நூல்: பெண் குல விளக்கு நீலாவதியார்
வெளியீடு:கங்கை புத்தக நிலையம், No.23
தீனதயாளு சாலை,
தியாகராயர் நகர், சென்னை – 17
தொலைபேசி: 044 – 243428101
கடத்தல் கல்யாணம்
நீலாவதி அம்மையாரின் கணவர் இராமசுப்பிரமணியம் அவர்களை சமீபத்தில் சந்தித்துப் பேசும் போது அவர் சொன்ன சில பழைய நாள் நினைவுகள் சுவையாக இருந்தன. அதில் அவருடைய திருமண நாள் அன்று நிகழ்ந்த சம்பவம் ஒன்று:
தன வணிக சமூகத்தைச் சேர்ந்த இராமசுப்பிரமணியத்திற்கு இன்னொரு சமூகத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடக்க விருக்கிறது என்பதை அறிந்ததுமே அதற்கு எதிரானவர்கள், மாப்பிள்ளையை எங்காவது சிறைப்படுத்தி திருமணத்தைத் தடுத்துவிட முயன்றார்கள்.
ஆனால், இந்த சீர்திருத்த மணத்தை நடத்திவிட முனைந்து நின்று முற்போக்கு சிந்தனையுடைய “குமரன்’’ பத்திரிகை ஆசிரியர் சொ.முருகப்பா மிகத் திறமையுடனும், அக்கறையுடனும் செயல்பட்டு மணமகன் இராமசுப்பிரமணியத்தை காரைக்குடியில் இருந்து கடத்தி திருமணம் நடக்கவிருக்கும் திருச்சிக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
திருச்சியில் தந்தை பெரியாரின் ஆலோசனைகளின்படி திருமண ஏற்பாடுகளைப் பொறுப்பேற்றுச் செய்தவர் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள். திருமண விருந்துச் செலவுக்காக அக்கால மதிப்பின்படி பெரியார் அய்நூறு ரூபாயை கி.ஆ.பெ.விசுவநாதத்திடம் தந்திருந்தாராம். அன்று அந்தப் புரட்சித் திருமணத்திற்கு தமிழகத்தில் உள்ள சீர்திருத்த சிந்தனை உள்ளம் கொண்டவர்கள் எல்லாம் வந்து கூடிவிட்டதால். சுமார் இரண்டாயிரம் பேருக்கு மேலுள்ளவர்களுக்கு விருந்தளிக்கப்பட்டதாம். எனவே பெரியார் தந்த பணத்திற்கு மேல் எவ்வளவு செலவு ஆனதோ அதையெல்லாம் கி.ஆ.பெ. விசுவநாதமே சமாளித்துக் கொண்டிருக்கிறார்.
இதுபற்றி இராமசுப்பிரமணியம் கூறும்போது, அந்தக் காலத்தில் ஒவ்வொரு இயக்கத்தில் இருந்தவர்களும் தங்கள் சிரமங்களை வெளியே காட்டாமல் இயக்கம் தனக்களித்த பணியைச் செவ்வனே செய்து முடிப்பதிலேயே குறியாய் இருந்தார்கள் என்று சொன்னார்…
திருமணம் நடந்து முடிந்த வேளையில் பெரியார் தனது சகாக்களில் ஒருவரான அ.பொன்னம்பலனாரை தனியே அழைத்து ஏதோ பேசினார்.
அதன்பின் மாப்பிள்ளை இராம.சுப்பிரமணியத்தைத்
தனியே அழைத்து நீங்கள் மட்டும் உடனே பொன்னம்பலனாருடன் புறப்படுங்கள்.. அவர் சொல்கிறபடி அவரைப் பின்தொடருங்கள்…. இது அவசரம் என்று சில வார்த்தைகளைக் கூறி நிறுத்திக்கொண்டார்.
ஏதோ நடக்கவிருப்பதைத் தடுக்கவே பெரியார் இவ்விதம் கட்டளையிடுகிறார் என்பதைப் புரிந்தவராக இராமசுப்பிரமணியம் அடுத்த கணம் பொன்னம்பலனாரைப் பின் தொடர்ந்தார். வெளியே தயாராக நின்ற காரில் பொன்னம்பலனாருடன் சுப்பிரமணியமும் ஏறிக்கொள்ள, உடனே கார் அங்கிருந்து ரெயில் நிலையத்தை நோக்கிப் பறந்தது.
ரெயில் நிலையத்தில் அவசரமாக கீழே இறங்கிய பொன்னம்பலனார் தன்னுடன் சுப்பிரமணியத்தையும் இழுத்துக்கொண்டு உள்ளே ஓடி, அங்கே தயாராக நின்ற ரெயிலில் ஏறினார்.
ரெயில் புறப்பட்ட பிறகே பொன்னம்பலனாரிடம் இருந்து விஷயங்களை சுப்பிரமணியம் அறிய முடிந்தது. திருமணம் நடந்துவிட்ட பிறகும் கூட, எதிர்ப்பாளர் கோஷ்டி மாப்பிள்ளையைக் கடத்திக்கொண்டு போக திருச்சிக்கே வந்து விட்டார்களாம்..
அந்தத் தகவலை எப்படியோ அறிந்துவிட்ட பெரியார், உடனே சுப்பிரமணியத்தை அழைத்துக் கொண்டு ஈரோடு போய் விடுங்கள் என்று பொன்னம்பலனாருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
ரெயில் குளித்தலையை நெருங்கிக் கொண்டிருக்கும் போது, ஆமாம் இந்தப் பரபரப்பில் நமக்கு டிக்கெட் எப்போது எடுத்தீர்கள்? என்று சுப்பிரமணியம் கேட்டார்.
“டிக்கெட்டா? யார் கொடுத்தார்கள்? ‘உடனே புறப்படுங்கள்’ என்று பெரியார் விரட்டியதும், உங்களை இழுத்துக்கொண்டு ஓடி வந்துவிட்டேனே தவிர, போகிற பயணத்துக்குப் பணம் வேண்டுமே என்ற சிந்தனை எல்லாம் யாருக்கு இருந்தது?’’ என்றார் பொன்னம்பலனார்.
ஏற்கனவே சுப்பிரமணியம் கூறியது உண்மை தானே… இயக்கத்தலைவர் ஆணையிட்டுவிட்டால் அந்தக் காலத்தில் தங்கள் வசதிக் குறையை யாரும் சிந்தித்ததாய் தெரியவில்லையே?
ஆக டிக்கெட் எடுக்கவில்லை என்று பொன்னம்பலனார் கூறிய பதிலைக் கேட்டு சுப்பிரமணியம் திடுக்கிட்டுப் போனார்.
என்னங்க இது.. ஏற்கனவே காரைக்குடியில் இருந்து என்னைக் கடத்தி கல்யாணத்துக்கு திருச்சிக்கு கொண்டு வந்தீங்க.. இப்போ திருச்சியில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி அழைச்சிட்டுப் போறீங்க.. இந்த நிலையில் நாம டிக்கெட்டு எடுக்கலைங்கிறது தெரிஞ்சு இனி ரெயில்வேக்காரங்க மூணாவது தடவையா என்னைக் கடத்திலாக்கப்பில் வச்சுட்டா? அப்புறம் யார்கிட்ட நான் பிடிபடக்கூடாதோ அவங்க கையிலேயே மாட்டிக்கொள்வேன். அதனால் குளித்தலையில் முதல்ல இறங்கி அடுத்து செய்ய வேண்டியதை யோசிப்போம் என்று பிடிவாதமாகக் கூறிவிட்டார். வேறு வழியின்றி பொன்னம்பலனார் குளித்தலை ஸ்டேஷன் வந்ததும் சுப்பிரமணியத்துடன் இறங்கிக் கொண்டார்.
ஏற்கெனவே உள்ள திட்டப்படி பெரியாரும் அவருடன் வந்தவர்களும் அடுத்த ரெயிலில் இதே வழியாக ஈரோட்டுக்குப் போவதாக இருந்தது. எனவே அந்த ரெயில் வந்ததும் பெரியாரிடம் சொல்லி டிக்கெட் எடுத்து அவருடனே ஈரோடு போய்விடலாம் என்று பொன்னம்பலனார் திட்டம் போட்டுக்கொண்டார்.
ஆகவே அடுத்த ரெயில் வரும் நேரத்தை அங்கே விசாரித்தார்கள். இன்னும் மூன்று மணி நேரம் ஆகுமெனத் தெரிந்தது.
அந்த ரெயில் வர்றதுக்கு மூணு மணி நேர இடைவெளியில் ஒரு மூணு காபியாவது சாப்பிட்டாத்தான் எனக்குத் தெம்பு இருக்கும் என்று சுப்பிரமணியம் முணுமுணுத்தார்.
“அவ்வளவுதானே, கவலைப்படாதீங்க’’ என்று சொன்னவாறு பொன்னம்பலனார் தனது ஜிப்பா பைக்குள் கைவிட்டவாறு அங்கிருந்த காபி கடையை நோக்கி நடந்தார். சிறிது நேரத்தில் இரண்டு காபியுடன் திரும்பினார்.
அட இந்த சில்லரைச் செலவுக்காவது இவர் காசு வைத்திருக்காரே என்ற எண்ணத்துடன் சுப்பிரமணியம் காபியை ஆசையாய் குடித்தார்.
இப்படி அந்த மூணு மணி நேரத்தில் அரை மணிக்கு ஒரு தடவை பொன்னம்பலனார் காபி வாங்கிக்கொண்டு வந்து தந்துவிட்டதால், அந்நேரப் பசியையும் குளிரையும் சுப்பிரமணியம் தாங்கிக்கொண்டார்.
அவர்கள் எதிர்பார்த்த ரெயிலும் வந்தது. அங்கும் இங்கும் ஓடி பெரியாரைத் தேடினார்கள். ஒரு பெட்டியில் இருந்து தற்செயலாய் தலையை வெளியே நீட்டி பெரியார் இவர்களைக் கண்டுவிட்டு குரல்கொடுத்தார்..!
பொன்னம்பலனாரும் சுப்பிரமணியமும் அந்தப் பெட்டி அருகே ஓடி வந்தார்கள்.
“ஈரோட்டுக்குப் போகச் சொன்னா. இங்கே நிக்குறீங்களா?’’ என்று விசாரித்தார் பெரியார். எல்லா விவரங்களையும் அவசரமாகச் சொன்ன பொன்னம்பலனார். “ரெண்டு டிக்கெட்டுக்குப் பணம் தாருங்கள்’’ என்று கையை நீட்டினார்…
“இப்போ ரெயில் புறப்படபோற நேரத்தில் எப்படிப் போய் டிக்கெட் எடுப்பீங்க… நாங்க மொத்தம் அறுபத்தி மூணுபேர் ஈரோட்டுக்கு டிக்கெட் எடுத்திருக்கிறோம். அந்த கூட்டத்தோட நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துடுங்க.. அவ்வளவுதான்…. ம்… வண்டியில் ஏறுங்க’’ என்றார் பெரியார். அதற்கு மேல் என்ன? பொன்னம்பலனாரைத் தொடர்ந்து சுப்பிரமணியமும் அந்தப் பெட்டியில் ஏறினார். அப்போது பொன்னம்பலனார் காதில், “இன்னைக்கு தர்மப்பிரயாணம்தான்’’ என்று கிசுகிசுத்தார் சுப்பிரமணியம்..
“ரெயில் பிரயாணம் மட்டுமா? இந்த மூணு மணி நேரம் மாறி மாறி சாப்பிட்ட காப்பியும் தர்மச் செலவுதான்’’ என்று ஒரு போடு போட்டார் பொன்னம்பலனார்.
சுப்பிரமணியம் திகைத்து அவரைப் பார்த்த போது அவர் சொன்னார்.