எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (63) : தமிழை நீச பாசை என்றவர் சங்கராச்சாரி

அக்டோபர் 01-15, 2020

நேயன்

இது அன்றைய காங்கிரசின் கொள்கை. திலகரின் பேச்சைக் கேட்டே பாரதி இவ்வாறு எழுதியுள்ளார். இந்தியைப் பொதுமொழி என்று 1906 இல் கூறிய பாரதி, 1920 இல் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொண்டு, சமசுகிருதம்தான் இந்தியாவுக்கும் பொது மொழியாக வேண்டும் என்று கூறுகிறார். சுதேசமித்திரன் (11.1.1920) இதழில் ‘ஒளிர்மணிக் கோவை’ என்னும் தலைப்பில் பாரதி கூறுவதாவது:

“இந்தியாவுக்குப் பொது பாஷையாக ஹிந்தியை வழங்கலா மென்று ஸ்ரீமான் காந்தி முதலிய பல பெரியோர்கள் அபிப்ராயப் படுகிறார்கள். ஆனால் பாரத தேச பக்த சிரோ ரத்தினமென்று கூறத்தக்க ஸ்ரீமான் அரவிந்த கோஷ் முதலிய வேறு பலர் ஸம்ஸ்க்ருத பாஷையே இந்தியாவுக்குப் பொது பாஷையென்றும், நாம் அதைப் புதிதாக அங்ஙனம் சமைக்க வேண்டியதில்லையென்றும், ஏற்கனவே ஆதிகாலந் தொட்டு அதுவே பொதுபாஷையாக இயல் பெற்று வருகிறது என்றும் சொல்லுகிறார்கள்……….

ஸம்ஸ்கிருத பாஷையில் படித்துத் தேர்ச்சி பெறுதல் கடினமானதால் அதைத் தேச முழுமைக்கும் பொதுப் பாஷையாகச் செய்தல் சௌகரியப்படாதென்று சிலர் சொல்லுகிறார்கள். பழைய வழிப்படி படிப்பதானால் இவர்கள் சொல்வது ஒருவாறு மெய் எனலாம். ஆனால் இக்காலத்தில் அந்நிலைமை கடந்து சென்று விட்டது. இப்போது பண்டாரகர் என்னும் பம்பாய்ப் பண்டிதர் உபாத்தியாயர் இல்லாமலே ஸம்ஸ்க்ருத பாஷையை ஏழெட்டு மாசங்களில் கற்றுக் கொள்ளும்படியான ஆரம்ப நூல்கள் எழுதியிருக்கிறார். இவற்றுள் முதல் புஸ்தகம் ஏற்கனவே தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அவ்வழியை இன்னும் சுலபமாய்ச் செய்யலாம். பஞ்ச தந்திரத்தை அர்த்தத்துடன் மூன்று முறை உருப்போட்டால் எவனும் தட தடவென்று தட்டில்லாமல் ஸம்ஸ்க்ருதம் பேசக்கூடிய திறமை பெற்று விடுவான்’’ (ஆதாரம்: பாரதி புதையல் பெருந்திரட்டு, ரா.அ.பத்மநாபன்) எனப் பாரதியார் விளக்கம் தந்து சமசுகிருதம் பொது  மொழியாக வேண்டும் என்று கூறுகிறார்.

பாரதியார் சமசுகிருதத்தின் மீது கொண்ட வெறியினால் சப்பானில் சமசுகிருதம் எப்பொழுது எவ்வாறெல்லாம் பரவியது என்பதைத் தன்னுடைய ‘பருந்துப் பார்வை’ என்னும் கட்டுரையில் ஆய்வு செய்து எழுதியுள்ளார். (ஆதாரம் பாரதி கட்டுரைகள், வானதி பதிப்பகம்) உலகில் சுமேரியா, சப்பான் கொரியா, அங்கேரி, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளின் மொழிகளில் தமிழ் மொழிக் கூறுகள் ஏராளமாகக் கலந்துள்ளன. எங்கெல்லாம் தமிழ் பரவியிருக்கிறது என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், சமசுகிருதம் எங்கெல்லாம் பரவியுள்ளது என்பதை ஆய்வு செய்கிறார். அறிஞர் முனைவர் பொற்கோ அவர்கள் தமிழ் மொழியும் சப்பான் மொழியும் மரபு ரீதியாகவே உறவுள்ளவை என்பதைத் தம் ஆய்வின் (ஆதாரம்: Dr.Pon. Kothandaraman A Comparative Study of Tamil and Japanese)  மூலம் நிறுவியுள்ளார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

இதுகாறும் நாம் அறிந்தவற்றில் பாரதியினுடைய கவிதைகள், கட்டுரைகள், கதைகள் முதலானவை ஆரிய மொழி, ஆரிய நாகரிகம், ஆரியப் பண்பாடு போன்றவற்றை உயர்த்திப் பேசுவதாகவே உள்ளன. ஆரிய மொழியே சிறந்த மொழி, அம்மொழியே இந்தியாவின் பொது மொழியாக வேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஆகவே ‘பாரதியின் உயிர் மூச்சு தமிழல்ல, ஆரியமே’ என இவ்வாய்வின் மூலம் காண்கிறோம்.

திருவையாற்றில் தியாகராயர் அரங்கில், தண்டபாணி தேசிகர் தமிழில் பாடியதால், அரங்கம் தீட்டாகி விட்டது என்று சொல்லி பார்ப்பனர்கள் தீட்டுக் கழித்தனர் என்பது வரலாறு.

செத்துப்போன, காஞ்சி சங்கர மடத்து பெரிய சங்கராச்சாரியார் தமிழை ‘நீசபாசை’ என்றவர். உலகிலேயே உயர் தனிச் செம்மொழி, மூத்த மொழி, உலகின் மொழிகள் பலவற்றுக்கும் மூல மொழியாம்  தமிழ் மொழியை இழிந்த மொழி, தீட்டுள்ள மொழி என்று வெளிப்படையாகக் கூறியவர்தான் அந்த சங்கராச்சாரி.

ஆட்சி மொழிக் காவலர் கி.இராமலிங்கனார் அவர்களிடம் தமிழில் பேச மறுத்தார்- – அந்த சங்கராச்சாரி. அதற்கு அச்சங்கராச்சாரி பார்ப்பனர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

“பூசை வேளையில் நீச பாசையில் பேசக் கூடாது’’ என்பதாகும்.

மனிதனுக்குள் தீட்டு கற்பித்த இந்தப் பார்ப்பனர்கள், மொழிக்கும் தீட்டு உண்டு என்று கூறிய கொடியவர்கள். அப்படிப்பட்டவர்களை தமிழர்கள் என்று கூறி அணைத்துக்கொள்வது அறியாமையல்லவா? அவலம் அல்லவா? தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்யும் துரோகம் அல்லவா?

 தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது, மேடையில் அமர்ந்து இருப்பவர்கள் எல்லோரும் எழுந்து மரியாதை செலுத்திய போது தன் இருக்கையில் அமர்ந்து தமிழை அவமதித்தவர் காஞ்சி சங்கரமடத்தின் சின்ன சங்கராச்சாரி.

கோள் சொல்லித் திரிய மாட்டோம் என்று ஆண்டாள் பாடிய வரிக்கு தப்பாகப் பொருள் கொண்டு திருக்குறளை இழிவு படுத்தி அதைப் படிக்கக் கூடாது என்றவர் காஞ்சி பெரிய சங்கராச்சாரி.

“தீக்குறளைச் சென்றோ தோம்’’ என்று ஆண்டாள் பாடியதின் பொருள் தெரியாத அரைவேக்காட்டு பெரிய சங்கராச்சாரி, திருக்குறளைப் படிக்க மாட்டோம், என்றார்.

“தீக்குறளைச் சென்றோ தோம்’’ என்று ஆண்டாள் பாடியதற்குப் பொருள், கோள் சொல்லித் திரியமாட்டோம் என்பது ஆகும். தீக்குறள் என்பதற்கு கோள் என்பது பொருள்

உலக உயர் நூலாம் திருக்குறளை இழிவு செய்து புறக்கணித்த புல்லர்கள் அல்லவா பார்ப்பனர்கள்?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம் பாடியதற்காக, ஆறுமுகசாமி என்பவரை அடித்து விரட்டியவர்கள் பார்ப்பனர்கள் என்பது வரலாறு அல்லவா?

அரிய தமிழ் நூல்களையெல்லாம் அனல் வாதம், புனல் வாதம் என்று மோசடி, சூழ்ச்சிகள் செய்து அழித்தவர்கள் அல்லவா பார்ப்பனர்கள்?

இந்தியா எங்கும் பேசப்பட்ட தமிழ் மொழி இன்று பலமொழிகளாகத் திரிந்து கிடப்பதற்கு ஆரியப் பார்ப்பனர்கள் தமிழில் கலப்படம் செய்த சதியல்லவா?

400 ஆண்டுகளுக்கு முன் தூய தமிழ் பேசிய கேரளாவில் ஆரியப் பார்ப்பனர் புகுந்து, சமஸ்கிருதத்தைக் கலந்ததால் உருவானது தானே மலையாளம்? இப்படித்தானே கன்னடம், தெலுங்கு மொழிகள் தமிழில் செய்யப்பட்ட கலப்பால் உருவாகின.

ஆக தமிழுக்கும், தமிழர்க்கும் முதல் எதிரிகள் பார்ப்பனர்களே என்பது வரலாறு கூறும் உண்மை.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *