளாம் இங்கர்சால், பெரியார் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றையும், அவர்கள் சுயமாகச் சிந்தித்து மக்களுக்குப் போதித்த புரட்சிகர தத்துவச் சிந்தனைகளையும், அரிய போதனைகளையும், வாழ்க்கையை நல்வழிப்படுத்தும், மேன்மைப்படுத்தும் நன்னெறிக் கொள்கை கோட்பாடுகளையும், தத்துவங்களையும் நூற்றாண்டுகள் கடந்தும், நாடு கடந்தும் உலகில் உள்ள ஒவ்வொருவரும் குறிப்பாக ஏழை-எளிய-பாமர-பெண்டிர் உள்ளிட்ட எதிர்கால இளைய தலைமுறை சந்ததியினருக்கும் எடுத்துக்கூற வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

மேலும், அத்தகு மாமேதைகளின் பேச்சு_எழுத்துகளைத் தொகுத்து சிந்தனைச் செல்வங்களான நூல்களை, குறைந்த விலையில் மலிவுப் பதிப்பாக்கி, உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து, உலகெங்கும் தீவிரமாய்ப் பரப்பிடும் பணி காலத்தின் ஞானப்பணியாகும். அதனூடே அவர்கள்தம் பகுத்தறிவுக் கருத்துகளை இணைய தளங்களிலும் பதிவேற்றம் செய்து பகுத்தறிவுக் கொள்கைதனை உலகமயமாக்கிடல் வேண்டும். உலகப் பகுத்தறிவு மாமேதைகளாம் இராபர்ட் கிரீன் இங்கர்சால் மற்றும் தந்தை பெரியார் ஆகிய இருபெரும் மெய்ஞ்ஞான வீரர்களின் தத்துவங்களை இவ் உலகம் மறந்துவிட முடியாது. அதற்கு இதுபோன்ற உலகளாவிய பன்னாட்டுக் கருத்தரங்குகள் மேலும் மேலும் செறிவூட்டி, பயன்படச் செய்ய வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *