சிறுகதை: உயிரோடு வாழட்டும்

அக்டோபர் 01-15, 2020

 தகடூர் தமிழ்செல்வி

அடுப்பங்கரை ஜன்னல் வழியாக தெருவில் போய்க் கொண்டிருப்பவர்களைப் பார்த்துக் கொண்டே கருவாட்டை பொரிக்கஞ்சட்டியில் புரட்டிக் கொண்டிருந்தாள் நாகலட்சுமி. சிலர் இருவர் இருவராகப் பேசிக் கொண்டும், சிலர் தலை கவிழ்ந்த வண்ணம் நடந்தும் போய்க் கொண்டிருந்தனர். கோபமாகவும் சத்தமாகப் பேசிக் கொண்டும் செல்பவர்கள் மேட்டுத்தெரு ஆள்கள் என்றும்,

தலைகவிழ்ந்த வண்ணம் செல்பவர்கள்  எல்லாம் மகர்வாடிப்பட்டி ஆள்கள் என்றும் தனக்குள்ளாக நினைத்துக்கொண்டாள்.

உள்ளே மச்சு வீட்டுக்குள் புத்தகம் படித்துக் கொண்டிருந்த அவள் கணவன்  ராமசாமி,

“ஏ புள்ள ! நாகு, கொஞ்சம் காப்பித் தண்ணி குடுக்கிறியா?’’ என்று குரல் எழுப்பினான்.

என்ன இது , வீட்டு ஆம்பளை இவ்வளவு நேரத்துக்கு காப்பித் தண்ணி கேக்குறாக, என்று நினைத்துக்கொண்டே,

“ஏன் மாமா, அங்க எல்லாரும் கோவில் தெடல நோக்கிப் போயிட்டு இருக்காங்க. நீங்க என்னடான்னா இங்க உட்கார்ந்துக் கிட்டு காப்பி கேட்டுக்கிட்டு இருக்கீங்களே!’’ என்றாள்.

“இரு நாகு ,நம்ம பயலுக நாலு பேர வரச் சொல்லியிருக்கிறேன். அவனுகளோட கொஞ்சம் பேச்சு இருக்கு .அதுக்கப்புறம் உடனே கிளம்பி விடுவோம்’’ என்றான் ராமசாமி. ராமசாமிக்கு காப்பித்தண்ணி கொடுத்துவிட்டு வந்து தெருவில் நின்று கொண்டாள் நாகலட்சுமி.

கோவிலிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த பக்கத்துவீட்டுக் கோகிலா நாகலட்சுமியிடம்  வந்தாள்.

“அத்தை, நம்ம மாரியம்மன் கோவில் அர்ச்சகர் இருக்கார்ல, அவர் என்ன சொன்னார் தெரியுமா?’’ என்றாள்.

“சொல்லுடி சொன்னாதானே எனக்கு தெரியும்’’ என்றாள் நாகலட்சுமி.

இன்னைக்கு நம்ம ஊர் புவனா, மகர்வாடிப்பட்டி முருகனை காதலிக்கிறத எதிர்த்து பஞ்சாயத்து போடறாங்களே, அதுக்கு அவரு என்ன சொல்றாருன்னா, “கலி முத்திடிச்சு, பொம்மனாட்டிங்க இரண்டாவது கல்யாணம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இதுக்குத்தான் அந்தக் காலத்திலேயே நம்ப முன்னவா ஆத்து பொம்மனாட்டிகள் எல்லாம்  கணவன் செத்துட்டா கணவனோடேயே  உடன்கட்டை ஏறினாங்க”  அப்படின்னு சொல்றாரு அத்தை..” என்றாள். “அதுக்கு நீ என்னடி சொன்ன கோகிலா?’’ என்றாள் நாகலட்சுமி…

“உடன்கட்டை ஏறி இருக்க மாட்டாங்க சாமி. எல்லாரும் சேர்ந்து உடன்கட்டை ஏற்றி இருப்பாங்க’’ அப்படின்னு நான் சொன்னேன்…

“அவர் இன்னும் என்ன சொன்னார்னா,

“என்ன இருந்தாலும் உயிருக்குயிரான கணவன் இறந்த பிறகு  பொம்மனாட்டிகள் வாழ்ந்தா இப்படித்தான் வேற்று ஜாதி ஆம்பளைய காதலிக்க ஆரம்பித்து விடுவா.

என்று காஞ்சி பெரியவாள் சொல்லி இருக்கார் தெரியுமா கோகிலா? உயிருக்கு உயிரான கணவன் இறந்த உடனேயே மனைவியும் உயிரை அழிச்சிக்கிறது ஒரு நல்ல முடிவுதானே” அப்படிங்கறார் அத்தை.

பதிலுக்கு நான் என்ன சொன்னேன் தெரியுமா? நல்லது தான்  சாமி. நீங்களும் உங்க உயிருக்குயிரான  மனைவி இறந்தால் உடனே உடன்கட்டை ஏறிடுங்க சாமி.ஒரு நிமிஷம் கூட  இந்த உலகத்தில் வாழாதீங்கனு   சொல்லிவிட்டு உடனே ஓடி வந்துட்டேன் அத்தை என்றாள்.

“சரியாத்தான் சொல்லியிருக்க கோகிலா என்று கோகிலாவைப் பாராட்டி விட்டு கோவில் திடலை நோக்கி நாகலட்சுமி நடக்கத் தொடங்கினாள். முன்னே சென்றுகொண்டிருந்த புவனாவின் தந்தை முத்துசாமி,”இந்த காலனிகாரப் பசங்களுக்கு எவ்வளவு திமிர் இருந்தா நம்ம ஜாதியில் பொண்ணு கேக்குது. இன்னைக்கு இவனுகளை மாறு கால் மாறு கை வாங்காம விடுவதில்லை . ரெண்டுல ஒன்னு பார்த்தே ஆகணும்’’ என்று கறுவிக் கொண்டே சென்று கொண்டிருந்தான். அதைக் கவனித்த நாகலட்சுமி திரும்பி வீட்டுக்குள் ஓடி வந்து “என்ன மாமா, இந்த முத்துசாமி  இவ்வளவு கோவமா கத்திக்கிட்டுப் போறாரு? எனக்குப் பயமா இருக்கு மாமா, நீங்க சீக்கிரம் பஞ்சாயத்துக்குக் கிளம்புங்க’’ என்றாள்.

“இதோ நம்ம பசங்க வந்துட்டாங்க . ஒரே அஞ்சு நிமிஷத்துல பேசிட்டு கிளம்பிருவோம். பயப்படாதே நீ’’ என்றான் ராமசாமி. நாகலட்சுமிக்கு மனம் மிகவும் கனத்துப் போனது .ஏதோ சின்னஞ்சிறுசுக காதலிச்சுட்டாங்க. ரெண்டு பேருமே படிச்ச புள்ளைக தானே?

அதுல இந்தப் புவனா ரொம்ப பாவம். கல்யாணம் பண்ணிக் கொடுத்து மூணு மாசத்துலயே புருஷன் செத்துட்டான்.

இளம் வயசு எங்கிறதாலே அவளுக்கு ஒரு துணையைத் தேடிக் கிட்டா. அதுல என்ன தப்பு இருக்கு ? நல்லபடியா கல்யாணம் பண்ணி வச்சா இந்த ஊரென்ன குறைஞ்சா போகுது! என்று முனகிக்கொண்டே அவளும் திடலை நோக்கி நடக்கத் தொடங்கினாள். ஓடிப் போனவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட புவனாவும் முருகனும் தனித்தனியாக நிற்க வைக்கப்பட்டிருந்தார்கள் .

நாட்டாமை மாரியப்பன் வந்து சேர்ந்தார். அதற்குள் ராமசாமியும் அவரைச் சேர்ந்த இளைஞர்களும் தனித்தனியாக கோவில் திடலுக்கு   வந்துவிட்டார்கள். எடுத்த எடுப்பிலேயே நாட்டாமை பேசத்தொடங்கினார். “இங்கே பாருங்கய்யா எல்லாத்துக்கும் நான் சொல்றது ஒன்னு தான். பஞ்சாயத்தை அமைதியா நல்லபடியா பேசி முடிச்சிடலாம். இல்லேனா கூச்சல் குழப்பம், அடிதடி, வெட்டுகுத்துன்னு போனீங்கன்னா அதுக்கப்புறம் போலீஸ் வந்துரும். .அது ஊருக்கே அசிங்கமாயிடும், அவ்வளவு தான் நான் சொல்றது’’ என்று சொல்லி முடித்தார்.

அதற்குப்பின் முத்துசாமி தான் முதலில் பேசத் தொடங்கினான். ‘’இங்க பாருங்க அய்யா, ஊருக்கெல்லாம், நாட்டாமைக்கும் சேர்த்துச்  சொல்லிக்கொள்வது, என் பொண்ண என்னோடு அனுப்பி விடுங்க. அதுக்கு  வெளியே உட்கார வைத்து தலைக்குத் தண்ணி ஊத்தி ,நான் வீட்டுக்குள்ள கூப்டுக்கிறேன். மகர்வாடிப்பட்டிக்  காரனுக ஒரு பய கூட இந்தத் தெருப் பக்கம் வரவே கூடாது.

அந்தப் பக்கம் கோயிலைச் சுத்திக்கிட்டு போற பாதைல தான் போகணும். மீறி வந்தாங்கன்னா கால வெட்டாமல் விடமாட்டேன்’’ என்று ஆத்திரமாகக் கூறினார். உடனே ராமசாமியின் இளவட்டங்கள், “முடியவே முடியாது.அப்படி எல்லாம் பொண்ணை அனுப்ப முடியாது. அவர்களுக்கு இந்த இடத்திலேயே நம்ப மாரியம்மன் கோவிலில் வைத்து மாலை மாத்தி கல்யாணம் பண்ணி இந்த ஊரிலேயே எல்லாருக்கும் முன்னாடியே வாழ வைக்கணும்’’ என்று சத்தம் போட ஆரம்பித்தார்கள்.

உடனே மேட்டுத்தெரு இளைஞர்கள் ஆத்திரமாக, இந்தப் பையனை உயிரோடு விட்டுவைத்ததுதான் தப்பு. எங்க கண்டுபிடிச்சாகளோ, அந்த இடத்திலேயே வெட்டிப் போட்டுட்டு வராம இங்கே வந்து வெட்டி நாயம் பேசிட்டு இருக்காங்க.

அதனால தான் எல்லா பசங்களுக்கும்  நம்பளைப் பாத்தா ரொம்ப எளக்காரமாக போச்சு. நான்கு எழுத்து படிச்சுட்டோம்குற அந்தத் திமிரில்  எவ்வளவு துணிச்சலாப்  பேசுறாங்க பாருங்க.’’ என்று ஆத்திரமாகக் கத்திக்கொண்டே இளைஞர்கள் பக்கம் ஓடி வர தொடங்கினார்கள்.

அவர்களை கையால் தடுத்து நிறுத்திய ராமசாமி புவனாவை பார்த்து, “ஏம்மா நீ பண்ணின காரியம் இந்த ஊருக்கு எவ்வளவு அசிங்கமா போச்சு. உங்க ரெண்டு பேரும் இந்த ஊர்ல இருந்தா அந்த ஊருக்கே அசிங்கம். உங்க முகத்தை பார்க்கவே எனக்கே புடிக்கல’’. என்று சொல்லிவிட்டு நாட்டாமை பக்கம் திரும்பி,  “நாட்டாமை, அந்தப் புள்ளையக் கேளுங்க. நான் இவனோட தான் வாழுவேன் அப்படின்னு சொல்லிட்டா  எங்கேயோ நாசமாப் போட்டும். ஆனால் அதுக்கப்புறம் ஒரு நிமிடம் கூட இந்த ஊர்ல இருக்கக்கூடாது. உடனடியாத் துரத்தி விடுங்க . இல்லாட்டி அவங்களைப் பார்த்து இங்க  இருக்கிற இன்னும் நிறைய பசங்களும் அதே மாதிரி கத்துக்குவாங்க. கெட்டுக் குட்டிச்சுவர் ஆகி விடுவார்கள்’’ என்று சொன்னான்.

நாட்டாமை புவனாவைக் கூப்பிட்டு, “என்னம்மா சொல்ற?’’ என்று கேட்டவுடன் ,புவனா கண்ணீர் மல்க, “மாமா நான் முருகனோடு தான் வாழ்வேன்’’ என்று சொல்லிவிட, உடனே அங்கே இருந்த அவருடைய உறவுக்காரப் பெண்கள் அனைவரும் மண்ணை வாரி எடுத்து, “நீ நாசமா போயிடுவே! என் குடும்பத்துக்கே  அசிங்கம் பண்ணிட்டியே! நீ நாசமா போயிடுவே! நீ வாழவே முடியாது! என்று சொல்லியபடி மண்ணை அவள் மீது வாரி இறைத்தனர். புவனாவின் அம்மா ராக்கம்மா மட்டும் மண்ணை வாரி, இறைக்காமல் கண்ணீர் விட்டபடி அழுது கொண்டிருந்தாள். அதனைப் பார்த்த  முத்துசாமி,’’ ஏண்டி! நமக்குன்னு இருந்த ஒரு பொண்ணு செத்துட்டா. அவள சவக்குழியில் போட்டுட்டோம்னு நெனச்சு மண்ணை வாரிப் போடுடி, முண்டம்! என்று மனைவியைத் திட்டத் தொடங்கினான்.

ராக்கம்மாவும் மண்ணை கையில் வாரினாள். எல்லோரையும் அமைதிப்படுத்திய நாட்டாமை, “எல்லாம் அவங்க அவங்க வீட்டுக்குப் போங்கப்பா என்று சொல்லிவிட்டு, புவனாவின் பக்கம் திரும்பி,’’ நீங்க ரெண்டு பேரும் இந்த நிமிஷத்துலேருந்து இந்த ஊர்ல இருக்க கூடாது. உடனடியா இந்த ஊரைவிட்டுக் காலி பண்ணுங்க. திரும்ப ஊர் பக்கம் காலை  வைக்கக்கூடாது’’ என்று மிரட்டிய வாக்கில் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

முத்துசாமியைத் தொடர்ந்து அவர் குடும்பத்தாரும், ஒப்பாரி வைத்து அழுதபடி அவர்கள் வீட்டுப் பெண்களும் சென்றனர். ராக்கம்மா முந்தானையைச் சரி செய்கிற பெயரில் கையிலிருந்த மண்ணை, தன் மகள் மீது வீசாது தன் கையிலேயே வைத்து இருந்த மண்ணை அப்படியே கீழே உதறி விட்டபடியே அவர்களைப் பின் தொடர்ந்தாள்..

புவனாவும் முருகனும்  மெல்ல நகர்ந்து அந்தத் தெருவில் இருந்து டவுன் பஸ் நிற்கும்  பேருந்து நிறுத்தத்தை அடைந்தனர். அவர்களுக்கு முன்னதாகவே அங்கே சென்று காத்திருந்தனர் ராமசாமியின்  நான்கு இளைஞர்களும். வீட்டுக்குத் திரும்பியதும்  நாகலட்சுமி ராமசாமியை பிடி பிடி என்று பிடித்துக்கொண்டாள். “என்ன மாமா, இவ்வளவு அநியாயம் பண்ணிட்டீங்க. வீட்டுல இருக்கிற புத்தகங்களை எல்லாம் படிச்சுப் படிச்சு  என்னிடம் அடிக்கடி சொல்லுவீகளே!

ஜாதி பார்த்துப் பழகுவது தப்புன்னு சொல்லுவீகளே, இன்னைக்கு புவனாவை அந்த அளவுக்கு அசிங்கமா கேள்வி கேட்டுட்டீங்களே மாமா! என்று கேட்டு கதறத் தொடங்கினாள்

அதற்கு ராமசாமி, “நாகலட்சுமி நான் ஒன்றும் தவறு செய்து விடவில்லை .அவர்கள் இருவருக்கும் நல்லது தான் செய்திருக்கிறேன். இன்றைக்கு மட்டும் அவர்கள் உயிரோடு இங்கே இருந்தார்கள் என்றால் இன்று இரவு வரை கூட தாங்க மாட்டார்கள்.

நம்முடைய உறவினர்கள் எல்லாம் முத்துசாமிக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் ஜாதி வெறியை ஊட்டி ஊட்டி அந்த இருவரையும் இன்று இரவே கொலை செய்திருப்பார்கள் என்கின்ற அளவிற்கு இங்கே ஒரு கூட்டம் திட்டமிட்டு வேலை செய்கின்றது என்கிற தகவல் எனக்குக் கிடைத்தது. அந்த அடிப்படையில்தான் அவர்கள் முதலில் இந்த ஊரிலேயே இருக்கக்கூடாது. அவர்களை உடனடியாக இந்த ஊரில் இருந்து அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் நானும் அந்த இளைஞர்களும் சேர்ந்து ஒரு நாடகமாக இதனை அந்த பஞ்சாயத்தில்  இப்பொழுது அவர்கள் முன்னே நடத்தினோம்.

எல்லோரும் பாதுகாப்பாக மதுரைக்குச் செல்கிறார்கள். அங்கே அவர்கள் தங்குவதற்கும் வாழ்வதற்கும் உண்டான எல்லா வசதிகளையும் அந்த இளைஞர்கள் மூலமாகச் செய்து கொடுத்திருக்கிறேன். இதில் இன்னும் ஒன்று என்னவென்றால், அந்த இளைஞர்களில் ஒருவர், அருணாசலம் என்பவர் நம்முடைய தூரத்து சொந்தம்தான். அவர் முத்துசாமி  குடும்பத்தின் ஜாதிய உணர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாகப் போராடி நிச்சயமாக ஒழிக்க முயல்வார். முருகனுக்கும் புவனாவுக்கும் ஒரு குழந்தை பிறந்தால் அதற்கப்புறம் நிலைமை நிச்சயமாகச் சரியாகும். நாம் இந்த இடத்தில் நம்முடைய வீராப்பைக் காட்டுவது பெரிதல்ல. அந்த இருவரையும் அவர்கள் இருவரும் உயிரோடு இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய முக்கியமான நோக்கமாக இருந்தது. அதனால் தான் அப்படி செய்தேன் நாகு’’.

என்னுடைய அக்கா மகன் என்று சொந்த ஜாதியில் நம்முடைய பெண்ணை திருமணம் செய்து கொடுத்தோம். அவள் நல்லபடியாக வாழ்ந்தாளா? ஒரு கொடுமைக்காரக் கணவனோடு அல்லவா அவள் போராடிக் கொண்டிருந்திருந்தாள். அவளால் சமாளிக்க முடியாத நிலைமையில் இந்த உலகத்தை விட்டே சென்று விட்டாள். யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்று அவளே முடிவெடுத்து நம்மை  விட்டே சென்று விட்டாள்.

அவளை அநியாயமாகப் பறிகொடுத்து விட்டோம். ஏதோ இந்தப் பிள்ளைகளாவது நம் கண்காணிப்பில் உயிரோடு வாழட்டும்.’’ என்றான். இருவர் கண்களிலிருந்தும் ஆனந்தக் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. அங்கே பேருந்தில் “பெரியார் பேருந்து நிலையத்திற்கு 6 டிக்கெட் கொடுங்கண்ணே!’’ என்று கேட்டு அருணாச்சலம் டிக்கெட் வாங்கினான்.

கண்டக்டர் “ரைட் போலாம்’’ என்று விசில் அடித்தார். “பாண்டியன் டிராவல்ஸ்’’ மினிபஸ் பெரியார் பேருந்து நிறுத்தத்தை நோக்கி விரைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *