வாசகர் மடல்

ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2020

ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,

உண்மை மே 16- ஜீன் 15 இதழினைப் படித்தேன் இதழில் இடம் பெற்றிருந்த அத்தனையும் அருமை,ஊரடங்கை பயன்படுத்தி உரிமைகளைப் பறிப்பதா? என்ற கட்டுரை கருத்துச் செறிவுடன் இந்த ஆட்சியாளர்களின் கபட நாடகத்தை தோலுரித்துக் காட்டி உள்ளது. உண்மையில் சற்று நிறுத்தி ஆழமாக கவனித்தால் வைரஸ் என்ற நச்சுக் கிருமியை விட அதிக ஆபத்தானது பார்ப்பனியம் தாம். இன்று நடைபெறும் ஒவ்வோர் நிகழ்வுகளும் அதனை வலியுறுத்துவதாகவே உள்ளது. இவ்வளவு வயதாகியும் கூட இந்தச் சூழலிலும் தாங்கள். ஓய்வின்றிப் பணியாற்றி வருவது எனக்கு மிகுந்த பிரமிப்பினைத் தருகின்றது. பெரியார் தான் வாழ்ந்த காலத்தில் திருக்குறள் மாநாடுகளை நடத்தியுள்ளார் என்று புத்தகங்களில் படித்துள்ளேன். அதில், எல்லாம் எங்களை போன்ற இளம்வயதினர் கலந்திட வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்றையச்  சூழலில் அத்தகையதினைப் போன்ற பல மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில், பார்ப்பனியம் மக்களிடம் புகழ் பெற்றுள்ள அத்தனையையும் தன்னுள் இழுத்து உறிஞ்சிக் கொள்ள பெருமுயற்சி எடுத்துக் கொண்டுள்ளது. அதனை தடுத்து நிறுத்தி வீழ்த்தி ‘ வரும் தலைமுறையினருக்கு தந்தை பெரியாரைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு உங்களது கையில் தாம் உள்ளது. பல்லாண்டு காலமாக ஓய்வின்றி தொடரும் தங்களது பணிச் சிறக்க வாழ்த்துகள்.- ப.கார்த்திக், ஈரோடு

 

மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். ‘உண்மை’ (மே 16- ஜுன் 15, 2020) இதழ் படித்தேன்.

‘நீட்’ தேர்வுப் பற்றிய தங்களின் ‘தலையங்கம்’ மோசடிக்காரர்களின்,முகமூடியைக் கிழித்து, உண்மையை உலகறியச் செய்யும் அரிய கருத்து விளக்கம். ‘நீட்’ இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் 11,000 மருத்துவ இடங்களை இழந்திருப்பது ஒன்றே, இதற்கானப் போராட்டத்தின் அவசியத்தை நன்கு உணர்த்துகிறது.       எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பதை போல், ‘ஊரடங்கைப் பயன்படுத்தி உரிமைகளைப் பறிப்பதா?’ முகப்புக் கட்டுரை தெளிவாக விளக்குகிறது. வடவரின் வஞ்சகச் செயலுக்குச் சரியானச் சாட்டையடி!       இளைய சமுதாயத்திற்குத் தங்களின் இயக்க வரலாறான தன்வரலாறு, ‘அய்யாவின் அடிச்சுவடு’. ஒரு புத்தெழுச்சியை ஊட்டும் என்பதில் அய்யமில்லை.

                ‘மாநில உரிமை’ பற்றியக் கட்டுரை நிச்சயம்  சிந்தித்து செயலாற்ற வைக்கும்.   கலைஞர் அவர்களின் ‘கண்ணடக்கம்’ சிறுகதை ‘மானமிகு சுயமரியாதைக்காரர்’ அவர் என்பதற்கோர் சான்று. மற்றும் அயோத்திதாசர் பற்றிய கட்டுரையும், தோழர் நேயன், தோழர் கி.தளபதிராஜ் போன்றோரின் வரலாற்றுச் சிந்தனையைத் தூண்டும் சொல்லோவியங்களும், பெண்ணால் முடியும், கடவூர் மணிமாறன் அவர்களின் ‘சாதிக்குச் சாவுமணி’. என்ற கவிதையும். இதழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. இறுதியாக. ‘எது உங்களுக்குப் பிரியமான வேலையோ, அதைச் செய்து கொண்டே இருங்கள். வயது கூடவே கூடாது! உற்சாகம் குறையவே குறையாது’. என்ற அய்யா அவர்களின் அறிவுரைப்படி. கொடிய ‘கொரோனா’ பொது முடக்கத்திலும் முடங்காது.

கழகப் பணியினை தொடர்ந்து தொய்வில்லாமல் ஆற்றிக் கொண்டிருக்கும் தங்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டறம் நிச்சயம் வீண்போகாது! சமுதாயத்தில்நல்ல விளைச்சலைத் தந்தே தீரும் என்பது  உறுதி!! –

– நெய்வேலி க.தியாகராசன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *