(ஆகஸ்ட் 7 கலைஞரின் இரண்டாமாண்டு நினைவுநாள்)
முனைவர் கடவூர் மணிமாறன்
முன்னேற்றக் கழகத்தின் தலைவர்; என்றும்
மூப்பில்லா முத்தமிழின் அறிஞர்; அந்நாள் சென்னையினைத் தமிழ்நாடாய் ஆக்கி வைத்த
செம்மல்நம் அண்ணாவின் உண்மைத் தம்பி! அன்றாடம் பெரியாரை நினைவில் கொள்ளும்
அறிவியக்கப் போர்மறவர்! எதிலும் என்றும் முன்னணியில் நிற்கின்ற முனைப்புக் கொண்ட
முத்துவேலர் அஞ்சுகத்தாய் அருமைச் செல்வர்!
நடந்தபல நிகழ்வுகளைக் கணினி போல
நாட்டோர்கள் வியந்திடவே நவில்வார் நாளும் மடமையினைச் சாடிடுவார்! எழுத்தில் பேச்சில்
மாற்றாரும் பாராட்டக் கருத்தைச் சொல்வார்! உடல்தளர்ந்த நிலையினிலும் உள்ளம் சோரார்
உயர்தமிழைச் செம்மொழியாய் ஆகச் செய்தார் தடம்மாறி அணிமாறும் போலி மாந்தர்
தலைகுனியச் செய்திடுவார்! தகுதி மீட்பார்!
களம்கண்டும் சிறைசென்றும் பகையை வென்றும்
கழகத்தைக் காக்கின்றார்! நாட்டு மக்கள்
உளம் நிறைந்தார்! ஐந்துமுறை ஆட்சித் தேரை
ஓட்டுகிறார்! இழிவுகளை ஓடச் செய்தார்! வளம்சேர்த்தார் தமிழுக்கும் தமிழர் கட்கும்
வல்லூறாய் வாய்த்தோரின் செருக்கை வீழ்த்தி அளப்பரிய சாதனைகள் படைக்க லானார்!
ஆரூரார் நம்கலைஞர் புகழ் நெடிது வாழ்க!