தமிழர் நாட்டின் வீதிதோறும்
வீடுதோறும் முரசொலி!
தலைகுனிந்த நாள்ஒழிந்து
போனதென்ற பேரொலி!
குமுறுகின்ற மறவர்ஒன்று
கூடியின்று வருகவே!
கொடிபிடித்து முரசுகொட்டி
வெற்றிகொண்டு வாழுவோம்!
தமிழருக்கு அரசுதிட்டம்
தமிழர்செய்து கொள்ளுவோம்!
தகுதியின்றிச் செய்திருக்கும்
திட்டம்வீழச் செய்குவோம்!
எமதினத்தின் அரசுவேண்டும்;
இல்லையென்று சொல்லிட
எவனுமிங்கே இல்லை; இந்த
நாடு எங்கள் நாடடா!
பிரிந்து வாழும் உரிமை எங்கள்
பிறவிதந்த உரிமையாம்!
பிறர்மறுக்க நியாய மில்லை
முரசு தன்னைக் கொட்டுவோம்!
இருந்திருந்து பொறுமை யாக
சிறுமை வாழ்வை எய்தினோம்!
இரையைத் தேடும் சிங்கமாக
எழுந்திருந்து வருகுவீர்!
தோள் உயர்த்தி முரசுகொட்டிச்
சங்கம் ஊதிச் சொல்லடா!
சொந்தம் இந்த நாடு, எங்கள்
சொந்த மென்று சொல்லடா!
வாள்பிடித்து அணிவகுத்து
யுத்தமுரசு கொட்டடா!
வாழ்வு எங்கள் கையில் என்று
முரசு கொட்டிச் சொல்லடா!
– தமிழ் ஒளி கவிதைத் தொகுப்பிலிருந்து