ஆர்வலர்கள் மீதான அக்கறை
சென்னை பெரியார் திடலில் நடிவேள் ராதா மன்றம் கட்டிக்கொண்டிருந்த நேரம் அது. கட்டடப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அப்போது மயிலாடுதுறையைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் ஒருவர் பெரியாரின் மீதும் இயக்கத்தின் மீதும் கொண்ட ஆர்வம் காரணமாக 25 ஆயிரம் ரூபாயை நன்கொடையாகக் கொடுக்க பணத்தைக் கொண்டு வந்துவிட்டார்.
அந்த நன்கொடையை ஆசிரியர் வீரமணி அவர்களிடம் கொடுத்தார். நிதியை யார் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளலாம்தான். ஆனால், ஆசிரியர் அந்த ஒப்பந்தக்காரர் கொடுத்த நிதியை உடனே வாங்கிவிடவில்லை. ஏனென்றால் அவர் தனது தொழிலில் வளர்ந்து வரும் இளைஞர். இந்நிலையில் அவர் கொடுக்க முன்வந்துள்ள நிதி அதிகம். (அந்தக் காலகட்டத்தில் 25 ஆயிரம் என்பது அதிகம்தான்) அய்யா பெரியாரின் மீதுள்ள ஆர்வம் காரணமாக தனது தகுதிக்கு மீறி நிதி அளிக்க வந்துள்ளார் என்பதைப் புரிந்துகொண்ட ஆசிரியர், அந்த நிதியைப் பெற மறுத்து திரும்ப அவரிடமே கொடுத்துவிட்டார்.
நீங்கள் தொழிலில் நன்கு வளர்ந்து உங்களை பலப்படுத்திக்கொண்டு பின்னர் நிதிகொடுங்கள் என்று கூறிவிட்டார்.இயக்க ஆர்வலர்கள், தொண்டர்கள் முதலில் தம்மை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தந்தை பெரியாரைப் போலவே ஆசிரியரும் விரும்புவார் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம்.
உணவை வீணாக்கலாமா ?
தந்தை பெரியாரைப்போலவே தமிழகம் முழுதும் அதிகநாட்கள் சுற்றுப்பயணம் செய்த இன்னொருவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்தான். நகரம், கிராமம், பட்டி தொட்டியெங்கும் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வார்.
அப்படிச் செல்லும்போது இயக்கத் தோழர்களின் இல்லங்களில் உணவு எற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அங்கு சென்று அன்புடன் உணவை எடுத்துக் கொள்ளும் ஆசிரியர், தனது இலையில் எந்த உணவையும் வீணாக்குவது இல்லை.
வேண்டுவன மட்டுமே அளவாகப் பெற்று, அவற்றை முழுவதும் உண்டுவிடுவார்.
சில சமயங்களில் தோழர்கள் ஆர்வம் மிகுதியால் சாப்பாட்டு இலையில் தாம் தயாரித்த பல வகை உணவுகளையும் வைத்து விடுவதுண்டு. அப்படி வைக்கப்பட்டுவிட்டால் அன்பாகக் கடிந்து கொண்டாலும் அதனை முழுவதும் சிரமப்பட்டு உண்டு விடுவார். அல்லது பக்கத்திலுள்ள நண்பர்களிடம் அளித்தும் விடுவார். அதுமட்டுமல்ல தம்முடன் சுற்றுப் பயணத்தில் வரும் தோழர்களும் இலைகளில் மீதம் வைக்காமல் முழுவதும் சாப்பிட்டு விடவேண்டும் என்று விரும்புவார். ஆசிரியரைப் புரிந்து கொண்ட தோழர்கள் அப்படியே நடந்து கொள்வார்கள்.
கைமாறு கருதாது உதவும் மனம்
பள்ளி, கல்லூரிகளில் படிக்க இடம் கேட்டும், வாழ்க்கைக்கான வேலை வாய்ப்புத்தேடியும் பரிந்துரைக்காக வருவோருக்கு தம்மால் இயன்ற உதவி செய்வது ஆசிரியரின் பண்பு. அப்படி உதவி கேட்டு வந்தோருக்கு ஆசிரியர் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு கல்வி வாய்ப்போ, வேலையோ கிடைத்துவிட்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவார். நன்றாகப் படிக்க வேண்டும், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறுவார். இச்செய்தியைச் சொல்லவருபவர்கள் சில நேரங்களில் பழங்கள், சால்வை என ஏதாவது வாங்கி வந்துவிடுவார்கள். ஆனால், அப்படி வாங்கி வருபவர்களிடம் அந்த அன்பளிப்புகளை ஆசிரியர் பெற்றுக் கொள்ள மாட்டார். தகுதியுள்ளவர்களுக்கு உதவுவது ஆசிரியரின் குணம். கைமாறு கருதாத பணியாகத்தான் இந்தத் தொண்டினை ஆசிரியர் செய்கிறார். எனவே, செய்த உதவிகளுக்காக அன்பளிப்புகளைப் பெறுவதை அவர் ஒருபோதும் விரும்பியதில்லை.
இயல்பாக மற்ற நேரங்களில் அன்பு மிகுதியால் இயக்கத் தோழர்கள், மாற்றுக்கட்சி நண்பர்கள், இயக்க நலன் விரும்பிகள் பழங்களை அளித்தால் சால்வை அணிவித் தால் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்.