அய்யாவின் அடிச்சுவட்டில் …. : இயக்க வரலாறான தன் வரலாறு(255)

நவம்பர் 01-15, 2020

 அடுத்து தமிழனாகப் பிறக்கவே விரும்புகிறேன் – வி.பி.சிங்

கி.வீரமணி

1.10.1994 திராவிடர் கழகத்தின் பொன்விழா மாநாட்டின் இரண்டாம் நாள் காலை 9:00 மணியளவில் கழகத் தோழர்கள் பெரியார் திடல் நோக்கி வரத் துவங்கினர். முதல் நிகழ்வாக பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நடந்த உரையரங்கில் சிறப்பு அழைப்பாளர்கள் ஏ.கே.ஏ.அப்துல் சமது (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர்), நீதியரசர் ஜஸ்டிஸ் பெ.வேணுகோபால், உயர்திரு கவுது லட்சண்ணா (ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர்), எம்.கோபிநாத் (தொல்குடிகள் சங்கம், பெங்களூர்), பழ.நெடுமாறன் (தமிழர் தேசிய இயக்கம்), கா.ஜெகவீரபாண்டியன் (தமிழ்நாடு ஜனதா தளம்), தெ.நாகேந்திரன் (இந்திய யாதவர் மகாசபை), டாக்டர் வீ.இராமகிருஷ்ணன் (தேவர் பேரவை), சா.சுப்பிரமணியம் (இந்திய வன்னியர் சங்கம்), சு.அறிவுக்கரசு, ஜே.கமலக்கண்ணன் (இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க கூட்டமைப்பு) மற்றும் ஏராளமான அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். அதில் திராவிடர் கழகம் ஆரம்பம் முதல் மக்களுக்கு செய்துவந்த பல்வேறு நன்மைகளைப் பட்டியலிட்டு எடுத்துக் கூறினார்கள்.

மாலை 3:00 மணியளவில் ‘தினத்தந்தி’ நிறுவனத்திற்கு எதிரே உள்ள சாலையில் சமூகநீதிக் காவலர் உயர்திரு வி.பி.சிங் அவர்கள், கழக மகளிரே முயற்சி எடுத்து நிறுவிய அன்னை மணியம்மையார் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார்.

திராவிடர் கழகப் பொன்விழா மாநாட்டில் அன்னை மணியம்மையார் அவர்களின் சிலையை திறந்து வைத்திடும்  திரு.வி.பி.சிங், சத்திரஜித் யாதவ், ஆசிரியருடன் கழகப் பொறுப்பாளர்கள்

பின்னர், மாநில இளைஞரணிச் செயலாளர்கள் இரா.குணசேகரன், துரை.சந்திரசேகரன் தலைமையில் மாபெரும் பேரணி புறப்பட்டது. அந்தப் பேரணி பெரியார் திடலில் துவங்கி தியாகராயர் சாலை வழியாகச் சென்று பானகல் பூங்காவில் நிறைவுற்றது. அங்கு திராவிடர் கழகப் பொன்விழா மாநாட்டு நிறைவு விழாவாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்கு சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு  பொன்னாடை போர்த்தி, நான் பேசுகையில், “இது வழக்கமான பொன்னாடை அல்ல; தந்தை பெரியார் அவர்களுக்கு போர்த்தப்பட்ட – நாங்கள் பாதுகாத்து வைத்திருந்த பொன்னாடை’’ என்று அறிவித்தேன். பின்னர் வி.பி.சிங் அவர்கள் சிறப்புரையாற்றுகையில், “சகோதரர் வீரமணியவர்கள் மனம் நெகிழும் வண்ணம் எனக்குத் தனிப்பட்ட ஒரு பெருமை செய்தார்கள். பொன்னாடை போர்த்தினாரே, அது தந்தை பெரியாருக்குப் போர்த்திய ஆடை என எனக்கு கூறினார்கள். இந்தத் தகவல் எனது உள்ளத்தை ஆழமாகத் தொடுகிறது. இந்தப் பொன்னாடையை நான் பெற்ற செல்வங்களில் எல்லாம் பெருஞ்செல்வம் ஆக எண்ணிப் போற்றிப் பாதுகாப்பேன். நான் வகித்த இந்தியப் பிரதமர் எனும் பதவியை விட எனக்கு இங்கு செய்யப்பட்ட இந்தச் சிறப்புத்தான் உயர்ந்ததாகக் கருதுகிறேன். (உடனே, அதைப் பத்திரப்படுத்தி எடுத்து வைக்குமாறு தமது உதவியாளரிடம் மேடையில் இருந்தபடியே கூறினார்). இந்தச் சிறப்பை நான் பெரிதாக மதிக்கிறேன், என உணர்சசி ததும்ப குறிப்பிட்ட பிறகே தனது உரையைத் தொடங்கினார்.

பொன்விழா மாநாட்டில் சிறப்புரையாற்றும் திரு.வி.பி.சிங்கும், அதனை மொழி பெயர்த்து தமிழில் கூறும் கு.வெ.கி.ஆசான்

“நண்பர் அப்துல் சமது அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள். தந்தை பெரியாரும் அவரும் காவிரி நதிக்கரையில் பிறந்தவர்கள். நானும் சந்திரஜித் யாதவ் அவர்களும் கங்கை _ யமுனை நதிக்கரையில் பிறந்தவர்கள். இந்த இரு பகுதி மக்களையும் பெரியாரின் சமூக நீதிக் கொள்கை இணைக்கிறது என்று சொன்னார். உண்மை! அதே நேரத்தில் எனது உள்ளத்தில் தோன்றும் ஓர் உணர்வையும் வெளிப்படுத்த விரும்புகிறேன். இந்தப் பிறவியில் நான் உத்தரப்பிரதேசத்தில் பிறந்த இந்திக்காரனாக இருக்கிறேன். இன்னொரு பிறவி என்பது இருக்கும் எனில், அப்பொழுது நான் தமிழ் மண்ணில் தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன. நான் ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு வரும்போதும் எனக்கு உற்சாகமான வரவேற்பைத் தருகிறீர்கள்.

மேடையில் ஆசிரியரோடு உரையாடும் திரு.வி.பி.சிங் அவர்கள்

நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்; இன்றைக்கு இந்தியா முழுவதும் எங்கு சென்றாலும் சமூகநீதிக் கொள்கையும், இடஒதுக்கீடும் தேவையானவை, நியாயமானவை என மக்களிடம் நம்பிக்கையோடு சொல்ல முடிகிறது. ஆனால், பாபர் மசூதியை இடித்தது நியாயம் என மனம் கோணாமல் மக்களிடம் யாரேனும் சொல்ல முடிகிறதா? இஃது எதைக் காட்டுகிறது. நான் சொன்னதும், செய்ததும் சரியானவை என்பதைத்தானே! கொள்கைப் பற்றும், அதற்கான இழப்புகளை ஏற்றுக்கொள்ளுவதும், ஏதேனும் ஒரு காலத்தில் வெற்றியைத் தரவே செய்கின்றன.

மாநாட்டு நிறைவு விழா கூட்டத்திற்கு வந்திருந்த தொண்டர்களின் ஒரு பகுதியினர்

இன்று, மண்டல் பரிந்துரையை நடப்பிற்குக் கொண்டுவரச் செய்வதிலும், அறுபத்து ஒன்பது விழுக்காடு இடஒதுக்கீடு வேண்டும் என்று தமிழ்நாட்டுச் சட்டத்தை வெற்றி பெறச் செய்ததிலும், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி அவர்களும், கழகத்தைச் சேர்ந்த வீரர்களாகிய நீங்களும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் உண்மையாகவும் போராடியுள்ளீர்கள். உங்களுடைய தன்னலமற்ற கடுமையான உழைப்பின் காரணமாக, சமூகநீதியைப் பொறுத்தவரை வீரமணி அவர்கள் மீதும் உங்கள் இயக்கத்தின் மீதும் இந்திய நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை பிறந்திருக்கிறது.

திரு.வி.பி.சிங் அவர்களுக்கு நினைவுப் பரிசைக் கொடுத்ததும் அதனை உயர்த்திக் காட்டி மகிழ்ந்தார். உடன் ஆசிரியரும் சிறப்பு அழைப்பாளர்களும் உள்ளனர்.

இந்த நாட்டில் நிலவும் ஜாதி முறை மனிதப் பண்பை அழித்து விடுகிறது. அவர்களைச் சுயமரியாதையும், தன்னம்பிக்கையும் அற்றவர்களாகத் தாழ்த்தி விடுகிறது. இந்த நிலையை மாற்றியவர்தான் தந்தை பெரியார்! மனிதர்களுக்கு விழிப்புணர்ச்சி உண்டாக்கி, சுயமரியாதை உணர்வை ஊட்டினார். அதனால் அவர்களுக்கு உரிமையைப் பெற வேண்டும் எனும் எண்ணம் ஏற்பட்டது. அதனால் சமூக நீதிக் கொள்கை உருவாகி வலிமை பெற்றுள்ளது. அது தமிழ்நாட்டில் பெரிய அளவில் வெற்றி பெற்று இந்தியாவின் பிற இடங்களிலும் செல்வாக்குப் பெறத் தொடங்கியுள்ளது.

அன்னை மணியம்மையாரின் சிலையை மாலை திறந்து வைத்தேன். தந்தை பெரியார் நலமுடன் நீண்ட காலம் வாழப் பணியாற்றியவர் அன்னை மணியம்மையார் ஆவார். அத்துடன் அவருடைய தன்னலமற்ற உழைப்பையும், சொந்த செல்வத்தையும் கல்விப் பணிக்கு தாராளமாக அளித்தவர்.

சமூகநீதிக்காக இளைஞர்களை முன்னிறுத்தி _ மக்கள் இயக்கத்தைத் துவக்குவோம். இரண்டாம் கட்டமாக உரிமைகளுக்குத் தொடர்ந்து போராடுவோம். கி.வீரமணி அவர்களும், உங்கள் இயக்கமும் நல்கிய பேராதரவை நான் என்றும் மறக்க முடியாது’’ என உணர்ச்சி பொங்க பல கருத்துகளை தனது உரையில் கூறினார்.

அந்த மாநாட்டில் எனது உரையில், “தந்தை பெரியாரை முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குள்ளே அழைத்துப் போனவர்கள் நீங்கள் என்கிற உணர்வை ஏற்கெனவே நாங்கள் பெற்றிருக்கிறோம். மிகுந்த நன்றியுணர்ச்சியோடு நாங்கள் பெற்றிருக்கிறோம். ஆகவேதான் நாம் 2ஆம் கட்ட போராட்டத்துக்குப் போய்ச் சேர வேண்டியவர்களாக இருக்கிறோம். எனவே, இந்த இரண்டாம் கட்ட தீர்மானம் என்பது மிக முக்கியம். ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு கிடையாது. ‘சிணீக்ஷீக்ஷீஹ் திஷீக்ஷீஷ்ணீக்ஷீபீ’ கிடையாது என்ற தீர்ப்பெழுதி இருக்கிறார்களே, அதை எதிர்த்து இந்தியாவே கிடுகிடுக்கக்கூடிய ஒரு மாபெரும் போராட்டத்தை இரண்டாம் கட்ட திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்தாக வேண்டும். தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்ற மிகத் தீவிரமான உணர்வுகள் வந்தாக வேண்டும்’’ என சமூக நீதிக் கருத்துகளை எடுத்துரைத்து அந்த மாநாட்டில் உரையாற்றினேன். வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் திரு.சீதாராம் கேசரி, சந்திரஜித் யாதவ், அப்துல் சமது ஆகியோரும் சிறப்புரையாற்றி மாநாட்டிற்குப் பெருமை சேர்த்தனர்.

அமெரிக்கா செல்லும் ஆசிரியரை அகமகிழ்ந்து வழியனுப்பும் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் நண்பர்கள்

6.10.1994 கழகப் பொன்விழா மாநாட்டை சிறப்பாகவும், பெருமையோடும் நடத்திக் கொடுத்த கழகத் தோழர்கள், பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டோம். அதில், “வடநாட்டில் அய்யாவின் அரிய சமூகநீதிக் கொள்கை பரப்பும் பணியில் ஒரு வரலாற்றுத் திருப்பமாக பொன்விழா மாநாடு இருக்கும். சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்களும், சந்திரஜித் அவர்களும், கவுது லட்சண்ணா போன்ற பிற மாநில முதுபெரும் தலைவர்களும் நமது கழகக் குடும்பங்கள் காட்டிய கொள்கை உணர்வுகளைக் கண்டு பிரமித்துப் போனார்கள்! அவர்கள் உங்களைப் புகழ்ந்தது கேட்டு எனது கண்களில் மகிழ்ச்சிக் கண்ணீர் வெள்ளமென வழிந்தது! கழகப் பொன்விழா மாநாட்டினை சிறப்புற நடத்திக் கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி!’’ என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.

8.10.1994 மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கப் பயணம் மேற்கொள்ள இருந்ததால் இயக்கத் தோழர்கள் அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் திட்டங்களையும் அறிக்கையில் தெரிவித்திருந்தேன். அதில், “நமது சூத்திரப்பட்டம் ஒழிய வேண்டும். இளைஞர் அணியினர் இதனை முதல் பணியாக மேற்கொள்ள வேண்டும், பார்ப்பனிய பிரச்சாரத்தை முறியடிக்க வீதி நாடகங்கள், மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சிகளின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தலைமை நிலையச் செயலாளர்கள் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆனூர் ஜெகதீசன் ஆகியோர் தலைமையில் பிரச்சாரத் திட்டம் வகுத்துச் செயல்படுத்த வேண்டும். மகளிரணியினர் வட்டார மாநாடுகளை நடத்த ஆயத்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும், மாணவரணியினர் பல முக்கிய ஊர்களில் மாணவரணி உருவாக்க வேண்டும், மேலும் விவசாய அணியினர், மாநில பகுத்தறிவாளர் கழகம் செய்ய வேண்டிய பணிகளை எடுத்துக் கூறியிருந்தேன். இன்று ‘மின்னணு கருவி’ (திணீஜ்) மூலம் எந்தச் செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து விடை தரும் வாய்ப்பு ஏற்பட்டு விட்டது. எனவே, தொடர்புகள் ஒருபோதும் ‘இற்றுப்’ போகாது; அங்கிருந்தே அடிக்கடி அறிக்கைகள் வாயிலாக உங்களுடன் தொடர்புடன் இருப்பேன். போய் வருகிறேன்; நீங்களும் ஆயத்தமாகுங்கள் – பிரச்சாரக் களத்திற்கு! வெற்றி நமதே! வாழ்க பெரியார்! என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.

9.10.1994 மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லும் எனக்கு கழகத் தோழர்கள் ஏராளமானோர் விமான நிலையம் வந்து வழி அனுப்பினர். இரவு 9:00 மணியளவில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட இருக்கையில், கழகத் தோழர்கள் சால்வைகளையும், கைத்தறி ஆடைகளையும் அணிவித்தனர். கவிஞர் கலி.பூங்குன்றன்  சென்னை மாவட்டத் தலைவர்கள், நண்பர்கள், கழகப் பொறுப்பாளர்கள், தஞ்சை பெரியார் கல்வி நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் என பெருந்திரளான தோழர்கள் கூடி என்னை வழி அனுப்பி வைத்தனர். என்னுடன் என் வாழ்விணையரும் அமெரிக்காவிற்கு வந்தார்.

கோ.சவுரிராசலு

21.10.1994 அன்று திராவிடர் கழகப் பெருவீரரும், சுயமரியாதை இயக்கச் செம்மலுமான கோ.சவுரிராசலு மறைவுற்றார் என்ற செய்தியை அறிந்து பெரிதும் வருத்தமுற்றேன். 1931ஆம் ஆண்டிலேயே நன்னிலத்தில் தம்மால் கூட்டப்பட்ட சுயமரியாதை மாநாட்டு மேடையில் பக்தர்கள் அஞ்சி நடுநடுங்கும் ராகுகால நேரத்தில் திருமணம் செய்து காட்டி முன்மாதிரியாக விளங்கியவர். இந்த மாநாட்டில்தான் முதன்முதலாக இந்தி எதிர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தந்தை பெரியார் சொல்ல அந்தத் தீர்மானத்தை தன் கைப்பட எழுதியவர் சவுரிராசலு ஆவார்.

நன்னிலம் வட்ட கழகத் தலைவராகவும், நகரத் தலைவராகவும் பொறுப்பேற்று அரும் பணியாற்றியவர். கடைசி வரை தலைதாழாச் சுயமரியாதைச் செம்மலாக வாழ்ந்தவர் என அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் செய்தியை அனுப்பினேன்.

29.10.1994 அன்று அமெரிக்காவில் செயின்ட் லூயிசில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவும், திராவிடர் கழகப் பொன்விழாவும் ஒன்றாக கொண்டாடப்பட்டன. அவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டேன். விழாவிற்கு தலைமை தாங்கிய டாக்டர் தேவ் நேச்வில் டென்னசி பேசுகையில் “தாம் தமிழகத்திற்கு வந்தபொழுது 69 சதவிகித இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து அடைய முடியாத ஒன்று என்று அங்குள்ளோர் அனைவரும் சொன்னார்கள். ஆனால், அதை முறியடித்து அதை அடைந்து காட்டியதற்காக உங்களைப் பாராட்டுகிறேன்’’ என்று நன்றியுணர்ச்சியுடன் கூறினார். செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் டாக்டர் அரசு செல்லையா அவர்கள், திராவிடர் கழகத்தின் தொண்டைப் பாராட்டி எடுத்துரைத்தார். அங்கு சிறப்புரையாற்றுகையில், “மற்றவர்கள் என்னைப் பெருமைப்படுத்தி, பொது வாழ்க்கையில் ஈடுபடாவிட்டால் எங்கோ சென்றிருப்பார்” என்றார்கள். நான் எங்கும் சென்றிருக்க மாட்டேன். நான் உச்சநீதிமன்ற வழக்கறிஞராகி இருக்கலாம். பணம் சம்பாதித்திருக்கலாம். ஆனால், வேறு எதிலும் பெறமுடியாத உண்மையான மனநிறைவை, மகிழ்ச்சியைப் பெரியார் தொண்டனாக இருப்பதில் பெறுகிறேன்’’ என எடுத்து கூறினேன்.

மாலையில் “என்னை செல்ல மகனாக நினைக்கும் ஆல்டன் “மாம்’’ வர்ஜினியா கர்சனர் அவர்களின் 79ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தமிழர்கள் சார்பில் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தேன்.’’ அவரிடம் தந்தை பெரியார் ஆற்றிய தொண்டினையும் கழகம் ஆற்றிவரும் கல்விப் பணிகளையும் விளக்கிக் கூறினேன்.

அன்னை திருமதி.வர்ஜினியா கர்சனர்

3.11.1994 தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு ஜி.எச்.கோதண்டராம் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் துயரமும், அதிர்ச்சியும் அடைந்தேன். கடைசியாக நமது கழகப் பொன்விழா மாநாட்டில் சந்தித்தேன். அவரது குடும்பம் நீதிக்கட்சி – சுயமரியாதை இயக்கக் காலந்தொட்டு தந்தை பெரியார் வழிநின்ற – நிற்கும் குடும்பம் ஆகும். அவரது குடும்பத்தாருக்கும், துணைவியார், குழந்தைகளுக்கு ஆறுதல் தெரிவித்து, இரங்கல் செய்தி வெளியிட்டு, அவருக்கு கருஞ்சட்டை வீரர்கள் வீரவணக்கம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டோம்.

அமெரிக்க சிகாகோ நகரில் பெரியார் பன்னாட்டு மய்யம் துவக்க விழா நிகழ்வில் ஆசிரியருக்கு சிறப்புச் செய்யும் விழாக் குழுவினர்கள்

13.11.1994 அன்று அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநில தலைநகரான ராலே நகரில், கரோலினா தமிழ்ச் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது, கருத்தரங்கம் ஏற்பாடு செய்திருந்தனர். தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் தணிசேரன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி கழகத்தின் பணிகளை எடுத்துக் கூறினார். அங்கு “பெண்ணுரிமை’’ என்னும் தலைப்பில் உரையாற்றுகையில், “வளர்ந்த நாடுகளில் கூட இன்றும் ஆண் ஆதிக்கம்தான் நிலவுகின்றது. முழுமையான பெண்ணுரிமை பெற்ற சமுதாயத்தினால்தான் மனிதநேயத்தை வளர்க்க முடியும். மனிதநேயத்தை வளர்ப்பதுதான் பெண்கள் உரிமை பெறுவதற்கு ஏற்ற வழி’’ என்பதை விளக்கி உரையாற்றினேன்.

சிகாகோ இந்தியத் தூதர் சின்காவுக்கு தந்தை பெரியார் புத்தகங்களை கொடுக்கும் ஆசிரியர் உடன் திரு.சந்திரஜித் யாதவ் அவர்கள்

13.11.1994 அன்று சிகாகோ நகரில் திரு.சந்திரஜித யாதவ், சிகாகோ இந்தியத் தூதரகத் தலைமைப் பொறுப்பாளர் மாண்புமிகு சின்கா முன்னிலையில் ‘பெரியார் பன்னாட்டு மய்யம்’ துவக்கப்பட்டது. அந்த துவக்க விழாவில் சிகாகோ இந்தியத் தூதர் சின்கா பேசுகையில் “அமெரிக்கர்கள் கேட்கும் “ஜாதி, மனிதாபிமான’’க் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது பூசி மெழுக வேண்டியிருக்கிறது. இனி பெரியார் மய்யம் அதற்கான பதிலை நேரிடையாகச் சொல்லும். ஆசிரியர் கி.வீரமணி, திரு.சந்திரஜித் இருவரின் பேச்சையும் கேட்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். “நன்றி எதிர்பார்க்காத இவர்களின் உழைப்புக்குத் தலை வணங்குகிறேன்’’ என்று உளமார வாழ்த்தினார்.

21.11.1994 காமராசர் மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர் டாக்டர் எஸ்.எஸ்.மாறன் மறைவுற்றார் என்னும் செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து மருத்துவராகி, இயக்கப் பணியையும் சேர்த்து ஆற்றிய செயல்மறவர் அவர்! அவரது துணைவியார் மறைந்து இரு மாதங்களே ஆவதற்குள் இப்படி ஒரு பேரிடியா? அவரது பிள்ளைகளுக்கு கழகம் உறுதுணையாக இருக்கும்! மறைந்த டாக்டரின் தொண்டுக்கு வீரவணக்கம் செலுத்தி குடும்பத்தாருக்கு இரங்கலைத் தெரிவித்தோம்.

எஸ்.எஸ்.மாறன்

14.12.1994 அன்று அருமை நண்பர் மூத்த வழக்கறிஞர் கணபதி (முன்னாள் தமிழக சட்டமன்ற துணைத் தலைவர்) மறைந்தார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சிக்குரிய வேதனையான துயரச் செய்தியாகும்.

சீரிய இன உணர்வாளர்; சிறந்த சட்டமேதை;  பாராட்டுதலுக்குரிய பண்பாளர்; எவரிடத்தும் இன்முகத்தோடு, இனிமையோடு பேசும் அருமை நண்பர்.

‘31-சி’ சட்டம் திராவிடர் கழகத்தால் உருவாக்கப்பட்டு, ஏற்கப்பட்டதை மிகுந்த மகிழ்ச்சியோடு பாராட்டி, பூரித்து, 1951இல் தந்தை பெரியார் செய்த சாதனையை 1994இல் நீங்கள் செய்தீர்கள் என்று வீடு தேடி வந்து நம்மைப் பாராட்டி ஊக்கப்படுத்திய பெரு உள்ளத்துக்குரிய மாமனிதர்.

அவரது பிரிவு, அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல; சட்டத் துறைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே ஒரு பெரும் இழப்பு ஆகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வழக்கறிஞர் நண்பர்களுக்கும், அனைவருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம் என அமெரிக்காவிலிருந்து இரங்கலைத் தெரிவித்தோம்.

எஸ்.சி.வெங்கடாசலம்

15.12.1994 அன்று சேலத்தில் நமது கழகத்தின் செயல் மறவராகத் திகழ்ந்த அருமைத் தோழர் மானமிகு எஸ்.சி.வெங்கடாசலம் மறைவு கேட்டு மிகவும் துன்பமும், துயரமும் அடைந்தேன்.

அவரது தந்தையார் அவர்களது காலத்திலிருந்தே அவரது குடும்பம் கழகக் குடும்பம். அவர் ‘மிசா’ காலத்தில் சிறையில் சங்கடப்பட்ட காலம் என்றாலும், பிறகு வெளியே  வந்ததும், கழகக் கடமையினைச் செய்வதில் என்றுமே பின்வாங்காத போர்வீரராகத் திகழ்ந்தார். தன் மனதில் தோன்றுவதை மறைக்காமல் எனக்கு எழுதும் ஓர் இனிய நண்பர்.

அவரது மறைவு கழகத்திற்கும், அவரது குடும்பத்தினருக்குள்ளது போலவே பெரும் இழப்பாகும். அவருக்கு நமது வீரவணக்கம். அவரது துணைவியார், பிள்ளைகள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை, ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என இரங்கல் செய்தி வெளியிட்டோம்.

16.12.1994 உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டிற்கு எதிராக ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. அதில் இடஒதுக்கீட்டை 50 விழுக்காடு அளவு தாழ்த்தியது. அந்த ஆணையை எரித்து, சாம்பலை மூட்டை மூட்டைகளாக நீதிபதிகளுக்கும், சென்னை கோட்டைக்கும் குவிக்குமாறு அறிக்கையில் கேட்டுக்கொண்டோம். மேலும், 69 சதவிகிதம் காப்பாற்றப்படுவது வெறும் பேச்சோடோ, எழுத்தோடோ இருக்கக் கூடாது; செயல் — எப்போதும் விழிப்பான செயல்மூலமே இருக்க வேண்டும். நம் அறிவு ஆசான் கூறியபடி ‘விலை’ கொடுக்க, தலை கொடுக்கவும் தயங்கோம் என்ற உணர்வோடு டிசம்பர்  30ஆம் தேதி களம் காணுங்கள். வெற்றி நமதே! என அறிக்கையில் கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் விடுத்தோம்.

