சிறுகதை – மனிதனை நினை

செப்டம்பர் 16-30, 2020

ஆறு.கலைச்செல்வன்

மார்ச் மாதம் தொடங்கிவிட்டது!

இந்த மாதம் தொடங்கிவிட்டாலே பள்ளிப் பிள்ளைகளுக்கு தேர்வுச் சுரம் வந்துவிடும். ஆண்டு முழுவதும் புத்தகத்தைக் கையில் எடுக்காவிட்டாலும் தேர்வு காலம் நெருங்கியவுடன் புத்தகமும் கையுமாகத் திரியும் மாணவ மாணவிகளை நாம் எங்கும் காணலாம். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு ஆண்டு முழுவதும் ஏதாவது வீட்டு வேலைகள் கொடுத்துக் கொண்டிருந்தாலும் தேர்வு வந்தவுடன் விழிப்புணர்வு பெற்று பிள்ளைகளுக்கு வீட்டு வேலைகள் எதுவும் கொடுக்காமல் படிக்கச் சொல்லி வற்புறுத்துவார்கள். இது ஏழை, பணக்காரர் என்கிற வித்தியாசம் இல்லாமல் எல்லா வீட்டிலும் நடப்பதுதான். ஆனாலும் சில வைராக்கியமான பிள்ளைகள் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் படிப்பிலேயே கவனமாக இருப்பார்கள். பிற்காலத்தில் அவர்கள் மிக உயர்ந்த நிலைக்கு வருவதையும் நாம் கண்கூடாகக் காணலாம்.

ஆனால் இந்த ஆண்டு எல்லாமே தலைகீழ். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிள்ளைகளுக்கெல்லாம் விடுமுறை. தேர்வுகள் இல்லாமலேயே ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்று விட்டதாக அறிவிப்பும் வெளியிடப்பட்டுவிட்டது. அப்புறம் என்ன? பள்ளிப் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி வெள்ளம்தான்!

நளினிக்கும் ஒரே மகிழ்ச்சிதான். அவள் எட்டாம் வகுப்பு மாணவி. வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுடைய தந்தை மாறனும் தாய் நவீனாவும் நளினி ஒரே மகள் என்பதால் மிகவும் செல்லமாக வளர்த்து வந்தனர். அவர்களுக்கு நிறைய நிலபுலங்களும் உண்டு. ஊரில் உள்ள வசதியான குடும்பங்களில் முதன்மையான குடும்பம்.

மாறனின் தந்தை கோபதி மிகச் சிறந்த பகுத்தறிவுவாதி. ஆனால், அவரது மகனும் மருமகளும் அவருக்கு நேர் எதிரிகள். நாள்தோறும் வீட்டில் பூசைகள் புனஸ்காரங்கள் தாம். நளினியையும் அப்படியே வளர்த்தார்கள்.

வீட்டிற்கு அருகிலேயே அரசுப் பள்ளி இருந்ததால் அதிலேயே சேர்த்தார்கள். ஒரே மகள் அல்லவா? தொலைவில் உள்ள தனியார் பள்ளிக்கு அனுப்ப பயம். மேலும் மத நம்பிக்கையை அதிகம் ஊட்டி வளர்த்ததால் பகுத்தறிவின்றி வளர்ந்தாள். பொறாமை குணத்தில் உச்சத்தில் இருந்தாள். அகம்பாவமும் அவளிடம் அளவுக்கு மீறிக் காணப்பட்டது.

மாறனின் தந்தை கோபதி சீரிய பகுத்தறிவாதி. அவருக்கு அகவை எண்பதைக் கடந்துவிட்டது. மகன், மருமகள், பெயர்த்தி ஆகியோரின் செயல்களைக் கண்டு வருந்துவதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை. அவர் சொல்வதை யாரும் கேட்பாரில்லை. ஆயினும் ஒரு நாள் திருந்துவார்கள் என்கிற நம்பிக்கை மட்டும் அவரிடம் காணப்பட்டது.

மாறன் ஆரம்ப காலத்தில் தந்தையின் கொள்கைகளைப் பின்பற்றியே வாழ்ந்து வந்தான். நன்றாகவும் படித்தான். விவசாயப் பணிகளையும் திறம்பட நிருவாகித்து வந்தான். ஆனால், திருமணமான பின் அவன் போக்கில் மாற்றம் ஏற்படத் தொடங்கிவிட்டது. மிகவும் பிற்போக்குவாதியாக மாறிவிட்டான். என்றாவது ஒரு நாள் அவன் திருந்துவான் என அவனது தந்தை நம்பினார். யாரிடமும் எதையும் திணிக்கக் கூடாது என எண்ணுபவர் அவர். ஆனாலும் அவ்வப்போது தனது சொல்லாலும் செயலாலும் தனது கருத்துகளை ஆணி அடித்தாற்போல் அடுத்தவர் மனதில் பதிய வைப்பார்.

சித்திரை மாதத்தில் ஒருநாள் நளினி, தாத்தாவிடம் வந்து ஒரு வினாவை எழுப்பினாள்.

“தாத்தா, ஏன் தாத்தா நீங்க தமிழ்ப்புத்தாண்டை கொண்டாட மாட்டேங்கறீங்க?” எனக் கேட்டாள்.

“தமிழ்ப் புத்தாண்டை நான் கொண்டாடவில்லையா? ஆண்டுதோறும் நான் கொண்டாடிகிட்டுத்தானே இருக்கேன்’’ என்று மறுமொழி சொன்னார் கோபதி.

“தாத்தா, நீங்க சும்மா சொல்றீங்க. நீங்க கொண்டாடவே இல்லை.’’

“நளினி கண்ணு, நானும் கொண்டாடுறேன். ஆனா, உங்களைப் போல சித்திரை முதல் தேதி இல்லை.’’

“அப்புறம் தாத்தா?’’

“தை மாதம் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு. அதை நான் மகிழ்ச்சியாகக் கொண்டாடிகிட்டுத்தான் இருக்கேன். என் நண்பர்களுக்கெல்லாம் வாழ்த்து சொல்வேன்.’’

“தாத்தா, தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டா?’’

“ஆமாம்மா. தமிழ் அறிஞர்கள் மறைமலை அடிகளார், திரு.வி.க., பாரதிதாசனார் போன்றவர்கள் எல்லோருமே தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுன்னு சொல்லியிருக்காங்க. அதோடு தமிழ் மாதங்கள் மொத்தம் அறுபது என்கிறார்கள். ஆனால் அவற்றுள் ஒரு பெயர் கூட தமிழ்ப் பெயர் இல்லை. இந்த ஆண்டை சார்வரி என்கிறார்கள். அப்படி என்றால் என்ன நளினி?’’

“தெரியல தாத்தா’’

“தெரியாத சொல் நமக்கெதற்கு? அது எக்கேடாவது கெட்டுவிட்டுப் போகட்டும். தை மாதத்தில்தான் இளவேனில் காலம் தொடங்குகிறது. அதுவே நமக்குப் புத்தாண்டு. “நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு’’ அப்படின்னு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடியிருக்கார். சரி நளினி, இப்போ உனக்கு சரியா புரியாமல் போனாலும் இன்னும் கொஞ்சம் வருஷங்கள் கழிச்சி நான் சொன்னதை யோசிச்சிப் பார்த்தா உனக்கு உண்மை புரியும்.

“சரி தாத்தா, மார்ச் மாதமும் போயிடுச்சி. கொரோனா வைரசால் பரிட்சையும் இல்லை. இனிமே அதுக்காகப் படிக்கவும் வேணாம். எல்லோருக்கும் பாஸ் போடப் போறாங்களாம் தாத்தா.’’

“பரிட்சைக்காக மட்டும் படிக்கக் கூடாது நளினி. அறிவுக்காகப் படிக்கணும்.’’

“தாத்தா, என் கிளாசில் அந்தப் பிசாசு மதியழகி இருக்காளே, அவதான் தாத்தா பஸ்ட் மார்க் எடுக்குறா. இத்தனைக்கும் அவ ரொம்ப ஏழை. சாப்பாட்டுக்கே வழி இல்லாதவ. பக்கத்துத் தெருக்காரி. எப்படித்தான் படிக்கிறாளோ தெரியலை தாத்தா.’’

“நளினி, நீ அப்படியெல்லாம் பேசக் கூடாது. நீயே அவ ஏழைன்னு சொல்லிட்டே. ஏழ்மையிலும் நல்லா படிச்சா பாராட்டத்தானே வேணும்! அறிவைத் தேடி நாம் அலையணும் நளினி.’’ “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’’ன்னு பெரியார் சொல்லியிருக்கார்.

“நீங்க என்ன சொன்னாலும் அவளை எனக்கு சுத்தமா பிடிக்கல தாத்தா. நல்ல பேனா கூட அவகிட்ட இருக்காது. பிச்சக்காரி போல இருப்பா.’’

“உன்னோட எண்ணத்தை நீ மாத்திக்கணும். நீ அவகிட்ட பேசுவியா?’’

“ஊகூம். அவ எப்போதாவது என்கிட்ட பேச வருவா. ஆனா நான் பேச மாட்டேன்.’’

“நெறைய தப்பு பண்ற நளினி.  சமூகத்தில் நலிஞ்சுப் போன மக்களை நாம் கை தூக்கி விடணும். அவங்க கிட்டேயும் திறமைகள் குவிஞ்சு கிடக்கும். அதுக்காகத்தான் இட ஒதுக்கீடு. போகப்போக நீ அதைப் புரிஞ்சிப்ப. அவளை நீ வெறுக்கக் கூடாது.

தாத்தா இப்படிச் சொல்லும்போது அவரது குரலில் சற்றுக் கடுமை இருந்ததை நளினி உணர்ந்தாள். அதற்கு மேலும் அவரிடம் பேசத் துணிவில்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று அடங்கியபாடில்லை. பத்து நாள்களாக அனைவரும் வீட்டிலேயே அடைந்து கிடந்தனர். மாறனும் நவீனாவும் மகளின் பாதுகாப்புக்காக எதுவும் செய்யத் தயாராக இருந்தனர். வீட்டிலேயே யாகம் செய்வது நல்லது என்று  அர்ச்சகர் ஒருவர் சொன்னதைக் கேட்டு அதற்கும் ஏற்பாடு செய்தனர். யாகத்திற்குத் தேவையான பொருள்களையும் சேகரித்தனர். யாகத் தீயில் போட்டு பொசுக்க பட்டுத் துணி, மிளகாய், நெய், தானியங்கள் என அனைத்துப் பொருள்களையும் அர்ச்சகர் கூறியபடி தயார் செய்தனர்.

யாகம் செய்ய வேண்டிய நாளும் வந்தது. இதையெல்லாம் காணச் சகிக்காத கோபதி அறையை விட்டு சாப்பாட்டுக்குக் கூட வெளியே வரவில்லை.

அன்று காலை நளினி தொலைக்காட்சியில் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு ஒரு தொண்டு நிறுவனம் உணவு வழங்கிக் கொண்டிருந்தது. நளினி வசித்து வந்த ஊரிலும் பக்கத்துத் தெருவில் உணவு அளிப்பதாக செய்தியில் காட்டினார்கள். மக்கள் பலரும் சமூக இடைவெளி விட்டு வரிசையாக வந்து தட்டில் உணவை வாங்கிச் சென்று கொண்டிருந்தனர். தங்கள் ஊர் என்பதால் நளினி தொலைக்-காட்சிச் செய்தியை கூர்ந்து கவனித்தாள்.

வரிசையில் நின்ற ஒரு சிறுமியைப் பார்த்தபோது, அவளை ஏற்கெனவே பார்த்த உருவமாக அவளுக்குத் தெரிந்தது. கண்களை கசக்கிக் கொண்டு உற்றுப் பார்த்தாள். சந்தேகமே இல்லை! அவள் வகுப்பில் படிக்கும் மதியழகியே தான். கையில் தட்டுடன் பசியால் தள்ளாடியபடி வரிசையில் வந்து கொண்டிருந்தாள். அவள் அணிந்திருந்த ஆடைகள் கிழிந்திருந்தன. பல இடங்களில் தையல் போடப்பட்டிருந்தது. அவள் முகத்தில் வெட்கமும் ஏக்கமும் நிறைந்திருந்தது.

கிழிந்த ஆடைகள் வழியே தெரிந்த உடலை தனது கையிலிருந்த தட்டால் மூடி மறைத்துக் கொள்வதையும் நளினி கவனித்தாள். அவளுக்கு என்னவோ போலிருந்தது. மதியழகி இவ்வளவு வறுமையில் இருக்கிறாளா? பல வேளைகள் சாப்பிடாமல் பட்டினி கிடந்திருப்பாள் போலிருக்கே!

தொலைக்காட்சியை கண் இமைக்காமல் பார்த்தாள். மதியழகி மெல்ல நகர்ந்து உணவளிக்கும் இடத்திற்கு வந்து விட்டாள். தட்டை நீட்டினாள். ஆனால், அந்தோ!  அவளுக்கு உணவு கிடைக்கவில்லை. உணவு காலியாகி விட்டது. தொண்டு நிறுவன ஊழியர் நாளை வருவதாகக் கூறி பாத்திரத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

ஆயினும், செய்தி அறிவிப்பாளர் தொடர்ந்து நிகழ்ச்சியை நேரலை செய்து கொண்டிருந்தார். மக்களை அமைதியாக இருக்கும்படியும் வேறொரு தொண்டு நிறுவனம் உணவு எடுத்து வருவதாகவும் அறிவித்தார். மேலும், மக்களின் வறுமை நிலையை எடுத்துக்காட்ட மதியழகி பக்கம் மீண்டும் படக்கருவி சுழன்றது.

மதியழகி விக்கித்து நின்றாள். அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. அருகிலிருந்த மூதாட்டி ஒருவர் அவளைத் தேற்றி ஏற்கெனவே தான் வாங்கி வைத்திருந்த உணவில் கொஞ்சம் எடுத்து மதியழகியிடம் கொடுத்தார். அவளின் கண்ணீரில் மூதாட்டி கொடுத்த உணவு நனைந்தது. நனைந்த உணவை அப்படியே மதியழகி வாயில்….

அதற்கு மேல் பார்க்க முடியவில்லை நளினியால். அவள் விழிகள் கண்ணீரால் நிரம்பின. விருட்டென எழுந்தாள். யாகத்திற்காக வைத்திருந்த அனைத்துப் பொருள்களையும் அப்படியே வாரி எடுத்து ஒரு துணியில் வைத்துக் கட்டினாள்.

மாறன் எதுவும் புரியாமல் மகளைப் பார்த்தான்.

“அப்பா, மனிதர்களைத்தான் நாம் எப்பவுமே நெனைக்கணும்னு தாத்தா அடிக்கடி சொல்வாங்க. நாம இனிமே எப்பவுமே மனிதர்களைத்தான் நெனைக்கணும். யாகம், பூசை எதுவுமே வேணாம். இந்தப் பொருள்களை யெல்லாம் எடுத்துக்கிட்டுப் போய்; பக்கத்துத் தெருவில் இருக்கும் மதியழகியிடம் கொடுங்க’’ என்று உரத்த குரலில் தந்தைக்குக் கட்டளையிட்டாள் நளினி.

மாறன் ஏதும் மறுமொழி கூறவில்லை. அவள் சொன்னதைச் செய்ய ஆரம்பித்தான்.

நளினி பக்கத்து அறையில் பார்வையைத் திருப்பினாள். தாத்தா பெருமையுடன் பெயர்த்தியைப் பார்த்துப் புன்னகைத்தார்.ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *