கவிதை : அய்யா பிறந்தநாள் உறுதி ஏற்போம்!

செப்டம்பர் 16-30, 2020

பேராசிரியர் முனைவர் கடவூர் மணிமாறன்

தன்மானப்  போர்முரசு,  திராவி  டத்தின்

               தன்னிகரே   இல்லாத  தலைவர்;  என்றும்

அண்ணாவும்  அவர்தம்பி  கலைஞர்  தாமும்

               அன்றாடம் தம்முரையில்  நினைவு கூர்ந்த

பன்னரிய சீர்திருத்த வேழம்; நாட்டில்

               பகுத்தறிவை விதைத்திட்ட அரிமா; நாளும்

உண்மையினை  நன்மையினை  உரக்கச்  சொன்ன

               ஒப்பற்ற இனவேங்கை  பெரியார் அன்றோ!

 

குடிஅரசில்  விடுதலையில்  அந்த  நாளில்

               கொள்கையினைப்  பறைசாற்றித்  தமிழர் வாழ்வின்

அடிமையிருள்  அகன்றிடவே  விழிப்பை  நல்கி

               அறிவியக்கப்  போர்தொடுத்த  புரட்சி  யாளர்;

நடித்தோரின்  முகத்திரையைக்  கிழித்தார்; தீய

               நால்வருணக்  கதையளப்பைச்  சாடி  நாட்டைக்

கெடுத்திட்ட ஆரியத்தின் கயமை வீழக்

               கீழ்வானச்  செங்கதிராய்க்  கிளர்ந்து  நின்றார்!

 

தீண்டாமைக்  கொடுமையினை  எதிர்த்தார்; தொட்டால்

               தீட்டென்னும் பேரிழிவைச் சாய்ப்ப தற்கே

ஆண்மையுடன் களம்கண்டார்; அழுது நொந்த

               அப்பாவிச் சூத்திரர்தம்  மேன்மைக் காக

மாண்புறவே  உழைத்திட்டார் வைக்கம் வீரர்!

               மகளிர்க்குச்  சொத்துரிமை  வேண்டும்  என்றார்!

வேண்டாத கடவுளரின் பெயரால் மூட

               விளையாட்டை வெறிச்செயலைத்  தடுத்து நின்றார்!

 

குலக்கல்வித் திட்டத்தை மீண்டும் நாட்டில்

               கொண்டுவந்து புதியகல்விக் கொள்கை என்றே

கலம்பாலில் துளிநஞ்சைக் கலக்க எண்ணும்

               காவியரின் சூழ்ச்சியினை நாட்டு மக்கள்

பலர்நன்றாய் உணர்ந்திடவே பாதை கண்ட

               பகுத்தறிவுத் தொலைநோக்குப் புரட்சி யாளர்!

நலம்சேர்த்த நம்அய்யா பிறந்த நாளில்

               நரியனையார் செருக்கடக்க உறுதி ஏற்போம்! ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *