சுயமரியாதைப் போராட்டத் தளபதி சி.டி.நாயகம்

அக்டோபர் 01-15, 2020

சி.டி.நாயகம்

அய்யா அவர்களது அடிநாள்தோழராக, தொண்டராக, நன்னம்பிக்கைக்குரியவராக வாழ்ந்த பெருந்தகையாளர் தெய்வநாயகம் அவர்கள் நெல்லைமாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் 7.10.1878இல் பிறந்து அவ்வூரிலேயே கல்வி கற்றவர்.

சென்னைக்கு வந்து பிட்டி.தியாகராயர் தாளாளராயிருந்து நடத்தி வந்த ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தென்னிந்திய நலவுரிமைச் சங்கப்பற்று மேவியவராய், அதன்வழி சமுதாய மறுமலர்ச்சி படைக்கப் பாடுபடும் சுயமரியாதை இயக்க ஈடுபாடும் கொண்டார்.

தம் சொந்த முயற்சியில் சென்னையில் பொருளியற்றி கல்விபெற்று, கூட்டுறவுத்துறை உதவிப்பதிவாளர் பதவியில் அமர்ந்து, தம் நிலையை நன்கு பயன்படுத்தி, நம் இனமக்களுக்கு என்னென்னவெல்லாம், எப்படியெப்படியெல்லாம் செய்யலாமோ அவற்றைச் செய்துகாட்டினார். அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற மறுநொடியே தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தம்மை ஒப்படைத்துக் கொண்டார். அய்யா கருத்துகளைச் சொல்லிவிட்டால், நாயகம் அதை விளக்கிச் சொல்வார்; அதற்கு ஆதாரங்கள் விநாடியில் சேர்த்துவிடுவார்.

சுயமரியாதை மணங்கள் அவரால் நிறைய நடத்தப்பெற்றன. பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இயக்கக் கொள்கைகட்கு அருமையான விளக்கங்கள் கொடுத்தார். முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதல் சர்வாதிகாரியாகப் பொறுப்பேற்று நடத்திய வரலாற்றுக் கீர்த்தியை அடைந்தார். இப்போரில் கைதாகி 18 மாதச் சிறை வாழ்க்கைப்பட்டு, தம் உடல் நலம் பெரும் கேடுற்றும் இயக்கப் பிணைப்பைத் தளர்த்திக் கொள்ள நாயகம் முனைந்தது கிடையாது.

மூடநம்பிக்கைகளை உடைப்பது, பெண்ணுரிமை பேணுவது, பின்தங்கி விட்டவர்களின் கல்வி ஆகிய நோக்கங்களை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருந்தார். தம் சிக்கன வாழ்க்கையின் பயனாகக் கிட்டிய பொருளையெல்லாம் கல்விக்கூடங்களை அமைத்து நம் இனமக்களுக்குப் பயன்படுமாறு செலவிட்டார்.

அய்யா – மணியம்மையார் திருமணம் என்ற எதிர்காலம் பற்றிய தொலைநோக்குள்ள ஏற்பாடு திட்டமிடப்பட்டபோது, அந்தத் திருமணப்பதிவு நடத்தப்படத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் நாயகம் அவர்களின் இல்லம்தான்.

தம் வாழ்நாள் முழுதும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கட்காகவே உழைத்து வந்த நாயகம் 13.12.1944இல் இயற்கை எய்தினார். அவரது உருவச்சிலையொன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள தியாகராயர் உயர்நிலைப்பள்ளியின் முன்னால் நிறுவப்பட்டுள்ளது.

அவர் மறைந்தபோது “குடிஅரசு” ஏட்டில் தந்தை பெரியார் எழுதிய துணைத்தலையங்கம்:

நம் அன்பர் ஆருயிர்த்தோழர் சி.டி.நாயகம் முடிவெய்திவிட்டார். இனி அவரது இடத்தைப் பூர்த்தி செய்ய ஆள் இல்லை என்கின்ற நிலையில், உண்மையாய் உழைத்து வந்த உத்தமர் மறைந்தார்.எளிய வாழ்க்கை உள்ளவர். அதனால் மீதப் பணத்தையெல்லாம் கல்விக்குச் செலவு செய்தவர், நினைப்பதுபோல் பேசுபவர், பேசுவதுபோல் நடப்பவர்.

உண்மையில் கண்ணியமானவர். வேஷத்திற்கு என்று நடக்கும் காரியம் அவரிடம் எதுவும் இருந்ததில்லை. அப்படிப்பட்ட பெரியார் முடிவெய்தினது நமக்கு மாபெரும் நட்டமென்றே சொல்லுவோம். அதுவும் பரிகரிக்க முடியாத நட்டமென்றே சொல்லுவோம்.

அவரது குடும்பத்தார் பகுத்தறிவுவாதிகள், அவர்களுக்கு எவருடைய ஆறுதலும் தேவை இருக்காதென்றே கருதுகிறோம்.

தமிழ் மக்கள் ஆங்காங்கு கூட்டம் கூட்டி அவர்களது அனுதாபத்தை அக்குடும்பத்தாருக்கு தெரிவித்துக்கொள்ள வேண்டுகிறோம்.

நாயகம் அய்யா அவர்களைப் போலவே இருந்து உழைத்து வந்த அவரது வாழ்க்கைத் துணைவியார் தோழர் சிதம்பரம் அவர்கள் அய்யா அவர்கள் விட்டுப் போனகாரியங்களை பின்தொடர்வார்கள் என்று உறுதி நமக்கு உண்டு.

“குடிஅரசு” 16.12.1944

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *