தந்தை பெரியாரின் அந்தரங்க செயலாளர் புலவர் இமயவரம்பன் அவர்கள் மறைவு
கி.வீரமணி
6.7.1994 பேராசிரியர் மணிசுந்தரம் அவர்களின் மகன் அருமணிக்கும் எம்.எஸ்.முத்துவின் மகள் எழிலிக்கும் சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன். மணமக்களுக்கு தந்தை பெரியாரின் நூல்களையும் வழங்கினேன்.
8.7.1994 தஞ்சாவூர் பி.ஆர்.அரங்கில் பெரியார் – மணியம்மை மகளிர் பொறியியற் கல்லூரியின் கணினித் துறை மேலாளர், பொறியாளர் மகாதேவன் — தமிழரசி ஆகியோரின் மணவிழாவினை சிறப்புடன் நடத்தி வைத்தேன். விழாவில் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி முன்னிலை வகித்தார். தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் கு.அண்ணாதுரை அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். அமெரிக்க டாக்டர் சோம.இளங்கோவன், கல்லூரி முதல்வர் கோபால்சாமி, கல்லூரி ஆசிரியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பேராசிரியர் மணிசுந்தரத்தின் மகன் அருமணி – எழிலி திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்தும் ஆசிரியர்
10.7.1994 வட ஆர்க்காடு அம்பேத்கர் மாவட்டம் நெமிலியில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் முழு உருவச்சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்தேன். விழாவையொட்டி மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நெமிலி ஒன்றிய திராவிட கழகத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் அன்பு கோ.லோகநாதன் தலைமை உரைக்குப் பின் உரையாற்றுகையில், “தந்தை பெரியார் அவர்கள் ‘நாங்கள் சொல்லுவதையும் நம்பாதே! சிந்தித்துப் பார், உன் அறிவு முழுவதையும் பயன்படுத்தி யோசித்துப்பார்!’ என்று சொன்னார். எங்களுக்கு சரி என்று பட்ட கருத்தை நாங்கள் சொல்கிறோம். இதைத் தள்ளுவதற்கு முழு உரிமை உங்களுக்கு உண்டு என்று கூறுவார். நம்முடைய இன எதிரிகள் நம்மை மூளையைக் கொண்டு முறையாகச் சிந்திக்க விடாமல் செய்து விட்டனர். அந்த மூளையில் போட்ட விலங்கை மிகப் பக்குவமாக எடுக்கக்கூடியது தான் தந்தை பெரியார் என்ற பகுத்தறிவு சம்மட்டி ஆகும்“ என்ற பெரியாரின் கருத்துகளை விளக்கி உரையாற்றினேன்.
11.7.1994 தமிழக சட்டப்பேரவையில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை ஆதரித்து நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் உடனே ஒப்புதல் தரக்கோரியும், சமூக நீதிப் பிரச்சினையை அரசியலாக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் தென்சென்னை பகுதி முழுவதும் சைக்கிள் பேரணி ஒன்றை எழுச்சியுடன் நடத்தினர்.
கழக இளைஞரணித் தோழர்கள் இந்தப் பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வழி எங்கும் இடஒதுக்கீட்டை ஆதரித்தும், அமல் படுத்தக்கோரியும் கோஷமிட்டுக் கொண்டு, பேராடுவோம் வெற்றி பெறும் வரை என முழக்கங்களை தட்டியில் எழுதி கையில் காட்டிக் கொண்டு சென்றனர்.
பேரணி செல்லுமிடமெல்லாம் ஏராளமான பொது மக்கள் கூடி நின்று பேரணியில் எழுப்பப்படும் முழக்கங்களை கவனித்தனர். தென் சென்னை பகுதியில் கழக இளைஞரணியினர் நடத்திய இந்தப் பேரணி மக்களுக்கு தெளிவான விளக்கத்தைத் தருவதாக அமைந்திருந்தது.
11.7.1994 சென்னையில் இயக்குநர் செய்யாறு ரவி — ஜெயந்தி மண விழாவில் கலந்து கொண்டேன். அந்த மண விழாவில் பேசுகையில், ஜாதியிலேயே எப்படி உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று ஜாதியைப் புகுத்தி உயர்ந்த ஜாதிக்காரர்கள் ஆதிக்கவாதிகளாகவும், அவர்கள் எவ்வாறு தாழ்ந்த ஜாதிக்காரர்களை அடிமைகளாக ஆக்கினார்களோ அதேபோல ஆண்களை ஆதிக்கவாதிகளாகவும், பெண்களை அடிமைகளாகவும் ஆக்கி விட்டார்கள். பெண்கள் அடிமைகளாகவும் இருக்கக்கூடாது. இரண்டு பேரும் உற்ற நண்பர்களாக இருக்க வேண்டும். அந்த வகையில் திரைப்படங்கள்-சமுதாய மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டும்‘ என பல கருத்துகளை எடுத்துரைத்தேன்.
11.7.1994 காலை: சென்னை தர்மபிரகாசு திருமண மண்டபத்தில் பெரியார் பெருந்தொண்டர் பி.சபாபதி இல்ல மணவிழாவில் கலந்து கொண்டு மணமகன் ச.முகிலரசு – சுமதி மலர்விழிக்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியை கூறச் செய்து, மணவிழாவை தலைமை ஏற்று நடத்தினேன். மணமக்கள் தாலி இல்லாமல் மோதிரம் மட்டும் மாற்றிக் கொண்டனர். அந்த விழாவில் உரையாற்றுகையில், “நண்பர் சபாபதி அவர்கள் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் சமூகநீதிப் புரட்சி கருத்துகளில் ஊறித் திளைத்தவர்கள். தன் குடும்பத்தையே இந்தக் கொள்கைக்காக அர்ப்பணித்துள்ளார். அறிவு ஆசான் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் எல்லாம் உழைத்த உழைப்பு – பூத்து, காயாகி கனியாகி நமக்கெல்லாம் பயன் தந்து கொண்டிருக்கிறது” என மணவிழாவில் பல கருத்துகளை எடுத்துரைத்தேன்.
சிலைத் திறப்பு விழாவில் உரையாற்றும் ஆசிரியர்
13.7.1994 தஞ்சாவூர் குரு தயாள் சர்மா அறக்கட்டளை திருமண மண்டபத்தில் காலை 10:00 மணியளவில் தஞ்சாவூர் சாமி.நாகராசன்- சுலோசனாபாய் ஆகியோரின் மகள் இந்திராவுக்கும், டி.எஸ்.கணேஷ்வரராவ் — லலிதாபாய் ஆகியோரின் மகன் சந்திரசேகரனுக்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழி கூறச் செய்து விழாவுக்குத் தலைமையேற்று நடத்தி வைத்தேன். அவ்விழாவில் உரையாற்றுகையில், “என்னுடைய திருமணம் அய்யா- – அம்மா தலைமையில் திருச்சியில் நடைபெற்ற போது எனக்கு சீர்செய்தவர் அய்யா நாகராசன் அவர்களாவார். அந்தளவுக்கு எங்களோடு இணைந்து இருப்பவர்கள். எங்களுக்கெல்லாம் ஜாதி, மதம், கட்சிக் கண்ணோட்டம் எல்லாம் இல்லை. பெரியார் கல்வி நிறுவனங்கள் எல்லாம் இன்றைக்கு இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால் இவர்களைப் போன்றவர்களின் உழைப்பிற்கு முக்கிய பங்குண்டு. சென்னையில் மிகச் சிறப்பாக இயங்கி வரும் ‘திராவிடன் நல நிதி’யைப் போன்று தஞ்சையிலும் “குடும்பவிளக்கு நல நிதி” என்ற நிறுவனம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்பதையும் தெரியப்படுத்துகிறேன்’’ என பல கருத்துகளைக் கூறினேன்.
13.7.1994 அன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த சோழபுரம் கடைவீதியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் முழு உருவச்சிலை திறப்பு விழா நடைபெற்றது. தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆர்.பி. சாரங்கன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாநில திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் துரை.சக்கரவர்த்தி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உரைக்குப் பின் நான் அறிவு ஆசான் தந்தை பெரியாரின் சிலையைத் திறந்து வைத்தேன். அங்கு சிறப்பு உரையாற்றுகையில், ஜாதி ஒழிப்பு மற்றும் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற செம்மொழிச் செம்மல்களைப் பாராட்டினேன். சிலை திறப்பை ஒட்டி மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி நகர திராவிடர் கழக இளைஞரணி தலைவர் ரா.ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. சோழபுரம் நகரம் முழுவதும் கழக கொடி தோரணங்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
20.7.1994 தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 69 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதனை அமல்படுத்துவதற்காக திராவிடர் கழகமும், பிற கட்சிகளும் தொடர்ந்து போராடி வந்த நிலையில் மத்திய அமைச்சரவை அந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு, நீண்ட இழுபறிக்குப் பின் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கைக்காக தமிழ்நாட்டில் அரசு சார்பாக முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. 69 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழக அரசின் மசோதாவை குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா அவர்கள் 1992 நவம்பர் 16 முதல் அமலானதாக ஒப்புதல் தந்து அறிவிப்பு வெளியிட்டார். ஏற்கெனவே எதிர்பார்த்திருந்த தமிழக அரசு 69% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி வந்தது. அதன் அடிப்படையில் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கவும் உத்தரவிடப்பட்டது. கழகத்தின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு செயல்பட்டதற்கு அனைத்து தரப்பு மக்களிடமும் இருந்தும் பாராட்டுகள் வந்தன.
தமிழக அரசு இந்திய அரசியல் சட்டம் 31 (சி) பிரிவின் கீழ் தனி மசோதா ஒன்றை நிறைவேற்றலாம் என எடுத்துக் கூறினேன். அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெறலாம் என்ற எனது கருத்தினை முதலமைச்சருக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தின் மூலம் எடுத்துரைத்தேன். அதனை அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒருமனதாக ஏற்றுக் கொள்ளவும்பட்டது. கடந்த 31.12.1993 சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட தனிச்சட்டம் தான் இந்த ஒப்புதலுக்கு பெரும் பலமாக இருந்தது.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு நன்றி தெரிவித்து பிரதமர், குடியரசுத் தலைவர், தமிழக முதல்வருக்கு கழகத்தின் சார்பில் தந்தி அனுப்பினோம். அந்தத் தந்தியில்,
69 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் 31-சி தனிச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தமைக்காக குடியரசுத் தலைவர் டாக்டர் சங்கர் தயாள் சர்மாவிற்கும், இந்த சட்ட ஒப்புதல் கிட்டியமைக்காக பிரதமர் பி.வி.நரசிம்மராவ் மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும் நன்றி தெரிவித்து தந்திகள் அனுப்பினோம்
குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள தந்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
“தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீடு தொடர்பான 31-சி சட்ட முன்வரைவிற்கு ஒப்புதல் அளித்த தங்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க திடமான முடிவிற்கு மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
“Please accept our heartiest thanks and appreciation for giving the assent for the Tamil Nadu Reservation Bill under 31-C, Tamil Nadu sends its warm greetings to you for your mighty Landmark decision.”
பிரதமர் பி.வி. நரசிம்மராவிற்கு அனுப்பியுள்ள தந்தியில்,
“31சி சட்டத்தின் கீழான சட்ட முன்வரைவிற்கு ஒப்புதல் கிடைக்கப் பெற்றமைக்காக நாங்கள் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த முடிவு – இந்திய சமூக நீதி சரித்திரத்தில் பொறிக்கப்படும். இந்தச் சட்டத்தை அரசியல் சட்ட 9 ஆம் அட்டவணையிலும் இணைத்து இந்தச் சட்டத்திற்கு பாதுகாப்பளிக்குமாறும் கோருகிறோம்.”
“We offer our gratitude and sincere appreciation for the Reservation Bill under 31-C being assented. This landmark decision will go down in the history of Social Justice in India. We also request you to initiate efforts to protect this Act under Nineth Schedule by bringing due Constitutional Amendment”. என்றும்,
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அனுப்பி யுள்ள தந்தியில்,
“69 சதவிகித இட ஒதுக்கீட்டைக் காக்க தமிழக சமூகநீதி வரலாற்றுச் சாதனையாக 31சி’ சட்ட முன்வரைவு கொணரப்பட்டது. இதுபற்றிய தங்கள் முயற்சி வெற்றிபெற்றமைக்கு மனமார்ந்த நன்றிகள். அரசியல் சட்டத்தின் 9 ஆம் அட்டவணையிலும் இது இடம் பெற வலியுறுத்துவோம்.”
“Please accept our heartfelt thanks and appreciation for the sincere efforts to save the 69 percent reservation by a new enactment under 31-C. Your achievement is a landmark in the history of Social Justice in Tamil Nadu. Let us go ahead and press for the Constitutional Amendment to place this under Nineth Schedule”.
என்றும், அந்தத் தந்திகள் மூலம் விரிவாக நன்றியைத் தெரிவித்து செய்தி அனுப்பினோம்.
23.7.1994 அன்று திராவிடர் கழகம் ‘International Humanist and Ethical Union’ என்னும் சர்வதேச பகுத்தறிவாளர் அமைப்பினரால், கனடாவில் நடந்த நிருவாகக்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது. உலகம் முழுவதும் செயல் படும் பகுத்தறிவாளர் அமைப்புகள், நாத்திக அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. ‘இன்டர்நேஷனல் ஹ்யூமனிஸ்ட்’ என்னும் ஆங்கிலப் பத்திரிகையும் இந்த அமைப்பு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சர்வதேச அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்து முன்னதாக திராவிடர் கழகம் சார்பில் மனு செய்திருந்தோம்.
இந்திய பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சேனல் இடமருகு, நாத்திக மய்யத்தின் தலைவர் லவனம், நார்வே நாட்டின் பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் லெவி ஃபிராகெல், அமெரிக்க பகுத்தறிவாளர் சங்கத்தின் பொறுப்பாளர் பேராசிரியர் பால்கர்ட்ஸ், சர்வதேச பகுத்தறிவாளர் நெட்டிகெல்வின் ஆகியோர் நிருவாக குழுக் கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் கோரிக்கை மனுவை முன்மொழிந்தனர். பின்னர் ஒரு மனதாக திராவிடர் கழகத்தையும் இணைத்துக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக இந்தியாவில் சில பார்ப்பனர்கள் நடத்தும் நாத்திக பகுத்தறிவு அமைப்புகள், திராவிடர் கழகத்தை இதில் சேர்க்கக் கூடாது என்று கடிதங்கள் எழுதினர். அத்தனையும் முறியடித்து நாம் வெற்றி பெற்றோம். இதனைத் தொடர்ந்து இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சேனல் இடமருகு கழகத்திற்கு பாராட்டுகளைத் தெரிவித்து கடிதம் எழுதினார். அதில், ‘5 லட்சம் உறுப்பினர்களையும், 3000 கிளைகளையும் கொண்ட – பெரியாரால் உருவாக்கப்பட்ட பழம்பெரும் பகுத்தறிவாளர் இயக்கத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். பெரியாருக்குப் பிறகு அவரது லட்சியத்தை தங்களது தலைமையில் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறீர்கள். அதற்குக் கிடைத்துள்ள வெற்றியே இந்த சர்வதேச அங்கீகாரம்’’ என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கியானி ஜெயில் சிங்
23.7.1994 தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை மகளிர் கல்லூரியில் கல்லூரி அரங்கில் இரண்டாவது பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. மொழி வாழ்த்துடன் துவங்கிய இவ்விழாவில் கல்லூரியின் தாளாளர் கோ.சாமிதுரை அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில் பட்டமளிப்பு விழா சிறப்புரையாற்றுவதாக இருந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் மாட்சிக்குரிய திரு. கியானி ஜெயில் சிங் உடல்நலக்குறைவால் வர இயலாத காரணத்தால் அவர் தமது உரையை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வெங்கடாசலத்துக்கு அனுப்பியிருந்தார். அதில் “தமிழ்நாட்டுப் பெண்கள் விடுதலைக்கு முழுவதும் காரணமானவர் தந்தை பெரியார் ஆவார். தந்தை பெரியாரின் கொள்கைகள் பரவும் வரை நம் நாட்டிலுள்ள ஒவ்வொரு பெண்ணும், குடும்பத்தில் சிறந்த அங்கமாகக் கொள்ளப்படாமல் தாழ்ந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் விடுதலைக்காக முதல் முழக்கத்தை பெரியார்தான் எழுப்பினார். கடந்த 60 ஆண்டுகளில் அவர் ஆற்றிய சமூக சீர்திருத்தப் பணி வியக்கத்தக்கதாகும்.பெண்விடுதலையைப் பொருத்தவரை எந்த சீர்திருத்தவாதியோ, அறிஞரோ தந்தை பெரியாருக்கு ஈடாக இருந்ததே இல்லை. தந்தை பெரியாரின் நோக்கங்களைச் செயல்படுத்தும் சிறந்த வீரராக திரு கி.வீரமணி திகழ்கிறார் என அந்த உரையில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுகையில், மிகுந்த மகிழ்ச்சியோடு இங்கே இருக்கிறேன். 69 சதவிகிதத்திற்கு கடந்த ஓர் ஆண்டுக்கு முன்னால் ஏற்பட்ட ஆபத்தை நீக்கி, எப்படியும் அடைந்தே தீர வேண்டும் என்கிற உறுதியோடு அனைத்துக் கட்சிகள், சமுதாய அமைப்புகள் இவற்றை எல்லாம் பயன்படுத்தி இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பட்ட ஆபத்தைக் களைந்துள்ளோம்; அதற்கு நேற்று இரவுதான் குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டார் என்கிற செய்தியை மறுநாள் காலையில் நான் தெரிந்து கொண்ட பொழுது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்’’ என கழகத்தின் பணியினை எடுத்துரைத்தேன்.
கோ.இமயவரம்பன்
9.8.1994 அறிவு ஆசான் தந்தை பெரியாரின் நம்பிக்கைக்குரிய அந்தரங்க செயலாளரும் – ‘புலவர் புலவர்’ என்று அன்புடன் அழைக்கப்பட்டவருமான – அருமைப் புலவர் இமயவரம்பன் — முடிவெய்தினார்.
புலவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி தமிழகம் முழுதும் கழகத் தோழர்களையும் – குடும்பத்தினரையும் பேரிடியாகத் தாக்கியது. –
புலவர் தங்கிய, – கழகத் தோழர்களை எல்லாம் வரவேற்று உபசரித்த — பெரியார் மாளிகையில் அவரது உடல் பார்வைக்கு வைக்கப்பட்டது.
திருச்சியிலிருந்து கண்ணீர் மல்க – அறிக்கை ஒன்றை வெளியிட்டேன்.
“நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் நம்பிக்கைக்குரிய, நாணயமான அந்தரங்கச் செயலாளராக – பல ஆண்டுகாலம் பணியாற்றி, அம்மாவிடமும் அதே பணியைத் தொடர்ந்து, எனது உயிருக்கு உயிராக எனது உணர்வோடு பதிந்து உறவாகிவிட்ட எனது 40 ஆண்டு கால, நிழல் இன்று என்னை விட்டு – நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டது என்ற செய்தியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இருதய அறுவை சிகிச்சை செய்து முடித்தவுடன் ஏற்பட்ட தாங்கொணா பிணியைக் கூட என்னால் ஓரளவு தாங்கிக்கொள்ள முடிந்தது. ஆனால், இதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்னதான் நான்- நாம் பகுத்தறிவாதிகளாக இருந்தாலும், மனித உணர்வுகளையும் பாசத்தையும் எளிதில் ஒரு எல்லைக்கோட்டிற்குள் நிறுத்த முடிகிறதா?
அய்யோ! ‘புலவர், புலவர்’ என்று அன்புடன் அழைத்த போதிலும் ‘புலவர்’ என்று நான், ஒரு சில நாள்கள் கோபப்பட்டு அழைத்த நேரத்திலும், மாற்றுக்குறையாத மரியாதை கலந்த நேசத்தையும், பாசத்தையும் பொழிந்த எனது மற்றொரு வாழ்க்கை துணைபோல் என்றும் நான் கருதிய தோழனை, இழக்கக் கூடாத எங்கள் கொள்கைச் செல்வத்தை திடீரென இழந்து, நெருப்பில் விழுந்த புழுப்போலத் துடிக்கும் எனக்கு ஆதரவை யார்தான் அளிக்க முடியும்?
நம் அய்யாவை இழந்த போது, அம்மாவை இழந்த போது, நம் துன்பத்தில், துயரத்தில் வெந்த போது, நிழல்போல் உண்மை உயிர் காக்கும் மெய்க்காவல் தோழனாக புலவர் போன்ற பலர் இருக்கிறார்களே என்பதே நாம் பெற்ற ஆறுதல் எனக்கு.- எங்களுக்கு இருந்ததையும், இயற்கையின் கோணல் புத்தி பறித்துவிட்டதே!
புலவர் கோ.இமயவரம்பன் உடலுக்கு இறுதி மரியாதை
செலுத்தும் ஆசிரியருடன் கழகத்தினர்
இயக்கத்திற்காகவே தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொண்ட கருப்பு மெழுகுவத்தியே, எங்கள் புலவரே! இவ்வளவு விரைவிலா உன் ஒளி அணைந்து கரைந்துவிட வேண்டும்.
புலவரே, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உங்களைச் சந்தித்த நாள் முதல் தஞ்சை மருத்துவ மனையில் இரண்டு நாள்களுக்கு முன்னால், சுற்றுப்பயணத்திற்கு என்னை நீங்கள் அனுப்பி வைத்த இந்த நாள் வரை உங்களைப் பற்றிய நினைவு அலைகள்தான் எத்தனை ஆயிரம்! ஆயிரம்!!
1958இல் எனது திருமணத்தின் போது, திருச்சிக்கு என்னுடன் வந்த நீங்கள், அன்று முதல் அய்யாவுடன் இருந்து, – ‘துறவிக்கோலம்‘ பூண்டு, தங்கித் தொண்டரடிப் பணிபுரிந்து, பல நூற்றுக்கணக்கான நாகம்மை இல்லக் குழந்தைகளுக்கு தாயாய், தாதியாய், அண்ணனாய், ஆசானாய், அருமருந்தாய் ஆற்றிய தொண்டு, ஆராய்ச்சிக் கட்டுரை நூல்களை எழுதி வெளியிட்ட பாங்கு. ‘உண்மை’ ஆசிரியர் மட்டுமல்ல, உண்மை லட்சியவாதியாக அல்லவா திகழ்ந்தவர் நீங்கள் என்பதை இயக்கம் அறியுமே! அய்யாவே உங்களைப் பாராட்டி, வரவேற்று எழுதிய பெருமைக்குரிய பெம்மான் அல்லவா நீங்கள்!
இயக்கத்தில் துரோகம் தலைதூக்கிய போதெல்லாம் அதனை அடக்குவதில் கட்டுப்பாடு மிகுந்த கருஞ்சட்டை ராணுவத் தளபதியாக உயர்ந்து நின்றவர் அல்லவா?
குழந்தைத்தனமான, முரட்டுப் பிடிவாதம் உங்களிடம் உண்டு; என்றாலும், தலைமை என்றவுடன், தோழன் என்பதைக்கூட மறந்து, கட்டுப்பாடு மிகுந்து, மரியாதை காட்டிய விசுவாசம் ஒரு லட்சிய வீரனுக்குரிய இலக்கணம் அல்லவா?
எழுத முடியவில்லை; நான் கதறுகிறேன், பதறுகிறேன்! களத்தில் நிற்கப்போகும் சக்தி வாய்ந்த படைக்கலனை இழந்தவனைப்போல் நின்று கண்ணீர் மல்க எனது நிழலுக்கு எனது மெய்க்காப்பாளனுக்கு எனது உணர்வின் உணர்வுக்கு நானே வீரவணக்கம் செலுத்தும் விசித்திரக் கடமைக்கு ஆளாகிவிட்டேன். கழக சரித்திரத்தின் ஒரு மாபெரும் அத்தியாயமே, நீ இவ்வளவு விரைவிலா முடிய வேண்டும்! அய்யகோ! உனது உயிர்த்தோழன், என்றும் உங்கள் உறவின் சின்னம் என்று அறிக்கையில் மனவேதனையைத் தெரிவித்திருந்தேன்.
புலவரைப் பற்றி அய்யா அவர்கள் எழுதியது – அவரின் தன்னலமற்ற கழகச் சேவைக்கு சிறந்த பாராட்டாகும் அது இதோ:
புலவர் பற்றி அய்யா
“கழகத் தொண்டிற்கு ஆதரவளிக்கவும், தொண்டாற்றவும் இன்று பல தோழர்கள் இருந்தாலும், முழுநேரத் தொண்டர்களாக இன்னும் சிலபேர் வேண்டியிருக்கிறது.
அய்யாவின் இறுதிக் காலங்களில் அவருக்கு அயராது தோள் கொடுத்துப் பணியாற்றும் புலவர் கோ.இமயவரம்பன்
இப்போது தோழர் இமயவரம்பன் (புலவர் பரீட்சை பாஸ் செய்தவர்) மாதம் 150 வரை சம்பள வருவாயை விட்டு தனது குடும்ப பெரிய சொத்து நிர்வாகத்தையும் விட்டு மற்றும் பல பணத்தோடு வரக்கூடிய சவுகரியத்தையும் தள்ளி விட்டு வீட்டிலிருந்து பணம் தருவித்து செலவு செய்து கொண்டு கழகத்துக்கு ஒரு வேலை ஆளாக 3, 4 ஆண்டாக தொண்டாற்றி வருகிறார்.
இந்த நாட்டில் சொந்த சுயநலம் கருதாமலும், பொதுப் பயனுள்ளதுமான தொண்டாற்றி வரும் கழகம் திராவிடர் கழகம் ஒன்றுதானே இருந்து வருகிறது? இக்கழகத்தில் இருப்பவர்கள்தான் சுயநலமில்லாமல் பாடுபடுகிறார்கள். மற்ற கழகங்கள், கழகத்தால் சுயநலம் பயன் அடையக் கருதி பாடுபடுபவை; அதுவும் பயனற்ற, உண்மையற்ற காரியத்திற்கு “பாடுபடும்“ கழகங்களாகத்தானே இருக்கின்றன?”
– ஈ.வெ.ராமசாமி ‘விடுதலை’ – 10.8.1962
திருச்சியில் நடைபெற்ற புலவர் அவர்களின் இறுதி ஊர்வலம் – அமைதி ஊர்வலத்துக்கு ஓர் இலக்கணம்.
ஊர்வலம் 10.8.1994 முற்பகல் 11:00 மணிக்கு பெரியார் மாளிகை வளாகத்திலிருந்து புறப்பட்டது. இறுதி ஊர்வலம் துவங்குவதற்கு முன் எமது 40 ஆண்டுக்கால நண்பர்க்கு, இயக்கத் துணைவருக்கு மலர் வளையம் வைத்துக் கண்ணீர் மரியாதை செலுத்தினேன்.
பெரியார் சமூகக்காப்பு அணி தோழர்கள் உடலைச் சுமந்து வந்து லாரியில் அமைக்கப் பட்டிருந்த உயரமான மேடையில் உடலை வைத்தனர்.
இறுதி ஊர்வலம் தென்னூர் நெடுஞ்சாலை, மரக்கடை, வெல்லமண்டி, பெரிய கடைவீதி, சின்னக் கடைவீதி, கீழப்புலிவார் சாலை, காவேரிக்கரை வழியாக கருப்புக் கொடியுடன் தோழர்கள், டிரம் செட், ஆசிரியப் பயிற்சி மாணவர்கள் ஒருபுறம் கழகக் கொடி சாய்வாக, ஆசிரியப் பயிற்சி மாணவியர்கள் ஒருபுறம் கருப்புக் கொடி சாய்வாக, கழக மகளிரணி, கழகத் தோழர்கள், கல்வி நிறுவன மகளிர் பணியாளர்கள், உறவினர்கள், புலவர் உடல், புலவர் உடலுடன் வளையமாக சமூகக் காப்பு அணி, காப்பகக் குழந்தைகள், கல்வி நிறுவன ஆண் பணியாளர்கள், பொதுமக்கள், கார், வேன், பேருந்து என – இந்த முறையில் இருவர் இருவராக அணிவகுத்துச் சென்றனர்…
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இறுதி ஊர்வலத்துக்கு ஓரிலக்கணமே புலவரின் இறுதி ஊர்வலம்.
திருச்சி பொதுமக்கள் அவரின் மீது வைத்திருந்த அன்புக்கும், மதிப்புக்கும் ஓர் அடையாளமாகவே அவ்வூர்வலம் அமைந்திருந்தது. –
மதியம் 12:30 மணி அளவில் இறுதி ஊர்வலம் சுடுகாட்டை அடைந்தது. பெரியார் சமுகக் காப்பு அணியினர் இறுதி மரியாதை செலுத்த உடல் எரியூட்டப்பட்டது.
இரங்கல் கூட்டம்
அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்துக்குக் கழகப் பொருளாளர் தஞ்சை கா.மா. குப்புசாமி தலைமை வகித்தார். திராவிடர் கழகத் தலைமை நிலையச் செயலாளர் கலி. பூங்குன்றன், சேலம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம், திருச்சி (கிழக்கு) மாவட்டக் கழகத் தலைவர் செம்பறை கு.நடராசன், திருச்சி நகர திராவிடர் கழகத் தலைவர் தி.மகாலிங்கம், கல்வி நிறுவனங்கள் சார்பில் பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ப.சுப்பிரமணியம், பெரியார் மருந்தியல் கல்லூரி தாளாளர் ஞான.செபஸ்தியான், பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந.இராமநாதன், துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காதர் மொய்தீன், அ.இ.அ. தி.மு.க. சார்பில் ‘பேட்டா’ கோபால் ஆகியோர் இரங்கலுரை ஆற்றினர்.
உறுதிமொழி:
தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை, அவர்கள் போட்டுத் தந்த பாதையில், தமிழர் தலைவர் வீரமணி தலைமையில், புலவர் இமயவரம்பன் அவர்கள் வாழ்வில் நடந்து காட்டிய கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து செய்து முடிப்போம் என்று உறுதி கொள்வோம் என்று – தலைமை நிலையச் செயலாளர் கலி. பூங்குன்றன் எடுத்துச் சொன்ன வரிகளைக் கூடியிருந்த தோழர்கள் அனைவரும் தொடுத்துச் சொன்னார்கள். கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும், தோழர்களும் இறுதியாக இரு மணித்துளி எழுந்து நின்று மரியாதை செலுத்தினோம்.
ஒ.எம்.பாலன்
13.8.1994 அன்று காமராசர் மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளரும், பெரியார் பெருந்தொண்டருமான மம்சாபுரம் டாக்டர் ஒ.எம்.பாலன் அவர்கள் மரணமடைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். ஒ.எம்.பாலன் அவர்கள் தந்தை பெரியார் மீது ஆழ்ந்த பற்றும், ஆழமான கொள்கைப் பிடிப்பும், செயல்பாடும் உள்ள கருஞ்சட்டைத் தோழர் ஆவார். அவருடைய இழப்பு கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பாகும். நான் பிரச்சார சுற்றுப் பயணத்திலிருந்ததால், உடனடியாக அவரின் துணைவியாருக்கு இரங்கல் செய்தியை அனுப்பினேன்.
(நினைவுகள் நீளும்…)