சிறுகதை : கோயில் திறந்தாச்சு!

நவம்பர் 01-15, 2020

ஆறு.கலைச்செல்வன்

கடந்த அய்ந்து மாதங்களாக வீட்டிலேயே அடைந்து கிடந்தாள் அல்லது அடைத்து வைக்கப்பட்டாள் அபிநயா. அவள் அய்ந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று ஆறாம் வகுப்பில் சேர இருந்தாள். ஆனால், பள்ளிகள் திறக்கப்படாததால் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. காரணம் கொரோனாதான்.

அன்னலட்சுமி, மூர்த்தி இணையரின் ஒரே மகள்தான் அபிநயா. ஒரே மகள் என்பதால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டாள். கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அவளை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அவளை மட்டுமல்ல, மூர்த்தியையும் வெளியே செல்ல அன்னலட்சுமி அனுமதிக்கவில்லை.

அபிநயாவோ தன் பள்ளித் தோழிகள் யாரையும் பார்க்க இயலாமல் தவித்தாள். கடந்த பல மாதங்களாக அம்மா, அப்பாவைத் தவிர்த்து வேறு யாருடைய முகத்தையும் அவள் பார்க்கவில்லை. தொலைக்காட்சிப் பெட்டியே கதியெனக் கிடந்தாள். அன்னலட்சுமி, மூர்த்தி நிலையும் அப்படித்தான்.

தொலைக்காட்சியில் பள்ளித் திறக்கப்படும் நாள் பற்றிய செய்தி வருமா என நாள்தோறும் ஏங்கினாள் அபிநயா. வீட்டில் அடைந்து கிடப்பது அவளுக்கு அறவே பிடிக்கவில்லை. ஆனால், பள்ளி திறக்கப்படும் நாள் குறித்து நாள்தோறும் குழப்பமான அறிவிப்புகள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தன. இது அபிநயாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு பள்ளிப் பிள்ளைகளுக்கும் எரிச்சலைக் கொடுத்தது. பெற்றோர்களும் குழப்பத்திற்குள்ளாகி தங்கள் பங்குக்கு சம்பந்தப்பட்டவர்களைத் திட்டித் தீர்த்தனர்.

இணைய வழி வகுப்புகள் பற்றி தொலைக்காட்சியில் ஒரு நாள் செய்தி அறிவித்துக் கொண்டிருந்தார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த அபிநயா அன்னலட்சுமியை நோக்கி,

“அம்மா! பள்ளியை எப்போதுதான் திறப்பாங்க?’’ என்று கேட்டாள்.

“யாருக்குத் தெரியும்! கொரோனா போனால்தான் திறப்பாங்க’’ என்று பதில் சொன்னார் அன்னலட்சுமி.

“அம்மா! போன மாசமே திறக்கப் போறதா சொன்னாங்களே!’’ என்று மீண்டும் கேட்டாள் அபிநயா.

“மாசா மாசம் இப்படித்தான் சொல்றாங்க. ஆனா சொல்றவங்களும் குழம்பி நம்மையும் குழப்புறாங்களே!’’ என்று எரிச்சலுடன் பதில் சொன்னார் அன்னலட்சுமி.

பள்ளி திறக்கப்படாத நிலையில் யாரிடமாவது தனிப் பயிற்சி எடுத்துக் கொள்ள விரும்பினாள் அபிநயா. ஆனால், அவளது அம்மா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஆசிரியர் வீட்டுக்கு வந்து பாடம் சொல்லிக் கொடுக்கவும் அவர் விரும்பவில்லை. காரணம், ஆசிரியர் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என்கிற பயம்தான்.

மகளுக்கோ பள்ளி திறக்கப்படவில்லையே என்கிற கவலை மேலோங்கி இருந்த நிலையில் அன்னலட்சுமியின் கவலையோ வேறுவிதமாக இருந்தது. அதாவது அவரது கவலை – கோயில்கள் திறக்கப்படவில்லையே என்பதுதான்.

தொலைக்காட்சியில் கோயில்கள் திறக்கப்படும் நாள் பற்றிய அறிவிப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் அன்னலட்சுமி. காரணம், அவர் ஒரு தீவிர பக்தை. அதுவும் அன்பானந்த சுவாமிகளின் தொண்டர். அடிக்கடி பல மைல்கள் பயணம் செய்து அவரைச் சந்தித்து குறி கேட்டு வருவார். தற்போது பல மாதங்களாக சுவாமிகளைச் சந்திக்க முடியவில்லையே என்கிற கவலை அவரை வாட்டியது.

அன்பானந்தனின் தீவிர பக்தையான அன்னலட்சுமி எப்படியாவது அவரைச் சந்தித்து அருளாசி பெற விரும்பினார். சுவாமிக்கு ஊரில் பல ஏஜண்டுகள்_முகவர்கள் இருந்தனர். அவர்களில் சிலரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடிகளாரைச் சந்திக்கும் வாய்ப்பு பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும், கோயில்கள் திறக்கப்பட்டால்தான் அவரைச் சந்திக்க முடியும் என்ற நிலையே காணப்பட்டது.

இணைய வழி வகுப்புகள் பள்ளிகளில் தொடங்கப்பட்டு விட்ட நிலையில் அபிநயா பாடங்களில் மூழ்கத் தொடங்கினாள். அவள் பள்ளியில் காலை மாலை இருவேளைகளிலும் தொடர்ந்து வகுப்புகள் இணைய வழியாக நடத்தப்பட்டன. தொடர்ந்து அவள் பாடங்களைக் கவனித்து வந்ததால் கண்களில் வலி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தலைவலி போன்ற உடல் தொந்தரவும் அவளுக்கு ஏற்பட்டது. இருப்பினும் படிப்பின்மீது உள்ள ஆர்வத்தினால் அவள் தொடர்ந்து உடல் தொல்லைகளையும் தாங்கிக் கொண்டு இணைய வழிக் கல்வியைத் தொடர்ந்தாள்.

இதற்கிடையில் ஒரு நாள் திடீரென தொலைக்காட்சியில் ஓர் அறிவிப்பு வந்தது. அதாவது பள்ளிகள் திறக்கப்படும் எனவும், விருப்பப்பட்ட பெற்றோர்கள் தங்கள் பொறுப்பில் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பலாம் எனவும் கூறப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் கோயில்களும் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட அம்மாவும், மகளும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், மூர்த்திக்கு மட்டும் இவை எதுவுமே பிடிக்கவில்லை. நோய்த் தொற்று அடங்காத நிலையில் பள்ளிகளையும் கோயில்களையும் திறப்பதை எண்ணி வருந்தினார்.

மூர்த்தி வருந்தியதைப் போலவே பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வந்த மறுநாளே பள்ளிகள் திறக்கப்படும் என்கிற அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக  வந்தது. சம்பந்தப்பட்டவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா என எண்ணினார் மூர்த்தி. ஆனாலும் கோயில்கள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு மட்டும் இரத்து செய்யப்படவில்லை. இதை எண்ணி அவர் மிகவும் வருந்தினார். சில மாதங்கள் கோயில்களில் பெரும் இரைச்சலுடன் ஒலி பெருக்கி வைத்துச் செய்யப்படும் கீழ்த்தரமான செயல்கள் இல்லாமல் இருந்தது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும், சாலையில் பூசணி, தேங்காய் போன்ற பொருள்களை உடைத்து நாசம் செய்யாமலும் இருந்த நிலை சில மாதங்கள் நீடித்தது. இந்த நிலையை மூர்த்தி மிகவும் வரவேற்றார். இது தொடர வேண்டும் எனவும் விரும்பினார். ஆனாலும் கோயில்கள் திறக்கப்படும் என்கிற அறிவிப்பு அவருக்கு மிகவும் எரிச்சலைக் கொடுத்தது.

ஆனால், அன்னலட்சுமியின் நிலைமையே வேறு. கோயில்கள் திறக்கப்படும் என்கிற அறிவிப்பு அவரை மகிழ்ச்சியில திளைக்க வைத்தது. உடனே தனது ஆன்மிக குருவான அன்பானந்த சுவாமிகளைப் பார்க்க வேண்டுமென முடிவு செய்தார். ஆனால், இதுபற்றி அறிந்த மூர்த்தி அவரது முடிவைத் தடுக்க நினைத்தார். இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

“நீ அந்த சாமியாரைப் பார்க்க நூறு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துதான் ஆக வேண்டுமா? கொரோனா தொற்று நாட்டில் தீர்ந்த பாடில்லை என்பது உனக்குத் தெரியாதா?’’ என்று கேட்டார் மூர்த்தி.

“பஸ்சும் காரும் ஓடலாம்’னு அரசாங்கம் சொல்லிடுச்சு. பஸ் சுவாமிகள் இருக்கும் ஊர் வழியாகவும் போகுது. நான் எனக்காகவா சுவாமிகளைப் பார்க்கப் போறேன்! நம்ம புள்ள நல்லாயிருக்கணும். அதுக்கு அருள் வாக்கு கேட்டு ஆசீர்வாதம் பிரசாதம் வாங்கி வரத்தானே போறேன். அதைத் தடுக்காதீங்க’’ என்று கேட்டுக் கொண்டார் அன்னலட்சுமி.

அன்பானந்தா சுவாமிகளுக்கு கொரோனாவால் கூட்டம் குறைந்ததால் பல மாதங்களாக வருமானம் இல்லாமல் இருந்தார். இப்போது கோயில்கள் திறக்கப்பட்டு விட்டதால் அவர் தனது ஏஜண்டுகளை உசுப்பி விட்டு விட்டார். பல்வேறு ஊர்களில் இருக்கும் ஏஜண்டுகளிடம் ஒவ்வொரு ஊரிலிருந்தும் குறிப்பிட்ட நாள்களில் பக்தர்களை அழைத்து வரவேண்டும் என்பது சாமியாரின் கட்டளை.

அன்னலட்சுமி வசிக்கும் பகுதியில் இருந்த ஒரு ஏஜண்ட் சாமியாரின் கோயிலுக்குச் செல்ல சிற்றுந்து ஒன்றை ஏற்பாடு செய்து, செல்லும் நாளையும் தீர்மானம் செய்துவிட்டார். அன்னலட்சுமியும் அந்தச் சிற்றுந்தில் சென்றுவர முடிவு செய்துவிட்டார்.

சில நாள்களாக கொரோனா பற்றி நன்கு அறிந்து வைத்திருந்த அபிநயாவுக்கும் அம்மாவின் நடவடிக்கை கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. அப்பாவுடன் சேர்ந்து கொண்டு அம்மாவின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தாள்.

“அம்மா! நான் பள்ளிக்கூடம் திறக்கலையேன்னு கவலைப்பட்டுகிட்டு இருக்கேன். வெளியே போறது தப்புன்னு எல்லோருமே சொல்றாங்க. ஆனா, நீயோ கோயிலுக்குப் போறதா சொல்றீயே! இது நியாயமா? கோயிலுக்குப் பதிலா பள்ளிகளைத் திறந்திருக்கலாம். சாமியாரைப் பார்த்தா மட்டும் கொரோனா வராதா?’’ என்று கேட்டு அம்மாவிடம் வாக்குவாதம் செய்தாள்.

“அபிநயா, முக்கியமா உன்னோட நன்மைக்காகத்தான் சுவாமிகளை தரிசிக்கப் போறேன். அவரிடம் குறை கேட்கவும் செய்வேன். அவரின் அருள் வாக்குப்படி நடந்தா கொரோனா மட்டுமல்ல, எந்த நோயும் நம்மை அண்டாது’’ என்றார் அம்மா.

யார் சொல்லியும் கேளாமல் ஒரு நாள் ஏஜண்ட் ஏற்பாடு செய்திருந்த சிற்றுந்தில் புறப்பட்டு சாமியாரைப் பார்க்கச் சென்றுவிட்டார்.

சாமியாரிடம் பெண்கள் கூட்டம் அலைமோதியது. தனிமனித இடைவெளியை யெல்லாம் யாரும் கடைபிடிக்கவில்லை. அன்னலட்சுமி சாமியாரிடமிருந்து பிரசாதங்களை வாங்கினார். கணிசமான தொகையை காணிக்கையாகச் செலுத்தி குறிகேட்டார். சாமியார் அன்னலட்சுமி தலையில் கைவைத்து ஆசி வழங்கி ஏதோ சொன்னார். பக்தி சிரத்தையுடன் அதைக் கேட்டுக் கொண்ட அன்னலட்சுமி அவர் காலில் விழுந்து வணங்கினார்.

அன்று இரவே பயணம் செய்து வீட்டிற்கு வந்தார் அன்னலட்சுமி.

மறுநாள் காலையில் எழுந்ததும் அபிநயாவுக்கு சாமியார் கொடுத்த பிரசாதங்களைக் கொடுத்தார். அவளது நெற்றியில் விபூதி, குங்குமம் ஆகியவற்றை இட்டார். மூர்த்திக்கும் அவற்றைக் கொடுக்க முற்பட்டபோது அவர் அதை வாங்காமல் நழுவிவிட்டார்.

அன்று மதியம் தொலைக்காட்சியில் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தபோது சொல்லப்பட்ட ஒரு செய்தியைக் கேட்டு மூவருமே அதிர்ந்தனர்.

அன்பானந்த சுவாமிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடும் சுரத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அன்றையநாளில் அவரைச் சந்தித்தவர்கள் விவரம் சேகரிக்கப்படுவதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

அதிர்ச்சியடைந்த அன்னலட்சுமி கதறி அழுதபடி அபிநயாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார். மூர்த்தியும் பின்தொடர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *