கோ.கருணாநிதி பொதுச் செயலாளர்,
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர்
நலச் சங்கங்களின் கூட்டமைப்பு
நமது அரசமைப்புச் சட்டம் குடிமக்களிடையே ‘சமத்துவத்தை’ வலியுறுத்துகிறது.
ஜாதிகளால் ஆன நமது சமூகத்தில் அனைத்து ஜாதியினருக்கும் நீதி வழங்குவதுதானே சமத்துவத்திற்கான பாதையாக இருக்க முடியும்?
அதனால்தான் சமூகநீதி என்று சங்கநாதம் எழுப்பினார் தந்தை பெரியார். அதை எப்படி அடைய முடியும்? கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம்தானே?
அதற்காகப் பல போராட்டங்கள் நடத்தினார் பெரியார். ஒரு கட்டத்தில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்திட நமது அரசமைப்புச் சட்டத்தில் அது இடம்பெறப் போராடினார்; வெற்றி பெற்றார்!
அதனைத் தொடர்ந்து, காலந்தோறும் மக்கள் தொகை பெருகிவரும் நிலையில், 2021ஆம் ஆண்டு எடுக்கப்படவுள்ள “மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரியாக இவ்வளவு பேர் என்று கணக்கெடுத்து, அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வலியுறுத்தி வருகிறார். இதுகுறித்து அக்டோபர் 19ஆம் தேதி திராவிடர் கழகத்தின் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில்
2021 – சென்சஸின்போது ஜாதி வாரியாகவும், சமூக, பொருளாதார நிலவரங்களையும் உள்ளடக்கிய சென்சஸை எடுக்கவேண்டும் என்றும், ஜாதி சட்டப்படியாக ஒழிக்கப்படாத நிலையில், இத்தகு சென்சஸ் தேவை அவசியமே என்று வலியுறுத்தியும், அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் இதனை வலியுறுத்தவேண்டும் என்றும், தமிழ்நாடு அரசும் இதில் முந்துற வேண்டும் என்றும் வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கை வருமாறு:
உச்சநீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொதுநல வழக்கு – வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு, சென்சஸ் -2021 இல், இந்திய நாட்டு குடிமக்களின் ஜாதி வாரியாகவும், சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மக்கள் தொகை எப்படி உள்ளது என்பதை அறிந்து இட ஒதுக்கீடுகள் அளிப்பதற்கு ஏற்ப அந்த மக்கள் தொகை புள்ளி விவரங்கள் பயனுள்ளதாக அமையக்கூடும் என்பதால், மத்திய அரசு வருகின்ற மக்கள் தொகை கணக்கெடுப்பில் அந்த முறையை அவசியம் கடைப்பிடிக்க வேண்டுமென்று ஆணையிட, அந்தப் பொதுநல வழக்கு கோரிக்கையை முன்வைத்துள்ளது.
மத்திய அரசின் உள்துறைக்கு உச்சநீதிமன்றம், நோட்டீஸ்
இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், அதன் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் உள்துறைக்கு “இதுபற்றி பரிசீலிக்கலாம்; இது நல்ல யோசனை – கோரிக்கைதான்” என்ற கருத்துக் கூறி, “நோட்டீஸ்’’ அனுப்ப ஆணையிட்டிருக்கிறது.
இது ஒரு நல்ல செய்தியாகும்; நாம் பல ஆண்டுகளாக வற்புறுத்தி வருகிறோம்; நாட்டில் உள்ள பல்வேறு சமூகநீதி கோரும் பல சமூக அமைப்புகளும், சமூக விஞ்ஞான உணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தவே செய்கின்றனர்!
உடனே ஒரு சிலர், குறிப்பாக வெகு
சிறுபான்மையராகவும், ஆதிக்கவாதிகளாக கல்வி, உத்தியோக மண்டலங்களில்
ஏகபோக ராஜ்ய பரிபாலனகர்த்தாக்களாகவும் உள்ளவர்கள் ஒரு பொய் அழுகை, போலிக் கூப்பாடு போடுவார்கள்.
நம்மில் புரியாத சிலரும் நுனிப்புல்லர்களும் “கோரஸ்” பாடுவார்கள்
“அய்யோ, ஜாதி பற்றியா பேசுவது? ஜாதியை இதில் கேட்டால் ஜாதி உணர்வுக்கு இடம் அளிப்பது பிற்போக்குத்தனமல்லவா’ என்று ‘புஸ்வாணம்‘ விடுவார்கள்- அந்தப் பொல்லாங்கு மனிதர்கள்!
நம்மில் புரியாத சிலரும்கூட – நுனிப்புல்லர்கள் – ஆமாம்; இந்தக் காலத்தில் ஜாதியைக் கேட்டுப் புதுப்பிக்க வேண்டுமா?’ என்று ‘கோரஸ்’ பாடுவார்கள்.
ஜாதி ஒழிந்துவிட்டது என்று இந்தியாவில் எங்காவது, எந்த சட்டத்திலாவது இருக்கிறதா?
அவர்களுக்கு ஒரே ஒரு நேரடிக் கேள்வி
நாட்டில் ஜாதி இருக்கிறதா? இல்லையா?
நாட்டில் ஜாதி ஒழிந்துவிட்டதா?
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ‘ஜாதி’ என்ற சொல் 18 இடங்களில் வருகிறதா? இல்லையா?
ஜாதி ஒழிந்துவிட்டது என்று இந்தியாவில் எங்காவது, எந்த சட்டத்திலாவது இருக்கிறதா? இடம் பெற்றிருக்கிறதா?
12,000 ஆண்டுகளுக்கு முன் இந்திய கலாச்சாரம்பற்றி ஆய்வு செய்யவேண்டும் என்று முனையும் மத்திய அரசின் கலாச்சாரத் துறை அமைச்சகம் அமைத்த குழுவில், ஜாதி சங்க உலகத் தலைவரான – இருவரை பகிரங்க அங்கீகாரம் தந்து நியமித்துள்ளது. (ஒருவர் டில்லி; இன்னொருவர் கனடா நாட்டு பிராமணர்’ சங்கத் தலைவராம்!)
யாருக்காவது ஆட்சேபணை உள்ளதா?
ஏடுகளில் மணமக்கள் தேவை! (Matrimonial Columns) விளம்பரங்களில் தனித்தனி ஜாதிக்கு ஏற்ப மணமகன், மணமகள் வரன்கள் தேவை’’ என்று கூச்சநாச்சமின்றி ஜாதிப் பெயரில் திருமண நிலையங்கள் இயங்குகின்றனவே – அதுபற்றி யாருக்காவது ஆட்சேபணை உள்ளதா?
இன்னமும் ஆவணி அவிட்டம், பூணூல் மாற்றும் – பண்டிகை — அதற்கு விடுமுறை போன்ற கூத்துகள் உள்ளனவே – அவை மாறிவிட்டனவா?
இன்னமும் ஜாதிப் பட்டத்தை அது ஏதோ படித்து உழைத்துப் பெற்ற பட்டம் போல்’ வெட்கமின்றி போட்டுத் திரிகிறார்களே, அவர்களை யாராவது தடுத்தது உண்டா?
எனவே, இப்படி மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரியாக ‘சென்சஸ்’ நடத்தினால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, முன்னேறிய ஜாதியினர் என்று பலரையும் கொண்ட சமுதாயத்தில் அவரவர் மக்கள் தொகை எண்ணிக்கை, இட ஒதுக்கீடு உள்பட பலவற்றுக்கும் பயன்படுமே!
அடிக்கொருதரம் மாறும் பொருளாதார கணக்கெடுப்பைவிட, ஒருமுறை பிறந்தால், என்ன செய்தாலும் சுடுகாட்டிலும்கூட மாற்றவே முடியாது என்ற நிலை உள்ள ஜாதியைக் கேட்டுக் குறிப்பதால் மட்டும்தான் ஜாதி நிலைத்துவிடுமா?
ஏன் இந்த “நெருப்புக்கோழி’’ மனப்பான்மை?
காலத்தின் கட்டாயம்; சமூகநீதிக்கான அளவுகோல்
எனவே மத்திய அரசு, உச்சநீதிமன்றமே வரவேற்றுள்ள இந்தக் கருத்தினை ஏற்கவேண்டியது நியாயம்; காலத்தின் கட்டாயம்¢; சமூகநீதிக்கான அளவுகோல் (Social Barometer) ஆகும்.
தாமதிக்காமல் இப்போதிருந்தே அதற்கான சமூகநீதி ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். நாட்டில் உள்ள அத்துணைக் கட்சிகளும், சமூக அமைப்புகளும் இதனை வலியுறுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தீர்மானங்கள் நிறைவேற்றிட வேண்டும்.
தமிழக அரசே, இதில் முயற்சிக்கவும், முந்துறவும் வேண்டும் – அவசரம், அவசியம் இது! என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், இந்திய ஒன்றிய அரசு இவ்விஷயத்தில் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று மகாராஷ்டிர சட்டமன்றத்தில் 2020 ஜனவரி 7ஆம் தேதியன்று ஒரு மனதாகத் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையருக்கு அனுப்பியது மகாராஷ்டிர அரசு.
அதற்கு பதிலளித்து மத்திய அரசின் பதிவுத்துறை பொதுமேலாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர், மஹாராஷ்டிர மாநில அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “ஜாதி வாரியான கணக்கெடுப்பு இப்போது வேண்டாம்; குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பில், உட்பிரிவு துணைப்பிரிவு, இன்ன குலப்பிரிவு, கோத்திரப் பிரிவு என்று சொல்லி அவர்கள், உச்சரிப்பு நிலையிலேயே பெரும் குழப்பத்தை உண்டு பண்ணி விடுவார்கள். அது கணக்கெடுப்பின் துல்லியத் தன்மையை பாதித்துவிடும் என்று முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
மூளை சொல்லாமல் முழங்கை நீளுமா என்ன! மத்திய அரசின் இந்த நிலைப்பாடு இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் வயிற்றில் நெருப்புக் கங்குகளை வாரிக் கொட்டுவதாக உள்ளது?
கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி உள்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டின் பின் பேசிய அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், 2021ஆம் ஆண்டு எடுக்கப்படவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பை எப்படியெப்படி மேற்கொள்வது என்று கூட்டத்தில் விவாதித்ததாகவும், அப்போது இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அளவைக் கணக்கிடும் வகையில் ஜாதிவாரியான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.
அடுத்து 23.1.2019இல்,
பிரிட்டிஷ் அரசு 1931ஆம் ஆண்டு நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பின் 2021ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள கணக்கெடுப்பை ஜாதிவாரியிலான கணக்கெடுப்பாக நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக பீகார் மாநில துணை முதல்வரும், நிதியமைச்சருமான பா.ஜ.க தலைவர் சுசில்குமார் மோடி, அக்கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் அறிவித்தார்.
இவ்வளவு நம்பிக்கை ஊட்டிய பின்னும், தற்போது மத்திய அரசு பின்வாங்குவது அதற்கு இருக்கும் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
இவர்களைத்தான் அறிஞர் அண்ணா, “பேச நா இரண்டுடையாய் போற்றி!’’ என்றாரோ?
பெயர், பாலினம், கல்வித் தகுதி, திருமணம் ஆனவரா, ஆகாதவரா, தொழில் முதலியவற்றைக் குறித்து பொதுக் கணக்கெடுப்பு எடுக்கிறபோது ஜாதி, அதன் உட்பிரிவு என ஒரு பிரிவு இருப்பதுவும், அதில் இன்னதென்று குறிப்பதுவும் அலுவலர்களுக்கு என்ன இடப்பிரச்னையை ஏற்படுத்தி விடப் போகிறது?
இல்லை, “மருத்துவப் படிப்புக்கான இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு விரோதமாக நடந்துகொண்டதுபோல், பொதுத்துறை வங்கிகளுக்கான அதிகாரிகள் தேர்வில் பிற்படுத்தப்பட்டோரின் இடங்களைப் பிடுங்கி, துரோகம் செய்ததுபோல் மத்திய அரசு எதிர்மறையான போக்கைக் கடைப்பிடிக்கிறதா?
இல்லை, ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால், அதில் பார்ப்பனர்களின் எண்ணிக்கையை உலகறிந்து விடுமே, அறிந்துவிட்டால், பார்ப்பன சமூகத்தினர் இப்போது, மத்திய, மாநில அரசுப் பணிகளில் இருப்புக்கு அதிகமாக அதிக இடங்கள் பெற்று வருவது, அம்பலமாகி விடுமே என்கிற அச்சத்தால் மறுக்கிறதா?
ஏற்கெனவே அகில இந்திய அளவில் 3 முதல் 5 விழுக்காடு மட்டுமே உள்ள பார்ப்பனர்களுக்கு, மேலும் கூடுதலாக ஏழை முற்பட்ட ஜாதியினர் என்ற சலுகைபோல் 10 விழுக்காடு ஏன் ஒதுக்கப்பட வேண்டும்? என்று மக்கள் போராட ஆரம்பித்துவிடுவார்களே என்கிற பயமா? என்ன செய்வது?
மனுநீதியும் சமூகநீதியும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்ய முடியாதே!
இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் வரும் போதெல்லாம், “மக்கள் தொகையில் எவ்வளவு பேர் இருக்கிறீர்கள் என்ற கணக்கு இருக்கிறதா” என்று திரும்பத்திரும்பக் கேட்கின்றன மாண்பமை நீதிமன்றங்கள். ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கு இல்லாத காரணத்தால் பல வழக்குகளில் சரியான முடிவுகள் எட்டப்படாமலே இருக்கின்றன.
1871 முதல் 1931 வரை ஒவ்வொரு பத்தாண்டிலும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எடுத்தது அன்றைய ஆங்கில அரசு. இரண்டாம் உலகப்போர் காலத்திலும்கூட 1941ஆம் ஆண்டு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுத்தது. அப்போதைய நிதிச் சூழல் காரணமாக அதைப் பட்டியலிட்டு நிறைவு செய்யமுடியாமல் போனது. எனவே, 80 ஆண்டுகளுக்குப் பின்னும் 1931ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலேயே இடஒதுக்கீடு பிரச்சினையை அணுக வேண்டியுள்ளது.
டிஜிட்டல் இந்தியாவில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்க வசதியில்லையா? பேப்பர், பேனா இல்லாமல் இம்முறை முழுக்க மொபைல் செயலி மூலம் எடுக்கப்படும் என்று சொல்லியிருந்தார் – உள்துறை அமைச்சர் அமித்ஷா.
இப்போது ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்றால் பின்வாங்கினது ஏன்?
மத்திய அரசுகள் இதுவரை அமைத்துள்ள காகா காலேல்கர் தலைமையிலான முதல் பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் நலக்குழுவும், பி.பி.மண்டல் தலைமையிலான இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக்குழுவும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கவேண்டும் என்பதைப் பரிந்துரைத்துள்ளனர்.
எஸ்.சி./எஸ்.டி கணக்கெடுப்பு எடுக்கும், அரசு பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பை எடுப்பதில் என்ன தடையிருக்கப் போகிறது – மனத்தடையைத் தவிர?
இதற்கு நியாயம் கேட்க, உச்சநீதிமன்றத்தில் ஒரு சமூக ஆர்வலர் பொதுநல வழக்கைத் தான், அதன் அறிமுக நிலையிலேயே ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே,
“பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதிவாரியான கணக்கெடுப்பு என்பது சரியான ஆலோசனைதானே? அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து விவாதியுங்கள்’’ என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சட்டத்தை _ நீதியை மதிக்காத மத்திய அரசு, உச்சநீதிமன்ற உத்தரவையாவது மதிக்குமா?