கி.ஆ.பெ.விசுவநாதம்

19.12.1994 ‘முத்தமிழ்க் காவலர்’ என்று தமிழர்களால் அன்போடு அழைக்கப்படும் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள்  மறைவுற்றார் என்ற செய்தி தமிழ், தமிழுணர்வு, தமிழர் என்கிற இனவுணர்வு, தமிழர் பண்பாட்டு உணர்வு உள்ள அத்துணைப் பேர் நெஞ்சிலும் துக்கம் பீறிடும் துயரச் செய்தியாகும்.

நீதிக்கட்சியின் பொதுச்செயலாளராக, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முன்னணி வீரராக, நடமாடும் தமிழ்க் களஞ்சியமாக, தனித்தன்மை வாய்ந்த சொற்பொழிவாளராக, தமிழ்மொழிக்கு இடர்ப்பாடும் _ வளர்ச்சியில் தடையும் ஏற்படும் பொழுதெல்லாம் போர்க்குரல் கொடுக்கும் போராட்ட வீரராகப் பெருவாழ்வு வாழ்ந்தவர் முத்தமிழ்க் காவலர் ஆவார்.

அவருடைய பொது வாழ்வின் துவக்கக் காலம் _ தந்தை பெரியார் அவர்களோடும், நீதிக்கட்சியோடும் பின்னிப் பிணைந்த ஒன்றாகும்.

96ஆம் வயதிலும்கூட நல்ல உடல்நலத்தோடு, பொதுநலம் நாடி தேனீபோல் பணியாற்றிய பெரும் பண்பாளரை, தமிழறிஞரை, நிறைவாழ்வு வாழ்ந்த பெருமகனாரை நாடு இழந்துவிட்டது. அவரது அருந்தமிழ்த் தொண்டுக்கு திராவிடர் கழகம் வீரவணக்கத்தைச் செலுத்துகிறது!

அவரது பிரிவால் வருந்தும் அவரது குடும்பத்தினர்க்கும், தமிழ்த் தொண்டர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என இரங்கல் செய்தியை அமெரிக்காவிலிருந்து வெளியிட்டோம்.

21.12.1994 அன்று இந்திய உச்சநீதிமன்றம், சமூகநீதிக்குப் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டியதற்குப் பதிலாக வேலியே பயிரை மேய்ந்ததுபோல, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி,  மத்திய அரசு, நாடாளுமன்றம், அமைச்சரவை, குடியரசுத் தலைவர் அனைவராலும் ஒருங்கிணைந்த ஒப்புதலும் பெற்ற, 31(சி) சட்டம் அரசியல் சட்டத்தின் 26ஆவது திருத்தம் பற்றிக் கவனத்தில் கொள்ளாது மனம்போக்கில் இரண்டு நீதிபதிகள், “50 சதவிகித ஆணை பின்பற்றப்படுவது போல, இடங்கள் மருத்துவக் கல்லூரித் தேர்வுக்கு இருக்க வேண்டும்“ என்று பிறப்பித்த முறையற்ற சட்ட விரோத ஆணையைத் தமிழக அரசு குப்பைத் தொட்டியில் போடுவதற்குப் பதிலாக கோபுரத்தில் ஏற்றியதும் தவறு என்று சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த எதிர்ப்பைக் காட்ட ஆணை எரிப்புப் போரை நடத்திட கழகம் விடுத்த வேண்டுகோளை ஏற்று மிகவும் சிறப்பாகச் செயல்பட்ட அனைத்து அறப்போர் வீரர், வீராங்கனைகளுக்கும் எமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டேன்.

20ஆம் தேதி இரவு சென்னை தலைமை நிலையத்திலிருந்து துணைப் பொதுச் செயலாளர் மானமிகு சாமிதுரை, தலைமை நிலையச் செயலாளர்கள் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன், ஆனூர் ஜெகதீசன், கடலூரிலிருந்து மாநில இளைஞரணிச் செயலாளர் மானமிகு துரை. சந்திரசேகரன், சுயமரியாதைச் சுடரொளி எஸ்.எஸ்.சுப்பராயன் மருமகனார், மன்னார்குடியிலிருந்து தஞ்சை மாவட்டத் தலைவர் மானமிகு ஆர்.பி.சாரங்கன் ஆகியோர் மிகுந்த உற்சாகத்துடன் தொலைபேசியில் அமெரிக்காவில் இருந்த என்னிடம் அறப்போர் நடந்த முறை பற்றி பெருமிதத்துடன் விளக்கியதைக் கேட்டு பூரித்தேன். அமெரிக்கா வாழ் தமிழ் அன்பர்களிடமும் கூறி மகிழ்ந்தேன். அவர்களும் வியந்தனர்; மகிழ்ந்தனர்.

யார் எங்கே இருந்தாலும் நடக்க வேண்டிய பணிகள் நடந்தே தீரும் என்று காட்டிய உங்கள் அனைவருக்கும் உளப்பூர்வ நன்றி! நன்றி! என அமெரிக்காவிலிருந்து கழகத் தோழர்களுக்கு நன்றி கூறி அறிக்கை வெளியிட்டோம்.

கியானி ஜெயில்சிங்

25.12.1994 அன்று முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு கியானி ஜெயில்சிங் மறைவுச் செய்தியை அறிந்து மிகுந்த துயரம் அடைந்தோம். தந்தை பெரியார் கொள்கையிடத்திலும், தந்தை பெரியாரின் மீதும் அளவுகடந்த ஈடுபாடு கொண்டவர் ஜெயில்சிங்.

ஆசிரியரை அன்போடு அனைத்து மகிழும் கியானி ஜெயில்சிங்

15.9.1988 அன்று மாலை கிண்டி ஆளுநர் மாளிகையில் அவரை சந்தித்தேன். அவருக்குப் பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தேன். அவருக்கு ‘செயின்ட் ஆர் செக்டேரியன்’ என்ற காஞ்சி சங்கராச்சாரியார் பற்றிய அரிய ஆங்கில நூலையும் (சங்கராச்சாரியார் யார்?) வழங்கினேன். அப்போது கழகம் நடத்த இருக்கும் சமூகநீதி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு விடுத்த அன்பழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு, ‘இறுதி மூச்சு இருக்கும் வரை சமூக நீதிக்காக உழைப்பேன்!’ என்றார். அதுபோலவே செயல்பட்டார். ‘‘அரசியல், பதவிப் பக்கம் போகாமல் தந்தை பெரியார் வழியில் பாடுபடும் உங்களைப் பாராட்டுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன்” என என்னை நேரிடையாகப் பாராட்டி மகிழ்ந்தார். அவருக்கு கழகம் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “ஓர் எளிமையான கிராமத்துக் குடும்பத்தில் இருந்து இந்நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த கியானி ஜெயில் சிங் அவர்களின் மறைவு சமூகநீதித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் ஒரு பேரிழப்பு. சமூகநீதிக்குப் பேருதவியாக இருந்தவரும், தந்தை பெரியாரின் தத்துவங்களை ஏற்றுக்கொண்டவருமான ஜெயில்சிங் அவர்கள் நமது இயக்கத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாடு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு நல்ல நண்பரையும், நாடு ஒரு சிறந்த அரசியல் மேதையையும், ஒடுக்கப்பட்ட மக்கள் ஓர் ஊன்றுகோலையும் இழந்துவிட்டனர். அவரது குடும்பத்தாருக்குக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தோம்.

கே.பி.கந்தசாமி

29.12.1994 அன்று ‘தினகரன்’ நாளேட்டின் நிறுவனர் திரு. கே.பி.கந்தசாமி அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்; பத்திரிகை உலகம் தூண் ஒன்றை இழந்துவிட்டது.

உழைப்பால் படிப்படியாக முன்னேறியவர்; பத்திரிகை உலகில் ஆதித்தனாரை வழிகாட்டியாகக் கொண்டு, தமக்கென ஓரிடத்தை உறுதி செய்தவர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் ஒரு தலைசிறந்த நிருவாகி. அவரின் பிரிவால் வருந்தும் அவர்களின் குடும்பத்தினர்க்கும், “தினகரன்” நிறுவனத்தினருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் என கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக்கொண்டோம்.

(நினைவுகள் நீளூம்…..)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *