பெண்ணால் முடியும்: வறுமையை எதிர்த்து சாதனைப் புரிந்த பெண்

ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020

பெண்களின் கல்வி வளர்ச்சியால் நாட்டில் பல பெண்கள் சாதனைகளை மேலும் வெளிப்படுத்தி வருகின்றனர். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வரலாற்றில் இடம் பிடிக்கின்றனர்.

நீலகிரியிலுள்ள ஒரு குக்கிராமம் தேனாடு. அந்த கிராமத்திலிருந்து இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படிக்கக் கூடிய வாய்ப்பு மாணவி அனுப்பிரியாவுக்கு கிடைத்துள்ளது. அதுவும் உதவித் தொகையுடன் கூடியப் படிப்பு என்பது கூடுதல் சிறப்பு. நீலகிரி மாவட்டத்திலிருந்தும், படகர் சமுதாயத்திலிருந்தும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கக் கூடிய வாய்ப்புப் பெற்றுள்ள ‘முதல் மாணவி’ இவரே என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்து வந்த பாதையைப் பற்றி கூறுகையில்,

“தேனாடு கிராமத்தைச் சேர்ந்த எனக்கு இத்தகைய வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும். உதகையில் கிரசண்ட் கேசில் பள்ளியில் 12- ஆம்வகுப்பு வரை படித்த பின்னர் கோவையில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டப் படிப்பு படித்தேன். பள்ளியில் படிக்கும் போதே எனக்கு ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது மிகவும் பிடிக்கும். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு, இந்திய விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் தொடர்ந்து இருந்தது. 10-ஆம் வகுப்பில் பள்ளியின் முதல் மாணவியாகத் தேர்வு பெற்றதிலிருந்து இந்த ஆர்வம் மேலும் அதிகரித்தது. அதையடுத்து இதற்கான வாய்ப்புகள் கல்லூரியிலும்கிடைத்தன. அப்போது புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி தொடர்பாக நான் உருவாக்கிய ஒரு திட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதையடுத்து உழவர்களுக்காக ஒரு சிறப்பு செயலியை உருவாக்கியிருந்தேன். இது இந்திய அளவில் பாராட்டைப் பெற்றது.

கல்லூரியில்படிக்கும்போதே ஆராய்ச்சிகள் தொடர்பான பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்றிருந்தேன். இதன் காரணமாக இந்திய- அய்ரோப்பிய கூட்டமைப்பின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக நடத்தப்பட்ட ஒரு போட்டியில் சிறப்பிடம் பெற்று எஸ்டோனியா நாட்டிற்கு சிறப்பு விருத்தினராக அழைக்கப்பட்டேன். அதைத் தொடர்ந்து தொழிற்கல்வி தொடர்பான இந்திய கூட்டமைப்பின் சிறப்பு விருதும் எனக்கு வழங்கப்பட்டது. அதேபோல, மகாத்மா காந்தி சிறப்பு கல்வி உதவித் தொகை, ராபர்ட்போஷ் நிறுவனத்தின் சிறப்பு விருது உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளேன். அத்துடன் இந்திய அரசின் உணவு பதப்படுத்துதல் துறையின் சார்பில் குடியரசுத் தலைவர் விருதினையும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் சார்பில் அகில இந்திய தொழிற்நுட்ப கவுன்சிலின் சிறப்பு விருதினையும், தமிழக அரசின் வனத்துறையின் சிறப்பு விருதினையும் பெற்றுள்ளேன். இத்தகைய விருதுகள் என்னை மேலும் ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளன.

சிறந்தவராக இருப்பது மட்டும் பெருமைக்குரியதல்ல; சிறப்பானவற்றை உருவாக்குவதிலும் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டுமென்ற குறிக்கோளின் அடிப்படையில் செயலாற்றி வருகிறேன். பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் எனது ஆராய்ச்சிகள் இருக்க வேண்டுமென்பதே எனது ஆசை. அதை நிறை வேற்றிக் கொள்ளும் வகையில் கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் எனது ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு வாய்ப்பு கிடைத்திருந்த போதிலும் என்னை மேலும் செம்மைப்படுத்திக் கொள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கான வாய்ப்பினைத் தேர்வு செய்தேன். இதற்கு தொடக்க கல்வியும், பள்ளிப்பருவத்தில் கிடைத்த வாய்ப்புகளும் முக்கிய காரணமாக இருந்தன’’ என்கிறார் கல்வியின் வளர்ச்சியால் தன் சமுதாய மக்களுக்கு புது வழியை காட்டி பாதைக்கு ஒளி தருகிறார் மாணவி அனுப்பிரியா.

 சந்தோஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *