பசு மாட்டுச் சாணி, நோய் உருவாக்கும் வெப்பக் கதிர்வீச்சைத் தடுக்கும் சக்தி கொண்டது என்ற மூடநம்பிக்கைக் கருத்துகளை அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான வகையில் மத்திய அரசின் துறைகளே பரப்பலாமா? இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும்! அறிவியல் ரீதியாகக் கருத்துகளைக் கூற முன்வந்த 100-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுக்கு நமது பாராட்டும், நன்றிகளும்.
மத்தியில் கடந்த 6 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அரசும், அதனால் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு காவிச் சாயம் ஏறிய பசுமாடு சம்பந்தப்பட்ட அமைப்புகளும், மனிதர்களின் உடல்நலம் – ஆரோக்கியம் – உயிர் பாதுகாப்பு – நோய்த் தடுப்புபற்றி பல்வேறு கருத்துகளையும், யோசனைகளையும், திட்டங்களையும் கூறி வருவது, அறிவியல்பூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டதாக இல்லை என்பதை விளக்கி அறிவியல் அமைப்புகளும், விஞ்ஞானிகளும் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
மிகப்பெரிய சமூக விரோத நடவடிக்கை!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகள்- ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள கடமையான 51-ஏ(எச்) பிரிவின்கீழ் வரும் அறிவியல் மனப்பான்மையைப் பரப்புவதற்குப் பதிலாக, நேர் எதிரான மூடநம்பிக்கைகளை போதிய ஆதாரமின்றிப் பரப்புவதாக இருப்பது, மிகப்பெரிய சமூக விரோத நடவடிக்கையாகும்.
எடுத்துக்காட்டாக, ‘தி டெலிகிராப்’ (15.10.2020) ஏட்டில் வெளிவந்துள்ள ஒரு செய்தியில் பசு மாட்டுச் சாணிக்கு மிகப்பெரிய மருத்துவ ஆற்றல் உண்டு என்று மத்திய அரசின் ‘ராஷ்டிரிய காமதேனு ஆயோக்’ வெளியிட்டுள்ள ஒரு கருத்து, போதிய சான்று, பரிசோதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டப்படவில்லை. இது ஒரு போலி விஞ்ஞானக் கருத்துரை (Pseudo Science) என்பதாக 100 விஞ்ஞானிகள் பல்வேறு கல்வி, விஞ்ஞான அமைப்புகளைச் சார்ந்தவர்கள் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
“பசு மாட்டுச் சாணி (Radiation) வெப்பத்திலிருந்து நோய்த் தடுப்புக்கான பாதுகாப்பாக அமையும்; பசு மாட்டுச் சாணி ஒவ்வொருவரையும் பாதுகாக்கும். அது நோய் உருவாக்கும் வெப்பக் கதிர்வீச்சைத் (Radiation) தடுக்கும் சக்தி கொண்டது. இந்தச் சாணியிலிருந்து மெழுகுவத்திகள், ஊதுவத்திகள் செய்து வீட்டில் வைத்தால், சுவர்க் கடியாரங்கள் (எருமுட்டைகள் மூலம்) செய்து வீட்டில் வைத்தால், வெப்ப நோய்த் தாக்குதல் ஏற்படாது; இது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவும் (eco-friendly)’’ என்று மேற்காட்டிய மத்திய அரசின் மீன் வளம், கால்நடை வளர்ச்சித் துறையின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள ராஷ்டிரிய காமதேனு ஆயோக் (RKA) அமைப்பின் தலைவரான வல்லபாய் கத்தீரா என்ற ஒரு (பா.ஜ.க.) பிரமுகர் இதைப் பிரச்சாரம் செய்து வருகிறார்!
“இதனை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க எத்தனை பரிசோதனைகள் மேற்கொள் ளப்பட்டன? என்னென்ன சான்றாவணங்கள் மூலம் இக்கருத்து மெய்ப்பிக்கப்பட்டுள்ளது? எத்தனைப் பேருக்கு இது பயன்தந்துள்ளது? வெப்ப அளவு என்னவென்பது குறித்து போதிய ஆய்வும், விளக்கமும், ஆதாரப்பூர்வ முடிவுகளும் – அறிவியல் ரீதியாக அளிக்கப்பட்டுள்ளதா?’’ என்றெல்லாம் அந்த 100 விஞ்ஞானிகள் இந்த அமைப்பின் தலைவரை நோக்கி சரமாரியாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்கள்!
அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான
கருத்து அல்லவா?
செய்தியாளர்கள் பேட்டியில் மேற்கண்ட தவறான தகவல்களை – பசுஞ்சாணி – விராட்டி என்ற சாணி எருமுட்டைகள் பற்றியெல்லாம் கூறியுள்ளது அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ(எச்) பிரிவுக்கு எதிரான கருத்து அல்லவா? அந்த அமைப்பின் தலைவர் இப்படி பொறுப்பற்று கூறலாமா? என்று கேட்டுள்ளனர் – இந்த 100 விஞ்ஞானிகளான கல்வியாளர்கள்.
இவ்வறிக்கையில் கையொப்பமிட்டுள்ளவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்களில் ஆய்வாளர்களும் அடங்குவர்.
டில்லி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மற்றும் கொல்கத்தாவில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரிசர்ச் அண்ட் எஜூகேசன் (The Indian Institute of Science and Education), பம்பாய் அய்.அய்.டி., டாட்டா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் (Tata Institute of Fundamental Research) மும்பை ஆகிய அமைப்புகளின் ஆய்வாளர்களும் கையொப்பமிட்டுள்ளனர்.
விஞ்ஞான தொழில்கள் அமைச்சகமே கூறியது அதிர்ச்சிக்குரியது!
சென்ற ஆண்டு இதுபோலவே, பசுஞ்சாணியை பல் துலக்கும் பேஸ்டாகவும், மூத்திரத்தையும், பாலையும், சாணியையும் மருந்துகளுக்குப் பயன்படும் ஆராய்ச்சிக்கென தனி நிதி ஒதுக்கீடு செய்வதுபற்றியும் இவர்கள் ஆட்சேபம் எழுப்பியுமிருந்தனர்!
புற்றுநோய், ஆஸ்துமா, மூட்டு வலி போன்ற வைகளுக்கு பசு மாட்டுச் சாணியும், மூத்திரமும் பயன்படும் என்றெல்லாம், அமைச்சகமே (அதுவும் Science Technology அமைச்சர்) – விஞ்ஞான தொழில்கள் அமைச்சகமே கூறியது மேலும் அதிர்ச்சிக்குரியதல்லவா?
‘பஞ்ச கவ்வியம்’ என்ற பசு மாட்டு மூத்திரம், பால், தயிர், நெய், சாணி ஆகிய அய்ந்து கலவைகள்குறித்து ஆராய்ச்சி செய்ய ஒரு கமிட்டியே 3 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டுள்ளது, அதைவிட மிகப்பெரிய கேலிக்கூத்து அல்லவா?
பிரதமர் வெளிநாடுகளுக்குச் செல்ல அதிநவீன பாதுகாப்பான விமானம் பல கோடி செலவில் வெளிநாடுகளில் கட்டித்தான் இறக்குமதியாகிறது!
‘புஷ்பக’ விமானத்தை யாரும் தேடிக் கொண்டிருப்பதில்லை!
எல்லையில் தொல்லை கொடுக்கும் அண்டை நாட்டவருடன் போர் என்று வந்தால், நமது இராணுவம் எதிர்கொள்ள வெளிநாட்டு “ரபேல்’’ விமானங்களை அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் கூடியவற்றைத்தான் வாங்குகிறோம்.
மூடநம்பிக்கைக் கருத்துகளை மத்திய அரசின் துறைகளே பரப்பலாமா?
இந்த நிலையில், விஞ்ஞான பூர்வ ஆதாரமின்றி, இப்படி மூடநம்பிக்கைக் கருத்துகளை மத்திய அரசின் துறைகளே – அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான வகையில் பரப்பலாமா?
உரமாகும் சக்தி இருந்தால்கூட அதை நேரடியாக உணவாக உட்கொள்ளச் சொல்லலாமா – எந்த ஆய்வுமின்றி?
வித்தைகளால் விஞ்ஞானத்தை ஒருபோதும் வளைக்க முடியாது; உலகத்தார் முன்னிலையில் நம் நாடு பரிகாசத்திற்கும், கேலி கிண்டலுக்கும் ஆளாக்கப்படும். இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படுதல் வேண்டும்.
அறிவியல் ரீதியாக கருத்துகளைக் கூற முன்வந்த நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுக்கு நமது பாராட்டும், நன்றியும்!
– கி.வீரமணி,
ஆசிரியர்