சுவடுகள் : சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்

ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020

பிறப்பு: 5.9.1893

 தந்தை பெரியார் அவர்கள் தாம் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்திற்கு தாம் துணைத் தலைவராக இருந்துகொண்டு, வேறு ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார் என்றால், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் சமூகத்தின் பால் கொண்ட பற்று வியக்கத்தக்கதாக போற்றத்தக்கதாக இருக்க வேண்டும் அல்லவா?

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார். தென்மாவட்டங்களில் சுயமரியாதை இயக்கத்தின் தூணாக விளங்கியவர்.

1893ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் மதுரை மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் பிறந்த இவர் நீதிக் கட்சியுடன் தொடர்பில் இருந்தார். 1929ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் முதலாவது மாகாண மாநாட்டிற்கு தலைமை வகிக்க சவுந்தரபாண்டியன் நாடாராக வந்தவர், அம்மாநாட்டு தீர்மானத்தின்படி சவுந்தரபாண்டியனாக திரும்பினார். சுயமரியாதை இயக்க கொள்கைகளை தொடர்ந்து மாநாடுகளிலும் கூட்டங்களிலும் தாம் பங்கேற்ற பிற நிகழ்வுகளிலும் முழங்கினார்.

முழங்கியது மட்டுமல்லாமல் அவற்றை நடைமுறைபடுத்தும் செயல்களிலும் வெற்றிகண்டார். தென்மாவட்ட பிற்படுத்தப்பட்ட மக்களிடையே விதவை திருமணங்களையும் ஜாதி மறுப்புத் திருமணங்களையும் ஏராளம் நடத்தி சுயமரியாதைப் புரட்சியில் நல்ல பங்கு எடுத்துக் கொண்டார்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சிக் கழகத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு பெற்ற நிலையில், அந்த அதிகாரத்தை பயன்படுத்தி செய்த செயல்கள் செயற்கரியனவாகும்.

அந்த காலக் கட்டத்தில் பேருந்து வண்டிகளின் உரிமையாளர்களிடம் ஜாதி வெறி தாண்டவமாடியது. பேருந்துகளில் “பஞ்சமர்க்கு இடமில்லை’’ என்று எழுதப்பட்டிருந்ததுடன் டிக்கட்களிலேயும் அவ்வாறு எழுதப்பட்டு தீண்டாமை கோலோச்சியது.

மாவட்ட ஆட்சி கழக தலைவராக சவுந்தரபாண்டியனார் கீழ்க்கண்ட ஆணையை துணிவாக போட்டார்.

“இந்த ஜில்லாவில் உள்ள சில மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஆதிதிராவிடரை பஸ்களில் ஏற்றுவதில்லை என்றும், டிக்கட்களில், “ஆதிதிராவிடர்களுக்கு டிக்கட் கொடுக்கப்பட மாட்டாது என்றும் நிபந்தனை ஏற்படுத்தியுள்ளதாக அறிகிறோம்.

இவ்வழக்கம் பயணிகளுக்கு இடைஞ்சல் உண்டு பண்ணத்தக்கதாகவும், மிக அக்கிரமமானதாகவும் இருக்கிறது. ஆகவே, மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஏதேனும் ஒரு சமூகத்தாரை பஸ்ஸில் ஏற்றிச் செல்ல மறுக்கவோ, டிக்கட்களில் மறுப்பு விதிகளை அச்சிடவோ செய்தால் அவர்களது லைசென்கள் முன்னறிவிப்பு இன்றி ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை செய்கிறோம்’’ இந்த சுற்றுக் கடிதம் கிடைத்த ஒரு வாரத்திற்குள் அந்த தடை விதி நீக்கப்பட்டதா? இல்லையா என்று சாம்பிள் டிக்கட்டுகளுடன் ரிப்போர்ட் செய்துகொள்ள வேண்டும் என்று துணிச்சலாக ஆணையிட்டு ஜாதி வெறியை அடக்கினார்.

முதலாவது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது சூறாவளி சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து மொழி உணர்வை எழுப்பி போராட்டத்தில் பங்கேற்க செய்தார்.

சென்னை சட்டமன்ற மேலவைக்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1953 பிப்ரவரி 22ஆம் நாள் மறைவுற்றார்.

 பிள்ளையார் உடைப்பு 

நீதிபதி தீர்ப்பு!

 

 மக்கள், வள்ளுவர் குறளை ஏற்று நடக்கும் தகுதிப் பெற்ற பிறகு, அடுத்தபடி என்ன என்று சிந்தித்தேன். புத்தர் கொள்கை பிரசார மாநாடு கூட்டினேன். நாம் எந்த லட்சியத்துக்காக நம் இயக்கத்தினை ஆரம்பித்தோமோ அந்தத் துறையில் நல்ல பலன் ஏற்பட்டு வருகிறது. நம் இயக்கம் நல்ல முறையில் வளர்கிறது, பல கடவுள்கள், உருவ வழிபாடு வேண்டாம் என்று பல ஆண்டுகளாகப் பிரச்சாரம் செய்து வந்தோம்.

மக்கள் ஒத்துக் கொள்ளவில்லை! ஏனோதானோ என இருந்தார்கள். மீண்டும் இதையே சொல்லிக் கொண்டிருந்தால் பலன் என்ன? விக்ரகங்களை உடைக்க வேண்டும் என்று தீர்மானித்து அதன்படியே முதலாவதாக விநாயக உருவத்தை உடைத்தோம். ஓர் நாள் குறிப்பிட்டு பல்லாயிரக்கணக்கிலே உடைத்துக் காட்டினோம். அது குறித்துகூட சிலர் என் மீது வழக்குத் தொடர்ந்தார்கள். 4 – நாட்களுக்கு முன்னேதான் நீதிபதி ராமன் நாயர் அவர்கள் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார். தீர்ப்பில் அவர் குறிப்பிட்டது மிகவும் கவனிக்கத்தக்கது.

பிள்ளையார் உருவம் அவர்கள் செய்து அவர்கள் உடைக்கிறார்கள் – நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? என்று அவர்களைக் கேட்டார். அவர்களுக்கு (ஆஸ்திகர்களுக்கு) இதைப் பார்க்க வயிற்றெரிச்சலாக இருப்பதைக் குறிப்பிட்டார்கள். அதற்கு நீதிபதி “இவர்கள் திடீரென்று உடைக்கவில்லையே! பிள்ளையார் உருவ உடைப்பைப்பற்றி 3- – மாத காலமாக பிரச்சாரம் செய்து வந்தார்கள். அவர்கள் உடைக்கும் இடத்திற்கு முட்டாள்தனமாக நீங்கள் ஏன் போனீர்கள்? போய் ஏன் வயிற்றெரிச்சல் படுகிறீர்கள்?’’ என்று கேட்டார்.

உடைப்பதில் தவறென்ன என்றுதான் நான் கேட்கிறேன்! கடவுள் வேண்டாம் என்று அதை உடைக்கவில்லை. பார்ப்பனன் கற்பனையைத் தான் உடைத்தெறிந்தோம். பிள்ளையாரை உடைத்தால் கடவுளை உடைத்ததாக ஆகாது.

நூல்: பெரியார் களஞ்சியம்

தொகுதி – 2 (பக்கம் 265-268)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *