அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (252)

செப்டம்பர் 16-30, 2020

பிரபஞ்சனின் உணர்ச்சிமிகு கடிதம்

கி.வீரமணி

 

15.5.1994 திருச்சி லால்குடி வட்டத்தில், அய்யா உருவாக்கிய விடுதலைபுரத்தில் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்தேன்.

விடுதலைபுரத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த தந்தை பெரியார் கடும் மழையின் காரணமாக அவர் வந்த வாகனம்  சேற்றில் நகர முடியாமல் அங்கேயே நின்றுவிட்டதாகவும், கழகத் தோழர்கள் மாட்டு வண்டியில் தந்தை பெரியாரை அழைத்துச் சென்றதாகவும், கடும் மழையின் காரணமாக அன்றிரவு தந்தை பெரியார் விடுதலைபுரத்திலேயே தங்கி விட்டதாகவும் விடுதலைபுரம் திராவிடர் கழகத் தலைவர் பெரியார்  பெருந்தொண்டர் மு.தங்கவேலன் பழைய நிகழ்ச்சிகளை நினை கூர்ந்தார். அந்த ஊருக்கு விடுதலைபுரம் என்னும் பெயரை தந்தை பெரியார்தான் சூட்டினார் என்றும் பெருமைபடக் கூறினார்.

தந்தை பெரியார் உருவாக்கிய இந்தக் கிராமத்தில் இப்பொழுது எழுபத்தி மூன்று வீடுகள்தான் இருக்கின்றன.

விடுதலைபுரத்தில், கழக மாநாடுபோல் ஏற்பாடு செய்யப்பட்ட தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவும் மற்றும் கழகப் பொதுச்-செயலாளருக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கும் விழாவும் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கு.நடராசன் தலைமை வகித்தார்.

விடுதலைபுரம் திராவிடர் கழக செயலாளர் வை.சின்னையன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தந்தை பெரியார் சிலை பீடத்திற்கு ஏணிப்படியையும் அதன் சுற்றுப்புற கம்பிவேலியையும் திருச்சி தொழில் அதிபர் வீகேயென் கண்ணப்பன் அன்பளிப்பாக அமைத்துக் கொடுத்திருந்தார்.

அறிவுலக மேதை தந்தை பெரியாரின் முழு உருவச் சிலையை திறந்து வைத்து உரையாற்றுகையில், அனைத்துக் கட்சித் தோழர்களின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை தந்தை பெரியார் அமர்ந்திருப்பது போலவும், பக்கத்தில் கண்ணாடியும், புத்தகமும் உள்ளவாறும் அழைக்கப்பட்டிருப்பது நாட்டில் உள்ள எல்லா சிலைகளையும்விட வித்தியாசமான மிகச் சிறப்பாக இருக்கிறது என்று  பெருமிதத்துடன் கூறினேன்.

சேலம், நல்லாக்கவுண்டன்பட்டியில் திராவிடர் கழக செயல்வீரர் க.கிருட்டின-மூர்த்தியின் சகோதரர் லோகநாதன் மணவிழாவை நடத்தி வைத்தேன். சேலம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் பொத்தனூர் க.சண்முகம் தலைமை வகித்தார்.

சேலம் நல்லாக்கவுண்டன் பட்டி என்.பி. கந்தசாமி – கோவிந்தம்மாள் ஆகியோரின் மகன் லோகநாதனுக்கும் மேட்டூர் செம்மனூர் எம்.கே.மாணிக்கம் பூங்கொடி ஆகியோரின் மகள் தமிழரசிக்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழியினை கூறச் செய்து மணவிழாவை நடத்திவைத்தேன்.

மணவிழா நடைபெறும் இடம் முழுவதும் மாநாடு போல் பந்தல் போடப்பட்டிருந்து, ஏராளமான கழகத் தோழர்களும், அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும். தாய்மார்களும், பொதுமக்களும் கடைசிவரை அமைதியாக இருந்து எனது உரையைக் கேட்டுச் சென்றனர். முடிவில் மணமகனின் அண்ணன் க.கிருட்டினமூர்த்தி நன்றியுரை ஆற்றினார்.

15.5.1994 திருச்சி ஈ.வெ.ரா.கல்லூரி பேராசிரியர் முனைவர்.க.நெடுஞ்செழியன் இல்லத்து மணவிழாவினை தலைமையேற்று நடத்தினேன். திருச்சி அரிசுட்டோ டைமண்ட் மன்றத்தில் கோவில்பட்டி காவல்துறை கண்காணிப்பாளர் கு.காளிமுத்து _ கோமளவல்லி ஆகியோரின் மகன் பொறியாளர் குழந்தைவேல் பாண்டியனுக்கும், திருச்சி முனைவர் க.நெடுஞ்செழியன் _ முனைவர் இரா.சக்குபாய் ஆகியோரின் மகள் நகைமுத்துவுக்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறச்செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன்.

22.5.1994 வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த ரங்காபுரத்தில் நாராயண மந்திர் வலந்தியம்மாள் கல்யாண மண்டபத்தில் கழக செயல்வீரர் மா.சுப்பிரமணி இல்ல மண விழாவை மிகச் சிறப்பாக நடத்தி வைத்தேன்.

மண விழாவில் கவிஞர் சு.சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்ற, மா. பலராமன், மா.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரங்காபுரம் கிருட்டினவேணி -_ சு.ஏழுமலை ஆகியோரின் மகன் சீனிவாசனுக்கும், ரங்காபுரம் சின்னக்கிளி -_ மா. சுப்பிரமணி ஆகியோரின் மகள் இன்பவல்லிக்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழியைக் கூறச் செய்து, மணவிழாவை நடத்தி வைத்து அறிவுரை கூறினேன்.

முன்னதாக சத்துவாச்சாரி நகர எல்லையில் இருந்து ஸ்கூட்டர்களிலும், ஆட்டோக்களிலும் கழகத் தோழர்களும் கழகப் பொறுப்பாளர்-களும் வந்திருந்து, என்னை அழைத்துச் சென்றனர்.

முடிவில் வேலூர் நகர் திராவிடர் கழக தலைவர் செல்வநாதன் நன்றி கூறினார்.

24.5.94 பெரியார் பெருந்தொண்டர் செ.ஜெம்புலிங்கம் இல்ல மணவிழாவுக்குத் தலைமையேற்று நடத்தி வைத்தேன். செ.ஜெம்புலிங்கம் காவல் துறையில் இருந்து ஓய்வு பெற்றவர், சீரிய பகுத்தறிவாளர்.  அவரின் மகன் ஜெ.சிவலிங்கத்திற்கும், லால்குடி மேல் அன்பில் கிராமம் கே.சுப்பிமணியன் தெய்வானையம்மாள் ஆகியோரின் மகள் மகாதேவிக்கும் வாழ்க்கை ஒப்பந்தத்தினை உறுதிமொழியினை கூறச் செய்து நடத்தி வைத்தேன். முன்னதாக மணவீட்டார்கள் எனக்குச் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

25.5.1994 காலை 9:00 மணியளவில் முன்னாள் சட்டமன்ற தி.மு.க உறுப்பினர் மறைந்த எகால் மு.நடேசன் அவர்களின் நினைவு கடவுள் மறுப்புக் கல்வெட்டு திறப்பு விழா மற்றும் புதிய இல்லத் திறப்பு விழா, மு.நடேசன் இல்ல மணவிழா ஆகிய முப்பெரும் விழாக்களில் நான் கலந்து கொண்டு சிறப்பித்தேன்.

மண விழாவுக்குத் தலைமை வகித்த கழகப் பொதுச்செயலாளர் இறுதியாக எகால் மு.நடேசன் அவர்களின் மகன் மு.ந.இராமச்சந்திரனுக்கும் எகால் கு.பொன்னுசாமி அவர்களின் மகள் பொன்.குமாரிக்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழியினைக் கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன்.

27.5.1994 அம்பத்தூர் – ஒரகடம் சாலையில் உள்ள ஆர்.ஆர்.கல்யாண மண்டபத்தில் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை தலைமையில் – சின்ன சேலம் மு.பொன்னுசாமி இல்ல மண விழாவை நடத்திவைத்தேன்.

மணவிழாவிற்கு வந்திருந்த அனைவரையும் மணமகன் பொ.சாக்ரடீசு வரவேற்று உரையாற்றினார்.

சின்னசேலம் மு.பொன்னுசாமி _ – ஜெயலட்சுமி ஆகியோரின் மகன் சாக்ரடீசுக்கும், பெங்களூர் நீலகண்டன் _ பழனியம்மாள் ஆகியோரின் மகள் சுஜாதாவுக்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழியைக் கூறச்செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன். மணமக்கள் இருவரும் தங்க அணியை மாற்றிக் கொண்டனர்.

மணமக்களை வாழ்த்தி நிகழ்த்திய உரையினை பெங்களூருவில் இருந்து வந்திருந்த மண மகள் வீட்டார்களும் மற்றும் பெரியோர்களும் மற்றும் பெரியோர்களும், தாய்மார்களும் அமைதியாக இருந்து கேட்டனர்.

மணக்களை வாழ்த்தி, அமெரிக்காவில் இருந்து வருகை தந்திருத்த அமெரிக்க பல்கலைக்கழக அறிவியல் ஆய்வாளரும், சீரிய பகுத்தறிவாளருமான அரசு தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசினார்.

முடிவில் மணமகள் சா.சுஜாதா நன்றி கூறினார்.

29.5.1994 தந்தை பெரியார் இசைக் குழுவைச் சேர்ந்த வே.பாண்டு அவர்களின் இல்ல மணவிழாவில் கலந்துகொண்டேன்.

பெரியார் பயிற்சிப் பட்டறையின் செயலாளர், பெரியார் பேருரையாளர் அ.இறையன் வரவேற்புரை ஆற்றினார்.

எனக்கு மண வீட்டார் சார்பாக வே.பாண்டு சால்வை அணிவித்து வரவேற்றார்.

30.5.1994 திருநள்ளாறு திராவிடர் கழக இளைஞரணிச் செயலாளர் பொன்.பன்னீர் செல்வம் மணவிழாவை 30.5.1994 காலை 9:30 மணியளவில் திருநள்ளாறு பெருமாள் கோயில் திருமகா மண்டபத்தில் தலைமையேற்று மிகச் சிறப்பாக நடத்தி வைத்தேன்.

திருநள்ளாறு பொன்னுசாமி _- தங்கம்மாள் ஆகியோரின் மகன் பன்னீர்செல்வத்திற்கும், நாகை வட்டம், அழிஞ்சமங்கலம் கா.கணேசன் _- சந்திரா ஆகியோரின் மகள் உஷாவுக்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழியினைக் கூறச் செய்து, மண விழாவை நடத்திவைத்தேன். மணமக்கள் தாலி இல்லாமல் மலர் மாலைகளை மட்டும் மாற்றிக்கொண்டனர்.

31.5.1994 நாகை காயிதே மில்லத் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் எஸ்.எஸ்.மணியன் அவர்களின் பேரன் அருண்காந்தி _- சாந்தி ஆகியோரின் வாழ்க்கை ஒப்பந்த விழா திருவாரூர் – நாகை சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் என் தலைமையில் நடைபெற்றது. அங்கு  மணமக்களுக்கு வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழி கூறச் செய்து நடத்தி வைத்தேன். மணவிழாவை ஒட்டி திராவிடர் கழகமும் மதுரை அரவிந்த மருந்துவமனையும் இணைந்து ஏற்பாடு செய்த இலவச கண்சிகிச்சை முகாமையும் துவக்கி வைத்தேன். அங்கு உரையாற்றுகையில் “திராவிட கழகம் ஒரு மனிதாபிமான இயக்கம்.

இங்கே விழிக்கொடை இயக்கம் நடத்தி அதில் பத்தாயிரம் பேர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். நாம் இறந்த பிறகும் உயிரோடு இருக்கலாம். இது சித்து விளையாட்டு அல்ல. எப்படி என்றால் நம்முடைய உடல் உறுப்புகளை இன்னொருவருக்குக் கொடுப்பதன் மூலம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கலாம். நாம் இறந்தபிறகு நம்முடைய கண்களை மருத்துவமனைக்குக் கொடுக்கலாம்’’ என பல கருத்துகளை விழாவில் எடுத்துரைத்தேன்.

1.6.1994 உரத்தநாடு அடுத்த வடசேரியில் கழக இளைஞரணி செயல் வீரர் சி.பன்னீர்செல்வம் மணவிழா மாலை 6.30 மணியளவில் மணமகன் இல்லத்து அருகில் உள்ள பொதுக்கூட்ட மேடையில் மாநாடு போல் நடைபெற்றது.

நான் வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழி கூறச் செய்து மணவிழாவை நடத்திவைத்தேன்.

மணமக்களுக்கு மலர் செண்டுகளுக்குப் பதிலாக தந்தை பெரியார் எழுதிய  ‘மனிதனும், மதமும்’,  ‘அம்மா பேசுகிறார்’ ஆகிய புத்தகங்களை வழங்கினேன்.

நெடுங்கிள்ளி மலர்விழி ஆகியோரின் ஆண் குழந்தைக்கு தமிழினியன் என்று பெயர் வைத்தேன்.

5.6.1994 சைதாபேட்டை சொர்ணாம்பிகை திருமணம் கூடத்தில் நுங்கம்பாக்கம் கி.ரங்கநாதன் _ செகதாம்பாள் ஆகியோரின் மகனும், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி துணைச் செயலாளருமான செ.ர.பார்த்தசாரதிக்கும், சைதாபேட்டை த.கோவிந்தராசு முத்துலட்சுமி ஆயோரின் மகள் குமாரிக்கும் என் தலைமையில் வாழ்க்கை ஒப்பந்த விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மணமக்களுக்கு அறிவுரை வழங்கி, வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழி கூறச் செய்து மணவிழாவை நடத்திவைத்தேன்.

மணமக்கள் மா. கணேசன் – செல்விக்கு வாழ்க்கை உறுதி மொழி ஒப்பந்தத்தை கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைக்கும் ஆசிரியருடன், கழகத்தினர்

11.6.1994 காமராசர் மாவட்டம், வத்திராயிருப்பு திராவிடர் கழக இளைஞரணி செயல் வீரர் மா.கணேசன் மணிவிழாவை தலைமையேற்று நடத்தி வைத்தேன். மணமக்கள் மா.கணேசன்  _ செல்விக்குக் வாழ்க்கை உறுதிமொழி  ஒப்பந்தத்தை கூறச் செய்து ஒப்பந்தத்தில் கையொப்பமிடச் செய்து நடத்தினேன். “அந்த மணவிழா சனிக்கிழமையில் ராகு காலத்தில் நடைபெற்றது. மணமேடையில் மேற்கு நோக்கியும் அமர்ந்து விழா நடைபெற்றது. அங்கு உரையாற்றுகையில் நாம் எல்லாம் என்ன பெயர் சொல்லிக் கொண்டாலும் நம்மை சூத்திரர்கள், பார்ப்பனரின் வேசி மக்கள், தாசி புத்திரர்கள் என்று சட்டத்திலே, சாஸ்திரத்திலே எழுதி வைத்து இருக்கிறார்கள். அந்த இழி நிலையைப் போக்குவதற்கு உள்ள இயக்கம் தான் திராவிடர் கழகம் அதற்காக இருக்கிற தலைவர்தான் தந்தை பெரியார் அதை மறந்து விடாதீர்கள்.

அதை மாற்றத்தான் இந்த இயக்கம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. எனவே தமிழர்களே! நமக்குள் ஜாதி இல்லை, கட்சி இல்லை. இதை எல்லாவற்றையும் நீக்க இது போன்ற மூடநம்பிக்கையற்ற சுயமரியாதைத் திருமணங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும்’’ என எடுத்துக் கூறி மணமக்களை வாழ்த்தினேன்.

13.6.1994 அன்று மறைந்த பெரியார் பெருந்தொண்டர் ச.இராமசாமி படத்திறப்பு விழா நெய்வேலி 20 ஆவது வட்ட திருமண அரங்கில் நடைபெற்றது.

தந்தை பெரியார் சிலை பீட கல்வெட்டையும், அய்யாவின் முழுஉருவச்சிலையையும் திறந்து வைக்கும் ஆசிரியருடன், கழகப் பொறுப்பாளர்கள்

“மறைந்த பெரியார் பெருந்தொண்டர் ச.இராமசாமி அவர்களைப் பற்றி உங்களுக்கு அதிகம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை அவர் இந்தப் பகுதியில் நமது இயக்கத்துக்கு எடுத்துக்காட்டான உறுதிமிக்க லட்சியத் தொண்டராகத் தன் இறுதி மூச்சு அடங்குகிற வரை பெரியார் தொண்டராகவே வாழ்ந்தார். மறைந்தவுடன் அடக்கம் செய்யும்போதுகூட எந்தவித மூடச்சடங்குகளும் இல்லாமல் அடக்கம் செய்யப்பட்டார். அவர்களின் குடும்பத்தார் எவ்வளவு வைரம் பாய்ந்த கொள்கை உறுதியோடு இருக்கிறார்கள் என்பதற்கு இது நல்ல உதாரணமாகும். அய்யா இராமசாமி அவர்களை எனக்கு பல ஆண்டுகளாக நன்கு தெரியும். அவர் மிகுந்த பண்பாட்டாளர், அடக்கமானவர். பெரியார் தொண்டர் எப்படி வாழ்ந்தார் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டக்கூடிய அளவுக்கு எளிமையாக வாழ்ந்தவர். இவரைப் போன்ற சுயமரியாதை வீரர்களின் உழைப்பால் தான் தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுகீடு கிடைத்தது’’ என பல கருத்துகளை எடுத்துரைத்தேன்.

13.6.1994 அன்று நெய்வேலி அருகில் உள்ள குறிஞ்சிப்பாடியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் முழு உருவச் சிலையைத் திறந்து வைக்கும் விழா நடைபெற்றது. மாநாடு போல் நடைபெற்ற அந்த விழாவில் திராவிடர் கழக மாநில இளைஞரணிச் செயலாளர் துரை.சந்திரசேகரன் கடவுள் மறுப்புக் கூறி அனைவரையும் வரவேற்றார்.

முன்னதாக திராவிட கழக இளைஞரணி தோழர்கள் இருபுறமும் வரிசையாக நின்று தீப்பந்தங்களுடன் மகத்தான வரவேற்புக் கொடுத்தனர்.

எண்பத்தைந்து வயது நிரம்பிய சுயமரியாதை வீரர் கு.த.பெ. பழனியப்பன் எனக்கு ரூபாய் நோட்டு மாலை அணிவித்து கட்டித் தழுவி மகிழ்ந்தார்.

பெரியார் பெருந்தொண்டர்களான கோவிந்தசாமி, கே.என்.பெருமாள், சொ.சீனிவாசன் ஆகியோருக்கு பாராட்டுப் பத்திரங்கள் வழங்கி சிறப்பித்தேன்.

பெரும் ஆராவாரத்துடன் வாழ்க வாழ்க என குரல் ஒலிவுடன் சிலையைத் திறந்து வைத்தேன். அந்த விழா மகத்தான வரவேற்பு கொடுத்தனர்.

அந்த விழாவில் பேசிய சில கருத்துகள் இதோ:

“இங்கு இந்த மேடையில் பாராட்டப்பட்ட சுயமரியாதை வீரர்களைப் பார்க்கும் போது, மேடைக்கு எதிரே பல்லாயிரக்கணக்கில் கூடியுள்ள உங்களையெல்லாம் பார்க்கும் போது நாற்பது அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் சிறுவனாக இருந்த காலத்தில் இந்தப் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்த கொண்ட நினைவுகள் எல்லாம் பசுமையாக நினைவுக்கு வருகிறது. தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் வழியில் இன்று சுயமரியாதைத் திருமணங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதற்கு திராவிடர் கழகத்தின் இளைஞரணிக்கு முக்கியப் பங்கு உண்டு. அவர்களே நாளைய பெரியாரின் கருஞ்சட்டைப் படையாக மாறப்போகிறவர்கள் ஆவர். ஜாதி. மதம் கடந்து நாம் போக வேண்டிய பாதை நீண்டது’’ என சிலை திறப்பு விழாவில் பேசினேன்.

14.6.1994 புதுவை யூனியன் பிரதேசத்தில் முதன்முதலாக பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

யூனியன் பிரதேசமான புதுவையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இதுவரை இட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. புதுவையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்கிற கோரிக்கையை திராவிடர் கழகம் தொடர்ந்து வற்புறுத்திவந்தது.

6.12.1992 அன்று புதுவையில் நடந்த திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழுக் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஜூன் 2 ஆம் தேதி “விடுதலை’’ இதே கோரிக்கையை வலியுறுத்தி தலையங்கம் தீட்டியது. கடந்த 30.5.1994 அன்று புதுவை மாநிலம் திருநள்ளாறில் பேசுகையில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் புதுவை மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கொண்டுவராவிட்டால் புதுவையில் மாநிலம் தழுவிய போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்தும் என்று அறிவித்தோம்.

இப்போது புதுவை மாநில அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி புதுவை யூனியன் பிரதேசத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் இடைக்கால உத்தரவை புதுவை அரசு பிறப்பித்தது.

இது கழகத்திற்குக் கிடைத்த வெற்றிகளில் முக்கியமானது என செய்தி வெளியிட்டேன்.

18.6.1994 வயலோகத்தில், மலேசியத் தோழர் அன்பளிப்பாகத் தந்த அய்யா சிலையை _ ஊர்ப் பாதுமக்கள் உதவியால் நடத்தப்பட்ட விழாவில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் முழு உருவச் சிலையைத் அமைப்பாளர் கிருட்டினன் தலைமையில் திறந்து வைத்து சிறப்புரையாற்றினேன்.

விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பல்லாயிரக்கணக்கான கழகத் தோழர்களும், தாய்மார்களும், பொதுமக்களும் தந்தை பெரியார் வாழ்க! அன்னை மணியம்மையார் வாழ்க! தமிழினக் காவலர் வீரமணி வாழ்க! என்று வாழ்த்து முழக்கங்களை விண்ணதிர எழுப்பி தங்களுடைய உணர்ச்சியை வெளிப்படுத்திய பாங்கு மெய்சிலிர்க்க வைத்தது.

எனது உரையை அனைத்துத் தரப்பு மக்களும், அரசு அலுவலர்களும் அனைத்துக் கட்சியைச் சேர்ந்த தோழர்களும் அமைதியுடன் இருந்து செவிமடுத்து கேட்டுச் சென்றனர்.

முடிவில் மாவட்ட திராவிடர் கழக மாணவரணி அமைப்பாளர் ஏ.சந்திரன் நன்றி கூறினார்.

26.6.1994 தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீட்டைக் காப்பாற்றும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் டில்லிக்கு அனைத்துக் கட்சி தூதுக்குழு சென்றோம்.

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தோம். அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு தலைவர் ஏ.கே. அப்துல் சமது, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் உடன் வந்து வி.பி.சிங்கை நலம் விசாரித்து உரையாற்றினோம்.

சமூகநீதி இயக்கம். இந்தியா முழுவதும் கட்டப்படுவதன் அவசியம் குறித்து மிகவும் உற்சாகத்துடன் வி.பி.சிங் பேசியதோடு, தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீடு தொடரவேண்டும் என்பதற்கு எனது முழு ஆதரவும், ஒத்துழைப்பு உண்டு என்றும் கூறி இப்போது சமூகநீதிக் கருத்தினை எல்லா அரசியல் கட்சிகளும்கூட பற்றிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதற்கு, தான் மிகவும் மகிழ்வதாகவும் குறிப்பிட்டார். ஏறத்தாழ ஒரு மணிநேரத்திற்கு மேல் அவர் பொதுப் பிரச்சினைகள் பற்றியும் உரையாடினார்.

69% இடஒதுக்கீடு தொடர வி.சிங் அவர்களிடம் ஆதரவு கோரும் ஆசிரியர் மற்றும் தூதுக்குழு உறுப்பினர்கள்

1.7.1994 எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் அப்போதைய திராவிடர் கழகத்தின் உறுதியான நிலைப்பாட்டினையும், திராவிடர் கழகத்தின் இடஒதுக்கீடு பற்றிய சிறப்பான வழிகாட்டுதலையும் பாராட்டும் வகையில் எனக்குக் கடிதம் எழுதினார்.

அன்றைய சூழ்நிலையில் தமிழக அரசியலில் கழகத்தின் பங்களிப்பு பற்றியும் அதில் எடுத்துரைத்த கருத்துகளில் சில:

மரியாதைக்குரிய பொதுச்செயலாளர் அவர்களுக்கு வணக்கம். நலம் தானே!

தமிழகத்தைக் குலுக்கிக் கொண்டிருக்கும் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் தாங்கள் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை நான் மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன் என்பதை அறிவிக்கவே இந்தக் கடிதம்.

பிரபஞ்சன்

பெரியார் இருந்திருந்தால் முதல்வருடன் பெரியார் டில்லிக்குச் சென்றிருப்பார் என்பது திண்ணம். ஏனெனில், பெரியாருக்கோ தமிழர் உயர்வை நேசிப்பவர்களுக்கோ யார் பெரியவர், யார் உயர்ந்தவர், யார் தியாகசீலர் என்கிற உயர்வு மனப்பான்மை வராது மக்களின் மேல் உள்ள அன்பை அளக்க இதுவே அளவுகோல் என்று தான் கருதுகிறேன்.

தங்கள் செயல், பெரியாரியத்தின் நீட்சி, வளர்ச்சி, என்று கருதுகிறேன். இதுவே உண்மை.

தங்கள் மேல் படரும் வசைகளைப் பொருட்படுத்த வேண்டாம். எதிர்கால வரலாறு மலர்களால் உங்கள் பணிகளை எழுதும், இசைக்கும்.

எங்களைப் போன்றோர் உங்களைப் பின்பற்றி வந்துகொண்டிருக்கிறோம் என்பதைத் தயவு செய்து உணரவேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

(நினைவுகள் நீளும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *