தந்தை பெரியாரின் 142ஆம் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மிகப்பெரும் உற்சாகத்தை நம்மைப் போன்றோருக்கு அளித்திருக்கின்றன. இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் பெரியார் 142 என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் கொடுத்த “கேஸ்டேக்’’குகள் இந்திய அளவில் “டிரெண்ட்’’ ஆகி முதல் இடத்தில் இருந்தது.. பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து 20.09.2020 அன்று நடத்திய இணைய வழிக்கருத்தரங்கத்தில் ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து கலந்து கொண்ட சுமதி விஜயகுமார் அவர்கள், தான் சில ஆண்டுகளுக்கு முன்வரை கடவுள் நம்பிக்கையாளராக இருந்ததாகவும், தேவையின் காரணமாக பெரியாரைத் தேடிப் படிக்க ஆரம்பித்ததாகவும், அப்படி படித்த நேரத்தில் வியந்து போனதாகவும் குறிப்பிட்டு தந்தை பெரியாரின் இனி வரும் உலகம், பெண் ஏன் அடிமையானாள் என்னும் புத்தகங்களின் சிறப்புகளைப் பற்றிக் குறிப்பிட்டார். அவருடைய உரையை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்.
“தந்தை பெரியார் என் சிந்தனை. அறிஞர் அண்ணா என் பேச்சு.டாக்டர் கலைஞர் என் எழுத்து. நான் திராவிடன். தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த எல்லோருமே, தன் வாழ்வில் தந்தை பெரியார் என்னும் சொல்லை ஒரு முறையாவது கேட்காமல் வாழ்ந்திருக்க முடியாது.தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த எனக்கு தந்தை பெரியார் என்னும் பெயரும் சரி, அவரின் உருவமும் சரி.. எனக்குள் பதிந்த ஒன்றுதான். நான் 7 மற்றும், 8ஆம் வகுப்புகளில் படிக்கும்போது தமிழ் பாடத்தில் ஒரே ஒரு பாடத்தில் மட்டும் பெரியாரைப் பற்றிப்படித்திருக்கிறேன். அது ஒரு 3 பக்கம். மிக மேலோட்டமான பார்வை.நான் பள்ளிப்படிப்பை முடித்து, பின்பு கல்லூரியை முடித்து, உயர்கல்வி படிக்கும்வரை எனக்குப் பெரியார் தேவைப்படவில்லை. 2008இல் எனக்கு திருமணம் ஆனது. ஓரிரு மாதங்களில் நான் ஆஸ்திரேலியா வந்துவிட்டேன். 2010இல் முதல் குழந்தையும் 2012இல் இரண்டாவது குழந்தையும் பிறந்தார்கள். அதுவரை எனக்குப் பெரியார் தேவைப்படவில்லை. அப்புறம் 2014இல் இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்கிறது. அதனை வரவேற்றவர்களில் நானும் ஒருத்தி – கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருத்தி. 2016 இறுதியில் இந்திய சூழல் முற்றிலும் மாறுகிறது. அது என்னை அச்சம் கொள்ள வைத்தது. அப்போதுவரை கடவுள் நம்பிக்கையோடு இருந்த நான், அப்போது கடவுள்கிட்டபோய் வேண்ட முடியவில்லை. அப்போது கடவுள் இல்லை என்றபோது வேறு ஒரு துணை எனக்குத் தேவைப்பட்டது. அப்போது பெரியார்தான் எனக்கு துணையாக இருந்தார். தந்தை பெரியாரைப் பற்றி தெரிஞ்சிக்கத் தெரிஞ்சிக்க, படிக்கப் படிக்க, பெரியார் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருந்தார். தந்தை பெரியார் நிறைய பேசியிருக்கிறார்; புத்தகங்கள் எழுதியிருக்கிறார்; பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்.
பெரியார் எழுதிய புத்தகங்களில் இரண்டு மிக முக்கியமானவை. ஒன்று, இனிவரும் உலகம். இன்னொன்று, பெண் ஏன் அடிமையானாள்? இனிவரும் உலகத்தில் பல வருடங்களுக்கு முன்பே கணித்துவிட்டார், டெஸ்ட் டியூப் பேபி வரும், செல்போன் வரும் என்று படித்த போது அது மிகப்பெரிய ஆச்சரியமாகத் தோன்றவில்லை… பரவாயில்லை என்று தான் தோன்றியது.
ஏன்னா, நான் தினந்தோறும் செல்போன் பயன்படுத்துகிறேன், டெஸ்ட் டியூப் பேபி இப்போ சர்வ சாதாரணம் என்பதால் மிகப்பெரிய ஆச்சரியமாக இல்லை. அதற்குப்பிறகு ‘பெண் ஏன் அடிமையானாள்?’’ என்னும் புத்தகத்தைப் படித்தபோது, அந்தப் புத்தகம் எனக்கு மிகப்பெரிய பிரமிப்பை உண்டாக்கியது.நான் அந்தப் புத்தகத்தைப் படித்தவற்றைப் 2019இல் கூட நான் சிந்திக்க முடியாத, பேசமுடியாத பெரியார் 1930களில் பேசியிருக்கிறார் என்றபோது எனக்கு அவ்வளவு பெரிய பிரமிப்பாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. தந்தை பெரியார் என்பது ஒரு மிகப்பெரிய ஆழ்கடல். அதில் ஒரு பகுதி என்பது அவர் பேசிய பெண்ணியம்… அதனை 15 நிமிடத்தில் பேச இயலாது. அதனால் ஒரு வரியை எடுத்துக்கொள்கிறேன். “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு
..இங்கு மானம் என்பதை சுயமரியாதை என்று எடுத்துக்கொள்கிறேன். உலகப் பெண்கள் குறிப்பாக இந்தியப் பெண்கள் சுயமரியாதை அற்றவர்களாகவே வளர்க்கப்படுகிறார்கள்.கணவனுக்கு அடிமையாக அவள் போகவேண்டும் என்பதற்காகவே சிறுவயதிலிருந்தே அவளுக்கு சுயமரியாதை கற்பிக்கப்படுவதில்லை. சிறுவயதில் விளையாடப் போகும்போதே ஆண்களுக்கு என்று தனிவிளையாட்டு, பெண்களுக்கு என்று தனிவிளையாட்டு என்று இருக்கிறது. ஒரு சில விளையாட்டுகளை பெண்கள் விளையாடவே இந்த சமூகம் அனுமதிப்பதில்லை. ஆஸ்திரேலியா மிக முன்னேறிய நாடுகளில் ஒன்று. சில மாதங்களுக்கு முன் ஒரு பொது நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஒரு பெண் வந்திருந்தார். அவருக்கு 50 – 55 வயது இருக்கும். ரக்ஃபி என்று ஒரு விளையாட்டு. கொஞ்சம் ஆபத்தான விளையாட்டு. அது ஆண்களுக்கான விளையாட்டாக மட்டும் இருந்தது. முதன்முதலில் நான் தான் ரக்ஃபி விளையாட பெண் குழுவை ஏற்பாடு செய்தேன் என்றார் அந்தச் சிறப்பு விருந்தினர். ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே இப்படி என்றால் நமது நாடு, இந்தியாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பெரும்பாலான விளையாட்டுகள் பெண்களுக்குத் தடை செய்யப்படுகிறது. கல்வி கற்கவே வேண்டாம்.பெண்கள் என்ன படிக்கணும், வேலைக்குப் போகணுமா? போகக்கூடாதா? என்பதை அந்த வீட்டில் இருக்கும் ஆண்கள்தான் முடிவு செய்கிறார்கள். அதுபோல திருமணம், காதல் கல்யாணம் எல்லாவற்றிலுமே ஆண்களின் அடிமைகளாகத்தான் பெண்கள் இருக்கிறார்கள்.ஆண்குழந்தை பிறந்து கொஞ்சம் வளர்ந்தபிறகு, அந்தத் தாய் சுயமரியாதை அற்றவளாகத்தான் அந்த வாழ்க்கையைக் கழிக்கிறார். இதுவெல்லாம் எப்போது நான் உணர்கிறேன்? – சுயமரியாதை அற்றவளாக இருந்திருக்கிறேன் என்பதெல்லாம் எப்போது நான் உணர்கிறேன் என்றால், பெரியாரின் பெண்ணியத்தைப் படித்தபிறகுதான்.
அடுத்தது அறிவு… என்னைப் பொறுத்தவரையில் கல்வி கற்றவர்கள் எல்லாம் அறிவுடையவர்கள் கிடையாது.ஆனால் எனக்கு இருக்கும் அறிவை விரிவுபடுத்திக் கொள்ளவும், பரிமாறிக் கொள்ளவும் எனக்கு கல்வி மிக அவசியமானது. இந்திய சமூகத்தில் பெண்கள், பல நூற்றாண்டுகளாக கல்வி இல்லாமல்தான் இருக்கிறார்கள். இந்தியாவின் முதல் பெண் மருத்துவர், முத்துலெட்சுமி அவர்கள் படிக்கச்சென்றபோது, அங்கிருந்த ஆண்கள் எல்லாம் சொன்னது, நீங்கள்.. பெண்கள் படிக்கவந்தால் எங்கள் கவனம் சிதறும். அந்தச் சமூகத்தில் பெரியார் என்ன சொல்கின்றார் என்றால் “பத்து ஆண்டுகளுக்கு ஆண்கள் படிக்கக்கூடாது, பெண்கள் மட்டும்தான் படிக்கவேண்டும் “ என்று சொல்கிறார்.அப்படி படித்தால்தான் ஆண் கல்வி,பெண் கல்வி இரண்டும் சமமாகும், அப்படி ஆவதற்கு 10 ஆண்டுகள் பெண்கள் மட்டுமே படிக்கவேண்டும் என்று சொல்கின்றார்.என் கையில் இருக்கும் கரண்டியைப் பிடிங்கிவிட்டு, என் கையில் புத்தகத்தைக் கொடுக்கவேண்டும் என்று சொல்கின்றார். ஒரு வீட்டில் 4 ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்தால்,முதலில் அந்தப் பெண்ணைத்தான் படிக்க வைக்கவேண்டும் என்று சொல்கின்றார். பெரியார் பேசிய பெண்ணியத்தில் மிக முக்கியத்துவம் கொடுத்தது ஒன்று என்றால் அது கல்விதான்.
அடுத்து மனிதர்க்கு …நான் பெண்களைப் போற்றிய கவிஞர்களைப் பார்த்திருக்கிறேன். பெண்களைப் பெருமைப்படுத்தியவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் பெரியார் என்ன சொல்கிறார் என்றால், பெண்மையை ஒழிக்கவேண்டும் என்று சொல்கின்றார். ஏன் என்றால், பெண்மையை ஒழிப்பதன் மூலமாகத்தான் ஆண்மையை ஒழிக்கமுடியும். அந்த ஆண்மையை ஒழிப்பதன் மூலமாகத்தான் பெண் அடிமைத்தனத்தை ஒழிக்கமுடியும்.அப்போ ஆணும் பெண்ணும் சமமாக வேண்டும் என்றால் பெண்மையை ஒழிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்.
அடுத்து அழகு… இந்திய சமூகத்தில் ஒரு பெண் அறிவு இல்லாமல் கூட இருந்துவிடலாம். ஆனால், அழகு என்பது மிக மிக முக்கியமானது. ஏன் என்றால், அப்போதுதான் திருமணச் சந்தையில் எளிதாக அவள் விலை போவாள். அதற்காக இந்தியப் பெற்றோர்கள் தங்கள் பெண்ணுக்குக் கல்வி இல்லை என்றாலும் பரவாயில்லை; பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், தந்தை பெரியார் ஒரு பெண் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லியிருப்பதைத் தகர்த்து எறிகிறார். உன் முடியை வெட்டிக்கொள்… உன் தலை என்ன பூச்சாடியா? அதில எதுக்கு பூக்களை வச்சுக்கிற.. ஆண்களைப் போல உடையை உடுத்து, உனக்கு எது வசதியாக இருக்கிறதோ அந்த உடையை உடுத்து… என்று சொல்கின்றார். அதுதான் மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு… இந்த ஒரு வரியில் பெரியாரின் முழுப் பெண்ணியத்தையும் பார்க்கிறேன்.நான் படிக்கும்போது பெரியார் தேவைப்படவில்லை என்று சொன்னேன் அல்லவா… அது நாள் அப்போது எனக்கு பெரியார் தேவைப்படவில்லை என்று நான் நினைத்துக்கொண்டு இருந்திருக்கிறேன்.எனக்கு இருந்த பெரியாரின் தேவை எனக்கு அப்போது தெரியவில்லை.என் பாட்டி காலத்தில் சொன்ன பெண்ணியம் எனது அம்மா காலத்தில் இல்லை. எனது அம்மா காலத்தில் சொன்ன பெண்ணியம் இப்போது என் காலத்தில் இல்லை.ஏனென்றால், நான் படித்திருக்கிறேன். அவர்கள் காலத்தில் வேறு; பெண்ணியம். ஆனால் இன்று வேறு. தந்தை பெரியார் சொன்ன பெண்ணியம் என்னவென்றால், ஒரு பெண் என்ற காரணத்தால் உனது உரிமை மறுக்கப்படுமானால், அதை எதிர்த்து கேள்வி கேட்பதுதான் பெண்ணியம் என்று சொல்கின்றார். இது எனது பாட்டிக்கும் பொருந்தும், எனக்கும் பொருந்தும், எனது பேத்திக்கும் பொருந்தும்.இன்னும் நூறு ஆண்டுகள் கழித்தும், 1000 ஆண்டுகள் கழித்தும் தேவைப்படும் பெண்ணியம் பெரியாரின் பெண்ணியம். ஆகையால் பெரியாரின் பெண்ணியம் என்பது உலகளாவிய நிலையில் பெண்களுக்குத் தேவைப்படும் பெண்ணியம்.’’
மேற்கண்டவாறு உரையாற்றிய சுமதிவிஜயகுமாரின் உரை தந்தை பெரியாரின் பெண்ணியத்தை மிகத் தெளிவாக எடுத்துவைத்த உரை “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’’ என்னும் தந்தை பெரியாரின் பொன்மொழியை பெண்ணிய நோக்கில் விளக்கிய உரை. பெரியாரின் பெண்ணியம் உலகத்தில் செயல்படுத்தப்படுமானால், அனைவரும் அதனை விரும்பி ஏற்று மேற்கொண்டால் அந்த உலகம் மிக இனிமையான உலகமாக அமையும். ஏனெனில் பெரியார் காணவிரும்பிய சுயமரியாதை உலகம் என்பது மிகப்புதுமையானது.அறிவின் அடிப்படையில் அமைவது. ஆண், பெண் இருபாலருக்கும் மனவிடுதலை கொடுக்கும் வகையில் அமைவது. அதனை நோக்கிய பயணத்தில் நமது பெண்கள் செல்ல அவர்கள் கையில் இனிவரும் உலகம், பெண் ஏன் அடிமையானாள்? ஆகிய புத்தகங்களைக் கொடுப்போம், படிக்கச்செய்வோம்.. அவர்கள் பலன்பெறவும், உலகப்பெண்கள் ஆண்மையிலிருந்து விடுபடவும் தொடர்ந்து பாடுபடுவோம்.