பெண்ணால் முடியும்! – எதிர் நீச்சல் போட்டால் வெற்றிதான்!

செப்டம்பர் 16-30, 2020

மதுரை மணிநகரம் பகுதியில் வசித்து வரும் முருகேசன், ஆவுடைதேவியின் மகள் பூரண சுந்தரி. தனது அய்ந்து வயதில் இரு கண் பார்வையையும் இழந்த நிலையிலும், வறுமை துரத்திய போதும் மனம் கலங்காமல் போராடி தமிழகத்தில் அய்.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளிப் பெண் என்னும் சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி தேர்வையும் தமிழிலேயே எழுதி வெற்றிபெற்றவர் என்னும் பெருமை-யையும் இவரையே சாரும். தனது லட்சியப் பயணத்தில் தான் எதிர் கொண்ட சவால்-களைப் பற்றி பூரணசுந்தரி கூறுகையில், “எனது குடும்பம் மிக எளிய குடும்பம். வீட்டில் எனது தந்தையின் வருமானம் மட்டுமே எங்களின் வாழ்வாதாரத்-திற்-குரியது. இந்நிலையில் எனக்கு 5 வயதில் இரு கண்களிலும் பார்வை பறி போனது. மதுரை சம்மட்டிபுரத்தில் உள்ள கே.என்.பி.என் பிள்ளைமார் சங்கப்பள்ளியில் படித்தேன். அங்கு ஆசிரியைகள் என் மீது காட்டிய அக்கறையும், பிரெய்லி முறையில் படிப்பதைக் கற்றுத் தந்தாலும் பிளஸ் 2 வரை சிறப்பாகப் படிக்க முடிந்தது.

பின்னர் பாத்திமா மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தேன். கல்லூரியில் படிக்கும் போதே போட்டித் தேர்வுகளுக்கும் ஆயத்தமாகி வந்தேன். அப்போது தான் அய்.ஏ.எஸ் தேர்வு பற்றி கல்லூரியில் பேராசிரியைகள் அளித்த ஊக்கத்தால் அய்.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகத் தொடங்கினேன்.

2015 இல் கல்லூரியின் மூன்றாமாண்டில் படித்தபோது போட்டித் தேர்வு மூலம் அரசுப்பணி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அய்.ஏ.எஸ் தேர்வை இலக்காகக் கொண்டிருந்த-தால் அந்தப் பணியில் சேரவில்லை. தொடர்ந்து முயற்சி செய்து வந்த நிலையில் இரண்டு முறை அய்.ஏ.எஸ் தேர்வில் தொடக்க நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளில் வெற்றி பெற்றும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறாததால் அய்.ஏ.எஸ் வெற்றி கை நழுவிப் போனது.

மனம் சோர்ந்த நிலையில் எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அளித்த ஊக்கத்தால் தன்னம்பிக்கையுடன் மீண்டும் தேர்வுக்குத் தயாரானேன். அய்.ஏ.எஸ். அதிகாரிகள் சகாயம், உதயச்சந்திரன், கீர்த்தி பிரியதர்ஷினி, தமிழிலேயே அய்.ஏ.எஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்ற இளம் பகவத் மற்றும் பலர் தேர்வில் வெற்றி பெறுவது தொடர்பாக ஆலோசனை வழங்கி உதவிகள் செய்தனர்.

இதற்கிடையில் 2018 இல் போட்டித் தேர்வு மூலம் அரசு ஊரக வங்கிப் பணியில் சேர்ந்தேன். மீண்டும் அய்.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெறும் லட்சியத்தில் தேர்வுக்கு தயாரானேன். அப்போது பணியிலிருந்து  விடுப்பு எடுத்துக் கொண்டேன். அந்தக் காலகட்டத்தில் சென்னையில் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நாகார்ச்சுனா எனது நிலையை அறிந்து 4 ஆண்டுகளுக்கு மேலாக மாதா மாதம் பண உதவிகளைச் செய்து வந்தார்.

4ஆவது முறையாக 2019இல் தேர்வு எழுதினேன். தேர்வில் தேர்ச்சி பெற்று, கடந்த பிப்ரவரி மாதம் நேர்முகத் தேர்விலும் பங்கேற்றேன். இதற்கான முடிவுகள் ஆகஸ்ட்

4ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் 286 ஆம் இடத்தில் தேர்வில் தேர்ச்சி பெற்றேன்.

பார்வையற்றவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட என்.வி.டி.ஏ (நான் விசுவல் டெஸ்க்டாப் அக்சஸ்) என்னும் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி வந்தேன். தேர்வில் எனக்கான தேர்வு உதவியாளர்களை தேர்வாணையமே நியமித்திருந்தது. இந்தப் பொறுப்பு மூலம் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பணியாற்றுவேன். நம்மால் முடியாதது. எதுவுமில்லை. முயற்சி திருவினையாக்கும் என்னும் வள்ளுவர் குறளுக்கு எடுத்துக் காட்டாக நான் இருக்கிறேன் என்கிறார், நம்பிக்கையுடன். ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *