கேள்வி: தி.மு.க பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து தங்கள் கருத்து என்ன?
– முத்து, ஈரோடு
பதில்: தி.மு.க. பொதுக்குழு – இந்த கரோனா தொற்று அச்சுறுத்தும் சூழலில் அருமையாக காணொலி மூலம் உலகத்தையே கவர்ந்த, ஒழுங்குமுறை மிளிர்ந்த எடுத்துக்காட்டான ஏற்பாடு.
அதில் நிறைவேற்றப்பட்ட அத்துணை தீர்மானங்களிலும் மக்களின் இதய ஒலியைச் சுட்டும் அருமையான திட்டங்களை வலியுறுத்தி, ஆட்சியயாளர்களைக் கண்விழிக்கச் செய்யும் முரசொலியாகும்!
கேள்வி: ‘நீட்’ தேர்வு மாணவர் தற்கொலை தொடராமலிருக்க தாங்கள் மாணவர்களுக்கு கூறும் அறிவுரை என்ன?
– அகமது, மாதவரம்
பதில்: மாணவச் செல்வங்களே, போராட்டக் களத்தில் நிற்க வேண்டிய நீங்கள், தற்கொலை என்ற விரக்தியின் விளம்பிற்குச் செல்லாதீர்கள். கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும். 21 ஆண்டுகளுக்கு மேல் போராடி முன்பு நுழைவுத் தேர்வை ஒழித்தோம். இப்போது மீண்டும் காரிருள் _ ‘நீட்’ மூலம். நிச்சயம் விடியும் _- அதுவரை காத்திருப்போம் போராடிக் கொண்டே களத்தில் நிற்போம்! உயிரின் மதிப்பை உணருங்கள்.
கேள்வி: 3: பா.ஜ.க.வின் திறமையின்மையால் முன்னமே வீழ்ச்சியடைந்துவிட்டது இந்திய பொருளாதாரம். இதை மறைத்து தற்போது கொரோனாவைக் காரணமாகக் கூறுவது மோசடியல்லவா?
– ராஜா, தாம்பரம்
பதில்: ஏற்கெனவே அய்.சி.யூ.யில் (ICU- Intensive Care Unit) தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டது, கரோனா காலத்தில் தவறான மத்திய அரசின் நிலைப்பாட்டால், வென்டிலேட்டர் வரை வரை சென்றுவிட்டது. கொரோனாவுக்கு கைத்தட்டச் சொல்லி-யவர்கள், விளக்கேற்றல், யோகா செய்தல் முதலியவற்றை கொரோனாவுக்கு வழியாகக்-காட்டியவர்கள், பொருளாதாரத்துக்கு என்ன சொல்வார்கள்? வித்தைகளைச் செய்து வருகின்றனர்.
ஏழை எளியவர்கள் பட்டினிச் சாவு, கடன் _- அதிலும் மத்திய அரசே வட்டிக்கு மேல் வட்டி வசூலிக்கும் கொடுமை.
கேள்வி: மாநில உரிமையைக் காக்கவும் – சமூகநீதியைக் காக்கவும் தாங்களும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இந்தியத் தலைவர்களை ஒருங்கிணைத்துச் செயல்-பட்டால்தான் தீர்வு என்கிற எங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
– மோகன், செஞ்சி
பதில்: காலத்தால் கனிய வேண்டியவை. மத்திய அரசின் மாநில உரிமை பாதிப்பு. வேகமாகி வரும் நிலையில் தேவைக்கேற்ப நாம் பணி காலத்தின் கட்டாயமாவது தவிர்க்க இயலாதது!
கேள்வி: சித்த மருத்துவத்திலிருந்து உருவாக்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவத்தைத் தூக்கி வளர்த்து, சித்த மருவத்துவத்தை ஒடுக்கி, ஒழிக்க நினைக்கும் சதியை முறியடித்து சித்த மருத்துவம் வளர _ பரவ தாங்கள் முயற்சி மேற்கொள்வீர்களா?
– தாமஸ், அரக்கோணம்.
பதில்: நாம் எத்தனை பணிகளைத் தான் செய்வது? அறவழிப்பட்ட ஆதரவு நம்முடையது! நமக்கு ஜாதி ஒழிப்பு -_ தீண்டாமை அழிப்பு -_ சமூகநீதி காப்பு _- மூட நம்பிக்கை ஒழிப்பு போன்ற சமூக மாற்றப்பணிகள் மலைபோல் உள்ளதை மறந்து விடலாமா தாங்கள்?
கேள்வி: புதிய கல்விக் கொள்கையின் கேடுகள் குறித்து தெளிவாக பலரும் கருத்துகளைத் தெரிவித்துள்ள நிலையில், நிபுணர் குழு அமைத்து, தமிழகம் காலம் கடத்துவதன் உள்நோக்கம் என்ன?
– சசிகுமார், மதுரை
பதில்: ‘பாலுக்குக் காவல்; பூனைக்கும் தோழன்’ என்பது போலத் தான் _ எதிலும் இரட்டை நிலைப்பாடு! அதன் விளைவே இந்நிலை.
கேள்வி: புதிய கல்விக் கொள்கையை பற்றி மாநில அரசின் முதல்வருடன் ஆலோசிக்-காமல், மாநில கவர்னருடன் கல்விக் கொள்கையைப் பற்றி பிரதமர் ஆலோசிப்பது தவறான போக்கு அல்லவா? தங்களின் கருத்து என்ன?
– மகிழ், சைதை
பதில்: இதை எதிர்க்கட்சித் தலைவர் -_ தி.மு.க. தலைவர் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் சுட்டிக்காட்டி விட்டனர். ஆனால் தங்களைத் திருத்திக் கொள்ளாத மத்திய அரசின் முதலைப் பிடிவாதம் தளரவில்லையே! காரணம் அதனை ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்கள் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது!
கேள்வி: நம் நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ரபேல் போர் விமானங்களுக்கு அனைத்து மதவழிபாட்டின்படி பூசை செய்வது முறையா?
– செல்வம், காஞ்சி
பதில்: மதச்சார்பின்மை காற்றில் பறந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. இல்லையென்றால் பிரதமர், கவர்னர், முதல்வர் போன்றோர் இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டச் செல்வார்களா? மதச்சார்பற்ற ஒரு அரசின் பொறுப்பாளர்கள் இந்து ராஷ்டிரத்தவர்-களாகத் தங்களை தகத்தகாயமாய்க் காட்டிக் கொண்டார்களே!
கேள்வி: கற்றலை விட கேட்டலையே விரும்பும் இன்றைய தலைமுறைக்கு ஏற்றாற்போல், வலைதள பகுத்தறிவுப் பிரச்சார அணியை ஏற்படுத்தி, அதன் மூலம் சிறு, சிறு கருத்தியல் பதிவுகளை தொடர்ச்சியாக, தொய்வின்றிப் பரப்பப்படுமா?
– சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை
பதில்: இதுதான் நமது அடுத்தகட்ட பிரச்சாரம். இந்தப் பெரியாராண்டு முதலே அது தொடங்க உள்ளது.
“விடுதலை’’ பெரியார் மலரில் குறிப்பிட்டுள்-ளோம். நன்றி. தங்களது கருத்துக்கு _ யோசனைக்கு! ஸீ