வாசகர் மடல்

ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020

 “சரித்திரச் சாதனை!”

தந்தை பெரியாரால் போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற தீய நோக்கத்தில் இன எதிரிகள் பல்வேறு சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 2016 – ஆம் ஆண்டு முதல் இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் சமூகநீதிக்கு எதிராகவும் அரசியல் சட்டத்திற்கு விரோதமாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் கடந்த அய்ந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மட்டுமே இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுமைக்கும் பல ஆயிரக்கணக்கான இதர பிற்படுத்தப்பட்டமாணவர்களுக்கு மேற்படிப்பிற்கான மருத்துவக் கல்வி மறுக்கப்பட்டுள்ளது என்பது பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதியாகும்.

இத்தகைய சமூக அநீதியை ஆரம்ப நிலையிலேயே தொலைநோக்குப் பார்வையோடு அறிந்துகொண்ட தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒன்றிணைத்து – கலந்தாலோசித்து ஒருமித்த கருத்துடன் உயர் நீதிமன்றத்தை அணுகி, நீதிமன்றத்தில் அடுக்கடுக்கான ஆதாரங்களையும், பல்வேறு எடுத்துக்காட்டுகளையும் எடுத்துக்கூறியதின் பயனாய், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாகி, செந்தில்குமார், இராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு 27.07.2020 அன்று வழங்கிய தீர்ப்பில் மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களை இன்பத்தில் திளைக்க வைத்தது.

தமிழர் தலைவர் கி.வீரமணி மற்றும் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களின் பெரு முயற்சியாலும், அயராத உழைப்பாலும் கிடைக்கப்பெற்ற மேற்கண்ட “சரித்திரச் சாதனை’’ சமூகநீதி வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய நிகழ்வாகும். மத்தியிலும் மாநிலத்திலும் யார் ஆட்சி செய்தாலும் இடஒதுக்கீட்டிற்கு எதிராக செயல்பட்டால் தமிழ்மண் ஒருபோதும் ஏற்காது!  அதனை எதிர்த்து நிற்கும் என்பது கடந்தகால வரலாறாகும்.

ஆகவே, தமிழ்நாடு பெரியார் பிறந்த மண், சமூகநீதியின் பிறப்பிடம் என்று இன எதிரிகளுக்கு உணர்த்திடவும், சமூகநீதியை வென்றெடுக்கவும் கட்சிகளைக் கடந்து ஜாதி – மதங்களை மறந்து அனைவரும் ஒன்றுபட்டு சமூகநீதிக் கொடியை வானளாவ உயர்த்திப் பிடிப்போம்.

வாழ்க பெரியார்! வெல்க சமூகநீதி!

 – எஸ்.பத்ரா, வந்தவாசி.

நூற்றாண்டு விழா நாயகர் “ நாவலர் “

உண்மை இதழில் (ஜூலை16 – -ஆகஸ்ட் 15, 2020) நூற்றாண்டு காணும் பகுத்தறிவுப் பேரொளி நாவலர் அவர்களின் ஒளிப்படம் அட்டையை அலங்கரித்துள்ளது வெகு சிறப்பு. தந்தை பெரியாரின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவால் ‘நடமாடும் பல்கலைக் கழகம்’ என்று போற்றிப் புகழப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினை தாய்க்கழகமான திராவிடர் கழகம் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சிறப்புடன் நடத்தியது மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.

தந்தை பெரியாரின் தளகர்த்தரான நாவலர் அவர்கள் தனது இறுதி மூச்சு அடங்கும் வரையில் மேடைதோறும் பகுத்தறிவுக் கருத்துகளை எடுத்துரைத்து மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். நாவலரின் உரை நகைச்சுவை ததும்புகின்ற உரையாகவும், பார் போற்றும் பகுத்தறிவுக் கருத்துகளை பாமர மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் எளிய நடையில் அழகு தமிழில் வாரி வழங்குவது அவருக்கே உரிய தனிச்சிறப்பாகும். நாவலரின் நாவண்மையில் பகுத்தறிவுப் பெருமழை அடைமழையாய் ஆர்ப்பரிக்கும் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் நன்கு அறிவர்.

பகுத்தறிவுடன் கூடிய கூர்மையான கருத்துகளை அழகு செந்தமிழில் செம்மையாக வார்த்தெடுக்கும் வல்லமை பெற்ற பகுத்தறிவுப் பேரொளி நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் கடைசிவரை பகுத்தறிவாளராகவே வாழ்ந்து மறைந்த கொள்கைச் சீலர் ஆவார்.  கொள்கைச் சீலராகவும், நடமாடும் பல்கலைக் கழகமாகவும் விளங்கிய நாவலரை நாளும் நினைத்து தமிழ்கூறும் நல்லுலகம் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் அடைகிறது.

சீரிய சிந்தனையாளர், பகுத்தறிவாளர், எழுத்தாளர், பேச்சாளர், அரசியல், கலை -இலக்கியம் என்று பன்முகத்தன்மை கொண்ட “நூற்றாண்டு விழா நாயகர் நாவலர் நெடுஞ்செழியன்’’ அவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், தமிழர் தலைவர்  கி.வீரமணி அவர்கள் காணொலி வாயிலாக (11.07.2020) நூற்றாண்டு விழாவினை சிறப்புடன் நடத்திய பாங்கு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இதனைக் கண்ணுற்ற உலகத் தமிழர்கள் அனைவரும் தாய்க்கழகமான திராவிடர் கழகத்தையும், ஆசிரியர் அவர்களையும் வாயார மனதாரப் பாராட்டி மகிழ்கின்றனர், போற்றிப் புகழ்கின்றனர்.               

வாழ்க பெரியார்! வளர்க நாவலர் புகழ்!

சீ. இலட்சுமிபதி, தாம்பரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *