பெண்ணால் முடியும்: அய்.எப்.எஸ். பணியில் அண்ணாவின் பேத்தி

அக்டோபர் 01-15, 2020

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019ஆம் ஆண்டுக்கான  சிவில் சர்வீஸ் தேர்வுகளைக் கடந்தாண்டு செப்டம்பரில் நடத்தியது. அதன் தேர்வு முடிவுகள் கடந்த மாதத்தில் வெளியானது. தமிழகத்தில் இருந்து 44க்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் தமிழக மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியவர், சென்னையைச் சேர்ந்த பிரித்திகா ராணி. அதற்குக் காரணம், அவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் கொள்ளுப் பேத்தி ஆவார். தன்னுடைய 23 வயதில் முயற்சியிலேயே அய்.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று தன் லட்சியத்தை அடைந்துள்ளனார்.

பேரறிஞர் அண்ணாவின் மகனான பரிமளம் அண்ணாதுரையின் மகள் தான் இளவரசி. இளவரசி – முத்துக்குமார் தம்பதியின் மூத்த மகள் பிரித்திகா ராணி. தான் கடந்து வந்து பாதையைப் பற்றி பிரித்திகா ராணி கூறுகையில்; பொறியியல் பட்டதாரியான நான், அய்.ஏ.எஸ். தேர்வுக்காக சரியாக திட்டமிட்டு படிக்கத் துவங்கினேன். வாசிப்பில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. என் தந்தையின் நண்பர் மகள் அய்.ஏ.எஸ். தேர்வு பயிற்சிக்காக எங்கள் வீட்டில் சிறிது காலம் தங்கிப் படித்து வந்தார். அவர் தேர்வுக்குப் படிக்கும் முறையைப் பார்த்து நானும் அதுபோல் படிக்க ஆசைப்பட்டேன். அய்.ஏ.எஸ். தேர்வினை எழுதிப் பார்க்கவும் ஆசை ஏற்பட்டது. 2018ஆம் ஆண்டு கல்லூரிப் படிப்பு முடிந்த அடுத்த தினமே சங்கர் அய்.ஏ.எஸ். அகாடமியில் பயிற்சிக்காகச் சேர்ந்து விட்டேன். வெற்றியை மனதில் எண்ணி முதல் முறை தேர்விலேயே வெற்றி பெற்றிட வேண்டும் என்கிற எண்ணத்தோடு தெளிவாகத் திட்டமிடத் துவங்கினேன். தேர்வுக்குத் தயாரான இரண்டு வருடங்களும் செல்போன், சமூக வலைதளங்கள் என எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து தீவிரமாகப் படித்தேன். தொடர்ச்சியாக 16 மணிநேரங்கள் கூட தேர்வுக்காகப் படித்திருக்கிறேன். அடிப்படையில் பொறியியல் பட்டதாரியான நான் எனக்கு ஆர்வம் உள்ள ஆந்த்ரபாலாஜி (மானிடவியல்) பாடப்பிரிவை விருப்பமாக எடுத்துக் கொண்டேன். கடந்த செப்டம்பரில்  முதல் முறையாகத் தேர்வு எழுதினேன். தேர்வு முடிவில் இந்திய அளவில் 171ஆம் இடத்தைப் பிடித்தேன். எனக்குச் சிறு வயதிலிருந்து விளையாட்டு மீது ஆர்வமிருந்து வருகிறது. பள்ளிகளுக்கு இடையேயான டென்னிஸ் போட்டியில் நிறைய பதக்கங்களைப் பெற்றுள்ளேன். எனக்கு இந்தி தெரியாவிட்டாலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாயிலாகவே படித்து வெற்றி பெற்றுள்ளேன். வருங்காலத்தில் இந்தியாவின் சர்வதேச உறவுகள் மற்றும் அய்.நா. அல்லது உலக சுகாதார அமைப்பில் பணியாற்றுவது எனது விருப்பம் என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

அவருக்கு அவர் விரும்பியபடி IFS துறையில் பணியும் கிடைத்துள்ளது. அவரின் பணி மேன்மேலும் சிறக்க நாமும் வாழ்த்துவோம்.

இவரின் வெற்றியை வாழ்த்தி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பிரித்திகாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  மேலும் பேரறிஞர் அண்ணாவைப் போல் இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டும் வகையில் மேன்மேலும் பல உயரங்களை அடைந்திட வேண்டும் என வாழ்த்து மடலையும் அனுப்பியுள்ளார்.

தகவல் : சந்தோஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *