உலகில் புகழ்பெற்ற இரட்டையர்கள் உண்டு. ஆனால், எவரும் நமது ஆர்க்காடு இரட்டையர்கள் ஏ. இராமசாமி (முதலியார்) ஏ.இலட்சுமணசாமி (முதலியார்) ஆகியோருக்கு ஒப்பிடவோ, இணையாகவோ கூறிட முடியாது.
1887ஆம் ஆண்டு இதே நாளில் (அக்டோபர் 14) பிறந்தவர்கள் இவர்கள் இருவரும். ஒருவர் (ஏ.ஆர். முதலியார்) அரசியல் உலகிலும், தொழில் உலகிலும் கொடிகட்டி ஆண்டவர் என்றால், மருத்துவ உலகிலும், கல்வித் துறையிலும் பட்டொளி வீசிப் பறந்தவர் ஏ.எல். முதலியார்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் 25 ஆண்டுகாலம் துணைவேந்தராகவிருந்து வெள்ளி விழா கண்ட தங்கமனிதர் ஏ.எல். முதலியார்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம் இந்த இரட் டையர் இருவருக்குமே டாக்டர் பட்டம் அளித்துப் பாராட்டியது என்றால், இது என்ன சாதாரணமா! அய்தராபாத் பிரச்சினை தொடர்பாக அய்.நா. மன்றம் சென்றது மட்டுமல்ல – வென்றும் வந்தார் ஏ.ஆர். முதலியார் என்பது சரித்திரம்.
இவர்களின் நூற்றாண்டு விழாவை திராவிடர் கழகம் வெகு நேர்த்தியுடனும், பெருமையுடனும் கொண்டாடியது (19.1.1988).
1917இல் ஏ.ஆர். முதலியார் நீதிக்கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார்.
ஏ.எல். முதலியார் தமிழ் நாடு சட்டமன்ற மேலவையில் எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். யுனெஸ்கோவின் ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்தார்.
இரட்டையர்கள் இருவரும் தந்தை பெரியாரின் பேரன்புக்குப் பாத்திரமானவர்கள். தந்தை பெரியாரை மிகவும் மதித்தவர்கள். ‘தமிழ்நாட்டின் ரூசோ’ என்று தந்தை பெரியார் அவர்களைக் குறிப்பிட்டவர் ஏ.ஆர். முதலியார் ஆவார்.