காமராசர் நினைவுநாள் அக்டோபர் 2 : பச்சைத் தமிழ்ர் காமராசர் பேசுகிறார்

அக்டோபர் 01-15, 2020

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று பேசவும் ஆரம்பித்திருக்கிறார்கள்; யார் பேசுகிறார்கள் என்று தெரியுமா? இதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு ஏழை மக்களை மேலும் ஏழையாக்குபவர்களே இதைக் கூறுகிறார்கள். நீ ஏழையாய் இருப்பது, ஏழையாய் இருக்க வேண்டும் என்பது உன் தலை எழுத்து (கடவுள் கட்டளை) என்று கூறி ஏமாற்றுகிறார்கள். தங்களின் நிலையை உயர்த்திக் கொண்டே இருக்கும் சூழ்ச்சியே அது.

தலை எழுத்தை அழித்து எழுதுவோம்.

உழைக்கவேண்டியதே – ஏழையாய் இருப்பதே – தலையெழுத்து என்றால் அந்தத் தலையெழுத்தை மாற்றி எழுதுவோம். எழுதவேண்டியது அவசியம் என்றுதான் சொல்லுகிறேன்.

எனவே, கடவுள் பெயரைச் சொல்லி உங்களை ஏமாற்றுகிறவர்கள்தான் என்னைக் கடவுள் நம்பிக்கையில்லாதவன் என்று சொல்லுகிறார்கள்.

ரஷியாவிலும் அமெரிக்காவிலும் செல்வம் செழித்து வருகிறது. அங்கு இவை எல்லாம் குறுக்கிடவில்லை. அந்த நாடுகளைப் போன்று நம்முடைய நாட்டிலும் செல்வம் பெருக வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை இருந்தால் மட்டும் போதாது; அதற்காகப் பாடுபடவேண்டும்; அதிகம் உழைக்கவேண்டும். சோம்பேறித்தனமாக இருந்தால் பயன்படாது. கடவுளை எண்ணிக்கொண்டு கைகட்டிக் கொண்டிருந்தால் எப்படிச் சாப்பிடுவது?

– இராயக்கோட்டையில் 26.4.1966இல் காமராசர் உரை, ‘விடுதலை’ 27.4.1966

அவனவன் தலை எழுத்துப்படி நடக்கட்டும் என்பதுதான் சுதந்திராக் கட்சியின் தத்துவமாக உள்ளது. எவன் தலையில் எவன் எழுதினான் என்று சொல்லட்டுமே! தலை எழுத்து என்று ஒன்று உண்டென்றால், அதை மாற்றியே ஆகவேண்டும். இதற்காகவே சண்டை போடுகிறேன்.

– பழைய மாம்பலத்தில் காமராசர் ஆற்றிய உரையிலிருந்து, ‘விடுதலை’ 13.4.1961

அன்று பள்ளிகளை மூடினார் ராஜாஜி. நான்தான் காங்கிரசிலிருந்து போகச் சொன்னேன். அந்தக் கோபம் அவருக்கு இன்னும் தீரவில்லை. 53இல் செய்ய முடியாததை – எல்லாப் பள்ளிகளையும் மூட முடியாமற்போனதை இப்போது செய்யப் பார்க்கிறார்;

இந்தச் சூழ்ச்சி என்னிடம் பலிக்காது. மக்கள் அறிவற்றவர்களாகவே இருக்க வேண்டும் என்பது அவர் தர்மம். தாம் தர்மத்தைக் காப்பதாக ராஜாஜி சொல்லிக் கொண்டிருக்கிறார். இவர் இல்லை என்றால் தர்மமே இல்லாமல் போய்விடுமா? இவர் தர்மம்தான் என்ன? 1953இல் தான் பார்த்தோமே குலக்கல்வித் திட்டத்தின் மூலம் பள்ளிகளை மூட முயற்சித்தார். அந்த முயற்சியில் தோல்வி கண்டார். ராஜாஜியைப் பற்றி எனக்குத் தெரியும். அவர் சதி இனி ஒன்றும் பலிக்காது. நான் இருக்கும் வரை அதைப் பலிக்கவிடமாட்டேன்; பயப்படவும் மாட்டேன். ஏழை ஏழையாகவே இருக்கவேண்டும் என்று அவர் கூறுகிறார். அவரது தர்மம் அப்படிச் சொல்கிறது. அதை மாற்றியே தீருவேன். தனி ஒருவனாக நிற்க வேண்டி வந்தாலும் அதை மாற்றியே தீருவேன்.

– வாணியம்பாடி பகுதியில் காமராசர் உரை, விடுதலை 4.5.1966

உயர்ந்தவன் – தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகளை இந்த நாட்டில் நீண்ட காலமாக இருந்துகொண்டு, மக்களை மடமையில் ஆழ்த்தி வருகின்றன. இந்த நாட்டிலே உயர்ந்த ஜாதி என்பவன் அயோக்கியனாய் திருடனாய் சோம்பேறியாய் இருந்தாலும் அவன் உயர்ந்த ஜாதியில் பிறந்தவன் என்பதற்காக உத்தமன் ஆகிவிடுகிறான். உதாரணமாக பாரதத்தில் வரும் தர்மன் ஆட்சியை, தன் உடன்பிறப்பை, தன் மனைவியை ஏன் தன்னையே அடகு வைத்துப் பகடையாடினான். அவனை நம் நாடு தர்மவான் எனப் போற்றுகிறது உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்பதற்காகச் சமுதாயக் குற்றச் சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்கிறான். ஆனால், தாழ்ந்த குலத்தில் பிறந்த ஒருவன் நாணயப் பொறுப்புள்ளவனாக இருந்தாலும் இனப் பாகுபாடு அவனை முன்னுக்கு வராமல் தடுக்கிறது இப்பிளவைப் போக்கி அனைவரும் சமம் என் கி ற ரீதியிலே மக்களை மக்களாக நடத்துவதுதான் சமதர்மம்.

– 12.1.1967இல் கிருஷ்ணகிரியில் காமராசர் உரை, விடுதலை 16.01.1967

தமிழில் பேசிய காங்கிரஸ் தலைவர்

அகில இந்திய காங்கிரசுத் தலைவராக 1963இல் காமராசர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாட்டிலிருந்து அதற்கு முன்பு. சேலம் விஜயராகவாச்சாரியார், எஸ்.சீனிவாச அய்யங்கார் ஆகியோர் அப்பதவியில் இருந்தனர். 1964 ஜனவரியில் ஒரிசாவின் தலைநகர் புவனேசுவரில் காங்கிரசு மாநாடு நடந்தது. காமராசர் தமது தலைமை உரையைத் தமிழில் நிகழ்த்தினார். காங்கிரசு மாநாடு அப்பொழுதுதான் முதன்முறையாகத் தமிழில் தலைமை உரையைக் கேட்டது.

 

காமராசரும் தி.க.வும்

அறிவுடையார் மானமுள்ளார் காமராசர்

அன்புடையார் திராவிடநன் மக்கள் மீதில்

நெறியறிந்து செலத்தக்க ஆற்றல் உள்ளார்

நெஞ்சத்தில் தெளிவுடையார் தந்ந லத்தைச்

சிறிதேனும் எண்ணாத பெரும்பண் புள்ளார்

திராவிடத்தை காத்திடுமோர் உறுதி யுள்ளார்.

– புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

நான் காங்கிரசு கட்சிக்கும், கதர் துணிக்கும் எதிரி. இருப்பினும் காமராஜர் மீது எனக்கு அளவு கடந்த அன்பு. தந்தை பெரியார் அவர்கள் “பச்சைத் தமிழன் காமராசர்’’ என்று பாராட்டி, தலைவர் காமராசருக்கு ஆதரவு காட்டியதும் எனக்கு அளவு கடந்த உற்சாகம். நாட்டிற்கு ஏற்ப நல்லதைச் செய்கிறாரே என்று பெரியாரைப் பாராட்டினேன்.

1957இல் அமைச்சராகயிருந்த காமராசர் சாத்தூர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். பெரியார் ஆதரிக்கிறார் என்ற முறையில் அப்போது திராவிடர் கழகத்தின் முக்கிய பிரமுகராயிருந்த திரு.ராஜா அவர்கள் (பா.இராஜாமணி அவர்களை நாங்கள் அப்படித் தான் அழைப்போம்.) தலைமையில் காமராஜருக்கு தீவிரமாக வேலை செய்தோம்.

சீதையை வேசி என்று திட்டும் ஈ.வெ.ரா. அவர்களின் ஆதரவு பெற்ற காமராஜருக்கா உங்கள் ஓட்டு? என்று எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆயுதமாக வைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்தனர். அத்துடன் ஜாதித் துவேஷத்தையும் கிளப்பினர். கடுமையான பிரச்சாரம். பல காங்கிரசுக்காரர்கள் மனது கூட கெட்டுப் போயிருந்தது. காமராஜர் தோல்வி உறுதி என்ற எதிர்க்கட்சிகள் தங்கள் பிரச்சார பலத்தை நம்பி ஊக்கமாகச் செயல்பட்டனர்.

இந்த நிலையைக் கொண்டு தேர்தல் சமயத்தில் கதிகலங்கி, தமிழ்தாசன் என்கிற ஒரு மாணவன் காமராசர் தோல்வியைக் காணச் சகியாமல் ரெயிலின் முன் படுத்து தற்கொலை செய்து கொண்டான்.

இவ்வளவு பயங்கரமான நிலையிலும் திராவிடர் கழகத் தோழர்கள் உற்சாகத்துடன் கிராமங்கள் தோறும் சென்று திரு.பா.இராசாமணி தலைமையில் பணியாற்றி காமராசர் வெற்றிவாகை சூடச் செய்தனர்.

(1983 காமராசர் மலரில் ‘போர்வாள்’

மைக்கேல் எழுதியது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *