பெரியார் மாவட்டம் பழையகோட்டையில் 14.10.1923இல் பெருநிலக்கிழார் குடும்பத்தில் தோன்றிய அர்ச்சுனன் அவர்கள் தமது இருபதாம் வயதுக்குள்ளாகவே இயக்கப்பற்று மேவி, திராவிடர் கழக அமைப்பு தோன்றும்போது அய்யா அவர்களின் தொண்டராகி, மூன்றாண்டுகளில் பெரியதலைவர்களோடு வைத்து எண்ணப்படும் நிலையைத் தம் வெறிகொண்ட தொண்டால் எய்தி, திடீரென்று மறைந்து இயக்கத்தவர் உள்ளத்தில் நிலையான இடம் தேடிக்கொண்ட இளைஞர்!
மூன்று ஆண்டுகளில் திராவிடச் செல்வர்கட்கு வெட்கமும் சங்கடமும் பொறாமையும் ஏற்படும்படியான அளவுக்கு நாட்டின் குடும்பங்களில் இவர் புகழ்பரவியது. இலட்சம் ஏக்கர் நிலமும், ஆயிரக்கணக்கான பண்ணை மக்களையும், ஆயிரக்கணக்கான கால்நடைகளையும் கொண்டிருந்த குடும்பத்திற்கு உரிய இவர்தம் உயர்நிலை – அந்தஸ்து – எசமான் தன்மைகளை உதறியெறிந்துவிட்டு, பாட்டாளிகள் என் போரும் மக்கள்தாம் எனும் அடிப்படை உண்மையை உணர்ந்தவராய், பண்ணைத் தொழிலாளர்களிடம் பெரும் பரிவுகாட்டி, அவர்கட்கு விம்மித மூட்டிய அப்பழுக்கற்ற சுயமரியாதைக்காரர்.
பல ஊர்களில் இயக்க நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட இவர், நாடெங்கும் நமது போர் முரசைக் கொட்ட வேண்டும். மக்களை தட்டியெழுப்பவேண்டும். நமது கறுப்புச் சட்டைப் படையைப் பலப்படுத்த வேண்டும். நம்மை இழிவுபடுத்தி அடிமைப்படுத்தி வைத்திருக்கும் கூட்டம் பொல்லாதது; சூழ்ச்சிகளில் கைதேர்ந்தது. இருந்தபோதிலும் நாம் உறுதியுடனும் கட்டுப்பாட்டுடனும் இருந்து தலைவர் ஆணைப்படி நடந்தால் வெற்றி பெறுவது உறுதி. சுதந்திரத்துடன் வாழவேண்டும் – திராவிடர்களாகிய நாம்; இல்லையேல் மாள வேண்டும்! என்று முழங்கினார்.
ஒருநாள் அமைச்சர் பக்தவத்சலனார் பழையகோட்டையைப் பார்வையிட வந்த ஞான்று கறுப்புச் சட்டையணிந்து அதில் தந்தை பெரியார் உருவச்சின்னத்தை மாட்டிக்கொண்டு வரவேற்று அனைவருக்கும் பெருந்திகைப்பையூட்டிய தோழர் அர்ச்சுனன் திடீரென 12.10.1946 முடிவெய்திவிட்டார் – மின்னல் வெட்டி மறைவதைப் போல.
அய்யா அவர்கள் இவரது முடிவைப் பன்னீர் செல்வம், சி.டி. நாயகம் ஆகியோர் மறைவினால் ஏற்பட்ட இழப்புக்கு இணையாகக் கருதினார்.
பெரியார் அவர்கள் அர்ச்சுனன் மறைவுக்காக வருந்துவதைப் போல் இதுவரை யாருக்காகவும் வருந்தி இருக்கமாட்டார் என்று கூறலாம். அர்ச்சுனனைக் கொண்டு நம் இயக்கம் எவ்வளவோ நலமடையுமென்று கருதியிருந்தேன். அது இயலாமல் போயிற்று; திராவிட மக்களுக்கு நல்வாய்ப்பு இல்லை என்று சொல்லிச் சொல்லி வருந்துகிறார். அதனாலேயே தமது சுற்றுப்பிரயாணங்களையும் நிறுத்திவிட்டுத் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்.
அர்ச்சுனன் மறைவு குறித்து 1946 அக்டோபர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அர்ச்சுனன் நாளாகக் கொண்டாடப்பட்டது.